|
தென்றல் பேசுகிறது... |
|
- |ஆகஸ்டு 2012| |
|
|
|
|
|
அமெரிக்க உச்சநீதி மன்றம் Affordable Care சட்டத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து ஒரு மாதம் ஆகிவிட்டது. எல்லாத் தட்டிலுமுள்ள மக்களும் உடல்நலக் காப்பீட்டு வளையத்துக்குள் வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு ஒபாமா இந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வருவதற்குப் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. ஆனால், இதை எப்படியாவது தகர்க்க வேண்டும் என்ற அரசியல் நோக்கோடு இந்தச் சட்டத்தை அகற்றும் தீர்மானம் காங்கிரஸில் கொண்டுவரப்பட்டு, அது அங்கே பெரும்பான்மையோடு நிறைவேறியும் விட்டது. செனட்டில் இது நிறவேற வாய்ப்பில்லை. அதிபர் தேர்தலில் ஒபாமா கொடுத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவது. இதோ, திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்த தேர்தலும் வந்துவிடும். அரசியல் லாபமா, மக்கள் நலனா என்ற முக்கியக் கேள்வியில் பல திட்டங்கள் முன்னதற்கு பலியாகி வரும் நிலையில், இந்தச் சட்டமும் அந்த கதியை அடைந்துவிடக் கூடாது என்பதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
*****
இதைப்பற்றிப் பேசும்போது லண்டன் ஒலிம்பிக்ஸ் துவக்க விழா நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. டானி பாயில் தனது நிகழ்ச்சியில் பிரிட்டனின் 'தேசிய மருத்துவச் சேவை'யின் (NHS) பெருமையைச் சித்திரிக்கும் வண்ணம் ஒரு காட்சியைச் சேர்த்திருந்தார். அதில் 320 ஒளியுமிழும் படுக்கைகள் மருத்துவ மனை ஒன்று காண்பிக்கப் பட்டது. இதில் நிஜவாழ்வில் செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர் 600 பேர் பங்கேற்றனர். "என்.எச்.எஸ். ஒரு கொண்டாடத் தக்க அற்புதம்" என்று வர்ணித்தார் டானி பாயில். உலகப் பொருளாதாரச் சூறாவளியில் மருத்துவச் செலவு சாதாரண மனிதனின் கைக்கெட்டாத உயரத்துக்குப் போய்விடாமல் பார்த்துக் கொள்வது அரசுகளின் கடமை. அந்தக் கடமையைச் சரிவரச் செய்திருப்பதாக பிரிட்டன் பெருமைப் படலாம்.
*****
அசாமிலுள்ள இந்திய எல்லை ஒரு தேன்கூட்டைவிட ஓட்டைகள் மிகுந்தது. பங்களா தேசத்திலிருந்து எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைவது எளிதிலும் எளிது. ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் நமது கட்சிகளும் தொடரும் இந்த ஊடுருவலைக் கண்டும் காணாமல் இருப்பதோடு, அவர்களை இந்தியக் குடிமக்களுக்கான ரேஷன் அட்டை, மின்சாரம் என்று எல்லாம் கொடுத்து, தமக்குச் சாதகமாக்கிக் கொண்டன. இப்போது அங்கே பெரும் கலவரம் வெடித்திருக்கிறது. இரண்டு லட்சம் பேர், இந்தியர்கள், அங்கே அகதிகளாகியிருக்கிறார்கள். வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டுள்ளன என்பதில் தொடங்கி அங்கே நடக்காத அக்கிரமம் இல்லை. மாநில அரசும் மத்திய அரசும் யார்மீது தவறு என்று சுட்டுவிரல் நீட்டுவதில் காட்டும் அக்கறையை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் காட்டவில்லை. இந்த வெளிநாட்டவர்கள் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் பெரும் எண்ணிக்கையில் குடியேறிவிட்டார்கள். அடிப்படை வாழ்வாதாரம் கூட இல்லாத இவர்கள் நக்சலைட் போன்ற வன்முறை அமைப்புகளுக்கு எளிதில் வசப்படுவார்கள். அவர்களுக்கு இந்தியாமீது எந்த விசுவாசமும் கிடையாதென்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். அசாமில் நடந்திருப்பது ஒரு தொடக்கம்தான். நமது அரசுகளும் அரசியல் கட்சிகளும் இப்போதே சுதாரித்துக் கொள்ளவில்லை என்றால், கட்டுக்கடங்காத வன்முறை இந்தியாவின் பல பகுதிகளிலும் வெடிக்கும் வாய்ப்பு வெகு தொலைவில் இல்லை.
***** |
|
நடிகர், எழுத்தாளர் பாரதி மணி, பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ்ப் பீடப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் ஆகியோரின் நேர்காணல்கள் இந்த இதழுக்குச் சிறப்புச் சேர்க்கின்றன. அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றவர்களுடன் பழகிய பாரதி மணி அந்தக் காலத்தைச் சுவையாக அசை போடுகிறார். பேரா. ஹார்ட், அமெரிக்காவிலும் கனடாவிலும் இருக்கும் தமிழர்கள் ஆங்காங்கே ஒன்று சேர்ந்தால் இன்னும் பல தமிழ்ப் பீடங்களை உருவாக்கலாம் என்ற முக்கியமான கருதுகோளை விதைக்கிறார். மிகச் சுவையான கதைகள், குறுக்கெழுத்துப் போட்டி, திருக்குறளின் உவமையை அணுகுவது எப்படி என்று விளக்கும் 'ஹரிமொழி' என்று மற்றொரு பல்சுவை விருந்து இதோ உங்கள் கையில்!
வாசகர்களுக்கு இந்திய சுதந்திர நாள், ரமலான், கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள்.
ஆகஸ்டு 2012 |
|
|
|
|
|
|
|