|
|
முன் சுருக்கம்: இந்த கலி (·போர்னியா) காலம் கட்டுரைத் தொடரில் முன்பு 2000-க்கும், 2001-க்கும் இடையில் பொருளாதார நிலையில் ஏற்பட்ட மலை உச்சிக்கும் அதல பாதாளத்துக்குமான வித்தியாசம் எதனால் ஏற்பட்டிருக்கலாம் என்று கற்பனை உலகுக்குச் சென்று பார்த்தோம்.
பாற்கடலில் நிம்மதியாக சயனித்துக் கொண் டிருந்த விஷ்ணுவை, நாரதர் லஷ்மி கடாட்சத் தாலேயே செல்வத்தில் புரளும் கலி·போர்னியாவை வந்து பார்த்தே தீர வேண்டும் என்று கலக மூட்டி விட்டார். அதனால், விஷ்ணுவும், ஜாவா, HTML எல்லாம் கற்றுக் கொண்டு, H1 விசா வாங்கிக் கொண்டு silicon valley வந்து சேர்ந்தார். அங்கு ஸா·ப்ட்வேர் எஞ்சினீயர்களைத் தீவிரமாகத் §டிய ஒரு டாட்-காம் நிறுவனம் அவரையும் நாரதரையும் வலுக்கட்டாயமாக சேர்த்துக் கொள்ளவே ஸ்டாக் ஆப்ஷன்கள் மூலம் சில மாதங்களிலேயே மில்லியனர் களாகி விட்டனர்! விஷ்ணுவும் லக்ஷ்மியின் அருள் பலத்தை ஒப்புக் கொண்டு வைகுண்டம் திரும்பினார். ஆனால் டாட்-காம் கொப்பளம் உடைந்தவுடன் ஏற்பட்ட துன்பங்களை நாரதர் விவரித்ததும் விஷ்ணு நடந்தது மாயையின் பலத்தால் என்று விளக்கினார். கலி·போர்னியா காலம் ஏற்படுத்திய பொருளாதார உச்சம், அதன் பின் விளைந்திருக்கும் படு பாதாளம் இரண்டுமே, மாயைதான், உண்மை நிலை இரண்டுக்கும் இடையில் எங்கோ உள்ளது, அந்த மாயை விலகியபின் சென்று சேர்வோம் என்பது நம் எதிர்பார்ப்பு.
ஆனால் கலி·போர்னியா காலம் அத்தோடு முடிந்து போகாமல், 9/11 விளைவு, என்ரான், வொர்ல்ட்காம் எனத் தொடரவே, இன்னும் மாயை முழுவதும் விலகவில்லை என்பது தெளிவு. இப்போது அந்தக் கதைக்குச் செல்வோம்!
******
"நாராயண, நாராயண!"
அனந்த சயனத்தில் ஆழ்ந்து விட்டிருந்த விஷ்ணு விழித்துக் கொண்டு, "என்ன நாரதா, மீதி கலகங்களெல்லாம் முடிந்து விட்டதா? மீண்டும் என் தலையை உருட்ட வந்து விட்டாயே?!" என்றார்.
நாரதர், "ஆதிகேசவா, கலகம் ஒன்றுமில்லை, போன வாரம் பூலோகம் சென்றிருந்தேன் அன்னைக்கு ஒரு அப்டேட் அறிக்கை அளிக்கலாம் என்றுதான் வந்தேன்." என்றார்.
லக்ஷ்மியும் ஆவலோடு, "என்ன நாரதா, பூலோகத் தில் அந்த டாட்-காம் மாயையால் ஏற்பட்ட விபரீதங்கள் விலகி இப்போது சற்று நிலைமை தேறியிருக்க வேண்டுமே?" என்று வினாவினாள்.
நாரதர், "தேவி, அதை ஏன் கேட்கிறீர்கள்? பரிதாபம்! கொஞ்சம் நிலைமை தேறி வரும் வேளையில், பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையக் கட்டிடங்களை விமானங்களால் இடித்து விடவே, பொருளாதாரம் தடுமாறி நிலைகுலைந்தது. இன்னும், என்ரான், வொர்ல்ட்காம் என்னும் நிறுவனங்களில் வரவு செலவு கணக்கு ஊழல் விவகாரம் ஏற்பட்டு இன்னும் படுமோசமாகி விட்டது!"
