|
கர்ணன் பிறப்பும் திகைக்க வைக்கும் செய்திகளும் |
|
- ஹரி கிருஷ்ணன்|மார்ச் 2021| |
|
|
|
|
பாண்டவர் வனவாச காலத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. பதின்மூன்றாம் ஆண்டான அக்ஞாத வாசம் இன்னமும் தொடங்கவில்லை. இந்த நிலையில், கர்ணனுடைய கவச குண்டலங்களை யாசிக்க இந்திரன் வரப்போகிறான் என்று சூரியன் கர்ணனுடைய கனவில் தோன்றி அவனை எச்சரிக்கிறான். இந்தப் பகுதி பல காரணங்களுக்காக மிக முக்கியமான ஒன்று. இங்கேதான் குந்திக்கு துர்வாசர் உபதேசித்த மந்திரமும், அதைப் பரீட்சித்துப் பார்க்கவேண்டுமேன்ற ஆர்வத்தால் குந்தி சூரியனை எண்ணி அந்த மந்திரத்தை உச்சரிக்க, சூரியன் அவளுக்கெதிரில் தோன்றி அவளுக்குக் கர்ணனை அளித்ததும், அவளுடைய கன்னிமையை மீளத் தந்ததும், அவ்வாறு பிறந்த கர்ணனைக் குந்தி தன் வளர்ப்புத் தாயுடன் ஆலோசித்து அஸ்வ நதியில் விட்டதும், அந்த நதி சர்மண்வதி என்ற நதியோடு கலந்ததும், அந்த நதி யமுனையில் கலந்ததும், அங்கிருந்து நதியில் மிதந்துசென்ற அந்தப் பெட்டி கங்கையோடு கலந்ததும், அதன்பின்னர், "ஸூதனால் ஆளப்படுகின்ற சம்பா நதியின் ஸமீபம்" சென்றதும் மிகமிக விவரமாகச் சொல்லப்படுகின்றன.
மஹாபாரதத்தைப் படிப்பது நாவல் படிப்பது போன்ற சுலபமான வேலையன்று என்பதற்கு ஓர் உதாரணம் இந்த இடம். இந்த இடத்தில் 'தன் வளர்ப்புத் தாயுடன் ஆலோசித்து குந்தி, கர்ணனை ஆற்றில் விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இவ்வாறு ஆற்றில் விட்டது, சூரியனுடைய சொல்லின்படி என்பதைக் கண்ணனிடமிருந்து அறிந்துகொண்டு, கர்ணனே சொல்வதை நாம் இதற்கு முன்னால் 'விநாச காரணன்' என்ற தலைப்பில் சொல்லியிருக்கிறோம். "ஓ! ஜனார்தனரே! கன்னிகையானவள் ஸூரியனிடமிருந்தும் என்னைக் கர்ப்பத்தில் தரித்தாள். அவள், பிறந்தவனான என்னை ஸூரியனுடைய சொல்லாலேயே விட்டுவிட்டாள் ஓ! கோவிந்தரே! அவ்விதம் பிறந்த நான் தர்மத்தினாலே பாண்டுவுக்கு புத்திரனாகிறேன்." (உத்யோக பர்வம், பகவத்யாந பர்வம், அத். 141, பக். 465). என்று அங்கே சொல்லியிருந்தோம். அதாவது, இப்போது வனபர்வத்தின் இறுதிப் பகுதியில் இருக்கிறோம். இதற்கு அடுத்ததாக விராட பர்வம் வருகிறது; அதற்கும் அடுத்ததாக உத்யோக பர்வம் வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களையும், இரண்டு பர்வங்களையும் கடந்து சொல்லப்படும் இந்த விவரத் தொடர்ச்சியைக் கோத்துக்கொண்டே வருவதே ஒரு பெரிய சவால்.
அதுவும் அல்லாமல், 'வளர்ப்புத் தாயின்' ஆலோசனையின்படி கர்ணனை அஸ்வநதியில் ஒரு பெட்டியில் வைத்து மிதக்க விட்டுவிட்ட குந்தி அந்தப் பெட்டி, நீரில் மிதக்குமாறும், அது நீரில் மூழ்கிவிடாதபடியும் எப்படியெல்லாம் எச்சரிக்கையாக அதைத் தயாரிக்கச் செய்தாள்; எப்படி தேன் மெழுகைக் கொண்டு அந்தப் பெட்டியின் உட்புறங்களைப் பூசி, நீர் புகாதபடி செய்யச் சொன்னாள், அந்தக் குழந்தையை நதியில் விட்டபோது, அப்போதுதான் கன்னிப்பருவத்தை அடைந்திருந்த அந்தச் சிறுமி, என்ன வார்த்தைகளையெல்லாம் சொல்லி அந்தக் குழந்தையை ஆசிர்வதித்தாள் என்பதையெல்லாம் படித்தால் எந்தக் கல்நெஞ்சனுக்கும் கண்ணில் நீர் திரள்வது நிச்சயம். இந்தக் கட்டத்தைப் பலமுறை படித்துக் கண்ணீர் உகுத்திருக்கிறேன். முழு விவரத்தையும் அறியாமல் எத்தனையோ வகையான அவதூறுகளுக்குக் குந்தியை உள்ளாக்குபவர்களை எண்ணி வருந்தியிருக்கிறேன்.
