|
|
|
தன் மனத்தில் தோன்றுகிற காட்சியில் லயித்துத் தன்வசமிழந்த நிலையில், கவிஞனுடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகி, சொல்லை அவன் ஆளும் தன்மை மறைந்து, அவனுடைய நனவழிந்த நிலையில் ஒருசொல் உதிர்ந்து விழுகின்ற விதத்தைப் பேசிக் கொண்டிருந்தோம். கவிதையில் சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் ‘சொல்லாட்சி' என்ற வகையே கூட பெரிய மாயங்களைத் தன்னகத்தே அடக்கிய ஒன்று. ‘வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியில் மறைய' என்று சூரியனுடைய ஒளியைத் தன் ‘கரிய' மேனியின் ஒளியால் மறைக்கும் ராமனைப் பற்றித் திருமணத்துக்கு ஒருநாள் முன்னால் நினைத்தபடி இருக்கும் சீதை அவனைக் ‘கருநாயிறு‘ என்று அழைக்கக் கேட்கிறோம்.
'கருநாயிறு போல்பவர் காலொடு போய், வருநாள், அயலே வருவாய்; மனனே! பெருநாள், உடனே, பிரியாது உழல்வாய்; ஒருநாள் தரியாது ஒழிவார் உளரோ?
| அம்பு மண்ணால் தின்னப்பட்டு மக்கி, இற்றுப் போயிருந்தால் பயன்படாது. திருமால், கண்ணனாக வந்து மண்ணைத் தின்றவன். இருவருக்கும் பொருந்தி வருமாறு அழகான சொல்லாட்டத்தைக் காளமேகம் எடுத்துக் கொடுத்தான். | |
தன்மனம், தன்வசத்தில் நில்லாது ராமனிடத்திலேயே போய்த் தங்கிக் கிடப்பதை எண்ணி, சீதை மனத்தை அழைத்துச் சொல்கிறாள்: ‘கருப்புச் சூரியனைப் போன்றவன் நடந்து போன சமயத்தில் அவனுடைய பாதத்தையே பற்றிக் கொண்டு அவனுடனேயே போய்விட்ட என் மனமே! (நீ எங்கே போய்விடப் போகிறாய்!) அவன் வருகின்ற நாளில் (என்னை மணமுடித்தபின்னரும் நீ அவனிடத்திலேயே தான் தங்கிக் கிடக்கப் போகின்றாய் என்றபோதிலும், அவன் என் அருகில் இருக்கும் அளவிலும்) நீயும் என் அருகில் தானே இருந்தாகப் போகிறாய்! (திருமணம் முடிய இன்னமும் ஒரே ஒருநாள் தானே இருக்கிறது? இந்த நிலையில்) நான் பிறந்த நாள்முதல் என்னைவிட்டு நீங்காமல் கிடந்த நீ, இந்த ஒரே ஒரு நாளுக்குப் பொறுக்க முடியாமல் என்னை விட்டு நீங்கி (அவனுடனேயே இன்னமும் தங்கி) கிடப்பது சரியா? இப்படி யாராவது இருப்பார்களா?'
ராமனைப் பார்த்த வினாடியிலேயே அவனுடைய ‘பாதத்தைப் பற்றிக் கொண்டு சென்ற தன் மனம்' இன்னமும் தன்னிடம் மீளாமல் இருக்கும் நிலையைப் பற்றி சீதை பேசுவதில் உள்ள அந்தக் ‘கருநாயிறு' என்ற ஆட்சியைப் பாருங்கள். சொல்லைப் புதிது புதிதாகப் படைப்பது ஏதோ இன்று ‘கட்டுகளிலிருந்து விடுபட்ட கவிதையில்' மட்டுமே நிகழும் ஒன்று என்று நினைத்திருக்கும் எண்ணத்தை உடைக்கும் வகையில் ‘கருப்புச் சூரியன்' என்றொரு (இன்றளவும் புதிய சொல்லாட்சியாகக் கருதப்படுகிற) ஒரு மாயத்தைப் படைக்கிறான் கம்பன். இந்தக் கருநாயிறு என்ற ஆட்சியே ‘வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியில் மறைய' என்று கிளைத்து, ‘ஐயோ' என்ற சொல்வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றிருக்கிறது என்பது சொல்லித் தெரியவேண்டிய ஒன்றன்று.
