|
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தடுக்கொணாதது விதியென்று உணர்ந்தான் |
|
- ஹரி கிருஷ்ணன்|ஜூன் 2018| |
|
|
|
|
'தோற்பது யாராக இருந்தாலும் தோலாடைகளை உடுத்துக்கொண்டு பன்னிரண்டு வருடம் வனவாசமும், ஒரு வருடகாலம் யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி அஞ்ஞாத வாசமும் செய்யவேண்டும். இந்த ஓராண்டுக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், மீண்டும் பன்னிரண்டு வருடம் வனவாசமும் ஒரு வருடம் அஞ்ஞாத வாசமும் போகவேண்டும்' என்று பந்தயம் வைக்கலாம் என துரியோதனாதியர் சொன்னதைப் பார்த்தோம். "நாங்கள் உங்களால் ஜயிக்கப்பட்டாலும் புள்ளிமான் தோலையுடுத்துப் பன்னிரண்டு வருஷம் மகாவனத்தில் இருப்போம். பதின்மூன்றாவது வருஷம் உறவினரால் அறியப்படாமல் இருப்போம். அறியப்பட்டால் மறுபடியும் பன்னிரண்டு வருஷகாலம் வனத்தில் வசிப்போம். நீங்கள் எங்களால் ஜயிக்கப்பட்டாலும் கிருஷ்ணையுடன்கூடத் தோலாடை உடுத்துப் பன்னிரண்டு வருஷம் வனத்தில் வசியுங்கள்; அறியப்பட்டால் திரும்பவும் பன்னிரண்டு வருஷம் வனத்தில் வசியுங்கள்; பதின்மூனறாவது வருஷம் சரியாக நிறைவேறினால் நீங்களானாலும் நாங்களானாலும் மறுபடியும் வழக்கம்போலத் தங்கள் ராஜ்யத்தைப் பெறலாம். பாரதா! யுதிஷ்டிரா! இந்த நிச்சயம் செய்துகொண்டு எம்முடன் மறுதடவையும் காய்களை உருட்டிச் சூதாட வா" (ஸபா பர்வம், அனுத்யூத பர்வம், அத்: 98; பக்: 322) என்று சகுனி சொன்னதைக் கேட்ட சபையும் அங்கே கூடியிருந்த பொதுமக்களும் 'எங்கே யுதிஷ்டிரன் இந்த ஆட்டத்துக்கும் சம்மதித்துவிடுவானோ' என்று அஞ்சினார்கள். தருமன் மறுசூதுக்குத் திரும்ப வருவதை விரும்பவில்லை; திருதராஷ்டிரன் அழைக்கிறானே என்று வந்தான் என்பதையும்; முதற் சூதுக்கேகூட அவன் விருப்பப்படவில்லை; திருதராஷ்டிரனே அழைக்கும்போது மறுக்கக்கூடாது என்பதற்காக மட்டுமே வந்தான் என்ற உண்மைகளைப் பலமுறை பல மேற்கோள்களால் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
சகுனி தந்திரமாக, 'நாங்கள் தோற்றுப் போனால்' என்று தொடங்கி ஆசை வார்த்தை காட்டி, அதைத் தொடர்ந்து 'நீங்கள் தோற்றுப்போனால்' என்று மீண்டும் ஆரம்பித்து மறுசூதுக்கான பந்தயத்தைச் சொல்கிறான் அல்லவா. அதிலொரு சிக்கலிருப்பதை கவனியுங்கள். பாண்டவர்கள் தோற்றால் அவர்கள் வனவாசமும் அஞ்ஞாத வாசமும் மேற்கொண்டு, ஒருவேளை இவை சரியாக நிறைவேறித் திரும்பவந்தால் அவர்களுக்குரிய அரசை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்பது பந்தயம். ஒருவேளை அப்படி நிகழாமல் துரியோதனாதியர் தோற்பதாக வைத்துக்கொள்வோம். அவர்களும் இந்தப் பதின்மூன்று வருஷ வன, அஞ்ஞாத வாசங்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு திரும்ப