Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
திருப்பூர் கிருஷ்ணன்
பேரா. சுவாமிநாதனுடன் ஒரு சந்திப்பு
- மணி மு.மணிவண்ணன்|மார்ச் 2005|
Share:
Click Here Enlarge"ஏரோநாட்டிக்கல் படிச்சா அமெரிக்கா போவானா சார்?" கவலையுடன் கேட்கும் தந்தை. "தமிழ் படிச்சா ஏரோப்ளேன் டிசைன் பண்ண முடியுமா?" நக்கலடிக்கும் மாணவர். "சின்சின்னாட்டி எங்கே இருக்குன்னு தெரியும், திருத்தணி எங்கே சார் இருக்கு?" ஐ.ஐ.டி. பேராசிரியர் சுவாமிநாதன் பல ஆண்டுகளாய்க் கேட்டுப் புளித்துப் போன கேள்விகள். '33 ஆண்டுகள் ஓர் ஏற்றுமதி மையத்தில் வேலை பார்த்த அனுபவம் உண்டு' என்று தன் ஐ.ஐ.டி.-டெல்லி வாழ்க்கையை நகைச்சுவையுடன் குறிப்பிடும் இவர் ஓர் இயந்திரப் பொறியியல் பேராசியர்.

இந்தியர்களில் 60% மக்கள் கான்கிரீட் கட்டிடங்களிலோ அடுக்குமாடிக் கட்டிடங்களிலோ வாழ்வதில்லை. அவர்கள் வாழ்க்கைக்கு வசதியளிக்கும் தொழில்நுட்பங்களை ஐ.ஐ.டி. கற்பிப்பதில்லை. மேலைநாட்டு மக்களுக்கும், மேல்தட்டு மக்களுக்குமான தொழில்நுட்பங்களைக் கற்பித்துத் திறமைகளை ஏற்றுமதி செய்யும் மையமாகத்தான் ஐ.ஐ.டி.கள் செயல்பட்டு வந்திருக்கின்றன என்று குறைப்படும் சுவாமிநாதன், சமுதாயப் பொறுப்புள்ள ஆய்வுகளில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிவு செய்தார். வேலையில் சேர்ந்த உடனேயே, இந்தியத் தொழில் நுட்பக் கழகங்களில் படிக்க வரும் இளைஞர்கள் பெரும் புத்திசாலிகள், அயராத உழைப்பாளிகள்; ஆனால், தம் மரபு பற்றி அறியாதவர்கள், அடையாளம் புரியாதவர்கள், வேர்களும் விழுமியங்களும் அறியாதவர்கள் என்பதை உணர்ந்தார்.

ஜென்னருக்கு முன்னரே அம்மை நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டு பிடித்த இந்திய மருத்துவம் பற்றி இவர்களுக்குத் தெரியுமா? கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நுட்பமான இசைக்குறிப்புகளைக் கண்டுபிடித்தவர்கள் நாமென்று தெரியுமா? சரிந்து விழும் கான்கிரீட் கட்டிடங்கள் கட்டும் நம்மவர்களுக்கு அடித்தளம் இல்லாமல் முன்னோர்கள் கட்டி ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் கற்கோவில்களைப் பற்றித் தெரியுமா? கலியுகத்தின் ஆரம்ப நாளைக் கணித்த பண்டைய வானியல் கணியர்கள் நியூட்டன், கோபர்னிகஸ் கண்டு பிடித்த விதிகளை முன்பே தெரிந்துதான் கணித்தார்களா, இல்லையென்றால் இந்தக் கணிப்பை 5000 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட தலைமுறைக்கு எப்படிக் கொண்டு சேர்த்தார்கள் என்று 19ம் நூற்றாண்டு ஐரோப்பியர்கள் திகைத்தது இவர்களுக்குத் தெரியுமா?

