|
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: புவி தாங்கும் துருபதன் கன்னி நான் |
|
- ஹரி கிருஷ்ணன்|ஜூலை 2017| |
|
|
|
|
பாஞ்சாலியைப் பணயம் வைத்த அந்தத் தருணத்தில் சபையினர் எவ்வாறு இருந்தனர் என்பதை வியாசர் மிகச்சில வரிகளில் படம்பிடித்துக் காட்டுகிறார். "சபையோரான பெரியோர்களிடமிருந்து 'சீ! சீ!' என்ற சொற்கள் வெளிப்பட்டன. ஜனமேஜய ராஜாவே! அந்தச் சபையே கலங்கிற்று. அரசர்களுக்கும் பீஷ்மர், துரோணர், கிருபர் முதலியோர்க்கும் கண்ணீரும் வியர்வையும் உண்டாயின. விதுரர் தலையைப் பிடித்துக்கொண்டு உயிர்போனவர் போலத் தலைகுனிந்து சிந்தித்துக்கொண்டும், சர்ப்பம்போலப் பெருமூச்செறிந்து கொண்டும் உட்கார்ந்திருந்தார். பாஹ்லீகன், ஸோமதத்தன், பிரதீப வம்சத்தாரைச் சேர்ந்த சஞ்சயன், அசுவத்தாமா, பூரிசிரவஸ், திருதிராஷ்டிரன் புத்திரனாகிய யுயுத்ஸு ஆகிய இவர்களும் தலைகுனிந்து நாகங்கள்போலப் பெருமூச்சு எறிந்துகொண்டு பார்த்திருந்தனர். திருதிராஷ்டிரன் மட்டும் மிக்க சந்தோஷத்துடன், 'ஜயித்தாயிற்றா? ஜயித்தாயிற்றா' என்று பலமுறை கேட்டான். எண்ணத்தை மறைக்கவில்லை. துச்சாஸனன் முதலானவர்களுடன்கூடக் கர்ணன் மிக மகிழ்ந்தான். மற்ற சபையோரின் கண்களினின்றும் கள்ணீர் விழுந்தது. (ஸபா பர்வம், த்யூத பர்வம், அத்: 88; பக். 280) (கிசாரி மோகன் கங்கூலி மொழிபெயர்ப்பில்: 'Fie!' 'Fie!' were the words that were uttered by all the aged persons that were in the assembly. And the whole conclave was agitated, and the kings who were present there all gave way to grief. And Bhishma and Drona and Kripa were covered with perspiration. And Vidura holding his head between his hands sat like one that had lost his reason. He sat with face downwards giving way to his reflections and sighing like a snake. But Dhritarashtra glad, at heart, asked repeatedly, 'Hath the stake been won?' 'Hath the stake been won?' and could not conceal his emotions. Karna with Dussassana and others laughed aloud, while tears began to flow from the eyes of all other present in the assembly.)
பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அஸ்வத்தாமனும் கண்ணீர் சிந்தவும் தலைகுனியவும் செய்தனர். இவர்களில் யாருமே தடுக்க முனையவில்லை என்பது கவனிக்கத் தக்கது. மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் பாஹ்லீகன் சந்தனுவின் அண்ணன், பீஷ்மருடைய பெரியப்பா. யுயுத்ஸு நூற்றுவரில் ஒருவராகக் கருதப்படுபவன். இவனையும் சேர்த்துதான் நூற்றுவர்களாகின்றனர் என்றாலும் காந்தாரியின் கர்ப்ப காலமான இரண்டாண்டுகளில் திருதிராஷ்டிரனைக் கவனித்துக் கொண்ட ஒரு வைசியப் பெண்ணுக்குப் பிறந்தவன் யுயுத்ஸு. இவன்தான் ஆரம்ப காலங்களிலேயே பீமனுக்குப் பிரமாணகோடியில் விஷம்வைத்த செய்தியைத் தருமபுத்திரனுக்குச் சொன்னவன்; போர் மூண்டபோது பாண்டவர்களின் பக்கத்துக்கு வந்துவிட்டவன்; இறுதியில் திருதிராஷ்டிரனுக்கும் காந்தாரிக்கும் கொள்ளி போட்டவன். சபையில் பீஷ்மர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தப் பந்தயம் வைக்கப்பட்டதில் சம்மதமில்லை. ஆனால் அனைவருமே வாய்மூடித் தலை கவிழ்ந்துகொண்டாலும், அவர்கள் யாருமே ஒரு வார்த்தையும் எதிர்த்துப் பேசவில்லை. காரணம்? அங்கேதான் திருதிராஷ்டிரன் வெகு சந்தோஷமாக 'ஜயித்தாயிற்றா, ஜயித்தாயிற்றா' என்று கேட்டுக் கொண்டிருக்கிறானே! மகுடமே சூட்டப்படாத ஒரு பொம்மைச் சக்கரவர்த்தியின் எண்ண ஓட்டத்துக்கேற்ப அனைவருமே பேசாமல் இருந்தார்கள் என்றால் அந்தச் சபையை என்னவென்று சொல்வது! இந்தக் கட்டத்தில் கண்ணீரும் வியர்வையும் தோன்ற நிற்கும் பீஷ்மர்கூட அல்லவா இதற்குப் பின்னால் பாஞ்சாலியின் கேள்விக்குச் சமாதானம் சொல்ல முனைந்து, தடுமாறுகிறார்!
