Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
காதல் காதல் காதல்
- ஹரி கிருஷ்ணன்|ஜனவரி 2012||(1 Comment)
Share:
பாரதியின் குயில் பாட்டில் உள்ள குறியீடுகளை அலசிக் கொண்டிருந்தோம். குயிலைக் கவிதை என்பதாகவும், இளைஞனை (பாரதி 'நான்' என்றே அந்த இளைஞனைக் குறிப்பிட்டாலும், அது பொதுவாக) நல்ல கவிஞர்கள் அனைவரையும் குறிக்கும் அடையாளம் எனவும் கண்டோம். மாடு, குரங்கு இரண்டுமே, கவிதை 'செய்யப்படும் விதத்தை' மட்டுமே கருத்தில் கொண்ட, இரண்டு வேறுவேறு, எதிரெதிர் துருவங்களான குழுவினரைக் குறிப்பதாக இனம் கண்டோம். ஒன்று வடிவ உத்திகளை மட்டுமே கருத்தில் கொண்டு, நடந்த தடத்திலேயே திரும்பத் திரும்ப நடந்து நடக்கும் தடத்தை வெறுமையாக்கியும் சலிப்புத் தட்ட வைத்தும் செல்வதையும்; இன்னொன்று, இதுவரையில் இந்த மண்ணிலும் மொழியிலும் நடந்திருக்கும் கலாசாரப் பின்னணிகள் எதனையும் அறியாமலும், அறிவதில் நாட்டம் இல்லாமலும், எல்லாம் வெளிநாட்டுச் சரக்கே என்று, (குரங்குகள், மற்றவர்கள் அபிநயிப்பதைப் பொருளுணராமல் திரும்ப அபிநயிப்பது போல) வெளிநாட்டு இஸங்களை அப்படியே போலி செய்வதே கவிதை என்ற கண்மூடித்தனமான போக்கைக் கைப்பற்றி; 'மொழி ஒரு கருவியே; அதில் அதனுடைய இயல்புகள் என்று ஏதும் இல்லை. நாம் ஏற்றுவனதாம் மொழியின் இயல்புகள்' என்ற மனப்பாங்கு உள்ளவர்களாக இவர்கள் உள்ளதையும் கண்டோம். இங்கே மீண்டும் வலியுறுத்திச் சொல்லவேண்டியது ஒன்றுண்டு. எப்படிச் சின்னக் குயிலியின்மேல் மாடனுக்கும் குரங்கனுக்கும் இருந்த காதல் உண்மையும் வலிவுமானதோ அப்படியே இந்த இரண்டு குழுவினருக்கும் உள்ள அபிமானமும் உண்மையானதுதான். கவிதாதேவியின் அருள் என்ற கடாட்சம் விழுவது என்னவோ மற்ற இருவர் மீதும் 'காதலினால் அன்று; கருணையினால்'. முதல்வகைக் கவிஞனே, கவிதாதேவியைக் காதலிக்கவும் செய்கிறான்; அவளால் காதலிக்கவும் படுகிறான் என்பது குயில்பாட்டின் மையக்கரு.

அடுத்ததாக, குயிலை எவ்வாறு கவிதையின் குறியீடு என்று அடையாளம் கண்டோம் என்பதற்கு அகச்சான்று தேடக் கிளம்பினோம். சான்றுகள் அகச்சான்று, புறச்சான்று என்று இருவகைப்படுவன. புறச்சான்றில் நாம் ஆயும் களத்துக்குப் புறத்ததான, ஆனால் அதற்கு ஒத்ததான மற்ற படைப்புகளில் சான்றுகளை அடையாளம் கண்டு பொருத்துதல். கம்பனை ஆயும்போது வால்மீகியையும் காளிதாசனின் ரகுவம்சத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது போல. ஆனால், குயில் பாட்டுக்கு இப்படிப்பட்ட புறச்சான்றுகள் கிடைக்காது. அப்படிச் செய்வது சரியான ஆய்வுமாகாது. ஆகவே, இந்தக் குறியீட்டை, 'நாம் இனங்கண்டது சரியானதுதான்' என்று நிறுவ இரண்டு வகையான அகச்சான்றுகள் தேவைப்படுகின்றன. ஒன்று, குயில் பாட்டின் உள்ளேயே தென்படும் அடையாளங்கள்; இரண்டாவது, இந்த நெடும்பாடலை இயற்றிய அதே பாரதி, மற்ற இடங்களில் கவிதையைப் பற்றிக் குறிப்பிடும்போது பயன்படுத்தும் குறியீடுகளும், சொற் பிரயோகங்களும், அணுகு முறைகளும் இதற்குப் பொருந்தி வருகின்றனவா என்று பார்க்கும் முறை. இந்த வகையை, ஒரு சௌகரியத்துக்காக புற-அகச்சான்று என்று வைத்துக் கொள்ளலாம். படைப்பு மாறினாலும், படைப்பாளி ஒருவனே என்பதால் இது கொள்ளத்தக்க ஆய்வுநெறியே.