சிக்கல்களுக்குத் தீர்வு காணும் ஆர்வத்தை வளர்த்துப் பயிற்சியையும் கொடுக்கும் தன்மையுள்ள ஐ.ஐ.டி., மரபுக் கல்விச் சிக்கலைத் தீர்க்க இவருக்கு முழு உரிமை அளித்தது. பொறியியல் பேராசிரியருக்கும், மரபுக் கல்விக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதே என்றெல்லாம் தயங்காமல் முழு முனைப்புடன் மரபுக் கல்விப் பயிற்சியில் தன்னை ஆழ்த்திக் கொண்டார் இவர். சொல்லப்போனால், மரபுக் கல்வியில் தான் நிபுணன் இல்லை என்பதே ஒரு வரப் பிரசாதமாகஅமைந்தது என்கிறார் சிரித்துக் கொண்டே. இந்திய இசை மரபு, இசையின் இயற்பியல் மற்றும் அழகியல், காந்தீயப் பாதை, இந்திய/இந்திய-ஆசிய மொழிகளில் எழுத்து வளர்ந்த கதை, நாளந்தாவின் மேன்மை, என்ற பல தலைப்புகளில் படங்களுடன் விளக்கவுரை தயாரித்துப் பாடங்கள் நடத்தத் தொடங்கினார். 'அஜந்தா ஓவியங்கள் - எளியோர்க்கு ஓர் அறிமுகம்' என்ற வகுப்பு பெருத்த வரவேற்பு பெற்றது. 300 காட்சிப்படங்கள் கொண்ட இந்தப் பாடம் ஒரு குறுந்தட்டாக ஐ.ஐ.டி. டெல்லி யால் பதிக்கப் பட்டது.

புதுக்கோட்டையில் 'சுதர்சனம்'

பல இடங்களில் ஆவலுடன் வரவேற்கப்படும் சிறப்புப் பேச்சாளரான இவர், அரசு சார்பற்ற தொண்டூழிய நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றும் குறிக்கோளுடன் ஐ.ஐ.டி.யிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று கேரள சாஸ்திர சாஹித்ய பரிஷத் அமைப்பின் நாட்டுப்புறத் தொழில்நுட்ப மையத்தில் சேர்ந்தார். அங்கே ஓராண்டு செயலாற்றிய பின்னர் தன் சொந்த மாவட்டமான புதுக்கோட்டைக்குத் திரும்பி சுதர்சனம் என்ற பெயரில் கலை, பண்பாட்டு மையம் ஒன்றை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டார். தமிழ்நாட்டுக்கு வெளியே 37 ஆண்டுகள் வாழ்ந்தாலும், பிறந்த ஊர் நாட்டமும், புதுக்கோட்டை மண்ணின் மரபு, பண்பாடு பற்றிய பெருமையும் அவரிடம் தணியவில்லை. தங்கள் ஊரை விட்டுக் குடிபெயர்ந்து வேறு இடங்களில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரிடமும் பிறந்த மண் நினைவையும் பெருமையையும் அவர் காண்கிறார். நம் பழைய நினைவுகள் வரலாற்று முக்கியத்துவமில்லாமல் இருக்கலாம், ஆனால், நம் சந்ததியினருக்கும், ஒருவேளை மற்றவர்களுக்கும் அவை கண்டிப்பாகச் சுவையானவையாய் இருக்கும் என்கிறார் அவர்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் புதுக்கோட்டையை மூலமாகக் கொண்டவர்களைத் திரட்டி அங்கே பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கும் எண்ணத்தில் www.pudukkottai.orgஎன்ற வலைத்தளத்தை அமைத்தார். அப்போதுதான் தொழிலதிபரும் கல்வியாளருமான வி.கே. சுந்தரம் அவர் களின் அறிமுகம் ஏற்பட்டது. "புதுக்கோட்டை பற்றிய எனது ஆர்வத்தை அறிந்தவுடன் அவர் கலை, பண்பாட்டு மையம் ஒன்றை அமைக்க முன்வந்தார். அன்றுதான் சுதர்சனம் அமைப்பு தோன்றியது. சுதர்சனம், பொதுமக்களுக்குத் தங்கள் மரபு பற்றிய உணர்வைத் தூண்ட வேண்டும், ஆராய்ச்சி யாளர்களுக்குத் துணைபுரியும் ஆய்வகமாகவும் இயங்க வேண்டும் என்ற இரட்டைக் குறிக்கோளைக் கொண்டது."

மரபிசையும் மக்களிசையும், பக்திப் பாடல்கள், நாட்டியம், நாடகம், இலக்கியம், சிற்பம், கோவில் கலைகள், மேலும் வீட்டுப்புறக் கலைகளான கோலம், தாலாட்டு, போன்ற தலைப்புகளில் அறிமுக வகுப்புகள், தமிழ் மரபு குறித்த ஆவணங்கள் திரட்டல், தமிழ்ப் பண்பாட்டில் புதுக்கோட்டையின் கொடை குறித்த ஆய்வு போன்ற திட்டங்களைக் கொண்டிருந்தது சுதர்சனம். பாடத் துணைநூல்கள் நம்பத்தக்க செய்திகளைக் கொண்டு, அழகாகத் தொழில் முறை நேர்த்தியுடன் தயாரிக்கப்பட்டன. இதன் முழுப் பரிமாணத்தையும் www.pudukkottai.orgவலைத்தளத்தில் காணலாம்.