வருவார்களேயானால், சகுனி சொல்வதைப்போல "பதின்மூன்றாவது வருஷம் சரியாக நிறைவேறினால் நீங்களானாலும் நாங்களானாலும் மறுபடியும் வழக்கம்போலத் தங்கள் ராஜ்யத்தைப் பெறலாம்" என்பது எந்த வகையில் நிறைவேறும்? துரியோதனனுக்குத்தான் இன்னமும் இளவரசுப் பட்டம்கூடக் கட்டப்படவில்லையே! இவன் இப்போது எந்த ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருக்கிறான், அதைத் திரும்பப் பெற! அஸ்தினாபுரத்துக்குத்தான் திருதராஷ்டிரன் பட்டம் சூட்டப்படாத, பாண்டுவால் விதுரருக்கும் திருதராஷ்டிரனுக்குமாகப் பொறுப்புப் பிரித்துக் கொடுக்கப்பட்ட பொம்மை அரசனாக அல்லவா இருந்துகொண்டிருக்கிறான்! நைச்சியமான, தந்திரமான, சாதுரியமான வார்த்தைகளைப் பேசுவதில் சகுனிக்கு நிகர் யாரும் இல்லை என்பதை பாரதியின் பாஞ்சாலி சபதத்தைப் படித்தாலே போதும், அறியலாம்.
அதற்குமேல் ஒன்று. முதல் சூதில் பாஞ்சாலி தந்திரமாக வெல்லப்பட்டாள். 'இது செல்லாது' என்று அவளால் மறுக்க முடிந்தது. இப்போது பந்தயம் வைக்கும்போதே சகுனி, 'கிருஷ்ணையுடன் நீங்களும்' என்று அவளையும் சேர்த்துத்தான் வனவாசம் செல்ல உட்பட்டவளாக ஆக்குகிறான். ஆகவே, சகுனிக்கு அனுபவம் கற்றுக் கொடுத்திருக்கிறது என்று அறியலாம்.
அப்படித்தான் சகுனி மறுசூதுக்கான பந்தயத்தை எடுத்து வைத்தான். கூடியிருந்த மக்களெல்லாம் கைகளை உயர்த்திய வண்ணம், "ஆ! ஆ! சீ! இந்தப் பெரும்பயத்தைச் சுற்றத்தவர் தர்மராஜாவுக்குத் தெரிவிக்கவில்லையே! இந்தப் பரதசிரேஷ்டன் தன் புத்தியினால் அறிவானோ அறியானோ" என்று" (மேற்படி மேற்கோளின்படி) தமக்குள் கூறி நொந்துகொண்டனர். இவர்கள் தமக்குள் பேசிக்கொண்டது தருமனின் காதிலும் விழுந்தது. 'இது எவ்வளவு அஞ்சத்தக்கது, எத்தனை தந்திரமானது என்பதைத் தருமன் உணர்வானோ மாட்டானோ' என்று அவர்கள் சொல்வதைக் கேட்டான் தருமன். "ஜனங்களின் மிகுதியான சொற்களைக் கேட்டும் தர்மராஜர், வெட்கத்தினாலும் தர்மத்திற்காகவும் மறுமுறையும் சூதாடப் போனார். (மேற்படி இடம்) King Yudhishthira, even hearing these various remarks, from shame and a sense of virtue again sat at dice என்பது கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு. அவனுக்கு அவமான உணர்வும் இருந்தது; அதே சமயத்தில் 'தர்மத்தைக் காக்கவேண்டும்' என்ற நினைவும் இருந்தது. இந்தத் தருமம் எனப்படுவது இந்த இடத்தில் 'பெரியோர் என்ன சொன்னாலும் மீறமாட்டேன், கீழ்ப்படிவேன்' என்று ராஜசூய யாக சமயத்தில் அவன் வியாசரிடத்தில் செய்திருந்த சபதத்தைக் குறிக்கிறது என்று கொள்ள இடமிருக்கிறது. "மகா புத்திசாலியான தர்மராஜர், தெரிந்திருந்தாலும் கௌரவர்களுக்கு நாசம் கிட்டியிருந்தாலும் இருக்கலாமென்று நினைத்துத் திரும்பவும் சூதாடினார்" என்று வியாச பாரதம் இந்த இடத்தில் ஒரு வரியைச் சேர்க்கிறது. And though possessed of great intelligence and fully knowing the consequences, he again began to play, as if knowing that the destruction of the Kurus was at hand. என்பது கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு. ஆங்கில மொழிபெயர்ப்பின்படி, 'கௌரவர்களுடைய அழிவு நிச்சயம் என்பதை அறிந்தவரைப்போல்' என்று பொருள்படுகின்றது. இது கௌரவர்கள் சூதிலே அழியப்போகிறார்கள் என்று அவர் நினைத்ததைக் குறித்ததா அல்லது, சூதாட்டத்துக்குப் பிறகு நிகழப்போகும் போரில் அவர்கள் அழியத்தானே போகிறார்கள் என்று நினைத்ததைக் குறித்ததா என்று நிச்சயித்துச் சொல்லமுடியாவிட்டாலும், 'சூதுக்குப் பிறகு போர் நிச்சயம்' என்ற உணர்வு அங்கே இருந்த--மக்கள் உள்ளிட்ட--சபையோர் அனைவருக்கும் இருக்கவே செய்தது.
இறுதியில் சகுனி தன் பந்தயத்தை மீண்டும் விரிவாக எடுத்துச் சொல்லி, 'இந்தப் பந்தயத்தை நிச்சயித்துக்கொண்டு ஆடுவோம்' என்று கூறியதும், முந்தைய பந்தயங்களைப் போலல்லாமல் அங்கே கூடியிருந்த பெரியோர்கள் அனைவரும் தடுத்தார்கள். முந்தைய ஆட்டத்தில் விதுரர் ஒருவர்தான் குறுக்கிட்டுக் குறுக்கிட்டுத் தடுத்துக்கொண்டிருந்தார். முதல் ஆட்டத்தில் விதுரர் ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் பாரதி சொல்வதைப் போல,
மற்றும் சபைதனிலே வந்திருந்த மன்னரெல்லாம் முற்றும் உரையிழந்து மூங்கையர்போல் வீற்றிருந்தார்
ஊமைகளைப்போல வீற்றிருந்தவர்கள்தாம் இவர்கள். 'வீற்றிருத்தல்' என்பதற்கே 'கொலுவிருத்தல்' என்று பொருள். இந்தக் கொலு வெறும் நவராத்திரி பொம்மைக் கொலு. இருந்தாலும் இந்தச் சமயத்தில் அத்தனை பெரியோர்களும் குறுக்கிட்டு, 'ஆட்டம் வேண்டாம்' என்று தடுத்தார்கள். யார்யார் இப்படித் தடுத்தார்கள் என்று கதையைச் சொல்லிவரும் வைசம்பாயனர் ஒரு பெரிய பட்டியலையே கொடுக்கிறார்: "ஜனமேஜய ராஜாவே! தர்மராஜாவான யுதிஷ்டிரர், விதியின் பலத்தினால் இவ்வாறு தூண்டப்பட்டு பீஷ்மர், துரோணர், புத்திமானான விதுரர், யுயுத்ஸு, கிருபர். ஸஞ்சயன், காந்தாரி, குந்தி, பீமார்ஜுனர்கள், நகுல சகதேவர்கள், வீரனான விகர்ணன், திரெளபதி, அசுவத்தாமா, ஸோமதத்தன், பாஹ்லீகன் ஆகிய இவர்களால் அடிக்கடி தடுக்கப்பட்டும் நிறுத்தவில்லை. ஏன் அப்படி நிறுத்தவில்லை என்பதற்கு வைசம்பாயனர் ஒரு காரணத்தை, கம்பராமாயணத்தில் கூனியின் சொல்கேட்ட கைகேயியின் தூயசிந்தை ஏன் திரிந்தது என்று கம்பன் விளக்குவதைப் போல விளக்குகிறார். கம்பன் இந்தக் கட்டத்தில் இவ்வாறு பாடுகிறான்: |
|
தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர் மாயையும், அவர் பெற்ற நல்வரம் உண்மையாலும், ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும்.
