Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | தமிழக அரசியல் | சமயம் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
நேர்காணல்
இசை எல்லோர்க்கும் பொதுவானது தானே!
உறக்கத்திலிருந்து விழிக்க வேண்டும்! - ப. சிதம்பரம்
- சரவணன்|ஜூன் 2002|
Share:
Click Here Enlargeமத்திய அரசில் வர்த்தக அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இருந்து பல புதிய திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தியவர் ப.சிதம்பரம். தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்னும் தனிக்கட்சியைத் தொடங்கி தமிழக அரசியலில் புதிய திருப்பத்தைத் துவக்கிவைத்து, தற்போது மூன்றாவது அணி என்னும் கனவை நனவாக்கப் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் ப.சிதம்பரம் 'தென்றலு'க்கு அளித்த சிறப்புப் பேட்டி...

தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணையப் போகிற நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் நிலை என்ன?

தமிழ்நாட்டில் ஒரு மூன்றாவது அணியை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம். இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால், நாங்கள் தனிக் கட்சியாக இருந்துதான் வலியுறுத்த வேண்டும். அப்படிச் செய்கிற போதுதான் எங்கள் நோக்கம் நிறைவேறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு என்று கருதுகிறோம். காங்கிரஸ் கட்சி இதுவரை மூன்றாவது அணி அமைப்பது பற்றிய தன்னுடைய நிலையைத் தெளிவாக்கவில்லை. குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாற்றாக காங்கிரஸ் தன்னுடைய தலைமையில் ஒரு மூன்றாவது அணியை அமைத்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுமா? என்பது தெளிவாகாத சூழ்நிலையில், எங்கள் நோக்கம் நிறைவேறுவதற்காக நாங்கள் தனிக் கட்சியாகவே செயல்படப் போகிறோம்.

தமிழ்நாட்டில் மூன்றாவது அணி வரப் போகிறது என்ற நல்ல சூழல் தென் பட்ட நிலையில் நீங்கள் மறுபடியும் மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்க ரஜினி வரவேண்டும் என்று கூறியது பற்றி...?

இல்லையே! செய்திகள் அடிப்படையில் கேள்விகள் கேட்கக் கூடாது. யூகங்களின் அடிப்படையிலும் கேள்விகள் கேட்கக் கூடாது.

மூன்றாவது அணி அமைப்பதில் நடுத்தர மக்களிடையே கடந்த தேர்தலின் போது உங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்போதுள்ள நவீன உலகில் இளைஞர்கள் பொருளாதாரம் சார்ந்த கருத் துக்களைக் கூர்மையாகக் கவனிக்கிறார்கள். ஆனால் அதற்கப்புறம் தமிழ்நாட்டில் நீங்கள் பரவலாகப் பயணம் சென்று நீங்கள் பெற்றி ருந்த ஆதரவைப் பெருக்கவில்லை என்கிற மெல்லிய குற்றச்சாட்டு உங்கள் மீது இருக்கிறதே?

அடுத்த தேர்தலுக்கு இன்னும் நான்காண்டுகள் இருக்கிறது. இந்த நான்காண்டுகளில் மூன்றாவது அணியைத்தான் அமைக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இத்தனை கட்சிகள் இருக்கிற தமிழ்நாட்டில் இன்னொரு கட்சி மட்டும் தனியாக பதவியேற்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆக, மூன்றாவது அணி என்று அமைக்கும் போது யார் யார் மூன்றாவது அணிக்கு வர முடியும். காங்கிரஸ், தமிழ்மாநில இணைந்த காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தலித் அமைப்புகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒருவேளை பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவைகள்தான் வரமுடியும். இந்தக் கட்சிகளெல்லாம் திமுக மற்றும் அதிமுகவைச் சில நேரங்களில் சார்ந்திருக்க விரும்புகிறார்கள். சில நேரங்களில் தனித்திருக்க விரும்புகிறார்கள். ஆக, இவர்கள் மத்தியில் ஒரு ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்குகிற சூழலில்தான் மூன்றாவது அணி உருவாகும்.