தமிழ் மரபு, இந்திய மரபு பற்றி அறியும் ஆர்வம் புலம் பெயர்ந்த தமிழர்கள், இந்தியர்களிடம் அண்மைக்காலத்தில் கூடி வருகிறது. சுலேகா, ·போரம் ஹப் போன்ற வலைத் தளங்களிலும், இந்தாலஜி, அகத்தியம் போன்ற வலைக் குழுக்களிலும் ஆர்வத்துடன் பலர் கருத்துப் பரிமாற்றம் செய்வதைக் காண்கிறோம். அதே நேரத்தில் தமிழர், இந்தியரின் மாட்சியை உலகுக்குப் பறைசாற்றும் முயற்சியில் சிலர் நிறுவுவதற்குக் கடினமான பல கருத்துகளை முன் வைப்பதையும் காண்கிறோம். உலகத்தின் முதல் மொழி தமிழ்தான் என்று ஒரு சிலரும், இல்லை சமஸ்கிருதத்திலிருந்துதான் உலக மொழிகள் எல்லாமே பிறந்தன என்று வேறு சிலரும் வாதாடுவதைக் காண்கிறோம்.

இன்று வரை தீர்வு கண்டு பிடிக்க முடியாத சிந்து சமவெளி நாகரீகம் தமிழருடையது என்பாரும், இல்லை இல்லை சிந்து-சரஸ்வதி நாகரீகம் வேதிய நாகரீகம் என்பாரும் சொற்போர் புரிவது இன்றும் தொடர்கிறது. இவை எல்லாம் வெட்டிப் பேச்சு என்று ஒதுங்குவோர் பலர். இவற்றில் எது உண்மை, ஏன் நாம் மரபு பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டும், இதனால் நமக்கு என்ன லாபம் என்று பேரா. சுவாமிநாதனைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கிறோம். தான் கற்றதை உலகுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிறரையும் தொற்றிக் கொள்ளும் ஆர்வத்துடன் பேசிக் கொண்டி ருந்த பேராசிரியர் ஒரு கணம் அயர்ச்சியுடன் நம்மைப் பார்க்கிறார். பல ஆண்டுகளாக டெல்லி ஐ.ஐ.டி. இளைஞர்கள் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் துளியும் தயங்காமல் இந்தியாவை உதறி விட்டுக் கிளம்பியதைப் பார்த்தவரல்லவா!

"ஒரு பைசா லாபம் இல்லை!"

மரபு பற்றிக் கற்றுக் கொள்வதால் ஒரு பைசா லாபம் இல்லை. பணத்துக்காகக் கற்பதல்ல கல்வி. பின் வேறு எதற்காம்? விதவைகளை உடன் கட்டையேற்றி எரிக்கும் மரபும் ஒரு மரபா? ஜாதி என்ற பெயரால் குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லுவதும் ஒரு பண்பாடா? இந்தியப் பண்பாடு அப்படி என்ன உயர்ந்ததா? "ஆஹா" என்று புன்முறுவல் பூக்கிறார் பேராசிரியர் சுவாமிநாதன். கேள்விக்கணைகள் பறக்கும் போது கல்விப்பசி எழுந்து விட்டது என்று அடையாளம் கண்டு கொள்ளும் ஆசிரியர் அல்லவா? வினா விடைகள் மூலம்தான் ஐ.ஐ.டி.யில் பாடம் நடத்துவாராம்!

கண்களில் ஒளியுடன் சொல்கிறார்: "முதலில் நமது மரபைப் புரிந்து கொள்வோம். நல்லது, கெட்டது இரண்டையும் சேர்த்துத் தான்! வரலாற்றின் மூலம் நாம் பல பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், வரலாற்றின் மேல் தீர்ப்பளிக்க வேண்டாம், கடந்த காலத் தவறுகளைத் திருத்துவோம் என்றும் கிளம்ப வேண்டாம். எடுத்துக்காட்டாக, பக்தி இயக்கத்தின் தொடக்க காலத்தில் தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான சமணர்கள் கழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டார்கள். இந்தியாவிலிருந்து புத்த மதம் பூண்டோடு ஒழிக்கப்பட்டபோது - சிலர் ஆதி சங்கரர்தான் அதற்குக் காரணம் என்பார்கள் - பெரும் அளவில் மனித உயிரிழப்பு நேரிட்டது. தமிழ்நாட்டில் பல சமண, பௌத்த கோவில்கள் இந்துக் கோவில்களாக மாற்றப்பட்டன. பக்தி இலக்கியப் பாடல்கள் சமணர்களின் வேரறுப்பைக் கொண்டாடுகின்றன. இதற்கு நான் என்ன சொல்ல முடியும்?"