விஷ்ணு குறும்புப் புன்னகையுடன், "முப்பது பூலோக வருடங்களுக்கு முன்னால், கணக்குக் கேட்டதனால் ஒருவரைக் கட்சியை விட்டு வெளியே தள்ளினதா தேவதந்தில படிச்சேன். இப்ப கணக்குப் பார்த்து ஒரு கம்பனியையே கவிழ்த்துட்டாங்களா, பேஷ்!" என்றார்.
நாரதர், "ஆபத்பாந்தவா, இதுதான் உன் கிட்ட ஆபத்து! ஒன்றுமே மறப்பதில்லை! சரி, இக்காலத் துக்கு வருவோம். இந்த ஊழல்களாலும், பெருத்த கடன் வாங்கியதாலும் அமெரிக்காவில் பல நிறுவனங்கள் திவாலாகியதால் நிலைமை இன்னும் சீரழிந்து விட்டது. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் செலவைக் குறைத்துக் கொள்ள முயல்வதால் வேலை நீக்கங்கள் பலப் பல. மேலும் அவர்கள் வெளிப் பொருட்களை வாங்குவதையும் குறைத்து விட்டதால், பொருளாதார நிலை மேலேற முடியாமல் சகதியிலேயே தவிக்கிறது! நிறைய மக்கள் செல்வத்தை இழந்து, ஏன், வாழ்வதற்கு வேண்டிய சம்பளம் கூட இல்லாமல் தவித்துக் கொண்டிருக் கிறார்கள்." என்றார்.
லக்ஷ்மி, "அடப் பாவமே! நாரதா, அமெரிக்கா வில்தான் அப்படி ஏமாற்ற முடியாமல் இருக்க சட்ட திட்டங்கள், வறைமுறைகள், அப்புறம் சோதிக்கும் அரசாங்க பிரதிநிதி துறைகள் எல்லாம் இருக்குமே அப்புறம் எப்படி இப்படி நடந்தது?" என்று வினாவினாள்.
நாரதர், "ஏன் தேவி, அமெரிக்காவில் என்ன, அமர லோகத்திலேயும் அப்படி நடக்கலாம். பேராசையும், பெருத்த மமதையும் பிடித்தால் அறிவிழந்து எந்த சட்டத்தையும் மீறிவிடுகிறார்களே?!" என்றார்.
லக்ஷ்மி கடுமையாக மறுத்தாள். "என்ன, இங்கும் நடக்கும் என்கிறாயா? முடியவே முடியாது! தேவர்கள் ஊழலில் இறங்கவே மாட்டார்கள். அதுவும் இந்திரனின் மேற்பார்வையில்?! ஹ¥ம்! நடக்காது!"
நாரதர் பணிவாக, "அன்னையே, தங்கள் கருத்தை மறுக்க முடியுமா? இருந்தாலும் சோதித்துப் பார்த்து விடுவோமா? ஆனால், தாங்களும், பரந்தாமனும் குறுக்கிடாமல் இருப்பதாக வாக்குக் கொடுக்க வேண்டும்!" என்றார்.
விஷ்ணுவுக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை! "இந்தக் குறும்பை ஆரம்பிக்கத்தான் இன்று இங்கு வந்தாயா?! சரி, நடத்து நடத்து, நானும் கூத்தைப் பார்க்கிறேன்!" என்றார். லக்ஷ்மியும் வேண்டா வெறுப்பாக ஆமென்று தலையசைக்க, நாரதர் வணங்கி விடை பெற்றார்.
******
வைகுண்டத்திலிருந்து நேராக எமலோகம் விரைந்த நாரதர், சித்ரகுப்தனிடம் சென்று அமெரிக்காவிலிருந்து பெருத்த ஊழலுக்குப் பின் வந்திருக்கும் ஒரு CEO, ஒரு பங்கு வர்த்தகர், மற்றும் ஒரு கணக்கதிகாரி மூவரும் வேண்டும் என்று கேட்டார். சித்ரகுப்தன் கணக்குப் பார்த்துக் கொடுத்த CEO-வின் பெயர் கென். அவர் கென்வான் என்னும் மின்சக்தி வாங்கி விற்கும் கம்பனியை நிர்வகித்தவர். அக்கவுன்டன்டின் பெயர் ஜான். அவர் வொர்ஸ்ட்காம் என்னும் தொலைத்தகவல் நிறுவனத்தின் கணக்கு வழக்கில் தகிடுதத்தம் செய்தவர். பங்கு வர்த்தகர் பெயர் மைக். அனுமதி யில்லாமல் டாட்-காம் பங்குகளாக வாங்கிக் குவித்து அவை சரிந்தவுடன் தன் நடவடிக்கைககளை மறைக்கப் பார்த்து மாட்டிக் கொண்டவர். மூவரும் அவமானம் தாங்க முடியாமல், தாங்களாக எமலோகம் வந்து விட்டிருந்தனர்.