இவ்வளவு பெரிய சபையில் பாஞ்சாலி இழக்கப்பட்டதும் விதுரன் மட்டும்தான் இந்தக் கருத்தை முதலில் சொல்கிறார். துரியோதனன் விதுரரிடத்தில் (பாஞ்சாலி சபதத்தில் வருவதைப் போலவே) 'வீடு பெருக்கவேண்டும். போய் பாஞ்சாலியை அழைத்து வாரும்' என்று சொல்லும்போது "தர்மபுத்திரன் தனக்குச் சுதந்திரமில்லாத காலத்தில் அவளைப் பந்தயத்தில் வைத்திருக்கிறான் என்பது என் அபிப்பிராயம்" (த்யூத பர்வம், அத். 89) என்பது விதுரனுடைய நீண்ட பேச்சில் உள்ள வலுவானதும் பாரதி குறிப்பிடாமல் விட்டுவிட்டதுமான ஒரு கருத்து. இந்த வலுவான கருத்தை முதலில் சொல்பவள் பாஞ்சாலியே என்று காட்ட நினைத்த காரணத்தாலோ என்னவோ பாரதி விதுரனுடைய பேச்சில் உள்ள இக்கருத்தை விட்டுவிட்டான். |
|
'தனக்குச் சுதந்திரமில்லாத காலத்தில் தருமன் பாஞ்சாலியைப் பணயம் வைத்திருக்கிறான்' என்றால், (1) அவன் அடிமையான பிறகு பந்தயத்தில் வைப்பதற்கான எந்தப் பொருளும் அற்றவனாக ஆகிவிடுகிறான். மனைவி உடைமையல்லள் என்ற போதிலும் மனைவி என்ற உரிமையினால்கூட அவளை ஆட்டத்தில் வைப்பது முடியாத காரியம். (2) இருந்தபோதிலும் 'இப்படி வைத்தாடுவாயானால் எல்லாமும் மீளும்' என்ற ஒரு நெருக்கடி அவனுக்கு உண்டாக்கப்பட்டது. இதைத்தான் பாஞ்சாலி "மாயமுணராத மன்னவனைச் சூதாட வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ நேர்மையோ? முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கையன்றோ" என்று பின்னால் கேட்கப் போகிறாள். அடிமை ஆன நிலையிலும் தருமபுத்திரன் வற்புறுத்தப்பட்டான். அதனால் இந்த முடிவை எடுத்தான்' என்றுதான் பாஞ்சாலியும் தருமபுத்திரனுடைய செயலைப்பற்றிப் பேசுகிறாள்.
இவளாவது சூதாட்டத்தைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டவள். அங்கே சூதாட்டத்தைப் பக்கத்திலிருந்து பார்த்தவனான விகர்ணன் சொல்கிறான்: "எந்த நிலைமையிலிருக்கும் மனிதன் செய்த செய்கையை உலகத்தார் ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ அவ்வகையான சூதால் அழைக்கப்பட்டுச் சூதாட்டமென்னும் விசனத்தில் அகப்பட்டுக்கொண்ட தர்மராஜாவினால் திரெளபதியைப் பந்தயமாக வைப்பது ஒப்புக்கொள்ளப் பட்டது. குற்றமற்ற இந்தத் திரெளபதி பாண்டவர்கள் எல்லோருக்கும் பொதுவானவள். மேலும் இந்தப் பாண்டவரான தர்மராஜர் தம்மைத் தோற்றபிறகு இவளைப் பந்தயம் வைத்திருக்கிறார். சகுனி திரெளபதியைப் பந்தயம் வைக்க விரும்பி அவள் பெயரைக் கூறினான். இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது இவளை ஜயிக்கப்பட்டவளாக நான் நினைக்கவில்லை" என்று வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகப் பேச அவனுக்கு மட்டும்தான் துணிவிருந்தது. (கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பில்: This son of Pandu, while deeply engaged in one of these vicious acts, urged thereto by deceitful gamblers, made Draupadi a stake. The innocent Draupadi is, besides, the common wife of all the sons of Pandu. And the king, having first lost himself offered her as a stake. And Subala himself desirous of a stake, indeed prevailed upon the king to stake this Krishna. Reflecting upon all these circumstances, I regard Draupadi as not won.)
"பாஞ்சாலியைப் பந்தயத்தில் வை என்று சகுனி சொன்னதை நான் கேட்டேன்" என்ற பொருள்பட விகர்ணன் சொல்வதைப் பார்க்கும்போதுதான் நாம் முன்னரே சொல்லியிருந்த சூதாட்ட விதிமுறையான 'இன்ன பொருளை வைத்தாடு' என்று கேட்க எதிராளிக்கு உரிமையில்லை என்ற கருத்து வலுப்பெறுகிறது. "அவர் தாயத்திலே விலைப் பட்டவர், புவி தாங்கும் துருபதன் கன்னிநான்" என்று இதைத்தான் பாஞ்சாலி வலியுறுத்துகிறாள். The moment they become slaves, they do not have any right to stake me and I maintain my status quo ante என்பதே அவளுடைய வாதம்.
இதில் நாம் பாஞ்சாலி சபைக்கு இழுத்து வரப்பட்டதில் குறிப்பிட வேண்டிய சிலவற்றைப் பார்க்கவில்லை. அவற்றையும் பார்த்தால்தான் இந்தக் காட்சிக்கு ஓரளவாவது தெளிவுகிட்டும். அவற்றையும் பார்ப்போம்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|