"கடந்த காலத்தில் நாம் நிலவுடமைப் பிரபுத்துவச் சமுதாயமாக இருந்தோம். பற்பல ஜாதிகளாகப் பிளவுபட்டு நின்றோம். சமத்துவம் என்ற கருத்தை அறியாமல் இருந்தோம். அப்போது ஆளுமை செலுத்திய இந்து மதத்தில், ஏனைய மதங்களைப் போல நல்லது கெட்டது விரவிக் கிடந்தது. என் மதத்தை, அது எப்படியிருக்கிறதோ அதை ஏற்றுக் கொண்டு என்னால் முடிந்ததைச் செய்கிறேன். மற்ற பல மதங்களைப் போல் அல்லாமல் என் மதத்தைக் குறைகூறும் உரிமை இந்து மதத்தில் இருக்கிறது என்ற வகையில் நான் பாக்கியசாலி. மதச் சார்பின்மைக்கும், இந்துத்துவத்துக்கும் தற்போது நடக்கும் அடிதடி காட்டுத்தனமானது. அடிப்படை இந்துக்கள் வாதத்துக்கு இணங்காதவர்கள்; சமயச் சார்பற்றவர்கள் பெரும்பாலும் நேர்மையற்றவர்கள் - இந்துக்களைக் குறை சொல்லத்தயங்க மாட்டார்கள். ஆனால் மற்ற மதங்களின், குறிப்பாக இஸ்லாம் மதத்தின் குறைகளைச் சுட்ட மாட்டார்கள்" என்று சொல்லும்போது அவரது கொள்கையின் நேர்மை புலப்படுகிறது.

"மரபையும் பண்பாட்டையும் பேணும் நோக்கம் கடந்த காலத்தைக் கொண்டாடுவதற்கல்ல; மனிதர்களுக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டு வருவதற்குத்தான். வாழ்க்கையின் நோக்கமே அதுதானே! வாழ்க்கையில் எது மகிழ்ச்சியளிக்கும்? என்னைச் சுற்றி மகிழ்ச்சியிருந்தால் எனக்கும் மகிழ்ச்சி வரும் இல்லையா? அந்தச் சுற்றம் எனது குடும்பமாக இருக்கலாம், அல்லது உற்றார், உறவினராக இருக்கலாம், அக்கம் பக்கத்தாரோ, ஊரோ இருக்கலாம். பண்பட்ட மனிதர்கள் தமக்கும் தம் சுற்றத்துக்கும் நல்லதாகச் செய்யும் சின்னஞ்சிறு செயல்கள் உலகை எவ்வாறு உந்துகிறது என்பதைத் தன்னடக்கத்துடன் உணர்ந்து கொள்வார்கள். ஒவ்வோர் உயிரும் தனிச் சிறப்புள்ளது, அதே சமயம் இந்த அகண்டத்துடன் ஒப்பிடும்போது தூசுக்குச் சமானம். தனிச் சிறப்புத் தன்மை நல்ல குறிக்கோளுள்ள வாழ்க்கைக்குத் தடம் அமைக்கும். நம் சின்னஞ்சிறிய செயல்கள் கூட உலகை வளப்படுத்தும் என்று நமக்கு உற்சாகம் அளிக்கும். அகண்டத்துடன் ஒப்பிடும்போது மக்களுக்கு அடக்க உணர்வு பொங்க வேண்டும்!" என்கிறார் மார்க்சிசத்தில் தொடங்கி காந்தீயத்துக்கு வந்த பேராசிரியர்.

"5000 ஆண்டு தொடர்ச்சியுள்ள இந்திய நாகரீகத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது. உலகில் வெகுசில நாடுகளுக்கு மட்டுமே இவ்வளவு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. சில விஷயங்களில் இந்தியர்களின் சாதனை பிரமிக்கத் தக்கது. இருந்தாலும், என் கண்ணோட்டத்தில், என்றுமே இந்தியாவில் மட்டுமல்ல, வேறு எங்குமே வரலாற்றில் 'பொற்காலம்' இருந்ததில்லை. இந்தியாவில் பல்வேறு இன மக்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் இருந்து வந்து குடியேறியிருக் கிறார்கள். இந்திய மொழிகள், தத்துவங்கள், சமயச் சிந்தனைகள், பண்பாடு இவையனைத்தும் இவர்களின் கூட்டு முயற்சி. ஒவ்வொரு குடிகளின் முத்திரையும் அவற்றில் இருக்கிறது. உருதுவைத் தவிர்த்த ஏனைய இந்திய மொழிகள் அனத்துக்கும், ஏன், பல தென் கிழக்காசிய மொழிகளுக்கும் எழுத்து வடிவம் அசோகன் பிராமி என்ற ஒரே ஓர் எழுத்து வடிவத்திலிருந்து கிளைத்தது தானே!" என்று தொடர்கிறார்.

"பண்டைய இந்தியர்களின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று மொழியியல். சமஸ்கிருதம் ஒரு மலைப்பூட்டும் மொழி. அகரவரிசையை உயிர் எழுத்து, மெய் எழுத்து என்று பிரித்தல், ஓரசை வேர்ச் சொல்லிலிருந்து சொற்கோவைகளைப் படைத்தல், இயல் மொழிக்கு இலக்கணம் வகுத்தல், வாய் வழியாகப் பல தலை முறைகளைக் கடந்து நின்றாலும் பிழையில்லாமல் வேத நூல்களைப் பயிற்றுவித்தல், என்று சொல்லிக் கொண்டே போகலாம். 4000 ஆண்டுகளுக்கு மேல் வேதங்கள் வாய் வழியாகத் தொடர்ந்து வந்திருக்கின்றன. இந்தியாவின் நான்கு மூலைகளிலும் ஐரோப்பியர் வேதங்களைத் திரட்டி எழுத முனைந்த போதுதான் அவை எப்படி நான்கு திசைகளிலும் பிழைகளின்றி ஒத்துப் போயிருக்கின்றன என்பது தெரியவந்தது. இது எவ்வளவு பெரிய சாதனை என்பது தகவல் தொழில்நுட்ப அறிஞர்களால் நன்றாக உணர முடியும். ஒரு பண்பட்ட நாகரீகம் படைப்பதற்கு எழுத்தறிவு தேவையில்லை என்பதற்கு இது நல்ல எடுத்துக் காட்டல்லவா?" என்னும்போது அவர் கண்களில் மலைப்பு தெரிகிறது.

"ஆனால், சமஸ்கிருதம் எப்போதுமே மக்கள் மொழியாக இருந்ததில்லை. சமஸ் கிருத இலக்கியம் ஆளும் வர்க்கத்தின் இலக்கியம். அதன் நாயகர்கள் கடவுளர்கள் அல்லது அரச பரம்பரையினர். அதைப் படைத்தவர்கள் பெரும்பாலும் ஆளும் வர்க்கத்தினர் அல்லது பூசாரி இனங்கள். அன்றைய இந்தியாவில் சமஸ்கிருதம் வகித்த இடம் கிட்டத்தட்ட இன்றைய இந்தியாவில் ஆங்கிலம் பிடித்திருக்கும் இடத்தைப் போன்றது. ஆனால், தமிழ் இருந்தது பாருங்களே! அப்பா! அன்றே அது ஆளும் மொழியாகவும், மக்கள் மொழியாகவும் இருந்தது. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் சமுதாயத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் தோன்றின. அதன் கருப்பொருள் பெரும்பாலும் சமயச் சார்பற்ற அன்றாட வாழ்க்கை தொடர்பானவை. இருந்தாலும், பண்டைத் தமிழ்க் காலத்தையும் பொற்காலம் என்று சொல்லத் தயங்குவேன். தமிழின் தலைசிறந்த நீதிநூலான திருக்குறள் மட்டுமல்ல வேறு எந்த இந்திய இலக்கியமும் பெண்களை ஆண்களுக்குச் சரி நிகர் சமானமாகக் கருதவில்லை, அரச குடிகளின் பிறப்புரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கியதில்லை" என்று தமிழின் பெருமையையும் நடுநிலைக் கண்ணோடு பார்க்கிறார்.

"மரபு பற்றிய என் எண்ணங்கள் இரண்டு கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தவை. கலைகள் மட்டுமல்ல, வாழ்க்கையின் பல்வேறு கூறுகளிலும் காலத்தைக் கடந்து நிற்கும் அழகை நாடுகிறேன். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சொற்களில் எளிமையின் அழகு மிளிரும். மெயர் எழுதிய அறிமுகத் தோராயவியல் (Meyer’s Introduction to Probability) என்ற அற்புதமான நூலில் சொல்லழகும், சொற்சுருக்கமும், ஆழ்ந்த கருத்துகளும் ஒருங்கிணைகின்றன. ஆனால், நவரச கானடா ராகத்தில் நின்னு வினா என்ற தியாகராஜ கிருதியை பார்வையாளர் சந்தடியில் வாயு வேகத்தில் கொண்டு போ வதை அழகென்றா கொண்டாட முடியும்?" என்று தன் அழகியலுக்கு இலக்கணம் வகுக்கிறார்.

"இரண்டாவதாக, அனைத்துலக ஆன்மீகம் என்று ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டேன். உலகின் பல மதங்கள், பல அரசியல் நூல்கள் இன்று நாம் ஒப்புக் கொள்ள முடியாத சில கொள்கைகளைக் கொண்டிருக்கலாம். இருந்தாலும், அந்தப் பழைய நம்பிக்கைகள், நடத்தைகளில் நாம் அனுபவ அறிவைக் காணலாம். அதை நாம் சார்பற்ற நிலையில் நின்று அறவழிக் கண்ணோட் டத்தில் பார்த்தால் மட்டுமே உணர முடியும். அறவழி நின்று, அன்பு, அருள், உயிர்மை ஆற்றல் மூலம் மட்டுமே அதை மற்றவர்களிடம் தூண்ட முடியும். அதிகார வலிமையால் முடியாது. பல்வேறு காலக் கட்டத்தில் விளங்கும் அறநெறிகளுக்கெல்லாம் ஒரு பொதுமையைக் காண முடிந்தால் அதைத் தான் நான் அனைத்துலக ஆன்மீகம் என்று கொள்வேன்" என்று தன் கொள்கையை விளக்குகிறார்.

"மக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு, நாளைய சமுதாயங்களுக்கு நன்மை பயக்கும் செயலையே தர்மம் என்பேன். வாழ்க்கை என்பது உடலையும் உயிரையும் பேணுவது. ஒரு நகரவாசி வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின்னரும் நாட்டுப்புறத்துக்குக் குடிபெயரத் தயங்குவார். நாட்டுப்புற மக்கள் நாகரீகமற்றவர்கள் என்று நினைப்பார்கள். ஆனால், நாட்டுப்புற மக்களின் மொழி பொருள் பொதிந்தது. அவர்கள் உறவாடு முறை கண்ணியமானது. அவர்களின் சுற்றுச் சூழலறிவு நகரத்தாரை விஞ்சியது. கலை நிகழ்ச்சிகள், புத்தகக் கடைகள், சான்றோர் தொடர்பு இவைதாம் நாட்டுப்புறப் பகுதிகளில் அரிது. இதற்குக் காரணம் அவர்கள் ஏழ்மைதானே ஒழிய அறியாமை அல்ல. கே.பி. சுந்தராம்பாளைப் போல விருத்தம் பாட வல்லார் யார்? பக்திச் சுவை சொட்டச் சொட்ட கலப்பற்ற மரபிசையில் அவர் பாடிய பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பரவவில்லையா!" என்று நாட்டுப் புற மக்களி டையே வாழ்ந்த அனுபவக் கண்ணோட்டத்தில் வாதிடுகிறார்.

"நாட்டுப்புறங்களில் தேர்ந்த கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளையும், கலையறிவுக் கல்வியையும் கொண்டு சென்றால், மக்க ளின் வாழ்க்கைத் தரம் உயரும். அதே நேரத்தில் அவர்கள் வாழ்க்கை நிலையையும் உயர்த்துவது அவசியம். நல்ல அமைப்புகள் மூலம் பல புரவலர்களை அணுகி அவர்கள் தங்களுக்குத் தெரிந்த சிற்றூர்களைத் தத்து எடுத்துக் கொண்டு, நாட்டுப்புற மக்களுக்கு நல்ல கல்வியும், மருத்துவ வசதியும் கொண்டு சேர்க்க முடியும் என நம்புகிறேன்" என்று ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். மரபுச் சுற்றுலா, கலைஞர்களுடன் சந்திப்பு, மாற்றுக் கருத்துகளைப் பற்றிய உணர்வூட்டல் போன்ற கூடுதல் திட்டங்களையும் கொண் டிருந்த சுதர்சனம் அமைப்பு அண்மையில் மூடப்பட்டது என்பது வருந்தத் தக்க செய்தி.