அந்தக் கருத்தை உருவாக்குவதுதான் என்னுடைய முக்கியமான கடமையாகக் கருதுகிறேன். அதேநேரத்தில் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை வளரவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். இன்று எந்தக் கட்சியிலும் சேராத புதிய இளைஞர்கள் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை யில்தான் பெருமளவில் இணைந்து கொண்டிருக் கிறார்கள். திமுகவில் யாராவது புதிய இளைஞர்கள் சேர்கிறார்களா? அதிமுகவில் யாராவது சேர்கிறார் களா? காங்கிரஸில் யாராவது சேர்கிறார்களா? தலித் அமைப்புகளில் சேர்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை.

இரண்டு நாள்களுக்கு முன்புகூட 120 புத்தம் புதிய இளைஞர்கள் எங்கள் கட்சியில் சேர்ந்திருக் கிறார்கள். பரபரப்பாக அறிக்கைகள் விடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அடுத்த நான்காண்டுகளுக்குள் நம்முடைய இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மூன்றாவது அணி ஏற்பட தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஏதோ நம்முடைய கட்சியை மட்டும் வளர்க்க வேண்டு மென்கிற எண்ணம் உருவானால் மூன்றாவது அணி உருவாகாது.

மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்கள். அதன் பின்னணியில் உங்களுக்கென்று தனித் துவமான பிம்பமொன்று இருக்கிறது. ஆனால் அதைத் தாண்டி உங்களுக்கான தனித்த ஓட்டு வங்கியை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வில்லையே...? காங்கிரஸ் செல்வாக்காக இருக்கும் பகுதிகளையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தீர்களானால், உங்க ளால் உங்களுக்கென்று ஒரு ஓட்டு வங்கியை உருவாக்கியிருக்க முடியுமே...?

மூன்றாவது அணியில் காங்கிரஸ¤ம் இருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். த.மா.க தனியாக இருந்தாலும் காங்கிரஸோடு இணைந் தாலும் அவர்களும் மூன்றாவது அணியில் இருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். ஆக, ஆள்பிடிப்பதில் போட்டி கிடையாது. காங்கிரஸ் தோழன் உங்கள் பக்கம் இருக்கிறானா? எங்கள் பக்கம் வருகிறானா? என்பதில் போட்டிகள் கிடையாது. திமுக, அதிமுக ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் அரசியல் இடத்தை தாண்டி ஒரு பெரிய வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடத் தில்தான் மூன்றாவது அணியை உருவாக்க முடியும். அதே நேரத்தில் அரசியல் இடத்தை இந்தவிரு கட்சிகளைவிட விரிவுபடுத்த வேண்டும். இதைத்தான் மற்ற மாநிலங்களில் வெற்றிகரமாகச் செய்திருக் கிறார்கள். உதாரணமாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் மட்டும் இருந்த உத்தரப் பிரதேசத்தில் இன்றைக்கு முலாயம்சிங் யாதவ் தன்னுடைய அரசியல் இடத்தை விரிவுபடுத்தி யிருக்கிறார். மாயாவதி தன்னுடைய அரசியல் இடத்தை விரிவு செய்திருக்கிறார்கள். அந்த மாதிரி இந்தவிரு கட்சிகள் அல்லாத அரசியல் கட்சிகள் மூன்றாவது அணி அமைத்து தங்களுடைய அரசியல் இடத்தை விரிவாக்க வேண்டும் என்று சொல்கிறேனே ஒழிய, அந்த இடத்திற்குள் இருப்பவர்களுக்குள் போட்டிகள் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

நீங்கள் சொல்கிறபடி பார்த்தால், தலித் மக்களின் எழுச்சி மாயாவதி வெற்றியையும், யாதவ சமூகத்தின் எழுச்சி முலாயமையும் வெற்றிபெறச் செய் துள்ளது. இது கிட்டத்தட்ட பிராந்திய அரசியல் உருவாகியிருப்பதாகச் சொல்ல லாம். ஆனால் ஏற்கனவே தமிழ்நாட்டில் பிராந்தியவாத அரசியல் இருக்கிறது. இந்த தேசிய கட்சிகள் வரவேற்பு பெற முடியாத தற்கு இங்குள்ள தமிழ்ப் பிரச்சனைகளைப் பேசவில்லை என்பதும் ஒரு காரணம்தானே?

