|
தென்றல் பேசுகிறது... |
|
- |அக்டோபர் 2009||(1 Comment) |
|
|
|
இரான் இரண்டாவது அணுசக்தி எரிபொருள் சுத்திகரிப்பு ஆலையை நிறுவியுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது, ஒபாமா குற்றம் சாட்டியது உண்மைதான். ஆனால் அமைதியான விவகாரங்களுக்குத்தான் நாங்கள் அணுசக்தியைப் பயன்படுத்துவோம் என்று கூறியிருக்கிறது. அக்டோபர் 25ம் தேதி அவர்களது இரண்டாவது உலை ஆய்வுசெய்யப்படும், அப்போது உண்மை தெரியும். பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காகப் பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்ட அமெரிக்க நிதியில் பெருமளவு வேறு திசையில் செலவிடப்பட்டது என்று பாகிஸ்தானிய ராணுவத்தில் உயர்பதவியில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் வேலை இழப்பும் வேலைவாய்ப்புக் குறைவும் அபாயகரமான நிலையில் உள்ளன. கார் விற்பனைக் கூடங்கள் காணாமல் போவதும் தொடர்கிறது. 2016ல் ஒலிம்பிக் போட்டிகளை யார் நடத்துவது என்ற போட்டியில் வளரும் நாடான பிரேசில் வென்றுவிடுகிறது. வல்லரசாகத் தனது ஆதிக்கத்தை உலகெங்கும் நிலைநாட்டி வரும் சீனாவுக்கு அஞ்சி ஒபாமா, தலாய் லாமாவைச் சந்திப்பதை 'ஒத்திப் போடுகிறார்'. இராக்கிலும் ஆப்கனிஸ்தானத்திலும் இருக்கும் எண்ணற்ற அமெரிக்க வீரர்களைப் படிப்படியாகத் திருப்பியழைக்க வேண்டும்; ஆனால் அங்கெல்லாம் அரசியல்நிலை எதிர்பார்த்த அளவுக்குச் சீரடையவில்லை. அங்குள்ள படைகளைப் பராமரிக்க டாலர் தண்ணீராகச் செலவழிகிறது. அது மட்டுமல்ல, அவர்கள் உயிரிழப்பதும் தொடர்ந்து நடக்கிறது.
இதென்ன, ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பட்டியலாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? இன்று அமெரிக்க அதிபருக்குச் சிம்மசொப்பனமாக இருக்கும் பிரச்சனைகள்தாம் இவை. இப்போது மீண்டும் படித்துப் பாருங்கள், அவர் படும் அவஸ்தை தெரியும்.
*****
சீனாவுக்கு அஞ்ச வேண்டியது அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவும்தான். அருணாசலப் பிரதேசத்தைத் தனது என்று சீனா வரைபடம் போட்டாகிவிட்டது; எல்லையோர கிராமங்களில் அவர்களது படைவீரர்கள் ஊடுருவி வந்து பாறைகளின் மேல் சீனா என்று எழுதிவிட்டுச் செல்கிறார்கள். சீனா, ராஜபக்சேவைக் கைக்குள் போட்டுக்கொண்டுவிட்டது. பாகிஸ்தானோ எப்போதுமே அதன் பைக்குள்தான். பெய்ஜிங்கைத் தமது தலைநகராகக் கருதும் தேசப்பற்றில்லாத அரசியல்வாதிகள் இந்தியாவில் உள்ளனர். சீனாவின் சமீபத்திய ராணுவ அணிவகுப்பு அதன் இணையற்ற வலிமையைப் பறை சாற்றியது. இந்தியாவிலும் சரி, பிற நாடுகளிலும் சரி, எந்த்ப் பொருளை வாங்கினாலும் அனேகமாக அது சீனாவில் தயாரானதாக இருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ், வாணவேடிக்கை, பொம்மைகள் என்று நாம் செலவழிக்கும் ஒவ்வொரு டாலரிலும், ரூபாயிலும் ஒரு பகுதி தவறாமல் சீனாவை வளப்படுத்துகிறது. அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவும்தான் விழித்துக்கொள்ள வேண்டும்.
***** |
|
அக்டோபர் காந்தி ஜயந்தி மாதம். உலகின் எல்லாப் பிரச்சனைகளுக்கு நடுவிலேயும் ஒருவரை நினைத்தால் அமைதி கிடைக்கிறதென்றால், அது காந்தியாகத்தான் இருக்க முடியும். "உங்களுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் யார்?" அண்மையில் அதிபர் ஒபாமாவைக் கேட்டபோது, "சந்தேகமேயில்லாமல் காந்தி" என்று பதிலளித்தார் அவர். மஹாத்மா காந்தியடிகளின் தனிச்செயலராக இருந்த வி. கல்யாணம் அவர்களை நாம் இந்த இதழுக்காக நேர்காணல் செய்திருக்கிறோம். தனது சிந்தனையும் சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்தவர்கள் அரிது. அந்த அரிய உண்மையை மீண்டும் கல்யாணம் அவர்களின் வாயிலாக நாம் அறியக் கிடைத்துள்ளது. நல்ல பதவியைத் துறந்து சமூகப் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொள்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பது 'சுவாமி விவேகானந்தா ஊரக சமுதாயக் கல்லூரி'யின் நிறுவனர் ஜீ.வி. சுப்பிரமணியன் அவர்களைப் பார்த்தபோது தெரிந்தது. நெஞ்சைத் தொடும் அந்தக் கட்டுரை சிறப்புப் பார்வை பகுதியில் வந்துள்ளது. தென்கச்சியாருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்த தென்றல் முதன்மை ஆசிரியர் மதுரபாரதி, அவருக்கு இந்த இதழில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சில இதழ்களுக்கு முன்னர் ஓவியர் மணியம் செல்வன் அவர்களின் நேர்காணல் தென்றலில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த இதழிலிருந்து சிறுகதைகள் சிலவற்றுக்கு அவர் ஓவியம் வரைகிறார். பார்த்தவுடனே இது ம.செ. ஓவியம் என்று கூறிவிடும் அளவுக்குத் தனித்தன்மை வாய்ந்த அவரது ஓவியங்கள் தென்றலில் வெளிவருவது எமக்குப் பெருமை.
இந்த ஆண்டு அக்டோபர் நடுவிலேயே அவசரமாக தீபாவளி வந்துவிட்டது. சுற்றுச் சூழலை மாசுபடுத்தாமல், பணத்தைக் கரியாக்காமல், ஆடம்பரத்தைக் குறைத்துக் கொண்டு, அதில் மிச்சப்படுத்திய பணத்தை இல்லாதோர் இல்லத்தில் விளக்கேற்றுவதற்குப் பயன்படுத்தலாம். பட்டுப் பூச்சிகளைக் கொல்லாமல் நெய்யப்படும் அகிம்சைப்பட்டு உடுத்துவதும் நல்லதே.
வாசகர்களுக்கு தீபாவளி, கந்த சஷ்டி வாழ்த்துகள்.
அக்டோபர் 2009 |
|
|
|
|
|
|
|