கூனி இவ்வாறு சொன்னதைக்கேட்ட கைகேயியின் தூயமனமும் திரிந்தது. தேவர்களுடைய மாயை ஒருபக்கம்; அவர்கள் பெற்ற நல்ல வரங்கள் உண்மையாயிருப்பது இன்னொரு பக்கம். முனிவர்கள் இயற்றிய தவத்தின் பயன் வேறொரு பக்கம். கூடவே
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் துரக்க நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்
என்கிறான் கம்பன். இவ்வளவும் இருந்தன; கூடவே அரக்கர் செய்த பாவமும், மற்றவர்கள் செய்த அறத்தின் பயனும் மறைவாக நின்று ஏவியதால் (துரக்க) நல்லருள் துறந்தனள்.
இங்கே தருமன் ஏன் சூதைத் தொடர்ந்தான் என்பதை வைசம்பாயனர் விளக்குகிறார்: "தேவகாரியமாகிய பூபாரம் தொலைவது நிறுவேறுவதற்காகச் சிறிதுநேரம் கலியை அடைந்தார்" (மேற்படி, பக்: 323). இங்கே 'கலி' மதிமயக்கத்தைக் குறிக்கிறது.
இதற்கு முன்னால் தங்களையே பணயம் வைத்து ஆடியபோதும் வாயே திறவாத பீம, அர்ச்சுனர்களும், நகுல சகதேவர்களும், பாஞ்சாலியும்கூட 'சூது வேண்டாம்' என்று தடுத்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன், காந்தாரியும் குந்தியும்கூடத் தடுத்திருக்கிறார்கள். இவ்வளவுபேர் தடுத்தும் தருமன் சற்று நேரத்துக்குக் 'கலியை' அடைந்தான். ஆகவே மறுசூதுக்குச் சம்மதித்தான். இந்த இடத்தில்தான் தருமனுடைய செயலை எவ்வளவு திறமையான வக்கீலாலும் 'உள்ளது உள்ளபடி' எடுத்துச் சொல்லி நியாயத்தை விளக்க முடியாமல் போகிறது. நினைத்திருந்தால், 'நான் பெரியவர்கள் சொல்லைத் தட்டமாட்டேன் என்றுதான் சபதம் செய்திருக்கிறேன். என்னை அழைத்தது பெரியப்பாவாக இருந்தாலும் இங்கே இவ்வளவு பெரியவர்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள். இவர்கள் சொல்லை என்னால் தட்ட முடியவில்லை' என்று தமயந்தியைப் பணயம் கேட்ட புஷ்கரனிடம், 'இனிச் சூதொழிந்தேன்' என்று ஆட்டத்தை நிறுத்திவிட்டு எழுந்துகொண்ட நளனைப்போல மறுசூதை மறுத்திருக்கலாம். கோவலனைக் 'கொண்டச் சிலம்பு கொணர்க' என்று சொல்ல நினைத்து, விதியின் வலிமையால், 'கொன்றச் சிலம்பு கொணர்க' என்று ஆணையிட்ட பாண்டியனைப் போல ஊழ் தருமனைப் பீடித்தது. 'சிறிது நேரம் கலியை அடைந்தான்'.
அடுத்தது என்ன நடந்தது என்று சொல்லத் தேவையில்லை. இனி அவர்கள் வனம்புக மேற்கொண்ட கோலத்தைப் பார்ப்போம்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|
|