இப்படி, தேர்ந்தெடுத்துப் பெய்யப்பட்ட சொல்லாட்சி, கவிஞனுடைய மனத்தில் மெல்லமெல்லச் சித்திரமாக விரிந்து, அவன் உள்ளத்தில் விரியும் பிம்பம் அவனையே ஆட்கொள்ளத் தொடங்குகிறது. ‘சிந்திப்பார்க்கே உள்ளத்தே ஆனந்தக் கனவுபல காட்டல்' என்று பாரதி குறிப்பது இதைத் தான். தான் ‘தெளிவுறவே அறிந்த' ஒன்றைக் குறித்துச் சிந்திக்கச் சிந்திக்க அது அகத்தில் பெருந்தோற்றமாய், பேரெழிலாய் உருப் பெற்று, பின்னர் அந்தக் காட்சியை எந்த மனம் உருவாக்கியதோ அதையே ‘தன்வசம்' இழக்கச் செய்கிறது. மேலே உள்ள பாடலில் சீதை, தன்னுடைய மனம் ராமன் நடந்து செல்கையில் அவனுடைய ‘பாதத்தைப் பற்றிக் கொண்டு' தன்வசத்தில் இல்லாமல் பிரிந்து சென்றதைச் சொல்வதைப் போன்ற நிலைக்கே கவிஞனுடைய மனமும் ஆளாகிறது. பர-வசத்தில் சொல்வீழ்ச்சி நிகழ்கிறது. இதைச் சென்றமுறை திருநாவுக்கரசர், திருப்பாணாழ்வார் போன்ற கவிஞர்களுடைய வாக்கிலிருந்து இணையான மனோபாவத்தில் பிறந்த வீழ்ச்சிகளை ஒப்பிட்டுப் பார்த்துப் பேசினோம்.
‘சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே' என்று அபிராமியை அழைக்கிறாரல்லவா அபிராமி பட்டர், அதுபோல, எப்படி சக்தியை விட்டுச் சிவத்தைப் பிரிக்கமுடியாதோ அப்படியே சொல்லுக்கு என்னென்ன நேர்கிறதோ அதுவெல்லாம் பொருளுக்கும் நேர்ந்தாக வேண்டுமல்லவா! அதுதானே இயற்கை. தான் நினைத்தும் பார்க்காத சொல் வந்து ஓரிடத்தில் வீழும் என்றால், தான் நினையாத வேறு ஒரு பொருத்தமான பொருளும் வந்து அமையத்தானே வேண்டும். மனம் ஒன்றை நினைத்து அமைக்கும் சொல் அமைப்பில் தன்னை அறியாமல் இன்னொரு உட்பொருளும் கலந்துவிடும். இப்படி அமைவதில் சொல்ல விழைந்த பொருள் எதுவோ அது விழைபொருள். ஆனால் சொல்கின்ற முறையாலே விளைந்த பொருள் எதுவோ அது விளைபொருள்.
இந்தத் தருணத்தில் ஒன்றைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். சிலேடை என்றும் இரட்டுற மொழிதல் என்றும் காளமேகத்தைப் போன்ற பெரும்புலவர்கள் ஆடிய சொல்லாட்டத்தை நாம் இப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை. ‘நாண் என்றால் நஞ்சிருக்கும், நற்சாபம் கற்சாபம்' என்று இரட்டைப் புலவர்கள் தொடங்கினார்கள். திரிபுரம் எரித்த சிவன் மேருவே வில்லாகவும், வாசுகிப் பாம்பு நாணாகவும், திருமால் அந்த வில்லில் பொருத்தப்பட்ட அம்பாகவும் ஆரம்ப நிலையில் எடுத்துக் கொண்டான். பிறகு எதுவுமே வேண்டாம் என்று சிரித்துப் புரமெரித்தான் என்பார்கள். அப்படி, ஏன் அந்த வில், நாண், அம்புகளை ஒதுக்கினான் என்று கற்பிதம் செய்து பாடுகிறார்கள் இரட்டைப் புலவர்கள். பெரிய சபை. நடுவில் இருவரும் பாடத் தொடங்கி விட்டார்கள். ‘நாண் என்றால் நஞ்சிருக்கும்' என்று தொடங்கினார். வாசுகிப் பாம்பு நாணாகப் பயன்பட்டது; அதனால் அது நஞ்சை உடையதாக இருக்கும் என்று ஒரு பொருள்; நைந்து போயிருக்கும் (நஞ்சு போனது) ஆகவே பயன்படுத்த முடியாது என்பது இன்னொரு பொருள். அடுத்ததாக ‘நற்சாபம் கற்சாபம்' என்றார். நாண்தான் அப்படி என்று பார்த்தால், எடுத்த வில்லோ (சாபம்) கல்லால் ஆன ஒன்று. இதை வளைக்க முடியாது என்று முதலடியை அமைத்தார். பிறகு ‘பாணந்தான்' என்று தொடங்கினார். அம்புக்கும் திருமாலுக்கும் பொதுவாக என்ன குறையைச் சொல்வது என்று சிந்தனை ஓட்டத்துள் சிக்கவில்லை. தயங்கினார். ‘பாணந்தான்....' என்று அவர் இழுத்துக் கொண்டிருக்கும்போது, சபையில் அமர்ந்திருந்த காளமேகம் ‘மண்தின்ற பாணமே' என்று எடுத்துக் கொடுத்தான். அம்பு மண்ணால் தின்னப்பட்டு மக்கி, இற்றுப் போயிருந்தால் பயன்படாது. திருமால், கண்ணனாக வந்து மண்ணைத் தின்றவன். இருவருக்கும் பொருந்தி வருமாறு அழகான சொல்லாட்டத்தைக் காளமேகம் எடுத்துக் கொடுத்தான். |
|
நாம் இப்போது பேசுவது அப்படிப்பட்ட, இருபொருள் தருகின்ற சிலேஷை (அல்லது சிலேடை) விளையாட்டைப் பற்றியதன்று. அதையெல்லாம் இன்னொரு முறை தனியாகப் பார்க்கலாம். நாம் பேசுகின்ற இந்த ‘விழைபொருள்', ‘விளைபொருள்' இரண்டுமே வேறு வகையானவை. விழைபொருள் கவிஞன் உணர்ந்து அமைத்த பொருள். விளைபொருளைக் குறித்து நம்மால் தீர்மானமான முடிவுக்கு வரவே முடியாது. ‘இதை வேண்டுமென்றுதான் இப்படி அமைத்தானா, அல்லது தற்செயலாக இப்படி அமைந்ததா' என்பதை நிச்சயித்துச் சொல்ல இயலாது. பெரும்பாலும் இயலவே இயலாது. இப்படிப்பட்ட master stroke அமைந்த பாடல்களில் ஒரே ஒரு அவதிதான் உண்டு. உரையாசிரியர்களில் பெரும்பான்மையோருக்கு, அல்லது மேடைப் பேச்சாளர்களில் பலருக்கு இந்த ‘மறைபொருள்' (விளைபொருள் என்று நாம் குறிப்பிடுவது) இல்லாத இடத்திலெல்லாம் கண்ணுக்குத் தெரியத் தொடங்கிவிடும். You see a thousand ghosts where there is none என்று சொல்வதைப் போல, இல்லாத பொருளையெல்லாம் கற்பிதம் செய்து பேசத் தொடங்கிவிடுவார்கள். கேட்பவனுக்குதான் மதி இருக்கவேண்டும், கேப்பையில் நெய்வடியுமா வடியாதா என்று சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள.
| ‘விடையும் கொண்டேன்' என்று அந்த வினாடியே ராமன் ‘ஆணையைத் தலைமேற் கொண்டு' புறப்படும் அழகைச் சொல்லாத பேர்கள் இல்லை. ஆனால், இந்தப் பாட்டில் இரண்டு இடங்களில் நிறுத்தக் குறிகளைச் சற்று மாற்றிப் போட்டால் சொல்லவரும் பொருள் வேறொரு பொருளாகத் தொனிக்கும். | |
விஷயத்துக்கு வருவோம். இந்த உள்ளக் கிடக்கை ஒன்றாக இருக்க, அதனை உள்ள (நாம் யோசிக்க) நமக்குக் கிடைக்கும் உள்ள-கிடைக்கை இன்னொன்றாகவும் அமையும், அது பொருத்தமாகவும் விளங்கும் பாடல்களில் ஓர் எடுத்துக் காட்டுக்கு மீண்டும் கம்பனுக்குள்ளேயே போவோம். ‘ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீபோய்த் தாழிரும் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற்கொண்டு' என்றெல்லாம் ‘தசரதனுடைய ஆணை' என்ற பெயரில் கைகேயி, ராமனிடம் கூறும் ‘கட்டளைகளுக்கு' விடையாக ராமன் சொல்வதாக அமைந்துள்ள இந்தப் பாடலைப் பார்க்கலாம்:
'மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ? என்இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்; மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.'
இது அரசன் பணித்த பணியாக இல்லா விட்டால்தான் என்ன, நீங்கள் என் தாயல்லவா, உங்களுடைய வார்த்தையை நான் மறுத்துப் பேசவும் போகின்றேனா? நாட்டை அரசாள்வதான செல்வத்தை பரதன் பெற்றால் என்ன, அது நான் பெற்றதாகவே அல்லவா கருதத் தக்கது? இதோ இக்கணமே இந்தப் பணியை என் சிரத்தின்மேற்கொண்டேன். இதோ இன்றே, இப்போதே கானகத்துக்குப் போகிறேன். நான் போய்விட்டு வருகிறேன் தாயே'.
‘விடையும் கொண்டேன்' என்று அந்த வினாடியே ராமன் ‘ஆணையைத் தலைமேற் கொண்டு' புறப்படும் அழகைச் சொல்லாத பேர்கள் இல்லை. ஆனால், இந்தப் பாட்டில் இரண்டு இடங்களில் நிறுத்தக் குறிகளைச் சற்று மாற்றிப் போட்டால் (அல்லது வாசிக்கும்போது குரலைச் சற்றுத் தாழ்த்தி, இடைவெளி கொடுத்துப் படித்தால்) சொல்லவரும் பொருள் வேறொரு பொருளாகத் தொனிக்கும். இப்படி ஒரு பொருளைச் சொல்லலாமா, சொன்னால் பொருந்துமா, இது ‘காமாலைக்காரன் காணும் மஞ்சளா‘, காரிருளில் தோன்றும் பேயுருவா, அல்லது நிஜமாகவே அப்படி ஒரு பொருள் தோன்ற வாய்ப்பிருக்கிறதா? பேசுவோம்.
(இன்னும் வரும்...)
V. ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|
|