நாரதர் எமதர்மனை சரிக் கட்டிவிட்டு, கென், ஜான், மைக் மூவரையும் இழுத்துக் கொண்டு தேவலோகம் வந்து சேர்ந்தார். தன் சொற்படி நடந்து கொண்டால் எமலோகத்தில் சலுகை அதிகரிக்கும், சொர்க்கத்துக்கு மாறக் கூட முடியும் என்று ஆசை காட்டியதும், அவர்கள் மூவரும் தம் இயற்கையான பேராசையுடன் சம்மதித்தனர்! நாரதர் தன் திட்டத்தை அவர்களிடம் விவரித்தார்.
நாரதர் முதலில் மூவரையும் தேவர்கள் அமிர்தம் அருந்தும் அமர்பக்ஸ் கடைக்கு (தேவலோகத்தில், தடுக்கி விழுந்தால் மூலைக்கு மூலை இருக்கும் அமர்பக்ஸ் கடையில் தான் விழ வேண்டும்!) அழைத்துச் சென்றார். அங்கு தனக்கு ஒரு லாட்டே க்ரான்டே அமிர்தமும், அவர்களுக்கு அமிர்தமற்ற அமிர்த பானமும் (அது கா·பீய்ன் இல்லாத கா·பி போல் ஒன்று!) வாங்கிக் கொண்டு, அமர்ந்து சத்தமாக உரையாட ஆரம்பித்தார்.
"என்ன?! நீங்கள் சொல்வது போல் நிறுவனங்கள் ஆரம்பித்து பங்கு வியாபாரம் செய்தால் குபேரனை விட செல்வந்தராக ஆகி விட முடியுமா?! ஆச்சர்யம், ஆச்சர்யம்!"
அதைக் கேட்ட உடனே, பல சாதாரணத் தேவர்கள் அவர்கள் நால்வரையும் சூழ்ந்து கொள்ள, நாரதர் திட்டம் ஏவுகணை போல் ஜிவ்வென்று உயர்ந்து பறக்க ஆரம்பித்தது!
"எப்படி?! எப்படி அம்மாதிரி செல்வம் சேர்க்க முடியும்?" கேள்விகள் பறந்தன.
நாரதர் மைக் பக்கம் கை காட்டினார். "அவர் காட்டுவார் வழி!"
மைக் தன் மாய வலையை பின்ன ஆரம்பித்தார். "இதோ இருக்காரே கென், அவர் கென்வான் என்கிற ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப் போறார். அது தேவலோகத்திலேயே ஒரு பெரிய நிறுவனம் ஆகப் போகுது. அதுல நீங்க எல்லாம் பங்குகள் வாங்கிக்கலாம். நாள் போகப் போக அந்தப் பங்குகள் விலை பத்து, நூறு, ஆயிரம் மடங்கா ஆயிடும்!"
"நிறுவனம் என்ன செய்யப் போகிறது?" - சந்தேகத் தேவர் புகுந்தார்.
"என்ன... செய்ய... போகுதா?! இங்க பாத்தீங்களா, எவ்வளவு அமர்பக்ஸ் கடை இருக்கு? இதுக் கெல்லாம் அமிர்தம் எங்கேந்து வருது? அத்தனை அமிர்தமும் எங்கேந்து வந்தாலும் விக்க, வாங்க, இவங்க நிறுவனம் மூலமாத்தான் போயாகணும்! ஒவ்வொரு முறை அந்த மாதிரி வியாபாரம் நடக்கறச்சேயும் இவங்களுக்கு நிதி கட்டணும்!"
"அதான் இப்பவே வாங்கி விக்கறாங்களே? இவங்க மூலமா ஏன் வாங்கணும்?"
"அட என்னய்யா இது, புரியாமப் பேசறீரே? ஒரே இடத்துல நிறையப் பேர் கிட்ட வாங்க முடிஞ்சா செளகர்யம், அப்புறம் போட்டி, ஏலம் நடத்தி விலையும் குறையும். விக்கறவங்களுக்கும் எல்லாக் கடைக்கும் ஒரே நிறுவனம் மூலமா விக்கலாம்!"
