Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
பால் பாண்டியன் - கரிசலில் முளைத்த கணினித் தொழில் முனைவர்
''பாபநாசம் சிவன் இன்னொரு தியாகராஜர்'' - மாண்டலின் யு. ஸ்ரீனிவாஸ்
- கேடிஸ்ரீ|மார்ச் 2004|
Share:
Click Here Enlargeமேற்கத்திய இசைக்கருவியில் நம் பாரம்பரிய இசையை வாசித்து, மிகப் பெரிய வித்வான்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் மாண்டலின் யு. ஸ்ரீனிவாஸ். கர்ணனுக்குக் கவசகுண்டலம் போல் இவருடைய பெயருடனே 'மாண்டலின்' என்கிற பெயர் ஒட்டிக்கொண்டு விட்டது.

ஆறு வயதிலேயே தன் இசைப் பயணத்தைத் தொடங்கிய ஸ்ரீனிவாஸ் குறுகிய காலத்திலேயே சங்கீத உலகில் பலரால் பேசப்படலானார். பல விருது களையும், பதக்கங்களையும் பெற்று விளங்கும் இவர் இசையில் நிறைய கற்க வேண்டிய விஷயங்கள் உள்ளன என்கிறார். எம்.எஸ். சுப்புலட்சுமி, செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் போன்றவர்களைத் தன் வழிகாட்டி என்கிறார்.

ஸ்ரீனிவாஸை அவரது வடபழனி இல்லத்தில் சந்தித்த போது...

ஆந்திரப் பிரதேசத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகோலு என் சொந்த ஊர். நான் 1969ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 28ம் தேதி பிறந்தவன். என் அப்பா யு. சத்யநாராயணா ஓர் இசைக்கலைஞர். பல சிறுவர் சிறுமிகளுக்கு மாண்டலின் இசை பயிற்று வித்துக் கொண்டிருந்தார்.

மாண்டலின் வாத்தியக்கருவியிலிருந்து வருகிற சப்தம் என்னை ஈர்த்தது. என்னை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று எல்லாப் பெற்றோர்களையும் போல் எண்ணம் கொண்டிருந்த வேளையில், சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் இந்த இசைக்கருவியில்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நினைப்பு எனக்கு ஏற்பட்டது. அப்போது எனக்கு ஐந்து வயதுதான்.

எனக்குள் இப்படி ஓர் ஆர்வம் இருப்பதை என் தந்தை அறியவில்லை. அவர் வெளியே செல்கிற வேளையில் நான் ஆசையுடன் மாண்டலினை எடுத்து வைத்துக் கொண்டு வாசித்துப் பார்ப்பேன். என் இசை ஆர்வத்தைக் கண்ட அப்பாவின் நண்பர்கள் இதுபற்றி அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

மூன்று குருக்கள்

ஒருநாள் அப்பா ''சங்கீதம் கற்றுக் கொள்கிறாயா?'' என்று வினவினார். அன்று ஆரம்பமானது என்னுடைய இசைப் பயிற்சி. முதல் குருவான என் தந்தை மூலம் நான் வர்ணம், கீர்த்தனை தொடங்கி எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்.

செம்பை வைத்தியநாத பாகவதருடைய சிஷ்யரான சுப்புராஜு என்பவர் அப்பாவின் குரு. "எனக்கு நீங்கள் சங்கீதம் சொல்லிக் கொடுத்ததுபோல், என் மகனுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும்" என்று சொல்லி என்னை சுப்புராஜு அவர்களிடம் அழைத்துச் சென்றார் அப்பா.

இசை கற்றுக்கொள்வதற்குச் சென்னை தான் உரிய இடம் என்று எங்களைச் சென்னைக்கு அழைத்து வந்தார் என் குரு. பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு எல்லாமே வீட்டில் அஞ்சல்வழி படிக்க நேரிட்டது. இசை என் முழுநேரத் தொழிலாகியது.

