|
தென்றல் பேசுகிறது... |
|
- |மே 2017| |
|
|
|
|
அதிபர் ட்ரம்ப்பின் 100 நாள் ஆட்சி குறிப்பிடத் தக்கதாக எதுவுமின்றி முடிவடைந்தது. பல நிர்வாகச் செயல்பாடுகளையும், அதைவிட அதிகமான வீரவுரைகளையும் பார்த்தோம். ஆனால் மெய்யாகவே சட்டங்கள் இயற்றப்பட்டனவா என்றால், இல்லை என்பதே விடையாக இருக்கிறது. அதிபரின் நோக்கம், சொற்கள், அவற்றைச் செயல்படுத்தும் (அல்லது செயல்படுத்தாத!) விதம் இவற்றுக்கு நாம் பழகிப் போய்விட்டோம் என்று தோன்றுகிறது.
இப்படியொரு சூழலில், மக்கள் பாடுபட்டுச் சேர்த்த பணத்தைச் செலவழிக்கத் தயக்கம் காட்டுவதை உணரமுடிகிறது. ஹோட்டல் அறைகள் காலியாகக் கிடக்கின்றன; வாடிக்கையாளர் வருகை குறைந்துவிட்டதாக ஸ்டார் பக்ஸ் கூறுகிறது; கார் விற்பனை குறைந்துவிட்டது; எமிரேட்ஸ் தனது விமான சேவையைக் குறைத்துக் கொண்டுள்ளது. வணிகம் சரிந்ததோடு மட்டுமல்ல, மொத்த உள்நாட்டு உற்பத்தியும் (GDP) வெறும் 0.7% மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் கூகுள் ஆன்லைன் வருமானமும், நியூ யார்க் டைம்ஸ் மின்னிதழின் சந்தா வருவாயும் மிக வலுவாக வளர்ந்துள்ளது ஆச்சரியத்தைத் தருகிறது. ஸ்டார் பக்ஸிலும் மொபைல் ஆர்டர்கள் அதிகரித்துள்ளனவாம். மக்கள் ஆன்லைன் பரிமாற்றத்துக்குப் பெரிதும் மாறிவருதை இவை காண்பிக்கின்றன. மெல்ல மெல்ல நுகர்வோர் செலவிடுதலும் மேம்பட்டு வருகிறது. மீண்டும் ஒரு பொருளாதாரச் சரிவு வந்துவிடாது, மக்களின் நம்பிக்கை உயர்ந்து அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள் என்று நாம் நம்பலாம்.
*****
அரசியல் ஆசிர்வாதமும், அள்ள அள்ளக் குறையாத கஜானாவும் கொண்ட பல கல்வித்தந்தைகள் தமிழகத்தைப் பொறியியல் பட்டதாரி உற்பத்திச்சாலை ஆக்கிவிட்டனர். அவைகளின் மூலமாகவே அவர்கள் மேலும் பணத்தை அள்ளிக் குவிக்கின்றனர். இதில் சோகமான விஷயம் என்னவென்றால் இவற்றிலிருந்து வெளிவரும் பட்டதாரிகளில் 22 சதவிகிதத்தினர் மட்டுமே பொறியியல் பணி செய்யத் தகுதி கொண்டவர்களாக இருக்கின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. பொறியியல் பட்டம் பெற்றால் போதும், பெரிய சம்பளம் நிச்சயம் என்றிருந்த காலம் மாறி வருகிறது. தொழில்நுட்பத் துறையில் பணிவாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது. பொறியியல் கற்பதற்கான நாட்டம் இல்லாவிட்டாலும் எப்படியாவது பணத்தைக் கொட்டிக் கொடுத்துக் கல்லூரியில் இடம் வாங்குவது குறைந்து வருகிறது. அதே நேரத்தில், தமிழகத்தில் பள்ளி அளவிலும் கல்வித்தரம் ஏதும் சொல்லும்படியாக இல்லை என்பதே உண்மை. அனைத்திந்திய அளவில் போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் குறிப்பிடத்தக்க வெற்றி பெறுவதில்லை என்பதே இதற்கொரு சான்று. இப்படியே போனால் பல வகைகளிலும் தமிழகம் பின்தங்கிய மாநிலம் ஆகிவிடும் அபாயம் உள்ளது. அதனைத் தவிர்க்க வேண்டுமென்றால், ஆட்டங் காணாத, தொலைநோக்கோடு சிந்திக்கிற, வீரவுரையோடு நிற்காமல் சரியானதைச் செய்கிற, கட்சிநலன் என்றில்லாமல் மக்கள்நலனைக் கருத்தில் கொண்டதாகத் தமிழக அரசு செயல்பட வேண்டும். செயல்படுமா? எப்போது?
***** |
|
சென்ற இதழில் கலைக்கல்வித் துறையில் சாதனை படைக்கும் ரவி ராஜன் அவர்களின் நேர்காணல் தொடங்கியது. மேலும் பல அரிய செய்திகள், நுண்ணிய கண்ணோட்டம் ஆகியவற்றோடு இந்த இதழில் நிறைவடைகிறது. தருமன் பாஞ்சாலியைப் பணயம் வைத்துச் சூதாடியது குறித்த இதுவரை எவரும் பேசியிராத பல தகவல்களோடு கூடிய விவாதம் 'ஹரிமொழி'யில் தொடர்கிறது. கவிதைகள், கதைகள், 'மேலோர் வாழ்க்கையில்' எனச் சுவைமிக்க பல அம்சங்களோடு தென்றல் உங்கள் இதய வாசலைத் தட்டுகிறது.
வாசகர்களுக்கு புத்த பவுர்ணமி, அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!
தென்றல் குழு
மே 2017 |
|
|
|
|
|
|
|