|
தென்றல் பேசுகிறது... |
|
- |நவம்பர் 2018| |
|
|
|
|
"அமெரிக்காவில் அல்லது அதன் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் பிறந்த அல்லது இயல்புற்ற (Naturalized) அனைவரும் அமெரிக்கக் குடிமக்களே" என்று 14வது சட்டச் சீர்திருத்தம் முதல் வரியிலேயே தெளிவாக அறிவிக்கிறது. ஆனால், அமெரிக்காவில் வாழும் சட்டபூர்வமான குடிகளல்லாதோரின் குழந்தைகளுக்குக் குடியுரிமை தரக்கூடாது என்ற தனது நீண்டநாள் கருத்தை மீண்டும் டோனல்டு ட்ரம்ப் உரத்துக் கூறியுள்ளார். இந்த நிலைப்பாடு சட்டத்துக்குப் புறம்பானதென்று பலர் எதிர்த்துள்ளனர். நட்பு நாடுகளைப் பகைத்துக் கொள்வது, ஒபாமா கேர் போன்ற நல்ல திட்டங்களை நீர்த்துப் போகச் செய்வது, குறைந்த வருமானமுள்ளோரிடம் இருந்து அதிக வரி பிடுங்குவது, சூழல் வெப்பமடைதலுக்கான பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்பதாக நல்லன எல்லாவற்றுக்கும் எதிரான செயல்பாடுகளைக் கைக்கொள்வது டோனல்டு ட்ரம்புக்குப் புதியதல்ல.
இதையும் பாருங்கள். வணிகக் குழுமங்கள் கொழுத்த லாபம் காட்டுகின்றன, அதனால் பொருளாதாரம் பிரமாதம் என்று நாம் குருட்டுக்கணக்கு போட முடியாது. வணிகப் பெருக்கத்தாலோ, நுகர்வோர் நம்பிக்கை அதிகரிப்பாலோ, பணச்செழிப்பாலோ இந்த லாபப் பெருக்கம் ஏற்படவில்லை. மாறாக, அரசின் வரிக்குறைப்பு, கம்பெனிகளின் செலவுக் குறைப்பு ஆகியவற்றால் தற்காலிகமாக லாபம் அதிகரித்துள்ளது. மறுபக்கம், உள்நாட்டு மூலப்பொருட்களின் உற்பத்தியைப் போதிய அளவு உறுதி செய்துகொள்ளாமல் இறக்குமதி வரிகளைத் தடாலடியாக அதிகரித்ததால் விலைவாசிகள் ஏறிக் கொண்டிருக்கின்றன. விரைவிலேயே இதன் கடுமையான பாதிப்புகளைக் குடிமக்கள் எதிர்கொள்ள நேரிடும்.
இந்த இதழ் உங்கள் கைக்குக் கிடைக்கும்போது இடைத்தேர்தலில் நாம் வோட்டளித்துக் கொண்டிருக்கலாம். "திருந்து, இல்லையேல் வருந்து" என்று சராசரிக் குடிமகன் அரசை நோக்கிச் சவால் விடுவதற்கான வாய்ப்பு இது. வெறுப்பு மற்றும் மறுப்பு அரசியலால் நன்மை வராது என்பதை ட்ரம்ப்பும் அவரது ஆதரவாளர்களும் புரிந்துகொண்டாக வேண்டும். இடைத்தேர்தலை நமது மனப்போக்கைத் தெளிவுபடுத்தும் வாய்ப்பாகப் பயன்படுத்துவோம்.
*****
எங்கேயெல்லாம் பணம், செல்வாக்கு, புகழ், பிறருக்கு வாய்ப்பளிக்கின்ற அதிகாரம் ஆகியவை குவிந்துள்ளனவோ அங்கெல்லாம் பாலியல் சீண்டல் மற்றும் ஆதிக்கச் செயல்களுக்கான வாய்ப்புகளும் அதிகம். ஆனால் இவை ஓரிரு கரங்களில் குவிந்து கிடப்பதாலேயே அவர்களை எதிர்த்து வெளியே புகார் கூறுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் தனது முன்னேற்றம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் நிச்சயம் உண்டுதான். அதையும் மீறித்தான் பாதிக்கப்பட்ட பெண் குரல்கள் "Me too" என்று கிளம்பியுள்ளன. இந்தக் குரல் இன்றைக்காவது கிளம்பியுள்ளதே என்று ஆதரிக்க வேண்டியது இருபாலர் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரின் கடமை. ஆனால், (எல்லாவற்றுக்குமே ஒரு 'ஆனால்' உண்டுதானே!) தனிப்பட்ட வன்மங்களைப் பொதுவெளியில் தீர்த்துக்கொள்ளும் ஆயுதமாகிவிடக் கூடாது 'Me too' என்பதில் கவனம் இருக்கவேண்டும்.
***** |
|
தமிழகத்துக்கு வெளியே இருந்துகொண்டு தமிழில் எழுதியவர்கள் மிகக்குறைவு. சுஜாதா டெல்லி, பெங்களூரு ஆகிய ஊர்களில் இருந்துதான் அதிகம் எழுதினார் என்பது உடனடியாக நினைவுக்கு வருகிறது. அந்த அபூர்வ வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர் விசாகப்பட்டினம் வாசியான திவாகர். 'எம்டன்', 'இமாலயன்' போன்ற நாவல்களின் ஆசிரியரான இவரது நேர்காணல் பல புதிய வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு வருகிறது. வ.வே.சு. ஐயரின் வீர சகாப்தம் ஒரு சோகமான முடிவை இந்த இதழில் சந்திக்கிறது. கே.வி. மகாதேவன் அவர்களின் திரையிசைக் குறிப்புகள் மிகச் சுவையானவை. நீங்களே உட்புகுந்து மற்றவற்றையும் பாருங்கள், படியுங்கள்.
வாசகர்களுக்கு தீபாவளி, மீலாதுன் நபி, குரு நானக் ஜயந்தி, நன்றி நவிலல் நாள் வாழ்த்துக்கள்.
தென்றல் குழு
நவம்பர் 2018 |
|
|
|
|
|
|
|