குந்தி, அந்தப் பெட்டி நதியின் ஓட்டத்தில் எங்கெங்கு செல்கிறது, எந்த இடத்தில், யார் அந்தக் குழந்தையை எடுத்துச் செல்கிறார்கள், எடுத்துச் சென்றவர் யார் என்ற அனைத்து விவரங்களையும் ஒற்றர்கள் மூலமாகத் தெரிந்துகொள்கிறாள் என்பதும் இங்கு வனபர்வத்தில் சொல்லப்படுகின்றன. இவை அனைத்துக்கும் மேற்பட்ட, 'சூதன் என்பவன் சூத்திரன்' என்று காலகாலமாகச் சொல்லப்பட்டு வரும் பொய்யை முறிக்கும் வலுவான ஆதாரம் இந்த இடத்தில் கிடைக்கிறது. (இதை ஸமஸ்கிருத மூல ஸ்லோகத்தையே ஆதாரமாகக் காட்டி இதற்கு முன்னரும் 'சூதன் எனப்படுபவன் யார்' என்ற தலைப்பில் சொல்லியிருக்கிறோம்.
மேலே நாம் சொல்லியுள்ள மேற்கோளான "ஸூதனால் ஆளப்படுகின்ற சம்பா நதி" என்பது வனபர்வம் அத். 309, பக். 1140ல் வருகிறது. சூதர்கள் நாட்டை ஆண்டுகொண்டிருந்த க்ஷத்திரியர்களே என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம். விராடனின் மனைவியான சுதேஷ்ணையின் சகோதரனான கீசகன் 'ஒரு சூதன்' என்றே குறிப்பிடப்படுகிறான். அப்படியானால், அவனுடைய சகோதரியான சுதேஷ்ணையும், அவளுடைய கணவனான விராட மன்னனும் சூதர்கள்தானே? எனவே, சூதன் என்பவன், 'ஒரு மாற்றுக் குறைந்த க்ஷத்ரியனாக' மற்ற க்ஷத்ரியர்களால் எண்ணப்பட்டான் என்பதே பொருந்தும்.
இதுமட்டுமல்ல. கர்ணனைத் தூக்கிச்சென்ற அதிரதன், திருதராஷ்டிர மன்னனுக்குத் தோழன் என்ற மிக அரிய செய்தியும் இந்தப் பகுதியில் சொல்லப்படுகிறது. "இந்த ஸமயத்திலேயே, திருதராஷ்டிரனுக்கு நண்பனான அதிரதனென்கின்ற ஸூதன் மனைவியுடன் கங்கைக்குச் சென்றான்" என்று இதற்கு அடுத்த அத்தியாயத்தில் வருகிறது. (வனபர்வம், குண்டலாஹரண பர்வம், அத். 310, பக். 1140). இவர்கள் இருவரும்தான் பெட்டியில் மிதந்து வந்த குழந்தையான கர்ணனைப் பார்த்துத் தூக்கிச் செல்கிறார்கள். எனவே, தூக்கிச் சென்றவன் அதிரதன் என்பதும், அவனுடைய மனைவியின் பெயர் ராதை என்பதும் குந்திக்கு ஒற்றர்கள் மூலமாகத் தெரிந்தே இருந்தது.
இன்னொரு சூதனால் ஆளப்பட்ட இடத்தைச் சேர்ந்த அதிரதன், திருதராஷ்ரனுக்குத் தோழன். அவர்கள் இந்தக் குழந்தையைக் கண்டெடுத்ததோ, எந்த அங்க தேசத்துக்குக் கர்ணனை துரியோதனன் மன்னனாக்கினானோ, அதே அங்கதேசம் என்பதும் ஆய்வளாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. (கர்ணனை துரியோதனன் அங்க தேசத்து மன்னனாக்கியதை, 'அரசன் கர்ணனும் கூட்டு அனுமதியும்' என்ற தலைப்பில் சொல்லியிருக்கிறோம். துரியோதனன், இளவரசனாகக்கூட முடி சூட்டப்படாதவன் என்பதற்கு விளக்கமாக இதைச் சொல்லியிருந்தோம். |
|
ஆக, சாந்தி பர்வத்தில் 'துரியோதனனும் கர்ணனும் தற்செயலாக' (led by an accident) சந்தித்து, அவர்களுடைய சுபாவத்தின் காரணமாக நண்பர்களாயினர் என்று குறிப்பிடப்படுவது ஆய்வுக்குரியது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. திருதராஷ்டிரனுடைய நண்பன் என்ற காரணத்தால், அங்கே கௌரவ நூற்றுவருக்குக் கற்பித்துக்கொண்டிருந்த துரோணரிடத்தில் பயிலுமாறு அதிரதன்தான் அவனை ஹஸ்தினாபுரத்துக்கு அனுப்பி வைத்தான் என்பதும், கர்ணன் அங்கதேசத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்தே துரியோதனன் அவனை அந்த நாட்டுக்கு மன்னனாக்கினான் என்பதும் ஆய்வாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைகள்.