"பங்கு விலை ஏன் ஏறும்? விலை எவ்வளவுன்னு எப்படி நிர்ணயிக்கப் போறீங்க?"
மைக் இந்த மடத்தனமான கேள்வியைக் கேட்ட தேவரை 'ஐயோ பாவம் இது கூடத் தெரியாமல் இருக்கிறாரே' என்ற பரிதாபத்தோடு பார்த்து பெருமூச்சு விட்டார். "நாங்க ஏன் நிர்ணயிக்கணும்? நீங்களேதான் விலை வைக்கப் போறீங்க. நாங்க ஒரு ஆரம்ப விலை சொல்லுவோம். அதை முதல்ல வாங்கினப்புறம் மத்தவங்க அதை என்ன விலைக்கு வாங்கிக்கத் தயாரோ அதுதான் விலை!"
சந்தேகத் தேவருக்குத் தலை கால் புரியவில்லை! "ஆனா, எவ்வளவுக்கு வாங்கலாம்னு எப்படித் தெரியும்?!"
மைக் உச்சுக் கொட்டினார். "சே? இதுல என்ன கஷ்டம்?! நிறுவனத்துக்கு வருமானம் ஏற ஏற விலைதான் ஏறப் போகுது இல்ல? அப்ப இருக்கற விலையை விடக் கொஞ்சம் அதிகமாப் போட்டா யாராவது உங்களுக்கு வித்துடுவாங்க. அப்புறம் இன்னும் கொஞ்சம் விலை ஏறினதும் நீங்க வேற யாருக்காவது வித்துடலாம். அவ்வளவுதான்!" என்றார்.
ஜான் புகுந்தார். "ஆமாம். ஒவ்வொரு மாசமும் நாங்க எவ்வளவு வருமானம்னு சொல்லிடுவோம். அது ஏறர வேகத்தை வச்சு, கொஞ்ச நாளில எவ்வளவு வரலாம்னு கணக்கு பண்ணி, பங்கு அந்த விலைக்கு ஏறரத்துக்கு முன்னாடி வாங்கிடணும்!"
நாரதர் தாவினார். "இந்த அமிர்த வியாபாரம் எல்லாம் ஆரம்பத்துக்குத்தான். இந்தக் கென் இருக்காரே, பெரிய ஆள்! தேவர்கள் எல்லாம் இன்னும் நிறைய மாதிரி நிறுவனம் ஆரம்பிக்க உதவி செய்யப் போறார்! அது எல்லாத்துலயும் இதே மாதிரி பங்கு வாங்கி நாம எல்லாருமே குபேரனா ஆயிடலாம்! யார் யாருக்கு நிறுவனம் ஆரம்பிக்க ஆவல் இருக்கோ அவங்க எல்லாம் என் கிட்ட ஒரு நாமப்பத்திரம் குடுங்க" என்று பத்திரங்களை வினியோகித்தார்.
இதே மாதிரி இன்னும் பல அமர்பக்ஸ் கடைகளுக்குச் சென்று செய்தியை டமாரம் அடித்தனர்! சில நாட்களூக்குள்ளேயே மைக் தேவலோக பங்குச் சந்தையை ஆரம்பித்து, அதில் பல நிறுவனங்களைப் பதிவு செய்தார். கென் நிறுவனத் தலைவர்களுக்கு உபதேசித்தார். ஜான் கணக்கு வழக்குகள் எப்படிச் செய்வது என்று பயிற்சி அளித்தார். மைக் பங்குகளின் பிரதாபத்தைப் பிரபலப் படுத்தினார். நிறுவனங்கள் அறிவிக்கும் வரவு செலவு கணக்கை வைத்து பங்குகளை வாங்குவதா விற்பதா என்று சிபாரிசு அறிக்கையும் விடுத்தார். சந்தேகமே இல்லாமல், எப்போதும் எல்லாவற்றையும் வாங்கத்தான் சிபாரிசு!
பங்கு வர்த்தகம் அமோகமாக நடக்க ஆரம்பித்தது! பங்குகளின் விலைகள் விர்ரென்று உயர்ந்தன.