திமுக மற்றும் அதிமுக மட்டும்தான் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுத்தன என்ப தெல்லாம் ஒரு மாயத் தோற்றம்தான். காங்கிரஸ் கட்சி தான் செய்ததை எடுத்துச் சொல்லாததன் காரணமாக, விளம்பரம் மற்றும் பிரச்சாரம் செய்யாததன் காரணமாக வந்த பலவீனம் இது. இந்த இருகட்சிகளைவிட அதிகமாகவே காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் பாடுபட்டு இருக்கிறது. உதாரணமாக திரவியம் எழுதிய 'தமிழ் வளர்த்த தேசியம்' புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்;

பிரச்சாரத்தில் தேசியக் கட்சிகளைவிட திராவிடக் கட்சிகள் கெட்டிக்காரர்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி போன்ற தேசியக் கட்சிகளைவிட பிரச்சாரத்தில் அவர்கள் கெட்டிக்காரர்கள். எனவே அவர்கள்தான் எல்லாமும் செய்தார்கள் என்ற ஒரு மாயை நிலவுகிறது. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டு வந்தது யார்? தமிழைப் பாடமொழியாகக் கொண்டு வந்தது யார்? தமிழாசிரியர்களுக்கு மற்ற மொழி ஆசிரியர்களுக்கு ஈடாக ஊதிய உயர்வு தந்தது யார்? இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில்தான் நடந்தன. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. பிரச்சாரத்தில் கெட்டிக்காரர்கள் அவ்வளவுதான்!

மூன்றாவது அணி என்று நீங்கள் குறிப்பிட்டு வரும் போது, கடைசி யாகக் கொஞ்சம் தயக்கமாகவே பா.ம.கவைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். அது ஏன்?

ஏனெனில் பா.ம.கவின் நிலைப்பாடு பற்றிச் சரியாக எனக்குப் புரியவில்லை. ஒரு தேர்தலில் திமுகவுடன் இருக்கிறார்கள். இன்னொரு தேர்தலில் அதிமுக வுடன் இருக்கிறார்கள். அவர்கள் திராவிடக் கட்சிகளைச் சார்ந்துதான் இருக்கப் போகிறார் களா? அல்லது தாங்கள் ஒரு திராவிடக் கட்சி அல்ல என்பதை வெளிப்படுத்தி மூன்றாவது அணியில் சேரப் போகிறார்களா? என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் பா.ம.க தாங்கள் ஒரு திராவிடக் கட்சி அல்ல, சமூகத்தில் நலிந்த பிரிவினர்களை பிரதிநிதித்துவம் செய்யும் வர்க்கரீதியான ஒரு அமைப்பு என்று தன்னை உணர்ந்து திராவிடக் கட்சிகளுக்கு அப்பால் ஒரு அணியில் இணைய முன்வந்தால், மூன்றாவது அணியில் பா.ம.கவுக்கும் நிச்சயமாக ஒரு இடம் உண்டு என்று நான் நினைக்கிறேன்.

தமிழ்நாட்டு அரசியலில் இப்போது முக்கியமான பிரச்சனை என்ன வென்றால்; பிஜேபி இங்கு பெற்றுள்ள சிறிய வளர்ச்சி. இந்த வளர்ச்சியில் இருபெரும் திராவிடக் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவு தருகிறார்கள். இவர்களிருவரும் மாறி மாறி பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ளும் போது இடைப்பட்ட நீங்கள் குறிப்பிடும் மூன்றாவது அணியில் இடம்பெறக்கூடிய கட்சிகள் யாவும் இங்கும் அங்கும் மாறி மாறி அல்லாடுகின்றன. உங்கள் கட்சிகூட அப்போது இதுபோன்ற பிரச்சனைகளைச் சந்தித்தது...? இதனால் கொள்கைகள் சார்ந்த பிரச்சனை கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக் கின்றனவே...?

