முனைவர் அண்ணாமலை
|
|
அமெரிக்காவில் தமிழ்க் கல்வியை அடுத்த தலைமுறையினர் எடுத்து செல்ல வேண்டும்: வெற்றிச்செல்வி |
|
- வடிவேல் ஏழுமலை|ஏப்ரல் 2008| |
|
|
|
|
கலிபோர்னியா தமிழ் அகாடமி (CTA) என்னும் அமைப்பின் கீழ் தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகிறார் வெற்றிச் செல்வி இராசமாணிக்கம். இவர் தமிழக முன்னாள் அமைச்சர் செ. மாதவனின் மகள். தமிழ்ப்பணிக்காக முதல்வர் கருணாநிதி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், டாக்டர் வா.செ. குழந்தைசாமி, டாக்டர் பொன்ன வைக்கோ போன்ற அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர். கலிபோர்னியா தமிழ் அகாடமி குறித்துத் தென்றலுக்காக வடிவேல் ஏழுமலையுடன் பேசினார். அதிலிருந்து...
கே: CTA தொடங்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?
ப: என் குழந்தைகளும், அவர்களுடைய நண்பர்களும் தமிழ் கற்பதற்காக என் வீட்டிலேயே ஒரு பள்ளியைத் தொடங்கி னேன். பின்னர் மாணவர்கள் அதிகமாக வரவே தனியாக ஒரு பள்ளி துவங்கலாம் என ராமமூர்த்தி, தில்லை குமரன், குமார் குமரப்பன், கமலக் கண்ணன் போன்ற TNF உறுப்பினர்களும் நண்பர்களும் என்னை ஊக்குவித்தனர். ஆகவே TNF-ன் கிளையாக, ஒரு பள்ளியை ·ப்ரீமாண்ட்டில் ஆரம்பித் தோம். சில நடைமுறைச் சிக்கல்களால் ஒரு வருடத்திலேயே அதை மூட வேண்டியது ஆயிற்று. பின்னர் ஹேமா ரங்கராஜன் என்னும் நண்பரின் உதவியுடன் 1998ல் கூப்பர்டினோவில் ஒரு கிளையைத் தொடங்கிக் கலிபோர்னியா தமிழ் அகாடமி என்னும் பெயரில் பதிவு செய்தோம். பின்னர் ·ப்ரீமாண்ட்டில் ஒரு கிளை துவங்கப்பட்டது. கூப்பர்டினோ மையமாகவும் மற்றவை கிளைகளாகவும் செயல்பட ஆரம்பித்தன.
கே: இதில் நீங்கள் சந்தித்த நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன?
ப: முதல் சிக்கல் பாடத்திட்டத்தை உருவாக்குவது. அமெரிக்காவில் வளரும் நம் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பாடத்திட்டத்தை உருவாக்குவது, பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை விளக்குவது, எந்த அளவு இலக்கணம் சொல்லிக் கொடுப்பது சிறந்தது என்பதைப் போலப் பல சிக்கல்கள்.
கே: உங்களுடைய பாடத்திட்டம் குறித்து...
ப: பொதுவாக சிங்கப்பூரில் தமிழ்ப் பாடப் புத்தகங்கள் எளிமையாகவும், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் இருக்கும். அங்கிருந்து தமிழ்ப் புத்தகங்களை வாங்கி வந்து சொல்லிக் கொடுக்கத் தொடங்கினோம். புதிய பாடத்திட்டம் வகுப்பதிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தோம். தமிழ்நாடு, சிங்கப்பூர் பாட நூல்களாகவே அல்லாமல் எங்களுக் கென்று தனியாகப் பாட நூல்களைக் கொண்டு வந்தோம். அடிப்படை, மேல்நிலை கல்விக்கான பாடங்களில் கவனம் செலுத்தி னோம். எழுத்துக்களையும், வார்த்தை களையும் பட உருவத்தில் கற்பது எளியது என்பதால் அடர்வட்டில் (CD) பாடங்களைக் கொண்டுவந்தோம்.
