|
|
|
|
வரலாறுகளும் செவிவழிச் செய்திகளும் ஒன்றிக் கலந்து புராணங்களாவதும் புனிதமாகப் போற்றப்படுவதும் இயல்பான ஒன்றுதான். அதைக் கேள்வி கேட்பது நம் நோக்கமன்று என்று தொடர்ந்தார் ஆசிரியர். 'பெண்களுடைய கூந்தலுக்கு இயற்கை மணமில்லை என்று மறுத்து வாதிடும் நக்கீரரைப் பார்த்து இறைவன் இந்தக் கேள்வியை எழுப்புகிறார் என்று திருவிளையாடற் புராணத்திலே பரஞ்சோதியார் சொல்கிறார்:
பரவி நீ வழிபட்டு ஏத்தும் பரஞ்சுடர் திருக்காளத்தி அரவுநீர்ச் சடையார் பாகத்து அமர்ந்த ஞானப பூங்கோதை இரவி நீர்ங் குழலும் அற்றோ என அஃதும் அற்றே என்னா வெருவிலான் சலமே உற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்.
'நீ அன்றாடம் வழிபடுபவனாகிய சிவனின் இடப்பாகத்தில் அமர்ந்திருக்கும் உமையம்மையின் கூந்தலுக்கும் இயற்கை மணம் இல்லையா?' என்ற இறைவன் கேள்விக்கு 'அஃதும் அற்றே' என்ற நக்கீரனின் விடை இலக்கிய ஆய்வாளனுக்கு இருக்க வேண்டிய நடுவுநிலைமையையும், உறுதிப்பாட்டையும் தன் கருத்தின்மேல் ஆய்வாளன் தான் கொண்டிருக்க வேண்டிய conviction எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதையும் காட்டுகின்றன. "தம்முயிர்க்கு இறுதி எண்ணார்; தலைமகன் வெகுண்ட போதும், வெம்மையைத் தாங்கி, நீதி விடாதுநின்று, உரைக்கும் வீரர்" என்று 'அரசனுக்கே கோபம் வரத்தக்க ஆலோசனைகளைக் கூற நேர்ந்தாலும், அப்படிச் சொல்கின்ற காரணத்தால், அரச கோபம் தங்களுடைய உயிரின்மேல் பாயும் அபாயம் இருக்கிறது என்றுணர்ந்த போதிலும் எது சரியோ, அதை விடாமல் வலியுறுத்தும் தன்மையுள்ளவர்கள்' என்று அமைச்சர்களுக்கான இலக்கணமாகக் கம்பன் வகுத்ததை இங்கே பொருத்திப் பார்க்கலாம். இதற்குமேல் புராணச் செய்திக்குள் போகவேண்டாம். பக்தியையும் அதன் தன்மையையும், புராணங்களையும் குறைத்து மதிப்பிடுவதன்று நம் நோக்கம். கவிதையை அணுகும் முறைமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அறிவால் அணுகப்படவேண்டியவை என்பது ஒருவகை; அறிவும் அனுபவமும் கலந்து அணுகப்படவேண்டியவை என்பது பிறிதோர் வகை; அனுபவத்தால் மட்டுமே அணுகப்படவேண்டியது, அறிவால் பரிசீலித்துப் பார்க்க ஒண்ணாதது என்பது இன்னொரு வகை. இப்ப நாம பேசிக்கொண்டிருந்த கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்ற குறுந்தொகைப் பாடல் இந்த மூன்றாவது வகையில் வருகிறது.
'இதையெல்லாம் நாம ஏதோ புதுசா கண்டுபிடித்துவிட்டோம்; பழந்தமிழ் இலக்கியத்துக்கு இவையெல்லாம் அன்னியமானவை என்றெல்லாம் இந்த Transactional Analysis, earshot உத்தி எல்லாம் ஹரி அப்பப்ப பேசும் விஷயமானதால் சொன்னேன். ஒருத்தருக்குச் சொல்லவேண்டிய விஷயத்தை, அவரிடம் சொல்லாமல் இன்னொருவரிடம், அவருடைய காதுபடச் சொல்கின்ற உத்தி அல்லவா அது? இன்னொரு மனிதரிடம் இல்லை; அஃறிணைப் பொருளிடமே அவ்வாறு பேசலாம் என்று சூத்திரமே சொல்லியிருக்கிறார்கள்:
கேட்குந போலவும் கிளக்குந போலவும் இயங்குந போலவும் இயற்றுந போலவும் அஃறிணை மருங்கினும் அறையவும் படுமே
என்று நன்னூல் இலக்கணமே வகுத்திருக்கிறது. 'கேட்கும் திறனற்றவற்றதும், பேச இயலாததும், இயக்கமே இல்லாததும், எந்தச் செயலையுமே செய்ய முடியாததுமான அஃறிணைப் பொருளிடம்போய்ப் பேசுவது போன்ற பாவனை. இதை மரபு வழு அமைதி என்பார்கள். 'நன்னீரை வாழி அனிச்சமே!' என்று காதலன், அனிச்சப்பூவிடம் பேசுவதுபோலத் தொடங்கி, 'நின்னினும் மென்னீரள் யாம் வீழ்பவள்' எல்லாவற்றைக் காட்டிலும் மென்மையானது என்று சொல்லப்படுகின்ற அனிச்சமே, உன்னைக்காட்டிலும் அதிக மென்மையானவள் என்னால் விரும்பப்படும் இந்தப் பெண்' என்று திருக்குறளில் பேசுகிறானே, இதுவும் அந்தக் குறுந்தொகைப் பாட்டில் வண்டை அழைத்துப் பேச முற்படும் அதே உத்தியைத்தான் பின்பற்றுகிறது. முழுக்க முழுக்க அறிவால் மட்டுமே அணுகப்பட வேண்டியதான திருக்குறளில்கூட அனுபவத்தாலும் உணர்ச்சியாலும் மட்டுமே அணுகி அனுபவித்துத் தோயவேண்டிய பாக்கள் இருக்கத்தானே செய்கின்றன!