இல்லை. அப்போதுகூட நாங்கள் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்தோம். அவர்களை எதிர்த்த போதும் எங்கள் வேட்பாளர்கள் 2 பேர் வெற்றி பெற்றார்கள். பிஜேபி தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற்கு அதிமுக, அடுத்து திமுக உதவி செய்தது என்பதை மறுக்க முடியாது. அகில இந்திய அளவில் பிஜேபி வளர்ச்சி பெற்ற போது அதன் தாக்கம் தமிழ்நாட்டில் இருந்தது. ஆனால் அந்தத் தாக்கம் இன்றைக்கு ஏறத்தாழ மறைந்து விட்டது. கிராமப் பகுதிகளில் பத்து கொடிகளில் இரண்டு கொடியாக பிஜேபி கொடி பறந்த காலம் இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்தது. இப்போது பிஜேபி தமிழகத்தில் மிக மிக தேய்ந்து விட்டது.

இந்தவிரு திராவிடக் கட்சிகள் பிஜேபியை உதறித் தள்ளி விட்டால், இங்கு பிஜேபிக்கு ஓரிடம்கூடக் கிடைக்காது.

நடுத்தர மக்களிடையே மிகச் சிறிய ஆதரவொன்று பிஜேபிக்கு இருக்கத் தானே செய்கிறது?

இருக்கிறது. எல்லா ஊர்களிலும் வலதுசாரி எண்ணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இந்து மதத் தீவிரவாதிகள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் அந்த ஆதரவுகள் ஓட்டாக மாறி அவர்களுக்கு வெற்றியெல்லாம் பெற்றுத் தந்து விடாது.

காங்கிரஸ் சார்ந்த அனைத்துக் கட்சிகளுக்கும் வைகோவுடனோ பா.ம.கவுடனோ இணைவதற்கு விடு தலைப் புலிகள் பிரச்சனை சிறு இடறலாகவே இருந்து வருகிறதே?

அப்படிச் சொல்ல முடியாது. அது இடர்பாடு, நெருடல்தான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே, எந்தக் காலத்திலும் ஒரு அரசியல் உறவு ஏற்படாது என்று சொல்ல முடியாது. இதில் பா.மகவுக்கும் தேசியக் கட்சிகளுக்குமிடையே இருக்கக்கூடிய நெருடல் என்பது விடுதலைப் புலி மற்றும் தமிழீழத்தை ஆதரிப்பதில் தான் இருக்கிறது. ஆனால் மதிமுகவைப் பொருத்தவரை இன்னும் பல பிரச்சனைகளில் கடுமையான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. தமிழீழத்தை ஆதரிக்கிறார்கள் என்பது ஒன்று; இரண்டாவது இந்தியாவிலேயே பிஜேபிக்காக வரிந்து கட்டிக் கொண்டு பேசுபவர் வைகோ ஒருவர்தான்! குஜராத் மண்ணிலே இவ்வளவு கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிற போதும், அந்த மண்ணிலேயே போய் பிஜேபியை வைகோ ஆதரித்துப் பேசுவது, அவருடைய மதச்சார்பின்மை கொள்கை மீதே பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தன்னுடைய அமைச்சர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள் என்பதற்காகவே அவர் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு தருவதே அவரை மற்ற தேசியக் கட்சியினர்களிடமிருந்து அதிக தூரம் தள்ளி வைத்திருக்கிறது.

அடுத்த தேர்தலில் திமுக காங்கிரஸ் இணைவதற்குக்கூடத் தடையாக விடுதலைப் புலிகள் பிரச்சனை இருக்கிறதே...?

இருக்கலாம். ஆனால் நான் பாராளுமன்றத் தேர்தலைப் பற்றிப் பேசவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பற்றி நான் பேசுகிறேன். 2006-இல் திமுக, அதிமுகவுக்கு மாறாக ஒரு அணியை உருவாக்க முடியுமா? இந்த நோக்கத் தில்தான் நான் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். பாராளுமன்றத் தேர்தலில் என்ன நடக்கும் என்று எனக்குச் சொல்லத் தோன்றவில்லை.

