Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
நேர்காணல்
பட்டிமன்றம் ராஜாவிலிருந்து 'சிவாஜி' ராமலிங்கம் வரை
தென்றல் வாசகர்களே! எழுத வாருங்கள்: நியூ ஹொரைஸன் மீடியாவின் பத்ரி சேஷாத்ரி
தில்லானா மோகனாம்பாள் படிப்பதற்காகத் தமிழைக் கற்றேன்: பேரா. இந்திரா பீட்டர்சன்
- காந்தி சுந்தர்|அக்டோபர் 2008|
Share:
Click Here Enlargeடாக்டர். இந்திரா பீட்டர்சன், மாஸாசூஸட்ஸில் உள்ள மௌண்ட் ஹோல்யோக் கல்லூரியில் ஆசியத் துறையில் பேராசிரியர் பொறுப்பு வகிக்கிறார். தமிழ், ஹிந்தி, மராத்தி, ரஷ்யன், ஜெர்மன், ஃப்ரெஞ்சு மற்றும் கிரேக்கம் ஆகிய மொழிகளில் பேசவும் எழுதவும் வல்லவர். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. மற்றும் சம்ஸ்கிருதத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் இவர், தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பல ஆய்வுகளைச் செய்து, அவற்றை ஆங்கிலத்தில் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக தேவாரப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது, குறவஞ்சி இலக்கியம் பற்றிய ஆய்வு, மராட்டியர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டின் தொகுப்பு, 'கிராதார்ஜுனியம்' போன்ற சம்ஸ்கிருத நூல்களின் ஆய்வு ஆகியவை இவரது அரிய சில படைப்புகளாகும். அவருடனான தொலைபேசி உரையாடலில் இருந்து...

கே: உங்கள் குடும்பத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!

ப: என் தந்தையார் திரு. விஸ்வநாதன், தாயார் திருமதி. ஜெயா. எனக்கு இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி. என் தந்தை வழித் தாத்தா திரு. வி.ராமசாமி அய்யர் சென்னையில் வக்கீலாக இருந்தார். அவர் சென்னை ரசிக ரஞ்சனி சபாவை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவர். நான் மிகச் சிறியவளாக இருக்கும்போதே அவர் இறந்து விட்டார். ஆனால் தமிழ் மற்றும் தீவிர இசை ஆர்வம் அவரிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும். அதேபோல் என் தாய்வழித் தாத்தா வெங்கடரமணன்தான் எனக்கு சம்ஸ்கிருதம் கற்றுக் கொடுத்தார். பிற மொழிகளின் மீதான ஆர்வத்தைத் தூண்டியவர் என் தந்தை விஸ்வநாதன். பல்வேறு அலுவலகப் பணிகளுக்கிடையே தாமும் ஜெர்மன் மொழியில் டாக்டர் பட்டம் பெற்று, எங்களையும் ஊக்குவித்தார்.

என் கணவர் டாக்டர் மார்க் பீட்டர்சன். இவர் இயற்பியல் மற்றும் கணிதப் பேராசிரியராக மவுண்ட் ஹோல்யோக் கல்லூரியிலேயே பணிபுரிகிறார். இத்தாலிய மொழியில் வல்லுநரான இவர், கலீலியோ, மறுமலர்ச்சி காலத்துக் கலைகள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். மகள் மாயா தற்போது ஹார்வார்டில் ரஷ்ய மொழி மற்றும் மத்திய ஆசியா பற்றிய டாக்டர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

கே: அமெரிக்கா வந்தது பற்றி...