'அனிச்சம் என்றொரு பூ உண்டா, எந்தப் பெண்ணாவது அனிச்சத்தைக் காட்டிலும் மென்மையாக இருக்க முடியுமா என்றெல்லாம் எவ்வாறு ஆராய முடியாதோ, அறிவால் அணுக முடியாதோ, அவ்வாறே இந்தக் குறுந்தொகைப் பாட்டையும் அணுகமுடியாது. சரி, அணுகிவிட்டார்கள் என்றால், அப்படிப்பட்ட அணுகுமுறையால் புராணங்கள் உருவாகியிருக்கினறன என்றால் அது நம்முடைய பேச்சுக்கு உட்பட்ட விஷயமில்லை. 'பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ' என்றான் கம்பன். மூணு பேர் பேசற விஷயங்களை பெரிசா ஆராய்ச்சி பண்ணக்கூடாதுன்னான். ஒண்ணு பைத்தியக்காரனுடைய பேச்சு; அடுத்தது மூடனுடைய பேச்சு; மூணாவது பக்தன் பேசுவது. இது மூணும் ஒரே தராசில் நிறுக்கக்கூடியவை. இதுல இலக்கணமோ, மரபோ, வழுவோ, வழுவின்மையோ பார்க்காதே அப்படின்னான். எதைப்பத்தி அப்படிச் சொன்னான்? தான் இயற்றிய காப்பியத்துக்கு அவையடக்கம் சொல்லும்போது சொன்னான். 'அட என் பேச்சை பைத்தியக்காரன் பேச்சு, மூடனுடைய பேச்சு ஆகியவற்றோடு ஒண்ணா வச்சுக்கங்க. பித்தும் பேதும் பக்தியும் ஒன்றேபோல் தன் நினைவற்றுப்போய் பேசக்கூடியவை. ஆகவே என்பேச்சை, என் காப்பியத்தை 'உத்தமக் கவி' இயற்றியதாகக் கொண்டு வாதிக்கவேண்டாம்; ஏதோ ஒரு பக்திப் பிதற்றல் என்று கொள்ளுங்கள்' என்று சொல்லிக்கொண்டான்.' |
|
பாரதி பாடல்கள் அனுபவத்தாலும் உணர்ச்சியாலும் மட்டுமே அணுகி, உரசிப் பார்த்து, அத்தோடு நிறுத்திக்கொள்ளக் கூடியன அல்ல. பாரதி பாடல்களை அவ்வாறு அணுகக்கூடாது.
'The lunatic, the lover and the poet Are of imagination all compact' என்று இடைமறித்தேன். 'ஹரிக்கு இப்படி ஒப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். சொல்லுங்க. என்ன வரி அது' என்று வினவினார். 'இல்ல சார், நீங்க கம்பன் மூணுபேர் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம் என்று சொல்வதாகச் சொன்னீர்கள். உடனே எனக்கு இது நினைவுக்கு வந்தது. பைத்தியக்காரன், காதலன், கவிஞன் ஆகிய மூணுபேருமே ஒரே இனம்தான்னு ஷேக்ஸ்பியர் சொல்றார். பித்தர் சொன்னவும் lunatic; பேதையர் சொன்னவும் lover; பத்தர் சொன்னவும் poet மூன்றையும் இணைசேர்க்க முடியுமில்லையா' என்ற கேட்டதும் புன்னகைத்தார். 'பாருங்க. இதுதான் கவிமனம் என்பது. கம்பன் எந்த ஊர், எந்தக் காலம் எந்த மொழி; ஷேக்ஸ்பியர் எந்த ஊர், எந்தக் காலம் எந்த மொழி? கலாசாரத்தால்கூட இருவருக்கும் ஒப்புமை இல்லை. ஆனால் கருத்து எப்படி ஒன்றேபோல வெளிப்படுகிறது பாருங்கள். கால தேச மொழி கலாசார எல்லைகளைக் கடந்தது கவிமனம் என்பதற்கு இதைச் சான்றாகக் கொள்ளலாம். உங்களுடைய ஒப்புமைப்படியே எடுத்துக் கொண்டாலும், காதலன் என்பவன் பேதுற்றவனாகத்தான் பேசுகிறான்; நடந்துகொள்கிறான். குறுந்தொகையிலும் குறட்பாவிலும் அப்படிப்பட்ட பேதுற்ற காதலர்களைத்தான் பார்க்கிறோம்.
