Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அறங்கெட்ட சபை
- ஹரி கிருஷ்ணன்|ஜூன் 2017|
Share:
சூதாட்ட சபையிலே பாஞ்சாலியைத் தலைமுடியைப் பற்றிப் பிடித்திழுத்து வருவதைக் காணப் பொறுக்காமல் பீமன் தர்மபுத்திரனைப் பார்த்துச் சொல்வதாகப் பாஞ்சாலி சபதத்தில் வரும் பகுதியில்--

பூமி யரசரெல்லாம் - கண்டே
போற்ற விளங்குகிறான்
சாமி புகழினுக்கே - வெம்போர்
சண்டனப் பாஞ்சாலன்
அவன்சுடர் மகளை - அண்ணே
ஆடி இழந்து விட்டாய்


என்றும்,

துருபதன் மகளைத் - திட்டத்
துய்மன் உடன்பிறப்பை
இருபகடை என்றாய் - ஐயோ
இவர்க் கடிமை என்றாய்


என்றும் சொல்வதைப் பார்க்கலாம். 'துருபதனுடைய மகளை இழந்தாய், திருஷ்டத்யும்னனுடைய சகோதரியை இழந்தாய்' என்று மீண்டும் மீண்டும் சொல்கிற பீமனுடைய பேச்சில் 'நம்முடைய மனைவியை இழந்துவிட்டாய்' என்ற பேச்சு மிகவும் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். எப்போது ஒருவன் அடிமையாகிறானோ அப்போதே அவன் உடைமைகளை இழக்கிறான்; உரிமைகளையும் இழக்கிறான். தன்னைத்தானே வைத்து ஆடும்வரை இருந்த உடைமையையும் உரிமையையும் தருமபுத்திரன் இழக்கிறான். எனவேதான் பீமனுடைய பேச்சில் 'நம்முடைய மனைவியை இப்படி இழந்துவிட்டாயே' என்ற பேச்சே எழாமல் மிகவும் கவனமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது.

தருமனுடைய உள்ளநிலையை, சூழ்நிலைச் சான்றுகளை (circumstantial evidence) வைத்துப் பார்த்தால், உடைமையற்ற நிலையிலே இருக்கிறோம் என்பதை அவன் உணர்ந்தே இருந்திருப்பான் என்பதை அனுமானிக்க முடிகிறது. இருந்தாலும்,

மின்னும் அமுதமும் நிகர்த்தவள் - இவர்
மேவிடும் தேவியை வைத்திட்டால் - அவள்
துன்னும் அதிட்ட முடையவள் - இவர்
தோற்றதனைத்தையும் மீட்டலாம்


என்ற ஆசைமொழி ஆட்டத்தைத் தொடரச் செய்கிறது. தமயந்தியை ஆட்டத்தில் வைக்கச் சொல்லி நளனைப் புஷ்கரன் கேட்கும்போது, 'இனிச் சூதொழிந்தேன்' என்று நளன் எழுந்துவிடுவதைப் பார்த்தோம். ஆனால் நளனுடைய விஷயத்தில் அவன் (1) தன்னையே பணயமாக வைத்து இழந்திருக்கவில்லை; (2) தனக்குரிய பொருளையும் சேனைகளையும் பிற பெண்களையும் வைத்திழந்திருந்தானே தவிர தருமபுத்திரனைப் போலத் தம்பியரை வைத்து இழந்திருக்கவில்லை. ஆகவே இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால், தன்னை மட்டுமல்லாமல் தன் தம்பியரையும் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கலாம் என்ற அழுத்தமே அவனுடைய உள்ளத்தில் பிரதானமாக இருந்தது. வென்றால் நாடு முதலான மற்றவையும் திரும்பும் என்பது இதற்கு அடுத்து வரும் ஒன்றுதான். ஆகவே கையை உதறிக்கொண்டு எழுந்துவிட நளனுக்கிருந்த சுதந்திரம் தருமனுக்கு இருக்கவில்லை. 'இழத்தொரும் காதலிக்கும் சூது' என்று வள்ளுவர் சொன்னதைப் பார்த்தோம். இங்கே சூதின்மேல் காதல் மட்டுமல்ல, தம்பியரை விடுவிக்கவேண்டும் என்ற கட்டாயமும் அவசியமும் அவனை நெருக்கிக் கொண்டிருந்தன. அப்படியானால் தருமபுத்திரன் பாஞ்சாலியை ஆட்டத்தில் வைக்கும்போது என்ன சொல்லி வைத்தான்? 'எங்களுடைய மனைவியான பாஞ்சாலியை' என்பதை ஒத்து எதேனும் சொன்னானா?