கோத்ரா சம்பவங்களைப் பார்த்து பெரிய அளவிற்கு தமிழ்நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்கள், அரசியலா ளர்கள் போன்றோர் கொதித்தெழவில்லையே. இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்து கிறதா?

ஏனென்றால் அந்தச் சம்பவம் இங்கு நடக்க வில்லை. தூரத்தில் இருந்து பார்ப்பதினால் இப்படி அமைதியாக இருக்கிறார்கள். பாதிக்கப்படாமல் இருப்பதுகூட ஒருவகையில் நல்லதுதான். தெருவில் இறங்கி ஒருசாரார் இந்து வெறியர்களுக்கும் மற்றொரு சாரார் முஸ்லீம் வெறியர்களுக்கும் ஆதரவாகப் போராட்டங்களில் இறங்கினால் நிலைமை இன்னும் மோசமாகப் போய்விடும். ஆனால் உள்ளூர எல்லோருடைய மனதிலும் ஓர் ஆழமான பாதிப்பை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்தியிருக் கின்றன. குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் மிகப் பெரிய காயத்தை ஏற்படுத்தி யிருக்கின்றன. அதை அவர்கள் வெளியில் சொல்லமுடியாமல் துயரத்தை அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதினாலேயே அவர்களுக் குக் காயம் ஏற்படவில்லை என்று சொல்ல முடியாது. கல்லூரியில் இருக்கக்கூடிய இளைஞர்கள் இது பற்றிச் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள்.

91-இல் ஒரு இக்கட்டான சூழ்நிலை யில் உலகமயமாக்கத்தைக் கொண்டு வருவதில் உங்களுக்கும் பங்கிருந்தது. இப்போது பத்தாண்டுகளைக் கடந்த நிலை யில் திரும்பிப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?

திரும்பிப் பார்க்கும் போது செய்தது தவறே கிடையாது. செய்தது சரி. இன்னும் முனைப்போடு செய்திருக்க வேண்டும். இன்னும் வேகமாகச் செய்திருக்க வேண்டும். அதற்கு அரசியல் தடைகள், இடர்ப்பாடுகள் இருந்தன. ஆனால் 91-இல் எடுத்த பாதைதான் சரியான பாதை. காங்கிரஸ் கட்சி தலைவர்கள்கூட அப்போது இதைப் பற்றிப் பேசுவதற்குத் தடுமாறினார்கள். ஆனால் எனக்கு கொஞ்சமும் இதைப் பற்றிச் சந்தேகம் இல்லை.

ஆனால் இதில் சில சமூகக் காரணிகள் இருக்கின்றனவே! உதாரணமாக வெளிநாட்டு முதலீடுகள் வளர்ந்த மாநிலங்களில் மட்டுமே வந்திருக்கின்றன. மற்ற மாநில மக்கள் இதனால் பாதிப்படை கிறார்களே. மக்கள் மத்தியில் சமூகக் கோபம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றனவே?

'காற்று வந்ததும் கொடியசைந்ததா கொடியசைந் ததும் காற்று வந்ததா' என்று ஒரு பாட்டு இருக்கிறது. குஜராத், மஹாராஷ்டிரம், ஆந்திரா, கர்நாடகம், ஓரளவிற்கு தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நிலையான அரசு, தெளிவான கொள்கைகள், பெரும்பகுதி நேர்மையான நடைமுறைகள், திறமையான அதிகார வர்க்கம் இருப்பதால்தான் முதலீடுகள் வருகின்றனவே ஒழிய, முதலீடுகள் வந்ததால் இவர்கள் வளர்ந்தார்களா? இவர்கள் வளர்ந்ததினால் முதலீடுகள் வந்தனவா? என்று விவாதங்கள் பண்ணிக் கொண்டேயிருக்கலாம்.