அது ஒருபுறமிருக்க, குந்தி, தனது 'வளர்ப்புத் தாயின் ஆலோசனையின் பேரில்' கர்ணனை அஸ்வ நதியில் விட்டுவிட்டாள் என்பதும் ஆய்வுக்குரியது. குந்திபோஜனுக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட சூரசேனனுடைய மகளான ப்ருதை (Prita) எனப்படும் குந்தி கர்ணனை வருடத்தின் பதினோராவது மாதத்தில் பெற்றெடுத்தாள் என்று 309ம் அத்தியாயம் தொடங்குகிறது. (பக். 1137), 'Karna's Birth: Magha Bright half 1st day' என்று இதை டாக்டர் கேஎன்எஸ் பட்நாயக் உறுதி செய்கிறார். (பார்க்க)
மேற்படி வாக்கியம் இவ்வாறு தொடங்குகிறது: "அரசரே! குந்திக்கு வருஷத்தினுடைய பதினோராவது மாதத்தைச் சார்ந்த சுக்லபக்ஷத்தில் அந்த ஸூர்யனிடத்தினின்று ஆகாயத்தில் சந்திரன் உண்டாவது போலக் கர்ப்பம் உண்டாயிற்று". அது மாக மாதம் சுக்லபக்ஷ ப்ரதமை என்று இந்தப் பக்கத்து அடிக்குறிப்பு சொல்கிறது.
அப்படியானால், கர்ணன் கடோத்கசன் பிறந்ததைப்போல, ஒரே இரவில் பிறந்தவன் அல்லன். குந்திக்கும் பத்துமாத கர்ப்ப காலம் இருந்திருக்கிறது. அவள் கன்னியர்களுக்கான அந்தப்புரத்தில் வசித்தவள் என்பதால், அவளுக்குக் கர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது என்ற உண்மை அவளுடைய வளர்ப்புத் தாய்க்கு மட்டுமே தெரிந்திருந்தது. தத்து எடுத்திருந்தவனான குந்திபோஜனுக்கோ அவனுடைய மனைவிக்கோகூட தெரிந்திருக்கவில்லை என்பது ஒருபுறமென்றால், இந்த உண்மையை மறைத்து வைத்து, கன்னிப் பருவத்திலேயே தாயாக ஆன குந்தியின் கர்ப்பத்தை ரகசியமாகக் காத்த அந்த வளர்ப்புத் தாயின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பது இன்னொரு புறம். ஆனால், பாண்டுவுக்குக் குந்தியை மணமுடித்து வைத்தவரான பீஷ்மர், 'கர்ணா, நீ குந்தியின் மகன் என்பது எனக்கு முன்பே தெரியும். வியாசரும் நாரதரும் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்' என்று பீஷ்மர் வீழ்ந்த பத்தாம் நாள் இரவு, அவரைத் தனியாகச் சந்திக்க வந்த கர்ணனிடத்தில் சொல்கிறார் என்பது இன்னும் பெரிய ஆச்சரியம்.
பல அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் பொதிந்து வைத்திருக்கிற இந்தப் பகுதியை, வெறுமனே 'கர்ணனுடைய கவச குண்டலங்களை இந்திரன் பெற்றுக்கொண்டு, அவனுக்கு சக்தி ஆயுதத்தைக் கொடுத்தது' என்று சுருக்க முடியாத நிலையில் இருக்கிறோம். ஏழெட்டு தவணைகள் ஆனாலும், இந்த மிக முக்கியமான பகுதியை ஓரளவுக்கேனும் முழுமையாகப் பார்ப்போம்.
நம்முடைய முதல் கேள்வி: கர்ணனுடைய கவச குண்டலங்களை இந்திரன் ஏன் யாசித்தான்? அடுத்த கேள்வி: சூரியனே கனவில் தோன்றி எச்சரித்திருந்த போதிலும், 'அந்தண வடிவத்தில் வரப்போகும் இந்திரனுக்கு அவன் கேட்பதைக் கொடுக்காமல் இருக்க மாட்டேன்' என்று கர்ணன் மறுத்ததன் காரணம் என்ன? அதைவிட முக்கியமான இன்னொரு கேள்வி, கர்ணனுக்ககு இந்திரன் சக்தி ஆயுதத்தை ஏன் கொடுத்தான், என்ன நிபந்தனைகளோடு கொடுத்தான்? இவற்றின் விடை எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், நமக்குத் தெரிந்திருப்பது முழுமையான விடைகளல்ல என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.
இந்தக் கேள்விகளுக்கு விடை காணும் முன்னர், கர்ணனுடைய பிறப்பு பற்றிய செய்திகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|
|