மாணவர்களுக்குச் செய்யுள் போன்ற வற்றைக் கற்பிப்பது கடினம். திருக்குறளைக் கூட ஏன் படிக்க வேண்டும் என்று சில பெற்றோர் கேட்கின்றனர். அதைப் புரிய வைத்து, படிப்படியாகச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினோம். தற்போது 3 ஆண்டுகளில் 30 பாடங்கள் (credits) என்ற எமது முறையை கலிபோர்னியா பல்கலை அங்கீகரித்துள்ளது. ·ப்ரீமாண்ட் ஒருங்கிணைந்த கல்வி மாவட்டப் பள்ளிகளில் உயர்கல்வி படிப்பவர்கள் இதன்மூலம் பயனடைவர். கூப்பர்டினோவில் தமிழ் விருப்பப் பாடம்தான். ஆனால் ப்ரீமாண்டில் இது 'அன்னிய மொழி' ஆகக் கற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளுக்கும் இது விரிவாக்கப்பட இருக்கிறது.
இத்துடன் தமிழ் இணையப் பல்கலைக் கல்வித் தேர்வுக்கான பயிற்சிகளையும், தேர்வையும் நாங்கள் நடத்துகிறோம். இவற்றை ஒருங்கிணைக்கும் பணியைத் தற்போது செய்து வருகிறோம்.
கே: தற்போது தங்களிடம் எவ்வளவு மாணவர்கள் பயின்று வருகின்றனர்?
ப: 13 மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்ட எங்கள் தமிழ் அகாடமியில், எல்லாக் கிளைகளிலும் சேர்த்து தற்போது 1117 மாணவர்கள் பயில்கின்றனர். இது பத்தாவது ஆண்டு. வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை களில் ஒன்றரை மணி நேரம் வகுப்புகள் நடக்கின்றன.
கே: பள்ளி நடத்துவதில் உங்களுக்கு முன் அனுபவம் இருக்கிறதா?
ப: கல்லூரிப் படிப்பை முடித்தவுடனேயே எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. எனது தந்தை எங்கள் கிராமத்தில் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். அதன் நிர்வாகக் குழுவில் நானும் உறுப்பினராக இருந்தேன். அந்த அனுபவம் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது. குறிப்பாக என் குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும், தமிழிலேயே எழுதிப் பேசிப் பழக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இந்த ஆர்வமே இந்தத் தமிழ்க் கல்விக்கான ஆரம்பம் எனக் கொள்ளலாம்.
கே: இந்தப் பள்ளி நடத்துவதில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர் கள் குறித்து...
ப: இங்குள்ள ஆசிரியர்களும் நிர்வாக, திட்டக் குழுவினர்களும் உள்ளடங்கிய தன்னார்வத் தொண்டர்களே அகாடமியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். இவர்களைத் தவிர, டாக்டர் வா.செ. குழந்தைசாமி, டாக்டர் பொன்னவைக்கோ, டாக்டர் அனந்த கிருஷ்ணன், எனது தந்தையார், அருண் மகிழ்நன், நெடுமாறன் ஆகியோர் ஆலோசனை வழங்கி வருகின்றனர். குறிப்பாகத் தமிழக அரசின் பாடநூல் தயாரிப்புக் குழுத் தலைவராக இருக்கும் பேரா. கணபதி புத்தகம் தயாரிப்பதில் மிகவும் உதவியாக இருக்கிறார்.
கே: CTAவில் போய்த்தான் தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டுமா, ஏன் வீட்டிலேயே கூட கற்றுக் கொள்ளக் கூடாதா என்று சிலர் நினைக்கலாம்? அவர்களுக்கு உங்கள் பதில் என்ன?
ப: வீட்டில் ஒருநாள் படிக்கலாம். மறுநாள் படிக்காமல் இருக்க முடியும். ஒருநாள் தமிழில் பேசிவிட்டு, மறுநாள் 'மம்ஸ், ஐ யாம் சாரி!’ என்று ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கலாம். அதைத் தவிர்ப்பதோ, கண்டிப்பதோ இயலாதது. ஆனால் பள்ளியில் சென்றால் ஒரு பாடத்திட்டம் உண்டு. விதிமுறைகள் உண்டு. ஆசிரியரிடம் பயில்வதில் அக்கறையும் ஒழுங்கும் அதிகம் இருக்கும்.