இதைப் பீகார், உத்தரப்பிரதேச மக்கள் உணர வேண்டும். பீகாரில் திரும்பத் திரும்ப லல்லு பிரசாத் யாதவை முதலமைச்சராகத் தேர்தெடுத்தார்கள் என்றால், அவருடைய மனைவியை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தார்கள் என்றால், முதலீடுகள் வராது. இதற்கு கர்நாடக மக்களையும் குஜராத் மக்களையும் குறை சொல்லி என்ன பயன்? ஏன் அவர்கள் மாநிலத்திற்கு முதலீடுகள் அதிகம் வரவில்லையென்று பீகார், உத்தரப் பிரதேசத்து மக்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். ஏன் அவர்கள் மாநிலத்தில் ரௌடிகளையும் கொலைகாரர்களையும் தேர்தெடுத்து சட்டமன்றத்துக்கு அனுப்புகிறோம் என்று அவர்கள் சிந்திக்க வேண்டும். அதிகார வர்க்கம் ஏன் சீர்குலைந்து போயிருக்கிறது என்று அவர்கள்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பின்தங்கிய மாநிலங்கள் தங்களுடைய நீண்ட உறக்கத்திலிருந்து மீள வேண்டும். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் பின்தங்கிய மாநிலங்கள்தான். ஆனால் இந்த இரண்டு மாநிலங்களும் தங்களுடைய உறக்கத்திலிருந்து விழித்ததால் முதலீடுகள் வர ஆரம்பித்து விட்டன. ஆகவே இது பற்றி அந்தந்த மாநில மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஜெயங்கொண்டான் பழுப்பு நிலக்கரி திட்டம் போன்றவை களை ஏன் உடனடியாகச் செயல்படுத்த முடியவில்லை?

இது யாருடைய குற்றம். இது மாநில அரசினுடைய குற்றம். காமராஜ் காலத்தில் ஒரு நெய்வேலியைக் கொண்டுவர முடிகிறது. திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்யும் போது ஏன் ஜெயங் கொண்டான் திட்டத்தைக் கொண்டுவர முடிய வில்லை. ஜெயங்கொண்டானில் இருக்கிற பழுப்பு நிலக்கரி என்னைத் தோண்டி எடுக்காதீர்கள் என்று சொல்லவா செய்கிறது? திறமையான ஆட்சியாளர் கள் இருந்திருந்தால் இந்தத் திட்டம் நிறை வேறியிருந்திருக்கும்.
தமிழ்நாட்டில் நீங்கள், முரசொலி மாறன், கலைஞர், ஜெயலலிதா போன்ற முதன்மையான தலைவர்கள் பலரும் தாராளமயமாக்கத்தை ஆதரிக்கிறவர் களாக இருந்தும், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், ஏன் தமிழ்நாடு முதலீட்டாளர் களை அதிகம் கவர்கிற மாநிலமாக மாற்றமடையவில்லை?

நான்கு பேரையும் ஒரே வரிசையில் வைக்கக் கூடாது. இதில் கலைஞரும் செல்வி ஜெயலலிதாவும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். மாறன் மத்தியில் அமைச்சராக இருப்பவர். நான் மத்தியில் பொறுப்பில் இருந்தவன். தமிழ்நாட்டில் இன்றைக்கும் நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்ததில்லை. ஆகவே இதில் என்னைச் சேர்க்காதீர்கள்.

என்னைப் பொறுத்தவரையில் நான் மத்தியில் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த காலத்திலும் சரி, நிதித்துறை அமைச்சராக இருந்த காலத்திலும் சரி, தமிழ் நாட்டிற்கு தகுதியுள்ள முதலீடுகள் வருவதற்கு மிகுந்த ஆர்வமும் முனைப்பும் காட்டியிருந்திருக்கிறேன். பல முதலீடுகள் வந்தும் இருக்கின்றன. உதாரணமாக ஸ்டெர்லைட், ·போர்டு மோட்டார் கம்பெனி, செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலை போன்றவைகளெல்லாம் அந்தக் காலத்தில்தான் வந்தன.

ஆக, அதற்குப் பிறகு பெரிய முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வரவில்லை என்பதை நான் கடந்த தேர்தலிலேயே சுட்டிக் காட்டினேன். இதற்குக் காரணம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கடைசி இரண்டு வருடங்களில் அவர்கள் இதுகுறித்துக் கவனம் செலுத்தவில்லை என்பதுதான். இன்றைக்கும் ஹரியானா, குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு முதலீடுகள் வந்து கொண்டுதானே இருக்கின்றன. இங்குள்ள ஆட்சியாளர்கள் போதுமான அக்கறை காட்டாததினாலேயேதான் முதலீடுகளைக் கவர்ந்திழுக்க முடியவில்லை.

போக்குவரத்துத் துறை போன்ற இலாபம் வரக்கூடிய துறைகளை, மறுசீரமைப்பது குறித்துக்கூடச் சிந்திக்காமல் கண்ணை மூடிக் கொண்டு நஷ்டம் என்று சொல்லி தனியார்வசம் ஒப்படைக்க நினைப்பது சரியா?

எனக்குத் தெரிந்து ஒவ்வொரு முறையும் திமுக மற்றும் அதிமுக போக்குவரத்துத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்து நஷ்டம் வராமல் தடுத்து இலாபத்தை ஈட்டுவோம் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். இதுவரை பத்துப் பனிரெண்டு பேராவது போக்குவரத்துத் துறை அமைச்சர்களாக இருந்திருப்பார்கள். ஏன் இலாபம் வருகிற மாதிரி நடத்த முடியவில்லை?

சில துறைகளில் அரசு ஈடுபடும் போது அதில் இலாபமீட்ட முடியாது. அதில் போக்குவரத்துத் துறையும் ஒன்று. உலகமெங்கும் இது தெரிந்த ஒரு பாடம். அப்படியிருக்கையில் திரும்பத் திரும்ப விட்டில் பூச்சி போய் விளக்கில் விழுகிற மாதிரி செய்து கொண்டிருப்பதில் பயனில்லை. நல்ல இலாபத்தில் இயங்கக்கூடிய துறைகளைத் தனியார்மயமாக்குவது தேவையில்லை. அதனால்தான் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனைத் தனியார்மயமாக்க வேண்டாம் என்று சொல்கிறேன். யாராவது மேட்டூர் அணையைத் தனியார்மயமாக்குவார்களா?

தொடர்ந்து நஷ்டத்தில் ஓடுகிற தொழிற் சாலைகள், இனி இலாபத்தில் ஓட முடியாது என்கிற நிலைக்கு வந்த தொழிற்சாலைகளை, போட்டி காரணமாக விளிம்புக்குத் தள்ளப்பட்ட தொழிற் சாலைகளைத் தனியார்மயமாக்குவதுதான் புத்திசாலித்தனம்.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற இரட்டைக் குடியுரிமை திட்டம் பற்றி உங்கள் கருத்து?

இரட்டைக் குடியுரிமை என்பது இரட்டைப் பாஸ்போர்ட். என்ன அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? இரண்டு பாஸ்போர்ட் அவர்களுக்குத் தேவை. இந்தியாவுக்கு வந்து போவதற்கு இந்தியப் பாஸ்போட் உதவுகிறது. மற்ற நாடுகளுக்குப் போவதற்கு உதாரணமாக ஒருவர் அமெரிக்காவில் இருந்தால் அவருக்கு அமெரிக்க பாஸ்போர்ட் உதவுகிறது. இந்த இரட்டைப் பாஸ்போர்ட் வைத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்பதுதான் கேள்வி.

அதற்கெதற்கு இரட்டைக் குடியுரிமை என்று பெயர்? இரட்டைக் குடியுரிமை என்று சொல்லி அங்கேயும் ஓட்டுப் போடுவேன், இங்கேயும் ஓட்டுப் போடுவேன் என்று சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இரண்டு நாடுகளிலும் நான் ஓட்டுப் போடுவேன் என்று சொல்லக்கூடாது. இரண்டு பாஸ்போர்ட் வைத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்கிற சர்சைதான் இது. இரண்டு பாஸ்போர்ட் வைத்திருக்க அனுமதியளிப்பதில் தப்பில்லை என்பது என்னுடைய அபிப்ராயம்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் இங்கு வந்து தொழில்முனைவோர்களாக மாற வேண்டும் என்று பரவலாக எழுப்பப்படும் கருத்து பற்றி...?

இதை ஒரு உணர்வுப்பூர்வமாகப் பிரச்சனையாக மட்டும் அணுக முடியாது. இது முழுக்க முழுக்க வியாபாரம் சார்ந்த முடிவு. இதில் 'சென்டி மெண்டு'களுக்கெல்லாம் இடமில்லை. இன்று இந்தியாவில் தொழில் தொடங்குவதற்குண்டான நல்ல சூழ்நிலை அமைந்து, நல்ல வாய்ப்புகள் அமைந்து இருந்தால், அவர்களாகவே வந்து தொழில் தொடங்குவார்கள். அந்த வாய்ப்பு இங்கு குறைவாக இருப்பதால் இங்குவரத் தயங்கு கிறார்கள். ஆக, அதற்கான சூழ்நிலையைத் திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் உருவாக்கி யிருப்பதாக என்னால் சொல்ல முடியாது. மாறாக ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்கள்தான் வெளிநாட்டில் வசிக்கக்கூடிய அவர்கள் மொழி பேசும் மக்களை திரும்பி அழைத்துக் கொண்டு வந்து தொழில் தொடங்குவதற்கு உண்டான சூழ்நிலையை அமைத்துத் தந்தன. தமிழ்நாட்டில் இது உருவாகவில்லை. ஆட்சியாளர்களிடம் உள்ள தவறு இது.

ஆட்சியாளர்களிடம் உள்ள தவறு ஒருபுறமிருந்தாலும், பெரும்பான்மை யான தமிழர்கள் உலகம் முழுவதும் சென்று வேலை செய்ய வேண்டும் என்ற மனப் பக்குவம் உள்ளவர்களாகவேதானே இருக் கின்றனர்...?

அதெல்லாம் பழைய காலம். ஒருகாலத்தில் இப்படி இருந்தது. நான் இல்லையென்று சொல்லவில்லை. இன்றைக்கு நிறையத் தமிழர்கள் அமெரிக்காவில் சொந்தத் தொழில் புரியும் தொழிலதிபர்களாக இருக்கின்றனர். ஒரு காலத்தில் வேலைக்குத்தான் போனார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இன்றைக்கு மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களைப் போல தொழிலதிபர்களாக, தொழில் நிறுவனர்களாக பலர் மாறியிருக்கின்றனர்.

ஈழத்துப் பிரச்சனையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்...?

ஈழப் பிரச்சனையில் இரண்டு இனங்களுக்கிடையே கசப்பான வரலாறு இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. ஆனால் இந்தக் கசப்பு மறைந்து அவர்கள் ஒருநாட்டு மக்களாக வாழ வேண்டும் என்பதே நமது கருத்து. இந்தியா பன்மைத் தன்மை உள்ள நாடு. இலங்கையும் பன்மைத் தன்மை உள்ள நாடுதான். இலங்கையில் தமிழர்களுக்குத் தனிநாடு என்று சொன்னால், இந்தியாவிலுள்ள பல மாநில மக்களும் தனிநாடு கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?

ஆக, எந்த நாடும் இனத்தின் அடிப்படையிலும் மொழியின் அடிப்படையிலும் பிளவுபடுவதை நாம் ஆதரிக்க முடியாது. நம்முடைய நாட்டினுடைய கொள்கை என்னவென்றால், ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்கள் சரிசமமாக உரிமைகள் எல்லாம் பெற்று குடிமக்களாக வாழ வேண்டும். அந்தக் கொள்கைக்கு விரோதமாக இன்னொரு கருத்தைப் பரப்புவதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். இந்தப் பிரச்சனையைப் பற்றி அவர்களாகவே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

சந்திப்பு:சரவணன், விக்ரம்தர்மா
More

இசை எல்லோர்க்கும் பொதுவானது தானே!
Share: 




© Copyright 2020 Tamilonline