நாயக்கர்கள், ஜமீன்தார்கள், கள்ளர், மறவர், தமிழர், மராட்டியர் - எல்லாம் தத்தம் கலாசாரத்தைப் பின்பற்றி வாழ்ந்து வந்த ஒரு காலகட்டத்தில் எல்லோருக்கும் புரியும்படியான ஜனரஞ்சகமான கூத்தாகக் குறவஞ்சி நிலவியது.
ப: நான் டில்லியில் பிறந்து மும்பையில் வளர்ந்தவள். மும்பை உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, ஒரு செய்தித்தாளில் கட்டுரைப் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது. ‘நீங்கள் அமெரிக்கா வந்தால் என்ன செய்ய விரும்புவீர்கள்? அமெரிக்காவைப் பற்றி உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்ன?' என்றெல்லாம் விரிவாக எழுத வேண்டும். உலகெங்கிலுமிருந்து இப்போட்டியில் பங்கேற்று, தேர்வுபெற்ற 3000 மாணவர்கள் அமெரிக்காவிற்குப் பரிமாற்ற மாணவர்களாக இலவசமாகஅழைத்துச் செல்லப்பட்டனர். அப்படித்தான் நான் முதன்முதலில் அமெரிக்கா வந்தேன். மாஸாசூஸட்ஸில் வாரன் தம்பதியினர் வீட்டில் விருந்தாளியாகத் தங்கினேன். அன்றிலிருந்து இன்று வரை அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாக என்னை அரவணைத்து வருகின்றனர். அமெரிக்க அனுபவம் பிடித்துப் போகவே, மும்பையில் பி.ஏ. படிப்பை முடித்து விட்டு, மீண்டும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் M.A. படிக்க அமெரிக்கா வந்தடைந்தேன். பிறகு சம்ஸ்கிருத இலக்கியம் படிக்கும் ஆசையில் ஹார்வர்டிலேயே M.A., Ph.D. தொடரப் பதிவு செய்துகொண்டேன்.

கே: சம்ஸ்கிருத மொழியில் உலக அளவில் பெயர் பெற்றவர் பேராசிரியர் டாக்டர். டேனியல் இங்கால்ஸ். ஹார்வார்டில் இவரது மாணவராக நீங்கள் சம்ஸ்கிருத இலக்கியம் கற்றுள்ளீர்கள். அந்த அனுபவம் குறித்து...

ப: டேனியல் இங்கால்ஸ் சம்ஸ்கிருத காவியங்களைக் கரைத்துக் குடித்தவர். ஆழ்ந்த கருத்துக்களை அழகாக எடுத்துரைத்து, அந்தக் காவியத்தையே நம் கண்முன் கொண்டு வந்துவிடுவார். அவரை நேரில் சந்தித்து, நான் சம்ஸ்கிருத இலக்கியம் கற்கும் எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். என் மனதில் தனி இடம் பிடித்த மாமேதை அவர். எனக்கு மகள் பிறந்தபோது 'உனக்கு கிருஷ்ணமாயாவே வந்து பிறந்திருக்கிறாள்' என்று வாழ்த்தினார்!

கே: உங்கள் 'குறவஞ்சி இலக்கியம்' பற்றியதான ஆய்வைப் பற்றிச் சொல்லுங்களேன்!

ப: 'Tamil Geographies: Cultural Constructions of Space and Place in South India' (2007) என்ற நூலில் 'The Drama of the Kuravanji Fortune-teller: Land, Landscape, and Social Relations in an 18th Century Genre' என்ற தலைப்பில் நான் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளேன். முதலில் எனக்குக் குறவஞ்சி மேல் ஈடுபாடு ஏற்பட்ட காரணத்தைச் சொல்கிறேன். நான் தேவாரம் பற்றிப் பத்து ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து பல பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறேன். அதற்காக காவிரிக்கரையிலுள்ள பல கோவில்களுக்குச் சென்றிருக்கிறேன். எனக்கு தமிழில் மிகவும் பிடித்த நாவல் ‘தில்லானா மோகனாம்பாள்'. இக்கோவில்களைப் பார்க்கும் போது எனக்குத் தில்லானா மோகனாம்பாளின் ஒவ்வொரு காட்சியும் நினைவுக்கு வரும். அதோடு தஞ்சாவூரின் மீது எனக்கு ஓர் இனம்புரியாத ஈடுபாடும் ஏற்பட்டது. ஆகவே தஞ்சாவூரைக் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தேன். தஞ்சையில் அக்காலத்தில் நிலவிய சிற்றிலக்கியங்கள் விறலிவிடு தூது, பள்ளு, நொண்டி நாடகம் போன்றவை. இதில் முக்கியமானது குறவஞ்சி. குறவஞ்சியில் பல வகைகள் உண்டு. உதாரணத்திற்கு திருவாரூரில்-தியாகேசர் குறவஞ்சி. இது ஷாஜி மன்னர் அவையில் அரங்கேறியது. இதில் நாயகர் திருவாரூர் தியாகேசர். நாயகி அன்னை கமலாம்பிகை.