சுப்புரஜு வாய்ப்பாட்டுதான் பாடுவார். அவர் பாடுவதை நான் அப்படியே மாண்டலினில் கொண்டு வந்து வாசிப்பேன். இப்படி ஆரம்பமானது என் இசை. அன்றையப் பிரபல இசையமைப்பாளர் எஸ். இராஜேஸ்வரராவ் அவர்களின் மகன் எஸ். வாசுராவ் எனக்கு மேற்கத்திய இசை கற்றுக்கொடுத்தார். அப்போது பிரபலமாக இருந்த இசையமைப்பாளர்களிடம் என்னை அழைத்துச் சென்று ''இந்தச் சிறுவயதில் இந்தச் சிறுவன் எப்படி வாசிக்கிறான் பாருங்கள்!'' என்று அறிமுகப்படுத்தி, என்னை அவர்கள் முன் வாசிக்க வைப்பார்.

இப்படியாக என் தந்தை, சுப்புராஜு, வாசுராவ் என்று எனக்கு மூன்று குருக்கள் அமைந்தனர். ஒன்பது வயதில் குடிவாடா தியாகராஜ ஆராதனையில் நான் வாசித்ததுதான் என் அரங்கேற்றம் என்று சொல்லலாம். அது ஒரு திருப்புமுனையும் கூட. (பார்க்க பெட்டிச் செய்தி: கூடியது கூட்டம்!)

இதன் பிறகு சென்னை வடபழனியிலுள்ள சிவன் கோயில் திருவிழாவில் என்னை வாசிக்க அழைத்தார்கள். மாலையில் தஞ்சாவூர் சங்கரஐயருடைய கச்சேரி. அவர் பாடுவதற்கு முன் நான் வாசித்தேன். என் கச்சேரியைக் கேட்பதற்குத் தஞ்சாவூர் உபேந்திரன் வந்திருந்தார்.

என் வாசிப்பை வெகுவாகப் பாராட்டிய அவர் கும்பகோணத்தில் ஒரு பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அதில் எனக்கு அவர் மிருதங்கம் வாசிக்க, அவருடைய மாமனார் வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை தவில், சிக்கில் பாஸ்கரன் வயலின், விநாயகராம் கடம், ஹரிசங்கர் கஞ்சிரா என்று பெரிய வித்வான்களின் பக்க வாத்தியங்களுடன் வாசிக்கும் பாக்கியம் கிடைக்க, நான் அதிகம் பேசப்படுபவனாக ஆனேன்.

இத்தாலியக் கருவி, இந்திய இசை

மாண்டலின் கருவி இத்தாலியைச் சேர்ந்தது. இங்கே சுமார் 60 வருடங்களாக உள்ளது. மாண்டலின் மூலம் கர்நாடக இசையை வாசிக்கும் பெருமையை நான் பெற்றேன் என்றே சொல்ல வேண்டும்.

வீணை, வயலின் என்று எல்லா இசைக்கருவிகளின் நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுப்பதற்கென்று ஆசிரியர்கள் இருப்பதுபோல், மாண்டலினை எப்படி வாசிக்க வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை. நான்தான் ஒவ்வொரு நிலையாக வாசிக்கக் கற்றுக்கொண்டேன். எப்படி கமகம் வாசிக்க வேண்டும், எப்படிக் கீர்த்தனை வாசிக்க வேண்டும் என்று பல நுணுக்கங்களை தெரிந்துக்கொண்டேன்.

இன்று உலகம் முழுதும் என் மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் கச்சேரிகள் செய்கிறார்கள். என் தம்பி ராஜேஷ் என்னுடன் சேர்ந்து பல கச்சேரிகள் செய்கிறார். என் மாணவர்கள் பரத், பாலாஜி ஆகியோர் சீனா போன்ற நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்கள்.

Shrinivas Institute of World Music என்கிற ஓர் இசைப்பள்ளியைச் சமீபத்தில் தொடங்கியிருக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள இசை ஆர்வலர்களுக்காக உருவானது. மாண்டலின் மட்டுமல்ல, எல்லாவித இசைக்கருவிகளையும் வாசிக்கக் கற்றுக்கொடுப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

பல வெளிநாடுகளில் கச்சேரிகள் நடத்தியிருக்கிறேன். முதன்முதலாகச் சிங்கப்பூர், மலேசியா சென்று வாசித்தேன். 1983ல் எனக்கு ஜெர்மனியில் நடைபெற்ற International Jazz Festivalஇல் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. கச்சேரி முடிந்தவுடன் அரங்கத்தில் பலத்த கைதட்டல். மறுபடியும் நான் வாசிக்க வேண்டும் என்று பலமுனைகளில் இருந்தும் வேண்டுகோள் வைக்கப்பட மேலும் ஒரு மணிநேரம் வாசித்தேன். என்னுடைய நிகழ்ச்சி அன்றைக்கு ஜெர்மன் முழுவதும் உள்ள மக்கள் காண்கிற வகையில் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியதை என்னால் மறக்க முடியாது.

1983ம் ஆண்டு சிட்னி தமிழ்ச் சங்கத்தின் அழைப்பிற்கிணங்க ஆஸ்திரேலியாவில் கச்சேரி செய்தது, அமெரிக்கா, வடகிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்த்தியது, 1985ல் பாரிஸில் 'பெஸ்டிவல் ஆப் இந்தியா'வில் கலந்து கொண்டு கச்சேரி செய்தது, 1987ல் மெக்ஸிகோ, கியூபாவில் நடந்த அரசாங்க விழாவில் கலந்து கொண்டது, 1992 ஒலிம்பிக்ஸில் நடைபெற்ற இசைவிழாவில் பங்கேற்றது என்று என்னுடைய வெளிநாட்டு அனுபவங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம்.

என்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்களின் அருளும், பகவான் சத்ய சாய்பாபாவின் அருளா¡சியும் தான் என்று சொல்ல வேண்டும். நான் எப்போது காஞ்சிக்குச் சென்றாலும் பெரியவர் முன் வாசிப்பேன். என்னைக் காஞ்சிபீடத்தின் ஆஸ்தான வித்வானாக நியமித்து கெளரவித்தார் பெரியவர். இன்றும் நான் காஞ்சிக்குச் சென்றால் பால பெரியவர் என்னை வாசிக்கச் சொல்லிக் கேட்பார்கள்.
கலைவாணியின் ஆசி

எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் முன் கச்சேரி செய்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. 'சங்கீத பாலபாஸ்கரா' விருது நிகழ்ச்சியின் போது எம்எஸ் அம்மா, சதாசிவம் அவர்களின் முன்னிலையில் கச்சேரி செய்கிற பாக்கியம் எனக்குக் கிடைத்தது. என் கச்சேரி முழுவதையும் கேட்டு என்னைப் பாராட்டி ஆசிர்வதித்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். ஏனென்றால் எம்எஸ் அம்மா அவர்களின் பாராட்டு எனக்குக் கலைவாணியே கொடுத்ததாகத்தான் தோன்றியது.

டி.என். ராஜரத்தினம், புல்லாங்குழல் மாலி, லால்குடி, டி.என். சேஷகோபாலன், வீணை பாலசந்தர், செம்மங்குடி போன்றவர்களின் இசை எனக்கு மிகவும் பிடித்தமானது. நான் அவர்களின் விசிறி.

நிறைய இசை ஆல்பங்களைத் தனியாகவும், உலகளவிலுள்ள இசைக் கலைஞர்களுடன் சேர்ந்தும் கொடுத்திருக்கிறேன். பிரபல மேற்கத்திய இசைக்கலைஞர் மைக்கேல் ப்ரூக்குடன் சேர்ந்து கொடுத்திருக்கிறேன். என் முதல் கலவைத் (fusion) தொகுப்பு 'Dream'. நான், ஜான் மெக்லாலின், ஜாகீர் ஹ¤சேன், உத்சவ் ஜாகீர் ஹ¤சேன், செல்வகணேஷ், (விநாயகராம் அவர்களின் மகன்) சேர்ந்து 'Remember Sakthi Group' என்ற பேனரில் இரண்டு தொகுப்புகளை தயாரித்தேன். முதல் ஆல்பம் 'Believer'. இரண்டாவதன் பெயர் 'Saturday Night in Bombay'. இந்த ஆல்பத்தில் பண்டிட் சிவகுமார் சர்மா, சங்கர் மகாதேவன், சிவமணி, பழனிவேல், விநாயகராம் என்று பலர் கெளரவக் கலைஞர்களாக பங்கேற்று உருவாக்கியது சிறப்பம்சம்.

சமீபத்தில் பாரதியார் பாடல்களை மியூசிக் டூடேவில் 'சின்னஞ்சிறு கிளியே' என்ற தலைப்பில் ராக சங்கமம் ஒன்றைச் செய்திருக்கிறேன். இது நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தமிழிசை இல்லாமல் எந்தக் கச்சேரியும் நிறைவு பெறுவதில்லை. எனக்குப் பாபநாசம் சிவனின் பாடல்களில் அதிக ஈடுபாடு. அவரை இன்னொரு தியாகராஜர் என்றே சொல்லலாம். அவர் பாடல்கள் கண்டிப்பாக என்னுடைய கச்சேரிகளில் இடம்பெறும். அதுபோல் பாரதியார் பாடலில் எனக்கு அதிக அளவு ஈடுபாடு. இசைக்கு மொழி தடையல்ல. திருப்புகழ் போன்றவைகளைப் பாடாமல் கச்சேரியை நிறைவு செய்வதில்லை.

மத்திய, மாநில அரசுகள் இன்றைய சிறுவர், சிறுமிகளுக்கு சிறுவயதிலேயே/பள்ளிக்கூடத்திலேயே இசை பற்றிய பாடத்தை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு நம் கலைகளை கற்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். 15 வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட இப்போது நிறைய இளைஞர்கள் நம் கலைகளை, குறிப்பாக இசையை, கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது எனக்கு மிகச் சந்தோஷம் தருகிறது.

ஒருவன் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு அவனது பெற்றோர்களின் ஆசியும், அரவணைப்பும் மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் பெற்றோர், என் குரு, ஸ்ரீ காஞ்சிப் பெரியவர், சத்யசாய் பாபா போன்றோரின் ஆசியே காரணம்.

*****


கூடியது கூட்டம்!

ஒருநாள் நான் மாண்டலின் வாசித்துக் கொண்டிருந்த போது என் குருவின் நண்பர் தீட்சிதர் என் வாசிப்பைக் கேட்டார். அதில் மகிழ்ந்த அவர் என்னிடம் ஆந்திராவில் உள்ள குடிவாடா என்கிற தன் ஊரில் நடைபெறும் தியாகராஜ ஆராதனையில் வாசிக்க அழைத்தார். அப்போது எனக்கு வயது ஒன்பது.

குடிவாடாவில் நடைபெற்ற கச்சேரிதான் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை.

இதுவரை யாரும் அறியாத சிறுவன், யாரும் கேள்விப்படாத ஒரு இசைக்கருவி என்று எல்லோரும் நினைக்கும் வேளையில், கச்சேரி ஆரம்பித்தது. மொத்தமே 15, 16 பேர்தான் இருந்தார்கள். கச்சேரி ஆரம்பித்தது. நான் வாசித்துக்கொண்டிருக்கும் போதே மக்கள் திரண்டு வரத் தொடங்கினார்கள். என் கச்சேரி கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் தொடர்ந்து நடைபெற்றது. கச்சேரியின் இறுதியில் 3000 பேருக்கு மேல் திரண்டிருந்தனர். அதுதான் என் இசைக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம்.

*****


சேஷகோபாலன் போட்ட மோதிரம்

1981ஆம் ஆண்டு இசைவிழாவில் எனக்கு வாய்ப்பு தேடி வந்தது. எம்பெருமானார் செட்டியார் அந்த நிகழ்ச்சிக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். சென்னை இந்தியன் ·பைன் ஆர்ட்ஸ் அரங்கத்தில் மதியம் 1.30 மணிக்குக் கச்சேரி.

நான் ஆண்டவனை வேண்டிக்கொண்டு என் நிகழ்ச்சியை தொடங்கினேன். கச்சேரியைக் கேட்க வீணை பாலசந்தர், மதுரை டி.என். சேஷகோபாலன், சுப்புடு, பி.பி. ஸ்ரீனிவாஸ் என்று இசையுலக ஜாம்பவான்கள் முதல் வரிசையில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். 'இவர்கள் எப்போதும் மாலை 5 மணிக்கு மேல்தானே வருவார்கள். இப்போதே வந்துவிட்டார்களே' என்று என்னுள் ஒரு சிறுநடுக்கம். தைரியமாகக் கச்சேரியை ஆரம்பித்தேன்.

கச்சேரி முடிந்தவுடன் மேடைக்கே வந்து என்னைப் பாராட்டினார் வீணை பாலசந்தர். சேஷகோபாலன் தன் மோதிரத்தைக் கழற்றி எனக்கு அணிவித்தார். என்னுள் ஓர் ஆனந்தம். மறுநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கச்சேரியை மிகவும் பாராட்டி எழுதினார் சுப்புடு. இப்படி ஜாம்பவான்களின் பாராட்டு மற்றும் ஆசிகளுடன் ஆரம்பித்தது என் இசைப் பயணம்.

*****


விருதுகளும் பரிசுகளும்

ஸ்பெஷல் டிடிகே அவார்ட் - 1983
மாண்டலின் சாம்ராட் - 1983
தமிழக அரசின் ஆஸ்தான வித்வான் - 1984
சங்கீத பால பாஸ்கரா - ஸ்ரீ சங்கரமடத்தின் சார்பாக எம்.எஸ். சுப்புலட்சுமி வழங்கியது
சங்கீத சூடாமணி - 1985
ஸ்வர கிஷோர் - 1985
ஆந்திர ரத்னகலா சரஸ்வதி - 1987
நடசுதா நிதி (Nata Sudha Nidhi) - 1987
இசைப் பேரொளி - 1990
கலைமாமணி - 1991
முதன்மைக் கலைஞர் விருது (அகில இந்திய வானொலி) - 1991
சங்கீதரத்னா மைசூர் டி. செளடய்யா நினைவு விருது - 1992
நேஷனல் சிட்டிசன் விருது (1991) - 1992
அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தின் கெளரவக் குடியுரிமை - 1993
ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கிய 'தந்திரி நாதமணி' - 1993
பில்போர்ட் விருது (குறுந்தகட்டிற்கு) - 1993
ராஜிவ்காந்தி தேசிய ஒருங்கிணைப்பாளர் விருது
(இந்தியன் வங்கி மற்றும் இதயம் பேசுகிறது) - 1994
சென்னை மியூசிக் அகாதமியின் யோகம் நாகசாமி விருது - 1994
பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் கோவிலின் ஆஸ்தான வித்வான் - 1995
சங்கீத கலாமிருதா (ஸ்ரீ ஞானாநந்த சேவாசமாஜம் மற்றும்
ஸ்ரீ பாகவத சம்மேளன் சமாஜம்) - 1996
ராக ரித ரிஷி (மெல்போர்ன் இந்திய சங்கீத அகாடமி) - 1996
பத்மஸ்ரீ - 1998

*****


நேர்காணல்: கேடிஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி
படங்கள்: அரவிந்த், அசோகன்
More

பால் பாண்டியன் - கரிசலில் முளைத்த கணினித் தொழில் முனைவர்
Share: 




© Copyright 2020 Tamilonline