வீட்டில் இருந்து பயிலும்பொழுது பல்வேறு வேலைகளும் குறுக்கிடுவதால் தாமதமாகிறது. அமெரிக்காவில் தமிழ் கற்றுக் கொள்வது என்றால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; பெற்றோர்களுக்கும் கூட ஆர்வமும் நேரமும் இருக்க வேண்டும். ஓய்வு நேரத்தில்தான் பிள்ளைகளுக்கு சொல்லித்தர முடியும். பிள்ளைகள் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை என்றால் கோபம் வருகிறது. ஆனால் பள்ளிக்குச் சென்று படிப்பதில் இந்தப் பிரச்னைகள் இல்லை என்பதால் அது எளிதாக இருக்கிறது. இருந்தாலும் பள்ளிக்கு வர இயலாதவர்கள் இணையம் வழியே கற்க பல வசதிகள் உள்ளன. அதைப்பற்றிய விவரங்களைwww.catamilacademy.org என்ற எங்கள் இணையதளத்தில் காணலாம்.
கே: பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. சான்றாக, ‘போகலாமா’ என்று சொல்வதற்கும் ‘செல்லலாமா’ என்று எழுதுவதற்கும் வேறுபாடு உள்ளது. இவற்றை மாணவர்கள் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள்?
ப: ஒருவன் ஒரு மொழியைக் கொஞ்சம் கொஞ்சமாக எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளும்போது இந்த வேறுபாட்டை அறிந்துகொள்ள முடியும். ஆகவே இங்கு நாங்கள் சொல்லிக்கொடுப்பதற்கு அந்த வேறுபாட்டை மனதில் கொண்டுதான் பாடத்திட்டத்தை வகுத்தோம்.
மாணவர்களுக்கும் ஆரம்பத்தில் இது குழப்பமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒருமை, பன்மை, நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம், அவற்றுக்கிடையே உள்ள வேறு பாடுகள் போன்றவற்றை அறிந்துகொள்ளும் பொழுது குழப்பங்கள் தீர்ந்து விடுகின்றன. இவற்றை நன்கு கற்றறிந்த மாணவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பவர் களாகி விடுகின்றனர். என் மகள் உட்பட எங்களிடம் படித்த ஆறு மாணவர்கள் இப்பொழுது ஆசிரியர்களாகிவிட்டனர்.
கே: நீங்கள் குறைந்த கட்டணமே வாங்குகிறீர்கள். அந்த நிதி எப்படிப் பயன்படுகிறது?
ப: நாங்கள் கட்டணம் வாங்குவதற்கு முக்கியமான காரணம் கட்டட வாடகைச் செலவுதான். கருவிகள், உபகரணங்கள் வாங்கப் பணம் தேவைப்படுகிறது. நாங்களே புத்தகத்தைத் தயாரிப்பதால் புத்தகம் எழுத, அச்சிடப் பணம் தேவைப்படுகிறது. கேள்வித்தாள் தயாரித்தல், அச்சிடுதல், பொங்கல், கிறிஸ்துமஸ், ஆண்டுவிழா எனப் பல செலவின வகைகள் இருக்கின்றன. எங்கள் இணையதளத்தில் மாணவர்கள் பற்றிய விவரங்கள், பாடக் குறிப்புகள், தேர்ச்சி பற்றிய விவரங்கள் அனைத்தையும் உள்ளிட்டுப் பராமரித்து வருகிறோம். அதற்கு நிதி தேவைப்படுகிறது.