நாரதர் இந்திரனிடம் சென்று, "இந்திரா, தேவர்கள் எல்லாம் நிறுவனங்கள் ஆரம்பித்து, பங்கு வர்த்தகம் பிரமாதமாக நடக்கிறது! ஆனால் நிறுவனங்களின் கணக்கு வழக்குகள் சரியாக இருக்கிறதா என்று அறிவிக்க விதிமுறைகள் வேண்டுமே?" என்று தூண்ட இந்திரனும் அதற்கு ஒரு கமிஷன் போட்டான். கமிஷனுக்கும் உதவி செய்து, அது அறிவித்த விதிமுறைகளின் படி எப்படி அறிக்கை அளிப்பது என்று ஜான் எல்லோருக்கும் கற்றுக் கொடுத்தார். எல்லாமே விதிமுறைகளின் படி நடக்கிறது என்று இந்திரனும், எல்லாத் தேவர்களும் ஆனந்தமாக இருந்தனர்.
பங்குகளின் விலை உயர உயர, அவற்றை வாங்குமாறு உசுப்பிய மைக்கின் சிபாரிசுகளும் மேலும் மேலும் வலுத்தன. நாரதர் மைக்குக்குப் போட்டியாக இரண்டு தேவர்களையும் பயிற்சி அளித்து ஏற்பாடு செய்தார். பயிற்சிக்குப் பிறகு அவர்களிடம் அவர் பேசியது வருமாறு:
நாரதர்: "தேவகாம் நிறுவனத்தின் பங்கைப் பற்றி என்ன சிபாரிசு?"
ஆனந்தத் தேவர்: "சந்தேகம் என்ன? பலத்த வாங்கல் தான்! அந்தப் பங்கு விலை எவ்வளவு பிரமாதமாக ஏறிக் கொண்டிருக்கிறது? முட்டாள் தான் விற்பான்!"
நாரதர்: "பலே, பலே, பிரமாதமா கத்துக்கிட்டே!"
சந்தேகத் தேவர்: "வாங்க வேண்டியதுதான்... ஆனால்..."
நாரதர்: "ஆனால் என்ன ஆனால்?! தைரியமாக எடுத்து விட வேண்டியதுதானே?!" |
|
சந்தேகத் தேவர்: "ஆனால் அவங்க குபேரனி டமிருந்து நிறையக் கடன் வாங்கி அசரீரி ·போன் டவர்கள் கட்டியிருக்காங்க, வருகை அந்த வட்டிக்கே காணாது போலிருக்கே?!"
நாரதர்: (தலையில் அடித்துக் கொண்டு) பைத்தியம், பைத்தியம்! நீ அத பத்தி கேட்டு, பலத்த வாங்கலைத் தவிர மட்டமான வேற சிபாரிசு குடுத்தா, நிறுவனங்கள் தேவர்களுக்கு மேலும் மேலும் பங்கு, கடன் பத்திரம் விக்கிற மூலதன வங்கி வேலை எல்லாம் மைக்குக் குத்தான் போகும், உங்களுக்கு ஒரு வாடிக்கையும் வராது. கவனம் இருக்கட்டும்."
சந்தேகத் தேவரை மிரட்டி சரி கட்டி விட்ட நாரதர் ஜான், கென் இருவரையும் அணுகி "எப்படி நடக் கிறது?!" என்று விசாரித்தார். இருவரும் முழித்த திருட்டு முழியைப் பார்த்து கண்டு கொண்டார். "ஓ! அவ்வளவு நன்றாக நடக்கிறதா?! பேஷ், பேஷ்! நடக்கட்டும், நடக்கட்டும்! ஆனால் இந்திரனும் அவன் கமிஷனும் ஒண்ணும் விசாரிக்கலையா?" என்றார்.
கென் வாயெல்லாம் பல்லாக, "அதை பத்தி ஒண்ணும் கவலையே இல்லை! இந்திரன் அரசியல் நிதிக்கு நாங்க நிறைய தானம் செஞ்சிருக்கோம். என்ன வேணும்னாலும் அவர் கிட்டே போய் பேசி தீத்துக்கலாம். மேலும், இந்திரன் இப்ப ஓஸாமாசுரன் நடத்தற பயங்கர வாதத்துலயும், சதாமாசுரனுடன் எப்பப் போர் ஆரம்பிக்கலாம்ங்கற நடவடிக்கை களிலயும்தான் நிறைய கவனம் செலுத்திக் கிட்டிருக்கார். நம்மள பத்தி கண்டுக்கறதே இல்லை! மேலும் கமிஷன் போட்டிருக்கிற விதி முறைகளுக்குள்ளத்தான் நாங்க செய்யறோம்னு ஜான் ஆரம்பிச்சு வச்ச அமரர் அண்ட் சன்ஸ் என்கிற ஆடிட் நிறுவனத்தை வச்சு ஸர்ட்டி·பிகேட் காட்டறோமே?! கமிஷனை அப்படி சரிக்கட்டியாச்சு!"