குயி்ல்பாட்டின் கதைக்களம் முழுவதும் தமிழகம்; தென்புதுவை. சேரமான் இளவல் கதாநாயகன். கதையில் அகத்திய முனிவர் வருகிறார்; வேடர் தலைவன் முருகனின் மகள் (தமிழ்க்) கவிதையான சின்னக் குயிலி கதாநாயகி. இது களம் என்றால், குயில் பாடுவதாக நான்குமுறை ஒலிக்கும் 'குயிலின் பாடல்'--காதல் காதல் காதல் என்று தொடங்கி, அருளேயா நல் ஒளியே என்று தொடர்ந்து, குழலே குழலே குழலே என்று முடிவது--ஒவ்வொரு கண்ணியிலும் கவிதையின் ஏதோ ஓர் அம்சத்தைப் பதுக்கி வைத்திருக்கிறது. விளக்கிச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. இட நெருக்கடி கருதி வெகு சுருக்கமாச் சொல்லிவிடுகிறேன்.

காதல் இன்றேல் சாதல் என்பது முதல் கண்ணி. காதலின்றிக் கவிதை ஏது? பெண்மீதோ; மண்மீதோ; நாட்டின் மீதோ; பாட்டின் மீதோ; உறவுகளின் மீதோ, தான் ஒழித்த மற்றவர்கள்மேல் வைக்கும் காதலன்றோ கவிதை முகிழ்ப்பதற்கான முதற் காரணி? 'காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்; கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம்; சிற்பமுதற் கலைக ளுண்டாம்; ஆதலினால் காதல்செய்வீர்; உலகத் தீரே!' என்றல்லவா பாரதியே பாடுகிறான். 'காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்' என்ற அடியை அடிக்கோடிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