தஞ்சை ராஜசபையில் பல குறவஞ்சிகள் அரங்கேறியுள்ளன. அவை தமிழில் மட்டுமில்லாமல் மராட்டிய மொழியிலும் இருந்திருக்கின்றன. திரிகூட ராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, வேதநாயக சாஸ்திரியாரின் பெத்லஹேம் குறவஞ்சி, அன்னை கற்பகாம்பாளைப் பற்றிய மயிலைக் குறவஞ்சி, தேவேந்திர குறவஞ்சி என பல குறவஞ்சிகள் உள்ளன. பிற்காலத்தில் தமிழில் கட்கா, லாவணி போன்ற மராட்டிய பாணிகளில் அமைந்த பாடல்களும், ஜோன்புரி, தேஷ் போன்ற வடநாட்டு ராகங்கள் பலவும் கையாளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கே: உங்கள் குறவஞ்சி ஆய்வில் ‘ஸ்பேஸ் அண்டு பிளேஸ்' என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். மற்றுமொரு இடத்தில் பூகோளம் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். குறவஞ்சி மூலம் இது சாத்தியமா?

ப: உண்மையிலேயே நம் குறவஞ்சிப் பாடல்கள் அறிவை ஊட்ட உதவியிருக்கின்றன. குறவஞ்சியின் கரு எப்போதுமே ஒன்றுதான். ஒரு குறத்தி வருவாள்-ஒரு நாயகி அவளிடம் குறி கேட்க, அவளும், ‘முருகா, கொல்லாபுரியம்மா, பாவாடை ராயா, பன்றி மாடா' என்று தெய்வங்களை சாட்சிக்கு அழைத்துக் குறி சொல்லுவாள். குளுவன் என்ற பறவை பிடிப்பவன் தன் மனைவி குறவஞ்சியைத் தேடிக்கொண்டு வருவான். இருவரும் நாடகம் நடக்கும் கோவில் நகரத்தில் சந்திப்பர். இதுவே கரு. ஆனால் இக்கருவை மையமாக வைத்துப் பல கருத்துக்கள் சொல்லப்படும். நாயக்கர்கள், ஜமீன்தார்கள், கள்ளர், மறவர், தமிழர், மராட்டியர் - எல்லாம் தத்தம் கலாசாரத்தைப் பின்பற்றி வாழ்ந்து வந்த ஒரு காலகட்டத்தில் எல்லோருக்கும் புரியும்படியான ஜனரஞ்சகமான கூத்தாகக் குறவஞ்சி நிலவியது.

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னருடன் படித்தவர் வேதநாயக சாஸ்திரியார். இவர் எழுதிய பெத்லஹேம் குறவஞ்சியில், தேவாலயம்-நாயகி; கிறிஸ்து-தலைவன். தேவாலயம் தலைவனைப் பிரிந்து நிற்கிறாள். அவனை மணந்து, அவனுடன் இணைய விரும்புகிறாள். அப்போது ‘விசுவாசக் குறவஞ்சி' அவளைச் சந்தித்து, இத் திருமணம் நடைபெறும் என்று குறி சொல்கிறாள். அவள் பெயர் தேவமோகினி. அவள் பந்தாடுவது கிரகங்களை வைத்துக் கொண்டு. இவ்வாறு குறவஞ்சி மூலம் இவற்றின் பெயர்களையும் புகுத்தி விஞ்ஞானப் பாடமே நடத்தி விடுவார்கள் புலவர்கள்.

சரபோஜி விஞ்ஞானத்தில் அதிக ஆர்வமுள்ளவர். 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவர் தாமே பூகோளம், விஞ்ஞானம், மருத்துவம் போன்ற துறைகளில் பாடம் எழுதி, இங்கிலாந்திலிருந்து அச்சியந்திரம் வரவழைத்து, ஒரு பள்ளியும் நிறுவ விரும்பினார். இவர் மராத்தியில் எழுதிய தேவேந்திரக் குறவஞ்சியில் வரும் குறத்தி இந்தியாவில் என்னென்ன மலைகள் உள்ளன, ஓடும் ஆறுகள் யாவை என வர்ணித்து பூகோளப் பாடம் நடத்தி விடுவாள். ஒரு பாடலில் குறவஞ்சி, தாம் ஆகாயம் மூலம் வந்ததாகவும், அங்கு சூரியனைப் பார்த்ததாகவும், சந்திரனைப் பார்த்ததாகவும் மற்றும் இதர கிரகங்களைப் பார்த்ததாகவும் விஞ்ஞானம் பேசுவாள். தாம் வரும் வழியில் ஐரோப்பா, ஆசியா போன்ற கண்டங்களைத் தாண்டி வந்ததாகக் கூறி பூகோளம் பேசுவாள்.