எங்களுக்கு லாப நோக்கு இல்லை. தொலைதூரத்தில் உள்ளவர்கள் இங்கு வந்து கற்க முடியாது. ஆகவே அவர்களது வசதிக் காக இணையம்வழிக் கல்வி முறையில் ஆர்வம் செலுத்தி வருகிறோம். ஆனால் அதற்கு அதிக நேரமும், பணமும் செலவாகும். இதுதான் எங்களது எதிர்கால ஆசை. தற்பொழுது ஏழு வகுப்புகளோடு நிறுத்தியிருக் கிறோம். இதை ஒரு பல்கலைக்கழகமாகக் கொண்டு வர வேண்டும் என்று எங்களுக்கு ஆசை இருக்கிறது. இது ஒருநாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. இந்த முயற்சி எங்களுடன் நின்றுவிடக் கூடாது. இளைய தலைமுறையினர் இதில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
கே: உங்களுடைய பாடத்திட்டங்கள் பற்றிச் சொல்லுங்களேன்!
ப: PreSchool நிலையிலிருந்து Basic 3 வரையிலும் ஐந்து ஆண்டுகளுக்கு எங்களது குழுவினரால் உருவாக்கப்பட்ட புத்தகங் களையே பயன்படுத்துகிறோம். ஒன்றாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்புவரை தமிழ்நாடு பாடத்திட்ட புத்தகங்களிலிருந்து இங்குள்ள மாணவர்களுக்குப் பொருத்தமான பாடங் களைத் தேர்ந்தெடுத்துக் கற்பிக்கிறோம்.
கே: இப்பொழுது அகாடமி ஐந்து கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் விரிவாக்கம் குறித்து. அதில் என்னென்ன நடைமுறைச்
சிக்கல்கள் இருப்பதாகத் தாங்கள் கருதுகிறீர்கள்?
ப: எங்களுக்கு நிறையக் கிளைகள் தொடங்க ஆசைதான். அதற்கு ஒப்பந்த முறையில் செயல்படலாம் என நினைத்தோம். அதேசமயம் எங்களுடைய தரம் குறைந்து விடுமோ என்ற அச்சமும் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் CTAவின் கிளையாகவே செயல்பட விரும்புகின்றனர். கணக்கு வழக்குகள் உட்பட அதில் பல நடைமுறைகள் உள்ளன. அவற்றையெல்லாம் பரிசீலித்துத்தான் நாங்கள் செயல்பட வேண்டி உள்ளது. நாங்களே பொறுப்பாளர் ஒருவரை நியமித்து நடத்தலாம் என்றால் அதற்கேற்ற நபர் கிடைப்பது, அவர்களுக்கு ஊதியம், வேலை நேரம் எனப் பல பிரச்சினைகள். ஆனாலும் எதிர்காலத்தில் இவை சாத்தியப் படும் என நம்புகிறோம். எங்களுக்குத் தரம்தான் முக்கியம் என்பதால் அதனை முன்னிறுத்தியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
கே: தமிழ் இணையப் பல்கலைக் கழகத்துடன் (TVU-Tamil Virtual University) இணைந்து அகாடமி வழங்கும் கல்வி என்ன?
ப: வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தமிழக அரசால் உருவாக்கப்பட்டது TVU. இதில் மூன்று பாடப் பிரிவுகளுக்கு நாங்கள் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். அதனால் CTA, TVUவின் அங்கீகாரம் பெற்ற மையமாக இருக்கிறது. நாங்கள் பள்ளி மாணவர்களுக்கான சான்றிதழ் படிப்புகளில்தான் கவனம் செலுத்தி வருகிறோம். இதில் அடிப்படிநிலை, இடைநிலை, உயர்நிலை எனப் பல பிரிவுகள் உள்ளன. இந்த மாணவர்களுக்குத் தேர்வுக் கான பயிற்சி அளிக்கிறோம். இவர்கள் TVUவின் தேர்வுகளை CTA மையத்தில் எழுதலாம். இதில் முக்கியமான விஷயம் TVUவின் பாடத்திட்டத்தை தமிழக அரசின் கல்வித்துறை அங்கீகரித்திருக்கிறது என்பது தான். நமது பள்ளியில் நம் பாடத்திட்டத்துடன் TVUவின் 3 நிலைகளையும் முடித்துவிட்டால் அது தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பில் தமிழ் தேர்ச்சி பெற்றதற்கு இணையானதெனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. |
|
கே: CTAவை வேறு மாநிலங்களில் ஆரம்பிக்கும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா?
ப: தற்போது ·பீனிக்ஸில் எங்கள் பாடப்புத்தகத்தைப் பின்பற்றி வருகின்றனர். செப்டம்பர் மாதவாக்கில் எங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு செயல்படுவதாகத் தெரிவித்துள்ளனர். அதே போல் ஒஹையோ, வாஷிங்டன் டி.சி. போன்ற இடங்களில் இருந்தும் ஒப்பந்த அடிப்படையில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கான காப்புரிமை போன்றவற்றைச் செய்து வருகிறோம். மேலும் சான் மேடியோ வில் கிளை தொடங்கப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
கே: இன்னும் பத்து வருடத்தில் இதன் வளர்ச்சி எவ்வாறு இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?
ப: நாங்கள் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறோம்.இளைய தலைமுறையினரின் தமிழ் ஆர்வத்தை வளர்ப்பதற்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களது எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 20% அதிகமாகிக் கொண்டேதான் போகிறது. இன்னமும் பத்து ஆண்டுகளில் எப்படியும் ஏழாயிரம் மாணவர்களாவது பயிலக் கூடிய அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
கே: CTA கொண்டாடும் விழாக்கள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!
ப: நாங்கள் மதச்சார்பற்றவர்கள் என்பதால் மதரீதியான பண்டிகைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இருந்தபோதிலும் பரவலாகக் கொண்டாடப்படும் ஹாலோவீன், கிறிஸ்து மஸ், தீபாவளி, பொங்கல் போன்றவற்றைக் கொண்டாடுகிறோம். தமிழ்ப் புத்தாண்டு விழாவும் கொண்டாடப்படுகிறது. இவற்றில் மிகவும் முக்கியமானது எங்கள் ஆண்டு விழாதான். நாங்கள் சொல்லிக் கொடுத்த வற்றை எவ்வளவு தூரம் உள்வாங்கிக் கொண்டு மாணவர்கள் வெளிப்படுத்து கிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்தும் விழாதான் எங்கள் ஆண்டு விழா. நாடகம், பேச்சு, இசை, பட்டிமன்றம் என அனைத்துத் துறைகளிலும் மாணவர்கள் எவ்வளவு தூரம் சிறப்பாகப் பயின்றுள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் முகமாக நாங்கள் இவ் விழாவை நடத்துகிறோம். மேலும் எல்லாக் கிளை மாணவர்களும் ஆண்டுவிழா நாளில் ஒரு குடும்பமாக இணைந்து கொண்டாடு கின்றனர். எங்கள் ஆண்டுவிழாவின் முக்கியத்துவம் இதுதான்.
கே: CTAவில் தன்னார்வத் தொண்டர் களின் பங்கு மிக அதிகம். எதிர் காலத்தில் அவர்களது தேவை இன்னமும் அதிகரிக்கும். இத்தகைய சேவை தொடர்ந்து கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?
ப: நிச்சயமாக நம்புகிறேன். ஆரம்பகாலத்தில் இரண்டு தன்னார்வலர்கள்தாம் இருந்தனர். இன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர்.
கே: CTA சந்திக்கும் மிகப்பெரிய சவால் என்ன?
ப: பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், அலுவலக மேலாண்மை, தன்னார்வலர் சேவை எனப் பல சவால்கள் உள்ளன. பாடத்திட்டம், புத்தகங்கள் என இந்தச் சவால் விரிவடை கிறது. காரணம் நாங்கள் சிறந்தவற்றையே கொடுக்க விரும்புவது. எங்கள் பாடத்திட்டக் குழுவினர் ஒன்றிணைந்து ஆலோசித்து, ஒத்த கருத்தினை உருவாக்கி, அதனை இந்தியா வில் புத்தகமாகப் பதிப்பித்துப் பின்னர் இங்கே கொண்டுவதுதான் சவால்களில் எல்லாம் மிகப் பெரிய சவால்.
அடுத்த சவால் எங்கள் ஆண்டுவிழாக்கள். மாணவர்கள் CTA என்னும் தமிழ்ப் பள்ளியில் இருந்து வருகிறார்கள். அதற்கு என்று ஒரு தனித்த அடையாளம் இருக்கிறது. நற்பெயர் இருக்கிறது. குழந்தைகளின் பெற்றோர்கள், தாத்தா, பாட்டிகள் விழாவுக்கு வந்து செல்லும் போது ’நிகழ்ச்சி நன்றாக இருந்தது. ஆட்டம் பாட்டம் எல்லாம் ஒரு வரைமுறைக்குள் மிக அழகாக இருந்தன’ எனப் பாராட்டி விட்டுச் செல்வர். அதை நாங்கள் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் சில விதிமுறைகளைப் பின்பற்றுகிறோம். அதனால் சில விஷயங்களில் சற்றே கடுமையாக, சமரசம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டி இருக்கிறது.
கே: தென்றல் பத்திரிகை எந்த விதத்தில் உங்களுக்கு உதவலாம்?
ப: தென்றல் பத்திரிகையில் அடிக்கடி எங்களைப் பற்றி எழுதி உற்சாகமூட்டி வருகிறார்கள். நிகழ்வுகள் பகுதியில் எங்கள் தமிழ் அகாடமி பற்றி, ஆண்டு விழா பற்றிய பல செய்திகளை வெளியிடுகிறார்கள். பேட்டிகளை வெளியிட்டிருக்கிறார்கள். அனைத்தையும் இலவசமாகவே செய் கிறார்கள். அவர்கள் தரும் இலவச விளம்பரம் பாராட்டுக்குரியது. விளம்பரம், அறிவிப்புகள், நிகழ்வுகள், பேட்டிகள் என தென்றலின் உதவி என்றுமே நினைவுகூரத் தக்கது.
கே: தமிழ் மன்றம், அகாடமிக்கு எவ்வாறு உதவமுடியும்?
ப: தமிழ் மன்றம் பாராட்டும் வகையில் பல நற்செயல்களைச் செய்து வருகிறது. அவர்களுடன் இணைந்து நாங்கள் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். நாங்கள் தமிழ் சொல்லித் தருகிறோம். அவர்கள் தமிழுக்கான மன்றம் வைத்திருக்கிறார்கள். ஆக எல்லோரும் இணைந்து ஒரு குடும்பம் போலத்தான் செயலாற்றி வருகிறோம். தமிழ் மன்றமும் சரி, தென்றலும் சரி எங்களது வளர்சிக்காக பல விதங்களில் உதவியிருக் கின்றன.
கே: தென்றல் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ப: குழந்தைகள் தமிழ் படிக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் பெற்றோர்கள் உறுதுணையாக இருந்து ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகள் தமிழ் படித்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில், தங்களுக்குக் கிடைக்கும் ஞாயிற்றுக்கிழமை ஓய்வையும் கூட தியாகம் செய்துவிட்டு அவர்கள் காட்டும் ஆர்வத்துக்கு எங்களது நன்றி. இன்னமும் நிறைய மாணவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள வரவேண்டும் என்பதுதான் எங்கள் ஆவல். அதே சமயம், பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். கட்டுப்படுத்தி, வற்புறுத்தி தமிழ் படிக்கத் தூண்டாதீர்கள். அவர்களை இயல்பாக இருக்கவிடுங்கள். குழந்தைகள் தமிழில் எழுத, பேச கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் நமக்கு முக்கியம். வற்புறுத்தலோ திணித்தலோ வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.
CTAவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் அனைவருக்கும் எங்களது நன்றி. வணக்கம்.
மேலும் விவரங்களுக்கு:
California Tamil Academy 1340 S. De Anza Blvd. #103 San Jose, CA 95129 இணையதளம்: www.catamilacademy.org மின்னஞ்சல்:catamilacademy@yahoo.com
வடிவேல் ஏழுமலை |
மேலும் படங்களுக்கு |
|
More
முனைவர் அண்ணாமலை
|
|
|
|
|
|
|
|