|
தென்றல் பேசுகிறது... |
|
- |ஜூலை 2014||(1 Comment) |
|
|
|
|
|
கருக்கலைப்பு எப்போதுமே சூடான விவாதத்தைக் கிளப்பும் தலைப்புத்தான். மாசசூசட்ஸில் 2007ம் ஆண்டு சட்டத் திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது, அதன்படி, ஒரு கருக்கலைப்பு மையத்துக்கு வருகிறவரிடம் வேறொரு நபர் மதத்தின்படி அல்லது அறநெறி ஒழுக்கத்தின்படி கருக்கலைப்பைத் தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்த விரும்பினால் அவர் அந்த மையத்துக்கு 35 அடிச் சுற்றளவுக்கு அப்பால் இருந்துதான் அதனைச் செய்யவேண்டும் என்று கூறப்பட்டது. கருக்கலைப்பை எதிர்த்து கோஷமிடுவோருக்கும் அது பொருந்தும். அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் 1 மற்றும் 14 ஆகியவற்றுக்கு எதிரானது என்று தொடர்ந்த வழக்கில், அமெரிக்க உச்சநீதி மன்றம் இந்தச் சட்டம் தவறானதென்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பின் விளைவு என்னவென்றால் கருக்கலைப்புக்கு எதிரான துண்டுப் பிரசுரம் வழங்க அல்லது மாற்றுவழிகளைக் கூற விரும்புவோர் அந்த மருத்துவ மனையின் நுழைவாயில்வரை அங்கு வரும் பெண்களை அணுக முடியும். இதனால் கருக்கலைப்பு மையத்தின் நுழைவுப் பகுதியில் கூட்டமும் குழப்பமும் ஏற்படலாம் என்ற வாதத்தை ஏற்காத உச்சநீதி மன்றம், அதைச் சமாளிக்க வேறு சட்டங்கள் தரும் வழிகள் உள்ளன என்று கூறியுள்ளது. செய்ய விரும்புவது எதுவானாலும், அமைதியான அணுகுமுறைகள் அதிகப் பயன் தரும் என்பதுதான் உண்மை.
*****
பன்னாட்டு கிரிக்கெட் கவுன்சிலின் ICC தலைவராக அண்மையில் திரு. N. ஸ்ரீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைவராக அவர் இயங்குவதற்கு இந்திய சுப்ரீம் கோர்ட் அனுமதிக்கவில்லை என்றபோதும், ICC பதவிக்குப் போட்டியிடுவதை அது தடுக்கவில்லை என்பதால் இது சாத்தியமாகி உள்ளது. IPL போட்டிகளில் மேட்ச் ஃபிக்சிங் போன்ற முறைகேடுகளில் அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பங்கிருப்பதாக நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு இன்னும் தீர்ப்புக்கு வராத நிலையில் அவர் பன்னாட்டு அளவில் தலைமை ஏற்றிருக்கிறார். தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று உறுதிபடக் கூறுவதுடன் இந்த நியமனம் தனக்கு மிகவும் கௌரவத்தைத் தருவதாகவும் அவர் கூறியுள்ளார். "மக்கள் நடுவே கிரிக்கெட்டின் செல்வாக்கு நிலைக்கவும் மேலும் வளரவும் வேண்டுவனவற்றை நான் செய்ய விரும்புகிறேன். உலக அளவில் அது வளருவதற்கு ICC முக்கியப் பங்காற்றும். பன்னாட்டு கிரிக்கெட்டில் இன்னும் பல வலுவான அணிகளை நான் காண விரும்புகிறேன்" என்று கூறுகிறார் ஸ்ரீனிவாசன். நீதிமன்றத் தீர்ப்பு என்னவாக இருந்தாலும், கிரிக்கெட் காதலரான ஸ்ரீனிவாசனின் தலைமை உலக அளவில் அந்த விளையாட்டுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுக்கப் போவது நிச்சயம்.
***** |
|
டாக்டர் பால்ராஜ் ஆரோக்கியசாமி போன்றவர்கள் அரிதாகக் காணக் கிடைப்பவர்கள். சிறந்த அறிவியல் சிந்தனையாளர், அறிவியல் புத்தாக்கப் படைப்பாளர், இந்தியாவிலும் வெளியிலும் பல உயர்ந்த கௌரவங்களைப் பெற்றவர். அவரது நேர்காணல் இந்த இதழுக்குக் கிடைத்த பெருமை. மின்னூல்களுக்கும் (eBooks) அச்சு நூல்களுக்கும் இடையே பெருத்த போட்டி நடந்துவரும் இந்நாளில், சிறந்த படைப்புகளை ஒலிநூல்களாக்கும் (Audio Books) பணியைச் செய்து வருகிறார் பாம்பே கண்ணன். 'பொன்னியின் செல்வன்' ஒலிநூல் அவரது தற்போதைய சாதனை. அவரோடான உரையாடலையும் நீங்கள் சுவைப்பீர்கள். சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைகள், பதிப்புக்குத் தேர்வான கதைகளின் பட்டியல் மற்றும் பல தகவல்களோடு இந்த இதழை உங்கள் கரங்களில் ஒப்படைக்கிறோம்.
தென்றல் வாசகர்களுக்கு அமெரிக்க விடுதலை நாள், குருபூர்ணிமை மற்றும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.
தென்றல் குழு
ஜூலை 2014 |
|
|
|
|
|
|
|