குளுவன் ஒருபாடலில் நில வகைகளைக் கையாளுவான். மலையை வர்ணித்து அதன் சிறு தெய்வம் யார், அம்மக்களின் தொழில் என்ன என்று கூறுவான். எத்தனை வாய்க்கால்கள் உள்ளன, அவை யாருக்குச் சொந்தம், அவற்றில் என்னென்ன பறவைகள் உள்ளன என வர்ணிப்பான். பள்ளர்களின் உழைப்பு எப்படிப்பட்டது, எத்தனை விதமான அரிசி வகைகள் உள்ளன, மாடுகளின் வகைகள் முதற்கொண்டு வர்ணிப்பார்கள். வேதநாயக சாஸ்திரியும் தமது 'நோவாஸ் ஆர்க்' நூலில் காரை, குருவி, நாரை என பறவை இனங்களையும், உடும்பு போன்ற மிருகங்களையும், 108 அரிசி வகைகள், தொழில் முறைகள் என எல்லாவற்றையும் வர்ணித்துள்ளார். சரபோஜி மன்னருக்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டு, அவரது அரண்மனையில் அரங்கேறியது, இந்த 'நோவாஸ் ஆர்க்'. இன்னும் சொல்லப் போனால், ஒரு குறவஞ்சியில் தாம் கண்ட தேசங்களை வர்ணிக்கும் போது, குறத்தி அத்தேசத்து மொழிகளில் சில வார்த்தையும் பேசுவாள், ஆங்கிலம் உட்பட.

கே: நீங்கள் தேவாரப் பாடல்கள் பல வற்றை ஆங்கிலத்தில் 'Poems to Siva: The Hymns of the Tamil Saints' (Princeton, 1989) என்ற நூலில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகள் என்ன?

ப: 1977-1987 காலத்தில் நான் தேவார ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். இதற்காகத் தமிழ்நாட்டிலுள்ள பல கோவில்களுக்குச் சென்று அவற்றின் தல புராணத்தை அறிந்து, அங்குள்ள ஓதுவார்களைச் சந்தித்து, அவர்கள் பாடப்பாட அப்பாடல்களைப் பதிவு செய்திருக்கிறேன். இதில் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தவர் ப. சுந்தரேசன் என்ற பண் ஆராய்ச்சி வித்தகர். தல புராணம் தவிர 'தல தேவாரம்' என ஒவ்வொரு கோவிலுக்கும் பிரத்யேகமாக இருக்கும். இவற்றைப் பற்றியும் கண்டறிந்தேன். மயிலை கபாலி கோவிலின் ஓதுவார் லால்குடி சுவாமிநாதன் அவர்களிடம் முறைப்படி தேவாரம் பாடுவது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டேன். இதற்காக நான் சந்தித்த பல அறிஞர்கள் தாமே முன்வந்து தங்களிடம் இருந்த அரிய பல நூல்களை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். 'இது என் அப்பா காலத்துப் புத்தகம். என்னிடம் இருப்பதைக் காட்டிலும் உங்களிடம் இருந்தால் நல்லது' என்று கூறுவார்கள். ஒருவர் தம்மிடமிருந்த மிகவும் அரிதான சுந்தரர் தேவாரத்தின் பழைய உரையை எனக்குக் கொடுத்தார். இதனால் எனக்கு ஏற்பட்ட பரவச உணர்வை என்னால் கணக்கிட முடியாது. அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

கே: உணர்வைக் கணக்கிட முடியாத போது, அப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் பிரச்சனைகள் எழவில்லையா?

ப: தேவாரப் பாடல்களின் சாரத்தை ஆங்கிலக் கவிதை வடிவத்தில் எவ்வளவு அணுக்கமாக மொழிபெயர்க்க முடியுமோ செய்தேன். ஆனாலும் மூலத்தின் இலக்கிய, இசை வடிவங்களை ஆங்கிலத்தில் தர முயலவில்லை.
Click Here Enlargeகே: 'கிராதார்ஜுனியம்' என்ற சம்ஸ்கிருத நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளீர்கள். அதன் சிறப்பு என்ன?