இந்த இடத்தில், ஆட்டத்தில் வைக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும்—ஒவ்வொரு தம்பிக்கும், தனக்கும்—அதன் சிறப்பை விவரித்துச் சொல்வதைப்போல, பாஞ்சாலியின் குணநலன்களும் அழகும் கம்பீரமும் ஆளுமையும் சொல்லப்படுகின்றன. 'இப்படிப்பட்டவளைப் பந்தயத்தில் வைக்கிறேன்' என்று சொல்லும் அந்த இடத்தில் பாஞ்சாலியைப் பற்றிய வருணனைக்குப் பிறகு வியாசமூலம் எப்படிச் சொல்கிறது? "இன்னும் இவ்வகையான அநேகம் சிறப்புகளுள்ள அழகான அங்கங்களுடையவளும் பாஞ்சால ராஜன் குமாரியுமான திரெளபதியைப் பந்தயம் வைத்து ஆடுகிறேன்; ஐயோ!' என்று சொன்னார்". (வியாச பாரதம், ஸபா பர்வம், த்யூத பர்வம், அத்: 88, பக்: 279). "Of slender waist like that of the wasp, of long flowing locks, of red lips, and body without down, is the princess of Panchala O king, making the slender-waisted Draupadi, who is even such as my stake, I will play with thee, O son of Subala" என்று இதை கிசாரி மோகன் கங்கூலி மொழிபெயர்க்கிறார்.
'துருபதன் மகளை வைத்தாடுகிறேன்' என்றுதான் சொல்கிறானே ஒழிய, 'துருபதன் மகளும் எங்கள் மனைவியுமான' என்ற பேச்சு மிகவும் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது 'தான் உடைமையற்ற நிலையில் இருக்கிறோம்' என்பதைத் தருமன் உணர்ந்தே இருந்தான் என்பதை நிச்சயமாகச் சொல்லமுடிகிறது. மேலே சொன்ன நிர்ப்பந்தத்தில் இருந்த காரணத்தால் ஆட்டத்தில் வைக்க இயலாத நிலையில் அடிமையாக இருந்த போதிலும் வைத்துவிட்டான். இந்தப் பகுதியை விரிவாகப் படிக்க விரும்புபவர்கள் இங்கே பார்க்கவும்.

அப்படியானால் பாண்டவர்கள் காட்டுக்குப் புறப்பட்டபோது அவர்களுடன் பாஞ்சாலியும் போயிருப்பாளா, மாட்டாளா என்றால், அந்தக் கேள்விக்கே இடமில்லை. கட்டாயம் போயிருப்பாள். ஆனால், தன்னை ஆட்டத்தில் வைத்ததை மட்டும்தான் 'செல்லாது' என மறுக்கிறாள். 'இந்த விஷயத்தில் தருமம் நுட்பமானதாக இருக்கிறது. இருந்தாலும் தருமபுத்திரனே ஒரு காரியத்தைச் செய்திருந்தால் அது தருமமாகத்தான் இருக்கவேண்டும்' என்றெல்லாம் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் பீஷ்மர் உள்ளிட்ட அந்தப் பெருஞ்சபையையே துணிந்து எதிர்த்துநின்று பேசுகிறாள். எதிர்த்துநின்று பேசுவதற்கும் 'எடுத்தெறிந்து பேசுவதற்கும்' ஏராளமான வேறுபாடு உண்டு. இந்த நிலையிலும்

மாய முணராத மன்னவனைச் சூதாட
வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ நேர்மையோ
முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கையன்றோ


என்று அவள் இதைத்தான் கேட்கிறாள். ஆக பாஞ்சாலியைச் சூதில் வைக்க தருமன்

(1) வற்புறுத்தப்பட்டான். (2) தானே அடிமையாக இருந்ததனால்—உடைமையோ உரிமையோ—எதையுமே வைத்தாட முடியாதவனாக இருந்தான். (3) இதை அறிந்திருந்தும் பாஞ்சாலியைச் சூதில் வைத்தால் வெல்லலாம் என்றெல்லாம் பேசிய சகுனி அவனை ஆட்டத்தை தொடருமாறு தூண்டியிருந்தான். (4) அவ்வளவு பெரிய அறிஞர்களும் அரசர்களும் நிறைந்திருந்தும் இதைத் தவறென்று தடுக்க—பீஷ்மர், துரோணர் உள்ளிட்டவர்களையும் சேர்த்து—ஒருவருக்கும் துணிச்சல் வரவில்லை. இதனை "கேடுற்ற மன்னர், அறங்கெட்ட சபை" என்று பாரதி பாடியதில் வியப்பென்ன!

இந்த நுட்பமான பிரச்சினையை விகர்ணன் மட்டும்தான் எழுப்புகிறான். அவனுடைய பேச்சையும் நாம் விஸ்தரித்துப் பார்த்தால்தான் நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. அதையும் பார்ப்போம். பாஞ்சாலியின் காரணத்தால் முடிந்தே போயிருக்கவேண்டிய ஒரு நிகழ்வு எப்படி அதற்குப் பின்னரும் தொடர்ந்தது என்பதையும் பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline