|
|
|
|
தலைப்பு நகைமுரணைப் போலத் தோன்றலாம். ஆனால் அது அவ்வாறில்லை என்பது இக் கட்டுரையின் இறுதியில் தெரியவரும். இப்போது நாம் எழுப்பிக் கொண்டிருக்கும் ஆறு கேள்விகளுக்கு முதலில் விடையளித்த பிறகு மற்ற கேள்விகளை எழுப்பத் தொடங்குவோம். நாம் எழுப்பிய முதல் கேள்வி இது: திருதிராஷ்டிரன் பிறவியிலேயே கண் தெரியாதவனாக இருந்த காரணத்தால் பாண்டுவிடம் அரசு தரப்பட்டது என்றால், அரசு ஒப்படைக்கப்பட்டதா அல்லது, ஒரு மாற்று அரசனாகத் தாற்காலிகப் பொறுப்பில் பாண்டு அரசேற்றானா அல்லது, பாண்டுவின் நிலை வேறெதுவுமா?
மகாபாரதத்தின் கதையமைப்பு எப்படியென்றால், இந்தக் கேள்விக்கான விடை, பாண்டு அரசேற்ற அல்லது, திருதிராஷ்டிரனிடம் அரசை ஒப்படைத்துச் சென்ற கட்டங்களில் இல்லை. பாண்டவ வனவாசம் முடிந்து, இரு தரப்பினரும் ஒருவருக்கு மற்றவர் தூது அனுப்பிக்கொண்டும், யுத்தத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டும் இருக்கின்ற சமயமான உத்யோக பர்வத்தில்தான் வருகிறது. கிருஷ்ணர் தூது வந்திருக்கிறார். ஒவ்வொருவரும் துரியோதனனுக்கு அவன் செய்யும் தவறை எடுத்துச் சொல்லி, இதோபதேசமாக, முழு நாட்டை இல்லாவிட்டாலும் பாதி அரசையாவது கொடுக்கும்படியாக அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவனோ எதற்கும் செவி சாய்க்காமல், தான் பிடித்த பிடியில் நின்று கொண்டிருக்கிறான்.
அந்தச் சமயத்தில், பீஷ்மர் பேசத் தொடங்குகிறார். சந்தனுவுக்கும் சத்தியவதிக்கும் பிறந்தவர்களான சித்திராங்கதன், விசித்திரவீர்யன் ஆகிய இருவரில் சித்திராங்கதன் ஒரு கந்தர்வனால் கொல்லப்பட்டும், விசித்திரவீர்யன் நோய்வாய்ப்பட்டும் இறந்துபட, அச்சமயத்தில் அரசேற்க வேறு ஆண்மக்கள் இல்லாததால், தாய் சத்தியவதி தன்னை (பீஷ்மரை) அரசேற்கச் சொன்னதைத் தெரிவிக்கிறார். அச்சமயத்தில் சொல்கிறார்: "தாயே! நான் குலத்திற்காகவும், முக்கியமாக உனக்காகவும் (சத்தியவதிக்காகவும்) வீர்யத்தைக் கட்டியவனும், அரசனாகாதவனுமாக இருக்கிறேன். என்னை ராஜ்யத்தைக் காப்பதில் ஏவாதே. சந்தனுவுக்குப் பிறந்த நான், கௌரவர்களின் வம்சத்தைத் தாங்குபவனாகிப் பிரதிஜ்ஞையை, வீணாகச் செய்யேன்," (மஹாபாரதம், கும்பகோணம் பதிப்பு, நான்காம் தொகுதி, உத்யோக பர்வம், 147ம் அத்தியாயம், பக்கம் 488).
தான் முன்னர் செய்த சபதத்தைப் பற்றி இப்போது துரியோதனனிடத்தில் எடுத்துச் சொல்கையில், பீஷ்மர் இரண்டு தன்னிலை விளக்கங்களை அளிக்கிறார். (1) தான் எந்தவிதமான சூழலிலும் அரச பதவியில் அமரமாட்டேன் என்ற நிலையிலிருந்து அணுவளவும் பிறழப் போவதில்லை என்பது. (2) எல்லாவிதமான சூழல்களிலும் தான் கௌரவ வம்சத்தைத் தாங்குபவனாக, அதாவது பாதுகாப்பவனாக இருப்பேன் என்பது. இந்த இரண்டாவது நிலைப்பாட்டைத்தான் சற்றே விளக்க வேண்டியிருக்கிறது. அதாவது, இப்போது (அதாவது, பாண்டுவின் மக்களும், திருதிராஷ்டிரனின் மக்களும் அரசாட்சிக்கான போருக்கு ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் சமயத்தில்) கௌரவ வம்சம் என்றால் அது யாரைக் குறிக்கும் என்பது இதில் முதன்மை பெறுகின்றது. பொதுவாக, திருதிராஷ்டிரன் மக்களையே கௌரவர்கள் என்ற அடையாளத்தால் நாம் அனைவருமே புரிந்துகொள்கிறோம் என்றாலும், இது பாண்டவர்களையும் உள்ளிட்ட பெயர் என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது. அதாவது, குரு என்ற மன்னனின் வம்சமே கௌரவ வம்சம் என்றறியப்படுகிறது. பாண்டவர்களும் இதே குருவின் வம்சத்தில் உதித்த கௌரவர்களே. இரண்டு தரப்பினரும் கௌரவர்களே என்ற போதிலும், பாண்டுவின் மக்களைத் தனிப்படுத்தி அடையாளம் காட்டும் அவசியத்துக்காக அவர்களைப் பாண்டுவின் மக்கள் என்ற பொருளில், பாண்டவர்கள் என்ற பெயரால் சுட்டினார்கள். இதுபோலவே, திருதிராஷ்டிரன் மக்கள் என்ற பொருளில் நூற்றுவருக்கு, 'தார்த்ராஷ்ட்ரா' என்ற பெயரும் உண்டு. |
|
இந்த விஷயம் சற்றே புதியதைப்போலத் தென்படுவதால், இந்த முடிவுக்கான அகச்சான்றையும் தருகிறேன். திரௌபதியின் திருமணம் நடந்த சமயத்திலேயே ஒருமுறை நூற்றுவர் பாண்டவர்ளோடு போரிட்டுத் தோற்றிருக்கின்றனர். அவர்கள் ஹஸ்தினாபுரத்துக்குத் திரும்பின சமயத்தில் 'யார், யாரை மணந்தார்கள்' என்ற விவரத்தை அறியாதவனாகிய திருதிராஷ்டிரனிடத்தில், க்ஷத்தா என்ற பெயரையும் உடையவனானா விதுரன் "அரசனே! நல்ல காலமாதலால் கௌரவர்கள் விருத்தியடைந்தனர் என்று சொன்னார்........ அறிவே கண்ணாகவுடைய அவ்வரசன், தன் ஜ்யேஷ்ட புத்திரனாகிய துரியோதனன், திரௌபதியினால் வரிக்கப்பட்டான் என்று அறியாமையால் நினைத்தான். உடனே, கிருஷ்ணையை (திரௌபதியை) அழைத்து வா' என்றும், 'அவளுக்கு மிகுதியான ஆபரணங்களைக் கொடு' என்றும் தனது புத்திரனாகிய துரியோதனனுக்குக் கட்டளையிட்டான். அதன் பிறகு விதுரர், "கௌரவர்கள் என்னும் பொதுச் சொல்லால் உன் புத்திரர்களை எண்ணாதே. விருத்தியாகின்றனர் என்ற என் சொல்லினால் பாண்டவர்கள்தாம் சிறப்பிக்கப் பட்டனர்........என்று சொன்னார்," (கும்பகோணம் பதிப்பு, முதல் தொகுதி, ஆதிபர்வம் 219ம் அத்தியாயம், 789ம் பக்கம்).
எனவே, கௌரவர்கள் என்பது துரியோதனாதியரையும், தருமபுத்திரனையும் அவன் சகோதரர்களையும் சேர்த்தே குறிக்கும் பொதுப்பெயர் என்பது, விதுரருடைய வாக்காலேயே பாரதத்தில் வெளிப்பட்டிருக்கிறது. ஆக, இப்போது, 'கௌரவ வம்சத்தைத் தாங்கும்' கடப்பாடுடையவனாகத் தன்னைக் குறிப்பிடுபவராகிய பீஷ்மர், இரு திறத்தாரில் யாரைக் குறிப்பிடுகிறார் என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஆனாலும், அவர் குறிப்பிடுவது குரு வம்சத்தின் அரியணை யாருடைய பொறுப்பிலிருக்கிறதோ அவரைத்தான் என்பது இதையடுத்து வரும் துரோணருடைய உரையில் மிகத் தெளிவாகவே வெளிப்படுகிறது. நடந்த நிகழ்வுகள் இன்னமும் அந்த உரையில் எடுத்துச் சொல்லப்படுகின்றன. அவற்றை இதற்குப் பின்னால் காண்போம். இப்போதைக்கு, தருமனோ, துரியோதனனோ பிறப்பதன் வெகு காலத்துக்கு முன்னரேயே பீஷ்மர் சேனைகளைக் காக்கும் பொறுப்பைத் தன்வசம் ஏற்றுக் கொண்டார்-அதாவது, பாண்டு வனம் புகுந்த சமயத்தில் என்பதை மட்டும் பார்த்துக் கொள்வோம். ஆகவே, பீஷ்மர், தனக்குத் தானே இட்டுக்கொண்ட பிரதிக்ஞை என்ற தளையால், தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், துரியோதனனுடைய பக்கத்தில் நின்று போர் செய்யும் நிர்பந்தத்துக்கு ஆளானார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதாவது, இப்போதைக்கு. பீஷ்மர் பாத்திரத்தை எடுத்து ஆயும்போது, இதைப்பற்றி இன்னும் விரிவாகப் பேசுவோம்.
இந்த மேற்படி உரையின் தொடர்ச்சியில் பீஷ்மர், அம்பிகா அம்பாலிகா ஆகிய இருவருக்கும் வியாசர் முறையே திருதிராஷ்டிரனையும் பாண்டுவையும் அருளியதையையும், அதன் பின்னர் நடந்தவற்றையும் விவரிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "அவர் (வியாசர்) உடனே மூன்று புத்திரர்களை உண்டு பண்ணினார். உன்னுடைய தந்தை கண்ணில்லாமல் குருடனானமையால், அரசனாகவில்லை. மகாத்மாவும் உலகத்தில் புகழ்பெற்றவனுமான பாண்டு அரசனானான். அவனே அரசன். அவர்கள் (=பாண்டவர்கள்) அவனுடைய புத்திரர்கள். பிதாவினுடைய சொத்து முதலியவைகளை அடையத் தக்கவர்கள். அப்பா! கலகத்தைச் செய்யாதே. ராஜ்ஜியத்தில் பாதியைக் கொடு." என்கிறார் (உத்தியோக பர்வம், 147ம் அத்தியாயம், 469ம் பக்கம்).
ஆகவே, அதிகாரபூர்வமாக அரசேற்றவன் பாண்டுவே என்பதும், அரசுரிமை என்பது இயற்கையான முறையில் அவனுடைய புதல்வர்களான (பாண்டு காடேகும்போது அவனுக்கோ, திருதிராஷ்டிரனுக்கோ புதல்வர்கள் பிறந்திருக்வில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்) பாண்டவர்கள் என்றறியப்படும் கௌரவர்களான தருமபுத்திரனுக்கும் அவனுடைய சகோதரர்களுக்குமே சேரும் என்பது வெளிப்படை. இந்த ஓரிடம் என்றில்லை. இன்னும் பல இடங்களில் இதுபற்றிப் பற்பல சமயங்களில் பேசப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றிரண்டைப் பார்த்துவிட்டு, நம்முடைய இரண்டாம் கேள்விக்கு விடை காணத் தொடங்குவோம்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|
|