ப: பாரவி என்னும் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த, பல்லவர் காலக் கவிஞர் எழுதிய சம்ஸ்கிருத காவியம் 'கிராதார்ஜுனியம்'. இது ஒரு சிறந்த இலக்கியம். இலக்கணம், சாஸ்திரம் எல்லாம் படித்தால்தான் இதனைப் படிக்க முடியும். காளிதாசரின் 'குமார சம்பவம்' ஒரு மகா காவியம். ஆனால் சாகுந்தலம் ஒரு நாடகம். கிராதார்ஜுனியம் படிக்க மிகக் கடினமானது. இது ஒரு மகாபாரதக் கதை. யுதிஷ்டிரரின் கோரிக்கைக்கு இணங்கி அர்ஜுனன் சிவனை நோக்கித் தவம் செய்கிறான். சிவன் ஒரு காட்டுப் பன்றியை ஏவிவிட அர்ஜூனன் அம்பெய்து அதனைக் கொல்கிறார். பின்னர் சிவன், வேடன் உருவத்தில் வந்து அர்ஜுனனுடன் போட்டியிடுகிறார். இறுதியில் அர்ஜூனனுக்கு வரமளிக்கிறார். இதுதான் கதை. இக்கதையை பாரவி கையாண்டுள்ள விதம்தான் இங்கு மிகவும் அழகு. அதாவது சிவனும், அர்ஜுனனும் போட்டியிடுகின்றனர். பின்னர் மல்யுத்தம் செய்யத் தொடங்குகின்றனர். மல்யுத்தம் செய்யும் போது, அர்ஜுனன் சிவனின் காலைப் பிடித்து அவரைத் தூக்கிப் போட முயற்சிக்கிறான். பக்தன் தன் காலைத் தொட்டவுடன் சிவன் மனம் குளிர்ந்து தன் சுயரூபத்தை அர்ஜுனனுக்குக் காட்டுவதாக பாரவி வர்ணித்திருக்கிறார். இச்சம்பவம் நடந்ததற்கு ஆதாரம் தேவாரப் பாடல்களில் உள்ளது.

மற்றொரு சுவையான செய்தி, மாமல்லபுரத்தில் உள்ள 'பகீரதன் தவம்' சிற்பத்தை நாம் எல்லோரும் அறிவோம். சிலர் அதை 'அர்ஜுனன் தவம்' என்பர். பல்லவர்கள் வேண்டுமென்றே அதற்குப் பெயர் சூட்டாமல் விட்டுவிட்டார்கள். காரணம், அவர்கள் ராமாயணத்தையும் வணங்குவார்கள், மகாபாரதத்தையும் வணங்குவார்கள்.

'Design and Rhetoric in a Sanskrit Court Epic' என்ற எனது புத்தகத்திலுள்ள பாரவியின் மொழிபெயர்ப்பிலிருந்து எழுத்தாளர் ஆமர்த்தியா சென் (Amartya Sen) தனது 'Argumentative Indian' என்ற நூலில் மேற்கோள் கொடுத்துள்ளார்.

கே: கலைமணி (கொத்தமங்கலம் சுப்பு) எழுதிய ‘தில்லானா மோகனாம்பாள்' நூலைப் பற்றி இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளீர்கள். ‘தில்லானா மோகனாம்பாள்' படம் மற்றும் அந்நாவலை ஒப்பிட்டுச் சென்னையில் சிறப்புரை ஆற்றியுள்ளீர்கள். அதற்கான காரணங்கள், பின்புலன் பற்றிச் சொல்லமுடியுமா?

தில்லானா மோகனாம்பாள் உரைநடையில் எழுதப்பட்ட கவிதை என்று சொன்னால் அது மிகையில்லை. நாட்டியம், கலை, நாதஸ்வரம், கோவில், திருவிழா என அனைத்துக்கும் இம்மண்ணுக்கும் உள்ள தொடர்பை, அதன் பெருமையை ஒரே நூலின் மூலம் எடுத்துக்காட்டிய பெருமை கொத்தமங்கலம் சுப்புவைச் சாரும்.
ப: என் இளவயதின் மறக்க முடியாத அம்சம் ‘தில்லானா மோகனாம்பாள்'. ஆனந்தவிகடனில் இது தொடர்கதையாக வந்த நேரம், எங்கள் வீட்டில் எல்லோரும் இக்கதையை விடாமல் ஆர்வமாகப் படிப்பார்கள். கதைக்கு மெருகூட்டும் கோபுலுவின் படங்களும் என்னை வியக்க வைத்தன. இன்னும் சொல்லப் போனால் நான் தமிழ் கற்றுக்கொண்டதற்குக் காரணமே தில்லானா மோகனாம்பாளைப் படிக்க வேண்டும் என்பதற்காகத் தான். பிறகு ஹார்வர்டில் படிக்கத் தொடங்கியதும் தில்லானா மோகனாம்பாளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் எண்ணம் தோன்றியது. பிறகு தேவார ஆராய்ச்சிக்காகத் தஞ்சாவூர் சென்றபோது, தில்லானா மோகனாம்பாளில் கூறியிருந்தது போல், அந்தக் காலத்தில் தஞ்சாவூர் இப்படி இருந்திருக்குமோ, திருவாரூர் இப்படி இருந்திருக்குமோ, இந்த வீதியில் தானே மோகனா வசித்தாள், என்றெல்லாம் யோசிப்பேன். இதுவே ஒருவிதத்தில் எனது தஞ்சை ஆராய்ச்சிக்கு வித்தாக அமைந்தது.

2000ம் ஆண்டு அப்புத்தகத்தை மீண்டும் படித்தேன். நான் படித்த அனுபவத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். முதலில் கனடாவில் பேசினேன். அடுத்து, 2004ல் பிரகிருதி அறக்கட்டளை சார்பில் சென்னையில் உரையாற்றினேன். என் உரையைக் கேட்ட பலர் தாமும் தம் இளவயதில் இந்நூலைப் படித்ததையும் அதன் அனுபவங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டனர். தில்லானா மோகனாம்பாள் உரைநடையில் எழுதப்பட்ட கவிதை என்று சொன்னால் அது மிகையில்லை. நாட்டியம், கலை, நாதஸ்வரம், கோவில், திருவிழா என அனைத்துக்கும் இம்மண்ணுக்கும் உள்ள தொடர்பை, அதன் பெருமையை ஒரே நூலின் மூலம் எடுத்துக்காட்டிய பெருமை கொத்தமங்கலம் சுப்புவைச் சாரும். ஒரு காலகட்டத்தையே நம் கண்முன் கொணர்ந்து நிறுத்தி விட்டார். பேச்சில், உரைநடையில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியவர் அவர். எங்கெங்கு யார், யார் எப்படி, எப்படிப் பேச வேண்டும் என்பதை அழகாய் எடுத்துரைத்தவர். ஒரு அறிமுகத்தில் தொடங்கி அதைக் கதையோடு இணைக்கும் விதம் அபாரம். அவர் வர்ணனையில் வரும் கதம்பப் பூவும், காபி மணமும், தோடி ராகமும் அப்படியே என் கண்முன்னே இன்னமும் நிற்கின்றன. அந்த ரம்மியமான உலகத்திற்கு வாசகரான என்னையும் கூட்டிச் சென்றாரே, அந்த அனுபவத்தை நான் என்றும் மறவேன். தற்போது 'தில்லானா மோகனாம்பாள்' நாவலை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.

கே: மன்னர் சரபோஜி மீதான ஆய்வுக்கட்டுரையில் ஜெர்மன் மற்றும் பாரத கலாசாரத்தை ஒப்பிட்டுக் கூறுகிறீர்கள், இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!

ப: தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த நான் மும்பையில் மராட்டிய மண்ணில் வளர்ந்தேன். அதுபோல மராட்டியர்கள் பலரும் தமிழ்நாட்டுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கைமுறை எப்படி இருக்கும் என்ற ஆய்வில் நான் இறங்கினேன். தஞ்சை அருகே தரங்கம்பாடி என்ற ஊர் உள்ளது. இங்குதான் 1705ல் ஜெர்மானிய மிஷனரிகள் வந்து இறங்கினார்கள். ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கியபின் இம்மிஷினரிகளைக் கொண்டுதான் பள்ளிகள் முதலியன தொடங்கப்பட்டன. 'ஷ்வார்ட்ஸ்' (Schwartz) என்ற மிஷினரி ஒருவர்தான் மன்னர் சரபோஜி மற்றும் அவரது நண்பர் வேதநாயக சாஸ்திரி ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்தவர். மற்றொரு சிறப்பு என்னவென்றால் பிரபல இசைமேதை மொஸார்ட் (Mozart) 'மேஜிக் ஃப்ளூட்' என்ற ஆபிரா (Opera) வடிவமைத்துள்ளார். அதில் பறவை பிடிக்கும் இனத்தைச் சேர்ந்தவன் ஒரு நாட்டுப்புற நங்கையை நாடிச் செல்வான், நம் குறவஞ்சியைப் போல. எப்படி நம் ராஜசபை மற்றும் கோவில் கும்பாபிஷேகங்களில் குறவஞ்சி திகழ்ந்ததோ அவ்வாறே ஜெர்மனி, ஃபிரான்ஸ், வியன்னா போன்ற ராஜசபைகளில் 19ம் நூற்றாண்டில், ஆபிரா மிகவும் பிரபலமாக நிலவியது. முதலில் தோன்றியது நம் குறவஞ்சிதான்.

கே: ஒரு பேராசிரியை என்ற முறையில் உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!

ப: நான் மவுண்ட் ஹோல்யோக் கல்லூரியில் ஆசியத் துறைப் பேராசிரியராக 1982லிருந்து பணியாற்றி வருகிறேன். சென்னை மகளிர் கிறித்துவக் கல்லூரியும் மவுண்ட் ஹோல்யோக்கும் சகோதர உறவுமுறை கொண்டவையாகும். 2005ல் David B. Truman நிதி ஒதுக்கீட்டு இருக்கை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. 2001ம் ஆண்டுக்கான சிறந்த ஆராய்ச்சியாளருக்கான மெரிபெத் கேமரோன் விருதைப் பெற்றேன். 2008-2011 வரை, '40th Anniversary 5 College' பேராசிரியர் விருதும் எனக்குக் கிடைத்துள்ளது. இதன்படி எங்கள் கல்லூரியைச் சார்ந்த இதர கூட்டமைப்புக் கல்லூரிகளுக்கும் சென்று நான் விரிவுரையாற்றலாம். 1990ல், 40 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நான் Humbolt Fellowship விருதைப் பெற்றேன்.

பெண் எழுத்தாளர்கள், ரவீந்தரநாத் தாகூர், மகாத்மா காந்தி இவ்விருவரின் அஹிம்சை ஆகிய தலைப்புகளில் நான் விரிவுரை ஆற்றுகிறேன். என்னிடம் வரும் மாணவர்களில் அமெரிக்கர்கள் மட்டுமல்லாமல்; இரண்டாம் தலைமுறை இந்தியர்கள் மற்றும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாட்டைச் சேர்ந்தவர்களும் உண்டு.

கே: உங்களது சேவையைப் பாராட்டி, இந்திய, தமிழ்நாடு அரசுகள் கௌரவித்துள்ளனவா?

ப: 1995ல் தஞ்சையில் நடந்த உலகத் தமிழ்மாநாட்டுக்குத் தஞ்சைப் பல்கலைக்கழகம் என்னை அழைத்தது. மேக்ஸ்முல்லர் பவன், நேரு நினைவு அருங்காட்சியகம், மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ், ரோஜா முத்தையா நூலகம் போன்றவை என்னைச் சிறப்புரையாற்ற அழைத்திருக்கின்றன. தமிழ்நாடு அரசுக்கு என்னைப் பற்றித் தெரியுமா என்பதுகூட எனக்குத் தெரியாது.

சிறந்த கர்நாடக சங்கீத வல்லுநரான பேராசிரியை இந்திரா தன் மகள் மாயாவுக்குப் பதினாறு மொழிகளில் தாலாட்டுப் பாடியுள்ளாராம். இவரது ஆய்வுகள் தொடரவும் சிறக்கவும் தென்றல் வாழ்த்துகிறது.

காந்தி சுந்தர்
மேலும் படங்களுக்கு
More

பட்டிமன்றம் ராஜாவிலிருந்து 'சிவாஜி' ராமலிங்கம் வரை
தென்றல் வாசகர்களே! எழுத வாருங்கள்: நியூ ஹொரைஸன் மீடியாவின் பத்ரி சேஷாத்ரி
Share: 




© Copyright 2020 Tamilonline