'நண்பர் சற்று நேரத்துக்கு முன்னால் உணர்ச்சி வசப்பட்டாரில்லையா, பாரதியில் இரண்டு இடங்களில் செய்திப் பிழை இருக்கிறது என்றதும்? அதைப் பற்றிதானே பேசிக்கொண்டிருந்தோம்? ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை தோன்றும் அபூர்வக் கவிஞர்களின் வரிசையிலல்லவா நாம் பாரதியைச் சேர்க்கிறோம்? வள்ளுவன்; அவனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கம்பன்; கம்பனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பாரதி என்பதுதானே நாம் பெருங்கவிஞர்களாகவும், கவிச்சக்ரவரத்திகளாகவும் வரிசைப்படுத்தியிருக்கும் முறை? விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட பாரதி பாடல்கள் அவ்வாறு அனுபவத்தாலும் உணர்ச்சியாலும் மட்டுமே அணுகி, உரசிப் பார்த்து, அத்தோடு நிறுத்திக்கொள்ளக் கூடியன அல்ல. பாரதி பாடல்களை அவ்வாறு அணுகக்கூடாது. 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா' என்பன போன்ற ஒருசில பாடல்களை விட்டுவிட்டால், பாரதி பாடல்களை என்ன வரிசையில் கொண்டுபோய் வைப்பீர்கள்? பாரதியின் பாடல்கள் உணர்ச்சியின் வெளிப்பாடா அறிவின் வெளிப்பாடா?'
அன்று அவர் கேட்ட கேள்வியும் அதைத் தொடர்ந்த விவாதங்களும் நல்லூர் இலக்கிய வட்டத்தின் அடுத்த நிகழ்ச்சிக்கு வித்திட்டது. விறுவிறுவென்று வளர்ந்து நடந்துகொண்டிருந்த பட்டிமன்றங்கள் சலிப்புத் தட்டத் தொடங்கியிருந்த காலகட்டம் அது. 'கற்பில் சிறந்தவள் கண்ணகியா சீதையா' என்ற தலைப்பிலெல்லாம் பட்டிமன்றங்கள் அல்லலுற்றுக் கொண்டிருந்த சமயம். நான் சொல்வது எழுபதுகளின் பிற்பகுதியில். எனவே பட்டிமன்றங்களே சலித்து, அருவருத்து ஒதுக்கும் அளவுக்குப் போய்விட்ட காரணத்தால் ஒரு புதிய முறையை மேற்கொண்டோம். கருதும் அரங்கம் என்ற பொருளில் கருத்தரங்கம் என்ற முறையைப் பரிந்துரைத்தார் ஆசிரியர். அப்போது அது புதுமையான முயற்சியாக இருந்தது. 'பாரதியின் பாடல்கள் அறிவின் வெளிப்பாடா, உணர்ச்சியின் வெளிப்பாடா' என்ற பெயரில் கருத்தரங்கம் நடத்தினோம். நடைமுறைகள், நடத்தவேண்டிய வழி, மேற்கொள்ளவேண்டிய நெறிமுறைகள் எல்லாவற்றையும் நெறிப்படுத்தி, வகுத்துத் தொகுத்துக் கொடுத்தவர் பேராசிரியர் நாகநந்தி அவர்கள்தாம்.
ஆக, நாம் இந்தத் தொடரில் முதன்முதலாகப் பேச எடுத்துக்கொண்ட 'உணர்ச்சியா அறிவா' என்ற தலைப்புக்குள் ஒரு சுற்று முடித்து, அடுத்த சுழற்சிக்குள் நுழைகிறோம். பாரதி கவிதைகளை அணுகவேண்டிய நெறிமுறைகளை முறையாகச் சிந்தித்து, ஒரு பேராசானால் வழிகாட்டப்பட்டு அந்தத் திக்கில் காலடி எடுத்துவைத்து கதைக்குள் போகிறேன்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|