20-25 ஆண்டுகளாக மரபின் மாட்சி பற்றிப் பாடம் நடத்தி வந்திருக்கும் பேரா. சுவாமிநாதன் இந்தப் பாடங்கள் தம் மாணவர்களை முழுமையான மனிதர் களாகச் செழுமைப்படுத்தியிருப்பதில் நிறைவு கொள்கிறார். நம் வேர்கள், நம் முன்னோர்கள், அவர்கள் வாழ்ந்த இடங்கள், அவற்றின் கலை, பண்பாடு, வரலாற்று பற்றிய செய்திகளைத் தொகுக்க நாம் எல்லோருமே முன் வரவேண்டும் என்கிறார். தமிழ்நாடு பண்பாட்டுக் களஞ்சியம் ஒன்று அமைக்க வேண்டும் என்பது இவரது தற்போதைய முயற்சி. நாம் ஒவ்வொருவரும் நம் ஊர் பற்றிய தகவல்களைத் திரட்டி வலையில் இட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. அந்த ஊருக்கென்ற வரலாறு இருக்கிறது. அதன் கோவில்கள், கலைகள், பண்பாட்டுச் சிறப்பு போன்றவற்றைத் திரட்டித் தேடுவோருக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்று கொண்டாடிய தமிழ் மரபில் வந்தவர்கள் நாம். நம்மில் பெரும்பாலோர் எண்களில் பயிற்சி பெற்றுப் பொறியியல், அறிவியல், பொருளாதாரம், கணிதம், போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்று அமெரிக்காவில் காலூன்றியவர்கள். எழுத்து, இலக்கியம், நுண்கலைகளில் நம்மில் பலருக்குப் பயிற்சியும் தேர்ச்சியும் குறைவு. நம்மைப் பயிற்றுவித்த பல பேராசிரியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. எண்களின் பயிற்சி "கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்று நமக்கு வாய்ப்புகளை வழங்கினாலும், எழுத்தறியாமையால் நாம் நம் மரபுகளை மறந்து கொண்டிருக்கிறோம். அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறோம். நமது வேர்களையும் விழுமியங்களையும் அடையாளம் காணப் பேரா. சுவாமிநாதன் நமக்கு ஓர் அரிய வாய்ப்பளிக்கிறார்.

·பிரிமாண்ட், கலி·போர்னியாவில் சில மாதங்கள் தங்கியிருக்கப் போகும் பேரா. சுவாமிநாதன் மார்ச் 5ம் தேதி சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற இலக்கியக் கூட்டத்தில் "எழுத்து வளர்ந்த கதை" என்ற தலைப்பில் பேசவிருக்கிறார். தொடர்ந்து பல இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றுப் பல தலைப்புகளில் பேச இருக்கிறார். "நான் எந்தத் தலைப்பிலும் நிபுணன் இல்லை. ஆர்வமுள்ள மாணவன். வாருங்கள், சேர்ந்து பயிலுவோம்" என்கிறார். அவரது பன்முகப் பார்வை குறித்து வியந்து விடை பெறுகிறோம்.
கோடை மரபுத் தங்கல் திட்டம் (Summer Heritage residential camp)

சிறுவர், இளையோர், முதியோருக்கு இந்திய, தமிழ் மரபு பற்றிய ஆழமான அறிமுகம் தரும் குறிக்கோள் கொண்டது இந்த மூன்று வாரத் தங்கல். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும், தமிழ் புரிந்து கொள்ள, ஓரளவு பேசத் தெரிந்த இளைஞர்களுக்கு இந்தத் தங்கல் பயனுள்ளதாக இருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில், சத்தியமங்கலம் ஊருக்கருகில் உள்ள சுதர்சனம் வளாகத்தில் இந்தத் தங்கல் ஏற்பாடு செய்யப்படும். பாடத்திட்டங்கள் பின்வரும் தலைப்புகளில் அமைந்திருக்கும்:

1. நிகழ்கலைகளான மரபிசை, பரத நாட்டியம், நாட்டுப்புறக் கலைகள் ஆகியவற்றிற்கான அறிமுகம்,
2. கோவில் கட்டிட வரலாறு, கலை வளர்ச்சியில் கோவில்களின் பங்கு,
3. சிற்பக்கலை, வெண்கல வார்ப்புக்கலை,
4. ஓவியக்கலை பற்றிய அறிமுகம், அஜந்தா, பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர ஓவியங்கள்
5. தமிழ் இலக்கிய அறிமுகம் - தொல் காப்பியம், அகநானூறு, புறநானூறு, சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பக்தி இலக்கியம், கம்பராமாயணம், பாரதி மற்றும் தற்காலத் தமிழிலக்கியம்
6. சமஸ்கிருத இலக்கிய அறிமுகம் - வேதங்கள், காளிதாசன், மற்ற மரபிலக்கியங்கள்
7. இந்தியத் தத்துவச் சிந்தனைகள்
8. நவீன இந்தியச் சிந்தனையாளர்கள் - ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ரமண மகரிஷி, அரவிந்தர், தியோசோ·பி, ஜோதிபாய் ·புலெ, மகாத்மா காந்தி, ஜே. கிருஷ்ணமூர்த்தி.
9. தமிழக வரலாறும் தமிழ் மரபும், இந்திய வாயிலக்கிய மரபு, மரபு மருத்துவம், கல்வெட்டுகளும் எழுத்து வளர்ச்சியும், காசு இயல், தமிழ் - சமஸ்கிருத இலக்கியம் ஒப்பியல், சமஸ்கிருதச் செய்யுள் மரபு, புதுக்கோட்டை கலை வரலாறு, விராலிமலைக் குறவஞ்சி நாட்டிய நாடகம், புதுக்கோட்டை குகைக்கோவில்கள், மற்றும் பல பொதுத்தலைப்புகள்.
10. மரபுச் சுற்றுலா - புதுக்கோட்டை, தஞ்சைப் பெரிய கோவில், புதுக்கோட்டை குகைக்கோவில்கள், பாடல் பெற்ற தலச் சுற்றுலா - ஆவுடையார் கோவில் (மாணிக்கவாசகர்), விராலி மலை (அருணகிரிநாதர்), திருமயம் (திருமங்கை ஆழ்வார்), தஞ்சை, சிதம்பரம், ஸ்ரீரங்கம், மதுரை கோவில் கள், மாமல்லபுரம், காஞ்சிபுரம், ராமேஸ்வரம்.
11. அஷ்டவதானம், திவ்யநாமம், பிரவ சனம், ஹரிகதா, பொம்மலாட்டம், லாவணி கலைகள் பற்றிய அறிமுகம்
12. சோழர், மராத்திய உணவுகள்.

பேரா. சுவாமிநாதன் நிகழ்ச்சிகள்:

எழுத்து வளர்ந்த கதை - அசோகன் பிராமி முதல் கல்வெட்டுத் தமிழ் வரை மார்ச் 5, சனிக்கிழமை, மாலை 3 மணி. மில்பிடாஸ் நூலகம், 40 North Milpitas Boulevard, Milpitas CA 95035-4495

அனுமதி இலவசம்

கீழ்க்கண்ட தலைப்புகள் பற்றிய பேச்சுகள் ஏப்ரலில் தொடரும்.
1. அஜந்தா ஓவியங்கள் - ஓர் அறிமுகம்.
2. சித்தன்ன வாசல் குகைக்கோவில்கள் - சமணர்களின் கொடை
3. தமிழிசையும் கர்நாடக சங்கீதமும் - பேச்சு பாட்டு விளக்கம்
4. சமஸ்கிருதத்தின் வாய்மொழி மரபுகள்
5. பண்டைத் தமிழிலக்கியம் ஒரு பார்வை - குறுந்தொகை, திருக்குறள்
6. தமிழ் யாப்பிலக்கணம் - ஓர் அறிமுகம்
7. ஐராவதம் மகாதேவனின் தமிழ்க் கல்வெட்டு எழுத்துகள் நூலாய்வு இந்த இலக்கியப் பேச்சுத் தொடர் பற்றிய அறிவிப்புகள் பின்னால் வரும்.

பேச்சாளர் வாழ்க்கைக் குறிப்புக்கு: http://www.pudukkottai.org/swaminathan/index.htm

தொகுப்பு: மணி மு. மணிவண்ணன்
படங்கள்: ஆஷா மணிவண்ணன்
More

திருப்பூர் கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline