குறள் கூறும் மேலாண்மை - பாகம் 1
|
|
"பெண்ணாகப் பிறந்ததே ஒரு சவால் தான்" - லால்குடி ஸ்ரீமதி ப்ரும்மானந்தம் |
|
- பத்மப்ரியன்|டிசம்பர் 2003| |
|
|
|
லால்குடி என்றாலே வயலினில் மேதைமை என்றாகிவிட்டது. லால்குடி ஸ்ரீமதி ப்ரும்மானந்தமும் இதற்கு விதிவிலக்கல்ல. லால்குடி கோபாலய்யரின் மகளும், லால்குடி ஜெயராமனின் சகோதரியுமான இவர் அவர்களது சிஷ்யையுமாவார். வெற்றிகரமான பெண்கள் வரிசையில் இடம் பெற்றுத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கிறார். இவருடைய வாரிசுகளான அனுராதா ஸ்ரீதர், ஸ்ரீராம் ப்ரும்மானந்தம் விரிகுடா பகுதியில் இசைப் பள்ளிகளை வைத்திருப்பது மட்டுமில்லாமல், பல இசை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்கள்.
அக்டோபர் 30, ஹாலோவீன் (Haloween) தின இரவு. லேசான மழை. தீபாவளிக்கு இணையான கொண்டாட்டம் அமெரிக்காவில் வளரும் இந்தியச் சிறுவர்களுக்கு. பன்னிரண்டு வயது அம்மு அன்று காலையிருந்தே பிடிவாதம் செய்து கொண்டிருந்தாள். அடுத்த ஞாயிற்றுக் கிழமை இசைப்பள்ளியின் வருடாந்திர விழா. அதில் அவள் மூன்று பாடல்களைப் பாட வேண்டும். அதற்கான பயிற்சியைச் செய்ய மறுத்து, அதில் ஆர்வம் காட்டாமலிருந்தது அப்பா ஹரிக்குச் சற்று கோபம். ஹரிக்கும் அம்முவுக்கும் பலத்த வாக்குவாதம். அம்முவைத் தற்போது வயலின் இசைக் கச்சேரி செய்வதற்காக விரிகுடா வந்திருக்கும் லால்குடி ஸ்ரீமதி ப்ரும்மானந்தம் அவர்களிடம் அழைத்துச் சென்று உரையாடச் செய்யலாம் என்றும், அது அம்முவின் மனதில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் என்றும் அம்மா கீதா சொன்னாள்.
சனிக்கிழமை ஹரி, கீதா, அம்மு மூவரும் ஸ்ரீமதி அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. ஸ்ரீமதி அவர்களே வந்து கதவைத் திறந்தது ஹரியை ஆச்சரியப்பட வைத்தது. பளிச்சென்ற உருவம்; முதிர்ந்த இசையறிவும், இசை தோற்றுவித்த அமைதியும், அமைதி தரும் அழகும் கூடிய முகம். அன்பான அன்னையின் வடிவம். உள்ளே நுழைந்ததும் "விரி போ" என்ற பைரவி ராக வர்ணத்தை மாணவர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். மெல்லியதாகக் கேட்டாலும் இசை வீடு முழுவதும் குடிபுகுந்திருந்தது. அம்முவின் முகத்தில் இறுக்கம் தெரிந்தது. பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின் ஹரி உரையாடலை ஆரம்பித்தான்.
கே: நீங்கள் சிறுவதில் எப்படி இசைப் பயிற்சி செய்தீகள்?
ப: என்னுடைய ஆறு, ஏழு வயதில் என் வீட்டிலேயே எனக்கு இசைக் கல்வியும் பயிற்சியும் தொடங்கியது. என் அப்பா லால்குடி கோபாலய்யர் காலை நாலரை மணிக்கு எழுந்து, வயலினில் வில்லை இழைத்து எங்களை எழுப்புவார். நானும் என் சகோதரி ராஜலக்ஷ்மியும் எழுந்து வயலின் இசைப் பயிற்சியை ஆரம்பிப்போம். வயலின் இசைப் பயிற்சியை எட்டரை மணிவரையில் செய்ய வேண்டும். பிறகு அரை மணி நேரம் ஓய்வு. தொடர்ந்து பன்னிரண்டு மணி வரை மீண்டும் பயிற்சி. மதியம் புதிய பாடல்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.
மறுபடி மாலையில் வாய்ப்பாட்டுப் பயிற்சி என்று சிறுவயதில் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் இசைப் பயிற்சியில்தான் இருப்பேன். இதனால் நான் மற்ற குழந்தைகளைப் போல பள்ளிக்கூடம் சென்று படிக்கவில்லை. எனக்கு கணிதம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி சொல்லித் தருவதற்கு ஆசிரியர்கள் வீட்டுக்கு வருவார்கள்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று மாலை ஐந்து முதல் எட்டு மணிவரை வீட்டிலேயே கச்சேரி செய்வோம். அவையனைத்தும் எனக்குப் பயிற்சிதான்.
கே: இந்நாட்களில் உங்கள் பயிற்சி எப்படியிருக்கிறது?
ப: இப்போழுதும் தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் சாதகம் செய்கிறேன். ஏதாவது ஒரு ராகத்தை நீண்ட நேரம் வாசித்தோ அல்லது ஸ்வரங்கள் வாசித்தோ தினமும் பயிற்சி செய்வேன். கச்சேரி இல்லாத நாட்களில் அதிக நேரம் பயிற்சி இருக்கும். இன்றுகூட இந்த வாரம் வாசிக்கப் போகும் கச்சேரியை மனதில் கொண்டு நானும் என் மகள் அனுராதா ஸ்ரீதரும் சாதகம் செய்தோம்.
கே: ஒரு முக்கியக் கச்சேரிக்கு முன் உங்களை எப்படி தயார் செய்து கொள்வீர்கள்?
ப: கச்சேரிக்கு ஒரு வாரம் முன்பே மனதில் அந்தக் கச்சேரியை நினைத்துத் திட்டம் போட ஆரம்பித்து விடுவேன். எங்கு, எப்போது, எந்தக் கூட்டத்தில் அந்தக் கச்சேரி என்பதைப் பொறுத்து, பாடல்களையும், பலவிதமான ராகங்களையும், வித்தியாச மான தாளங்களையும் தேர்வு செய்து கொள்வேன். கச்சேரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக மற்றக் கச்சேரிகளை விட எப்படி வித்தியாசமாகத் தருவது என்று யோசித்து சாதகம் செய்து கொள்வேன். கச்சேரி அன்று குறைந்த அளவில்தான் சாதகம் செய்வேன். அதிக உணவு உண்ண மாட்டேன். பழங்கள் அல்லது பிஸ்கட் போன்றவை மட்டுமே உணவாகும். எப்போதுமே கச்சேரியன்று இரவு தூக்கம் வராது, அதே சிந்தனையாகவே இருக்கும். கச்சேரி முடிந்த பின்பும் அதே சிந்தனையாக இருப்பேன்!
அம்மு ஸ்ரீமதியின் அர்ப்பணிப்பைக் கண்டு சற்று ஆச்சரியத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தாள். அதைக் கவனித்த ஹரி உரையாடலைத் தொடர்ந்தான்.
கே: இங்கு உள்ள குழந்தைகளைப் பற்றியும் அவர்களிடம் உள்ள இசையார்வத்தைப் பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ப: இங்கு உள்ள குழந்தைகளிடம் நல்ல ஆர்வமும், கலையுணர்வும் உள்ளது. புத்திசாலிகளாகவும், உடனே புரிந்து கொள்ளும் திறம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இசையின் மதிப்பை உணர்ந்து, அதன் ஆழத்தை உணர்ந்து, அதற்கான பயிற்சியில் ஈடுபடவேண்டும். வெற்றியில் ஒரு சதவிகிதம்தான் சொல்லிக் கொடுக்கப்படும் சங்கீதம் என்பது; தொண்ணூற்றி ஒன்பது சதவிகிதம் உழைப்புதான் ஒருவரைச் சிறந்த கலைஞராக மாற்றும் என்பதை உணர வேண்டும். அயராத சாதகமே அவர்களுக்குத் தனியொரு இடத்தைப் பெற்றுத் தரும் வல்லமை படைத்தது.
அம்முவைக் கண்ணோடு கண் நோக்கி ஸ்ரீமதி சொல்லியது கீதாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. கீதா தொடர்ந்து கேட்டாள்.
கே: இங்குள்ள குழந்தைகள் இசை பயிலுவதில் பெற்றோரின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?
ப: பெற்றோரும் இசையின் அருமையை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குழந்தை இசைப் பயிற்சி செய்யும் போது அவர்கள் குழந்தையோடு இருக்க வேண்டும். முக்கியமாக, தானாக அமர்ந்து சாதகம் செய்யும் மனப்பான்மை வரும் வரையில் பெற்றோரில் ஒருவராவது குழந்தையோடு உட்கார்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். பெற்றோர் இசை யின் அருமை உணர்ந்து நடந்து கொண்டால்தான் குழந்தைக்கு அது புரியும். சிறு குழந்தையைப் பயிற்சி செய்யச் சொல்லிவிட்டு பெற்றோர் வேறு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால், குழந்தையின் பயிற்சி சரியாக இருக்காது. நல்ல இசையை வீட்டில் ஒலிக்கச் செய்ய வேண்டும். இசை கற்பிப்பவரிடம் சென்று என் குழந்தைக்கு இசை வருமா என்று கேட்கக் கூடாது. அவ்வாறு கேட்பது, பள்ளிக்குச் சென்று படிப்பு வருமா என்று கேட்பதைப் போன்றது. அவர்களுக்கு இசை பயிலுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதுதான் முக்கியம். 'பழம் பழுக்கும் வரை பொறுமை வேண்டும்' என்று என் தந்தை கூறுவார். அது போல் அவசரமாக மேடையேற்றாமல் நன்கு பயிற்சி பெற்ற பின்னரே மேடையேற்ற வேண்டும்.
கே: உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?
ப: என் தந்தையும் என் சகோதரரும் எனக்குச் சொல்லிக் கொடுத்த நல்ல பழக்கங்களும், ஒழுக்கங்களும், அதை இன்றும் தொடர்ந்து பின்பற்றி வருவதும்தான். எப்போதுமே நான் சிறப்பாகக் கச்சேரி செய்தேன் என்ற நினைப்பு எனக்கு வருவதில்லை. இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மை மேன்மேலும் வெற்றி பெறச் செய்யும். சாதகம், அயராத சாதகம் எப்போதுமே வெற்றிக்குக் காரணமாகும். எல்லாம் இருந்தாலும், கடவுள் அருள்தான் வெற்றிக் கனியைக் கைவசப்படுத்தும்.
கே: அதைக் கைப்பற்ற உங்களுக்கு ஏற்பட்ட சவால்களையும், அதற்காக நீங்கள் செய்ய நேர்ந்த தியாகங்களையும் பற்றிச் சொல்லுங்கள்.
ப: பெண்ணாய் இருப்பது நம் சமூகத்தில் ஒரு சவால். என் குடும்பத்தில் நான் கடைசிப் பெண். என்னுடைய ஆறு வயதில் வயலின் வாசிக்க ஆரம்பித்தேன். என் அண்ணா லால்குடி ஜெயராமன் என்னை விடப் பதினொறு வயது மூத்தவர். என்னுடைய பதினைந்தாம் வயதில் அவருக்குத் துணையாக மேடையில் அமர்ந்து வயலின் வாசித்தேன். அந்தச் சிறிய வயதில் மற்றச் சிறுவர்களைப் போலப் பள்ளிக்குச் செல்லாமல், விளையாட்டோ, உறவினர்களுடன் மகிழ்ந்தோ இருக்காமல் இசையைத் தவிர வேறொரு சிந்தனையில்லாமல் வளர்ந்தது சவால். சிறியவளான நான் என் அண்ணாவுடன் தொடர்ந்து மேடையில் வாசித்தேன். திருமணமான பின் என் கணவர் திரு. ப்ரும்மானந்தம் மற்றும் புகுந்த வீட்டார் துணையோடு இசைப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து, குழந்தைகளைப் பெற்று அவர்களையும் வளர்த்து, அதோடு இசையில் இருந்த பிடிப்பை விடாமலிருந்ததும் சவால். என் அண்ணாவுடன் மிகவும் வெற்றிகரமாகக் கச்சேரி செய்து கொண்டிருந்த சமயத்தில், குழந்தைகள் பிறந்ததும், நான் மேடையேறுவதைக் குறைத்துக் கொண்டு அவர்கள் முன்னேற்றத்திற்காக உழைத்தது ஒரு விதத்தில் தியாகம். நான் அந்தத் தியாகத்தை மிகவும் விரும்பிச் செய்தேன்.
இப்போது அம்முவிடம் ஆர்வமும் தெளிவும் தெரிந்தது. கீதாவே தொடர்ந்து கேட்டாள். |
|
கே: உங்கள் அண்ணா லால்குடி ஜெயராமனைப் பற்றிப் பலரும் அறிந்திடாத விஷயம் எதாவது சொல்லுங்களேன்.
ப: (சற்றுச் சிந்தனையில் ஆழ்ந்த பின்) அண்ணாவிற்குப் புதிர் போடுவதும் அவற்றை விடுவிப்பதும் மிகவும் பிடிக்கும். நானும் அவரும் 'ஆடு புலி ஆட்டம்' நிறைய விளையாடுவோம். அவருக்குப் பிடித்த விளையாட்டு அது. அதிலும் அவர்தான் என்னை வெல்லுவார். என் மகள் அவரைப் பார்க்கப் போகும்போது எப்போதும் எதாவது புதிய புதிர் கொண்டுபோய் அதற்கு விடை கண்டுபிடிக்கச் சொல்லுவாள், அதை அவர் மிகவும் ஆவலோடு செய்வார். எப்போதும் சுறுசுறுப்பான மனமும் எதனையும் சாதிக்க முயற்சி செய்யும் அவர் குணமும் அனைவரும் அறிந்ததுதான்.
கே: உங்கள் மகள் அனுராதா ஸ்ரீதர், மகன் ஸ்ரீராம் ப்ரும்மானந்தம் - இவர்களைப் பற்றி நீங்கள் பெருமைப்படும் விஷயம்?
ப: அனுராதாவும், ஸ்ரீராமும் அன்றும் இன்றும் என் சொல்படி கேட்டு நடந்து கொள்வதுதான் எனக்கு மிகவும் பிடித்த, பெருமைப்படும் விஷயம். நான் என் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினேன். அவர்கள் படிப்பிலும் சிறந்து விளங்கினார்கள். அதே சமயத்தில் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றார்கள். இன்றும் நம்முடைய பாரம்பரிய இசையை அவர்கள் தொடர்ந்து கொண்டிருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் என்னதான் விரும்பினாலும் அவர்கள் முயற்சியில்லாமல் அவர்கள் சாதனை செய்யமுடியாது. அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
ஹரி, கீதா இருவரும் அம்முவைத் தங்களுடன் அழைத்து வந்தது நல்லதாய்ப் போயிற்று என்று எண்ணினார்கள். ஹரி தொடர்ந்தான்.
கே: உங்கள் கச்சேரிகளில் நினைவில் பதிந்த நிகழ்ச்சி எது?
ப: எனக்கு இந்தச் சமயத்தில் நினைவுக்கு வருவது மதுரையில் 1980-ம் ஆண்டு அனுராதாவுடன் செய்த கச்சேரிதான். அதில் எனக்கு மிகவும் பிடித்த ராகமான பைரவியை வாசித்தேன்.
அறுபதுக்குச் சற்று மேல் வயதுள்ள ஒரு பெரியவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பைரவி ராகத்தில் தன்னை மறந்ததாகக் கூறி நூறு ரூபாய் நோட்டு ஒன்றைப் பரிசாக அளித்தார்.
மசூலிப்பட்டிணத்தில் ஒரு முறை என் சகோதரர் லால்குடி ஜெயராமனுடன் வாசித்த கச்சேரியில் ஒருவர் வெள்ளிக் கூடை பரிசாக அளித்ததையும் மறக்க முடியாது.
கே: நீங்கள் ரசித்த வேறு ஒருவர் கச்சேரி?
ப: எனக்கு ஆலத்தூர் சகோதரர்கள் மற்றும் கே.வீ. நாராயணஸ்வாமி அவர்களது கச்சேரியும் மிகவும் பிடிக்கும்.
கே: உங்கள் பார்வையில் மற்ற வயலின் இசை கலைஞர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.
ப: ஒவ்வொருவரிடமும் நல்ல விஷயங்கள் உள்ளதாக நினைக்கிறேன். இக்காலத்தில் இளம் கலைஞர்களும் நன்றாக வாசிக்கிறார்கள்.
கே: தென்றல் பத்திரிக்கை பார்த்திருக்கிறீர்களா?
ப: இரண்டு இதழ்கள் படித்திருக்கிறேன். ஆரம்பம் முதல் இறுதிவரை, மிகவும் நுணுக்கமாக இருக்கிறது. இசைப் பக்கங்கள் மற்ற பல பத்திரிக்கைகளை விடவும் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து அப்படியே இருக்க என் விருப்பம்.
கீதா, ஹரி, அம்மு மூவரும் ஸ்ரீமதி காண்பித்த போட்டோ ஆல்பத்தைப் பார்க்கிறார்கள். சுவையான உணவுக்குப் பின் ஸ்ரீமதி அம்முவுக்கு அனுராதா ஸ்ரீதர் வெளியிட்டுள்ள தியகராஜ கீர்த்தனைகள் அடங்கிய CD ROM ஆல்பத்தைப் பரிசாக அளித்து ஆசீர்வதிக்கிறார். வீடு திரும்புகையில், அம்முவிடம் கலைவிழாவில் சிறந்த முறையில் பாட வேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டிருக்கிறது. மழை நின்ற வானில் முழுமதி.
சந்திப்பு, தொகுப்பு: பத்மப்ரியன் |
|
|
More
குறள் கூறும் மேலாண்மை - பாகம் 1
|
|
|
|
|
|
|