நாரதர், "ஓ நீங்க அப்படி வந்துட்டீங்களா, சபாஷ்! நான் நினைச்சதுக்கும் மேலேயே நடத்திட்டீங்க! ஆமாம், இந்த சின்ன தேவ லோகத்தில இவ்வளவு நிறுவனங்கள் ஆரம்பிச்சு எல்லாம் அவ்வளவு வருமானம் காட்டுதே, எப்படி?!" என்றார்.
கென் கண் சிமிட்டி, தன்னை சுட்டிக் கொண்டு. "எல்லாம் இவன் செயல்! ஒரு நிறுவனம் இன்னொண்ணுக்கு தன் பொருளையோ சேவைகளையோ விற்கும். அது அதோட வருமானம். அந்த இன்னொரு நிறுவனம் அந்த முதல் நிறுவனத்துக்கு தான் செய்வதை விற்கும். அது அந்த இரண்டாவது நிறுவனத்துக்கு வருமானம். இப்படி நிறைய நிறுவனம் இருக்கறதால, இப்படி மாத்தி மாத்தி வித்தே வருமானம் ஏறிக்கிட்டே போகுது. நேரா இரண்டே நிறுவனம் மட்டுமில்லாம, மூணு நாலு நிறுவனங்கள் வட்டமா சேர்ந்து இந்த மாதிரி செஞ்சு வருமானம் காட்டறாங்க. ஒவ்வொரு நிறுவன போர்ட்லயும் மத்த நிறுவன CEO மெம்பர். அதுனால இந்த வாங்கல், விற்றல் ரொம்ப சுலபம். இன்னும் வருமானம் அதிகரிக்கணும்னா, இன்னும் நிறைய முறை அல்லது இன்னும் அதிக அளவுக்கு அந்த மாதிரி சுத்தி சுத்தி வாங்கி வித்தாப் போச்சு! அவ்வளவுதான்!"
நாரதர் சிலாகித்துக் கொண்டார். "பிரமாதம்! ஆனா நிறைய செலவு ஆகுமே? லாபமே இருக்காதே?!"
ஜான் எக்களித்தார்! "செலவு என்ன செலவு, பிசாத்து! வரவு ஏறிக்கிட்டே போகச்சே செலவு பத்தி அவ்வளவா தேவர்கள் கண்டுக்கலை. மேலும், நாங்க செலவை எல்லாம் மூலதனம்னு வேற கணக்குல மாத்தி எழுதி, செலவைக் குறைச்சுக் காட்டி, அதோட மதிப்புக் குறைவை மட்டும் கழிச்சுக் காட்டி, மொத்தத்துல கணக்குப் படி பெருத்த லாபம்தான்! வரவு செலவு கணக்கை பங்கு வியாபரத்துக்கு எப்படி சரி வரணுமோ அப்படிக் காட்டியாச்சு. எல்லா நிறுவனங்களிலயும் CEO, CFO, நிறுவன போர்ட் அதிகாரிகள் எல்லாருக்கும் ஸ்டாக் ஆப்ஷன்ல லாபம் பெருக்கிக் குவிச்சாச்சு!"
நாரதர் ஆனந்தித்தார்! "ஆஹா, அற்புதம்! மேலாளர்கள் ஸ்டாக் ஆப்ஷன்ல செல்வம் பெருக்கவே நிறுவனங்க நடக்குது! சித்ரகுப்தன் சரியான ஆளாத்தான் புடிச்சு குடுத்திருக்கான்! ஆனா கணக்குப்படி லாபம்னாலும் கைல இருந்து பணம் செலவாகிக்கிட்டே போகுதே? அதை எப்படி சமாளிக்கறீங்க?"
ஜான் சிரித்தார். "அது என்ன மஹா சுலபம்! கடன் தான்! இருக்கவே இருக்கே குபேரன் பொக்கிஷம்! தேவநிறுவனங்கள்னா அள்ளிக் குடுக்கறாரு! நல்ல வட்டி குடுக்கறோமே?!"
நாரதர் மகிழ்ந்தார். "நல்ல யோசனைதான்! குபேரன்தான் வேங்கடவனுக்கே கடனளித்தவன் ஆச்சே! இதுக்கும் செய்ய வேண்டியதுதான்!"
ஜான் தொடர்ந்தார். "அது மட்டுமில்லே, நாங்க மைக் மூலமா மத்த தேவர்களுக்கும் நிறைய கடன் பத்திரம் வித்திருக்கோம். 15% வட்டி! கொத்திக்கிட்டுப் போயிட்டாங்க பங்கு வியாபாரத்துல செல்வம் புரட்டியத் தேவர்களும், அவர்கள் நிதி போட்டு வைச்ச நிதி நிறுவனங்களும்."
நாரதர் அசந்தே போனார். "அட்டகாசம் பண்ணிட்டீங்க. சரி ஜமாயுங்க! நான் வரேன், நான் மைக் கிட்ட அவர் நிலவரத்தைப் பத்தி விசாரிக்கணும்."
தேவலோக பங்கு சந்தை விலைகள் அமோகமாக ஏறிக் கொண்டிருந்தன. CEO தேவர்கள் ஸ்டாக் ஆப்ஷன்களில் செல்வம் குவித்துக் கொண்டிருந்தனர். ஜான் சொல்லிக் கொடுத்த படி நிறுவனங்கள் தங்களுக்குள்ளேயே வியாபரம் செய்து வருமானமும் லாபமும் காட்டி, கடனையும், உண்மை பணச் செலவையும் பெருக்கிக் கொண்டே போயின!
மைக்கும் ஆனந்தத் தேவரும் மாற்றி மாற்றி போட்டி போட்டுக் கொண்டு எல்லா நிறுவனங்களுடைய பங்குகளையும் வாங்குமாறு அறிக்கை விட்டனர். ஆனால் சந்தேகத் தேவர் அந்த விஷயத்திற்கு உடன்படாமல் பிரிந்து போய் விட்டார்.
ஒரு நாள் நாரதர் சந்தேகத் தேவரை சந்தித்தார். "என்ன, எப்படி இருக்கே? நீ இப்ப ஆனந்தத் தேவரோட இல்ல போலிருக்கே?"
சந்தேகத் தேவர், "ஆமாம், இந்த பங்கு சிபாரிசு, கடன் பத்திர தகிடு தத்தம் எல்லாம் எனக்கு ஒண்ணும் பிடிக்கலை. விட்டுட்டேன்" என்றார்.
நாரதர், "நீ செஞ்சது சரிதான். ஆரம்பத்திலிருந்தே நீ இந்த புரட்டல் வேலைல இருக்கற பிரச்சனையைப் புரிஞ்சுகிட்டிருக்கே! சரி தீர்த்து வைக்கலாம் வா!" என்று அவரை தேவ ஸ்ட்ரீட் ஜர்னல் என்னும் செய்தித் தாள் நிறுவனத்துக்கு அழைத்துச் சென்றார்.
மறு நாளிலிருந்து தேவ லோகம் களேபரப் பட்டது! கென்வான், தேவகாம் மற்றும் பலப் பல நிறுவனங்கள் காட்டிய வருமானம் வெறும் பண்ட மாற்று வேலை தானே ஒழிய உண்மையான வருமானம் அல்ல; மேலும், அவைகள் காட்டிய லாபம் மிகவும் போலியானது; காட்டிய செலவை விட மிக அதிக செலவாகியுள்ளது என்றெல்லாம் அமளி துமளிப் பட்டது!
தேவலோகத்தின் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் எல்லாம் இதே செய்திதான். அவ்வளவுதான்! பங்கு விலைகள் பட படவென சரிந்தன. பல நிறுவனங்கள் திவாலாகின. கென்வானும் தேவகாமும் காலி! இந்திரன் நியமித்த பங்கு வர்த்தகக் கமிஷன் தீவிர விசாரணையில் இறங்கியது. நிறுவனங்களின் நிதி நிலைமை, அமரர் அண்ட் சன்ஸ் செய்த ஆடிட் வழிமுறைகள், பங்கு வியாபார வங்கிகள் நிறுவனங்களுடன் சேர்ந்து அவைகள் அளித்த வியாபரத்துக்காக "பலத்த வாங்கல்" சிபாரிசுகள் அளித்த ஊழல், இவை எல்லாவற்றையும் சித்ரகுப்தன் மூலம் ஆராய்ந்து தினப்படி அறிக்கை விட்டது.
கென், ஜான், மைக் மூவரும் தலைமறைவு! (நாரதர் எமதர்மனைக் கூப்பிட்டு அவர்களை இழுத்துக் கொண்டு போகச் சொல்லி விட்டது யாருக்கும் தெரியாது!)
நிறுவனங்கள் திவாலாகிவிட்டதால், பங்குகளும், கடன் பத்திரங்களும், வறுத்த கடலை சுற்றித்தரும் வெற்றுக் காகிதங்களாகி விட்டன! எடுக்கக் குறையாதப் பொக்கிஷம் இருந்ததால் குபேரன் பிழைத்தான்! மீதித் தேவர்கள் பங்கு வர்த்தகத்தில் பெருக்கிய செல்வம் உருகிப் போய் விட்டது! இந்திரனிடமும் லக்ஷ்மி தேவியிடமும் அவர்கள் பலமாக முறையிட்டனர். தினமும் இந்திரன் அரண்மனை முன்னும், வைகுண்டத்திலும் ஒரே தேவர்கள் கூட்டமாகி விட்டது! விஷ்ணுவின் அனந்த சயன நிம்மதியே கலைந்து போய் விட்டது.
******
"நாராயண, நாராயண!"
நாரதர் கூடி கோஷமிட்டுக் கொண்டிருந்த தேவர்களை விலக்கிக் கொண்டு துவார பாலகர்களிடம் தன் அனுமதி விஸா காட்டி விஷ்ணுவை சந்தித்தார். "அப்பாடா! இந்தக் கூட்டத்தைத் தாண்டி வருவதற்குள் மூச்சுத் திணறி விட்டதே?! நீங்கள் இருவரும் எப்படி இங்கு சமாளிக்கிறீர்கள்?!"
விஷ்ணுவோ, ஒரு சிறு புன்னகையுடன் "நாரதா, ஏதோ ஒன்றுமே தெரியாத அப்பாவி போலக் கேட்கிறாயே?! இதற்கெல்லாம் மூல காரணமே நீ தானே?!" என்றார்.
லஷ்மி, "நாரதா, விளையாடியது போதும்! எனக்குப் புரிந்து விட்டது. மாயையின் சக்தியால் வளர்ந்த பேராசையும், சற்று செல்வம் சேர்ந்ததும் எதையும் செய்யலாம், கேட்பாரில்லை என்ற மமதையும் சேர்ந்தால் அமெரிக்காவில் என்ன, தேவலோகத்திலும், எங்குமே இந்த மாதிரி நடக்க முடியும் என நிரூபித்து விட்டாய்! தீர்த்து வை." என்றாள்.
நாரதரும், "ஸ்ரீதேவி, இதுவும் மாயைதானே!
உன் அருளாலும், பரந்தாமன் அருளாலும் தேவலோகம் உடனே சரியாகி விடும். இங்கு என் காரியம் முடிந்துவிட்டது. நான் வருகிறேன். நாராயண, நாராயண" என்று, அடுத்த கலகத்துக்குக் கைலாஸத்துக்குக் கிளம்பினார்!
******
மாயை தூண்டி விட்ட பேராசையாலும் மமதையாலும் சிலர் செய்த காரியங்களால் ஏற்பட்ட விளைவுகளால் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கும் அனைவருக்கும் இந்தத் துன்ப நிலை, பகலவன் விலக்கிய பனி போல் விலகி, மீண்டும் இன்ப நிலை உண்டாக வேண்டும் என நான் வேண்டிக் கொள்கிறேன். அது நடக்கும், நடக்க வேண்டும்! ஆனால் எவ்வளவு காலம் இன்னும் பொறுத்திருக்க வேண்டும் என்பதுதான் எல்லோர் மனத்தையும் வாட்டும் வினா.
மஹாகவி பாரதி கூறிய படி, "கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்!" நம்மிடம் தனுவில்லையானாலும், மன வலுவுண்டு! அதை வைத்துத் தளராமல் முயற்சித்தால் இன்றோ, நாளையோ இல்லாவிட்டாலும் கூடிய சீக்கிரம் மாயை விலகி, காலம் மாறும் என மனப் பூர்வமாக நம்புகிறேன்.
******
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|
|