அருளேயா நல் ஒளியே--ஒளிபோமாயின் இருளே என்பது அடுத்த கண்ணி. 'அருளென்னும் அன்பீன் குழவி' என்றார் வள்ளுவர். அருள் எனப்படுவது, அன்பு எனப்படுவதைக் காட்டிலும் ஒரு படிநிலை அதிகமானது. (இதைப்பற்றி இந்தத் தொடரில் 'பற்றி இறுக்காத பற்று' என்ற தலைப்பில் பேசியிருக்கிறோம். இங்கே). அருள் சுரக்காத உள்ளத்தில் கவி சுரப்பது எவ்வாறு? அடுத்தது ஒளி. 'உள்ளத்தில் உண்மையொளி உண்டானால் வாக்கினிலே ஒளியுண்டாம்' என்று பாரதியே, கவிதையின் அடிப்படைப் பிறப்புக் கூறுகளில் ஒன்றாக ஒளியைக் குறிப்பிடுகிறான். கம்பன் 'சவியுறத் தெளிந்து' என்று கோதாவரிக்கும் கவிதைக்கும் சிலேடையாகப் பாடும்போதும் இந்த ஒளி என்ற கவி வித்து பேசப்படுகிறது.
குயில் பாடும் இந்தப் பாடலில், 'இன்பம், நாதம், தாளம், பண், புகழ், உறுதி, குழல்' என்று வரும் அத்தனைக் கண்ணிகளிலும் கவிதைக்கான அடிப்படைக் கூறுகள் உறைந்து கிடக்கின்றன. 'எல்லாம் சரி. உறுதிக்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?' என்று கேட்பீர்கள். திருக்குறளைப் பற்றிய ரத்தினச் சுருக்கமான விளக்கவுரையாக பாரதி குறிப்பிடுவன ஐந்து தன்மைகளை. 'திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரியும் அழகும்' என்றுதான் திருக்குறளின் தன்மைக்கு இலக்கணம் வகுக்கிறான் பாரதி. 'உறுதி; தெளிவு; பொருளின் ஆழம்; விரிவு; அழகு' ஆகிய ஐந்து கூறுகள். உறுதி எனப்படுவது செறிவு. செறித்து வைத்துள்ள தன்மை. (இப்படிச் சொன்னால் புரிவதைக் காட்டிலும் stuffed with, packed with' என்று 'தமிழில்'(!) சொன்னால் எளிதில் விளங்கும்). மிகுந்திருக்கும் கூடலும், தொடக்கத்தில் உள்ள 'காத'லும், கவிதைக்குக் கவிஞன்மேல் உள்ள காதலின் தன்மையைப் பேசுகின்றன. (இதைத்தான்--காதலினால் அன்று; கருணையினால் என்ற பகுதியாலும், சேரமான் இளவலைக் கண்டதும் 'அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்' என்பன போன்ற பல்வேறுபட்ட குறிப்புகளாலும் அறிகிறோம்; உணர்கிறோம்.)

மிகச் சுருக்கமாக இந்த விளக்கத்தைச் சொன்னேன். குறைந்தது ஆறு பக்கங்களுக்கு எழுதவும் பேசவுமான ஆழமானதும் வலுவானதுமான பாரதியின் எழுத்துகளைச் சான்றாகக் கொண்ட விளக்கங்கள் உள்ளன. குயில் பாடும் இந்தப் பாடல், கவிதையையும் காதலையும் பற்றியே பேசுகிறது. கவிதையைப் பற்றி அதிகமாகவும், காதலை ஆங்காங்கேயும்.

குயில் பாட்டின் அகச்சான்றுகளை, 'குயில் கவிதையே; அதுவும் தமிழ்க் கவிதையே' என்பதற்கு ஆதாரமாக எடுத்து வைத்திருக்கிறோம். அடுத்தது. கவிதைக்கும் கவிஞனுக்கும் உள்ள உயிர்த் தொடர்பைப் பற்றி பாரதி என்ன நினைத்தான்; கவிதையைத் தன்னுடைய எப்படிப்பட்ட பந்தம், தொடர்பு, உறவு என்று கருதினான்; கவிதைக்கு அடைமொழியாகவும், விளியாகவும் அவன் பயன்படுத்தியுள்ள பொருள் தனக்கும் அவன் அடிக்கடி சொல்கின்ற 'கவிதா தேவிக்கும்' என்ன வகையான உறவிருந்ததாக அவன் கருதினான் என்பதையும் பார்த்தால்தான், குயில் பாட்டில் இளைஞனுக்கும் குயிலுக்கும் ஏற்பட்ட பந்தம், பாரதி, குயிலைக் கவிதையின் குறியீடாகப் பயன்படுத்தியிருப்பது நிறுவப்படும்.

அந்த வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள். ஏனெனில் கவிதையைப் பற்றி மிக அதிகமாகப் பேசியிருக்கும் கவிஞர்களில் பாரதியும் ஒருவன். நாம் எழுப்பும் அத்தனை கேள்விகளுக்கும் விடைகளைத் தன் பாடல்களிலும் உரைநடையிலும் அள்ளித் தெளித்திருக்கிறான். பன்னிரண்டு தொகுதிகாளாக சீனி விசுவநாதன் தொகுத்திருக்கும் அவனுடைய எழுத்துகள் முழுமையையும் சல்லடை போட்டுச் சலித்தெடுத்த ஆதாரங்களை அடுத்த தவணயில் தருகிறேன்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline