|
சுஜாதா மூர்த்தி |
|
- விஷால் ரமணி, அசோக் சுப்ரமணியம்|அக்டோபர் 2001| |
|
|
|
ஹாலிவுட் இசை நட்சத்திரங்களின் நம்பிக்கை நட்சத்திரம்
அமெரிக்க மண்ணில், சாதாரணமாக, அமெரிக்கர் அல்லது வெள்ளைத் தோல்காரர்கள் மட்டுமே பெரும்பாலும் ஆக்ரமித்து கொண்டிருக்கும் சில துறைகளில், இப்போது, நம்மவர்கள், குறிப்பாக தமிழர்கள் கொடிகட்ட ஆரம்பித்துவிட்டார்கள்... பறக்கவேண்டியது தான் பாக்கி. ஹாலிவுட்டின் நைட் ஷ்யாமளன், மீரா நாயர் போன்ற வெகுநன்றாக அறிமுகமான, தெரிந்தமுகங்களைப் போல, பின்னணி வேலைகளில் ஹாலிவுட்டில் பல இந்தியர்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், தனிப்பட்ட இசைக் கலைஞர்கள், மற்றும் இசைக் குழுக்களின் நிகழ்ச்சிகளை திட்டமிடுதல் தொடங்கி, வெற்றிகரமாக அரங்கேற்றும் வரை முதலான, நிர்வாகம் செய்யும் 'பொதுஜன உறவு' (public relations) தொழிலில், தனக்கென தனிஇடத்தைப் பிடித்துள்ளார்..நம்ம ஊரு சிங்காரி.. சுஜாதா மூர்த்தி...! மேற்கத்திய இசை பிரபலங்களான ·ப்ராங் ஸினாட்ரா, பீட்டில்ஸ் (பால் மெக்கார்ட்னி, ரிங்கோ ஸ்டார், ஜ்யார்ஜ் ஹேரிஸன்), யோகோ ஓனோ, டீனா டர்னர், டுரான்-டுரான், பீச் பாய்ஸ் போன்றவர்களின் நிகழ்ச்சிகளை, விளம்பரப்படுத்துமளவுக்குப் பிரபலம் சுஜாதா! ஹாலிவுட்டில், பிரபல நடிகை ஷெரான் ஸ்டோன், வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர், 5 மில்லியன் டாலர் வீட்டுக்குச் சொந்தக்காரர் சுஜாதா மூர்த்தி..! கடந்த 15ம் தேதி அன்று, அவரோடு, தென்றலுக்காக செய்த டெலி-முகத்தின் தமிழாக்கம் இதோ!
"ஹலோ சுஜாதா.. ஹலோ விஷால்(வி).. ஹலோ அஷோக்(அ).." என்னும் தொடக்க அறிமுகங்களுக்குப் பிறகு,
வி: வணக்கம் சுஜாதா.. தென்றல் வாசகர்களுக்காக, இந்த டெலிபோன் வழி நேர்முகத்துக்கு, நீங்கள் ஒப்புக் கொண்டது பற்றி மிக்க மகிழ்ச்சி. நீங்கள் மேற்கத்திய இசைத்துறைக்கலைஞர்களுக்காக இப்போது 'பொதுஜன உறவு' (public relations) வேலை செய்கிறீர்கள். கட்டாயம் மேற்கத்திய இசையப் பற்றி நிறையவே தெரிந்திருக்கும்.. அதற்கும் முன்பாக, உங்களுக்கு, இந்தியக் கலைகளில் பரிச்சயம் உண்டா..? இந்திய இசை அல்லது நாட்டியம் என்று ஏதாவது..?
சுஜாதா: நிச்சயமாக.. ஹ்யூஸ்டனிலும், பிறகு லாஸ் ஏஞ்சலிஸிலும் நான் பரதநாட்டியம் கற்றுக்கொண்டேன், ரொம்ப நாட்களுக்கு முன்னால். அப்போதெல்லாம், இப்போதிருப்பது போல், நாட்டியப்பள்ளிகளோ, ஆசிரியர்களோ அல்லது நிறைய அளவில் மாணவர்களோ கிடையாது. கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும், மிகுந்த தூரம் பிரயாணம் செய்யவேண்டும். அதெல்லாம் வெகுநாட்களுக்கு முன்.
வி: சுஜாதா.. நீங்கள் மருத்துவத் துறைக்கான முன்-மருத்துவ (pre-med), படிப்பு படிக்கும் போது, திடீரென, "என்டெர்டெய்ன்மென்ட்" துறைக்கு மாறிவிட்டீர்கள் இல்லையா..? எப்படி, எவ்வாறு இம்மாற்றம் நிகழ்ந்தது..?
சுஜாதா: குறிப்பாக, இசைத்துறை தொடர் பாக...! என்னுடைய பெற்றோரிடம் நீங்கள் பேசும் போது, இதுபற்றி நீங்களே தெரிந்து கொள்வீர்கள். சிறுவயதிலிருந்தே, நாங்கள் இசைநிறைந்த சூழலில்தான் வளர்ந்தோம். என்னுடைய தந்தையின் குடும்பம், கர்நாடக இசையில் மூழ்கிய ஒன்று. வயலின்மேதை லால்குடி ஜெயராமன் போன்றோர் எங்கள் குடும்பத்தோடு மிகுந்த தொடர்புடையவர்கள்.
வி: உங்கள் பெற்றோரில் எவராவது பாடவோ, அல்லது இசைகருவியினை வாசிக்கவோ செய்வார்களா..?
சுஜாதா: எனக்குத் தெரிந்தவரையில் கச்சேரிகள் செய்யுமளவுக்கு இல்லை. ஆனால், மிகுந்த இரசனை உடையவர்கள். என்னுடைய அம்மாவுக்கு, அக்கார்டியன் வாத்தியத்தில் சிறுவயது முதலே பழக்கமுண்டு. கேள்வி ஞானத்திலேயே, சில வாத்தியங்களை வாசிக்க அவர்களுக்குத் தெரியும்.
வி: அவர்கள் நீங்கள் வசித்த ஹ்யூஸ்டன் பகுதியில், இந்தியாவிலிருந்து வரும் இசைக் கலைஞர்களின் நிகழ்சிகளை ஏற்பாடு செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.. இல்லையா..?
சுஜாதா: ஆமாம்.. யூ.எஸ்-க்கு வந்த நாள் முதலாக...! அதாவது 1960-களிலுருந்தே என்று நினைக்கிறேன். என்னுடைய பெற்றோர்கள் இங்கு படிக்க எங்களுக்கு முன்னமேயே வந்திருந்தனர்.. நான் 68-69-ல் இங்கே வந்திருப்பேன் என்று நினைக்கிறேன் அப்போதெல்லாம், இந்த அளவுக்கு இந்தியர் களே இல்லை. தெரிந்த நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு, சிறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் தொடங்கினார் என்னுடைய அம்மா. பிறகு முதன் முதலாக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள 'மாலிபு' பாலாஜி கோவிலுக்காக, நிதி திரட்டவேண்டி, வைஜயந்தி மாலா அவர்களின் நாட்டிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததும் என்னுடைய தாயார்தான்.
வி: நீங்கள் வளர்ந்த சூழ்நிலையே அப்படியானால்...பொதுஜன தொடர்பு நிறைந்துள்ளதே..!
சுஜாதா: முழுமையாக சரி. நினைவு தெரிந்த நாள் முதல், வளர்ந்ததெல்லாம், இசை, இசைக்கலைஞர்கள், கலை நிகழ்ச்சிகள், அவற்றை ஏற்று நடத்துதல், விளம்பரப்படுத்துதல், டிக்கட்டுகளை விற்றல் போன்ற சூழ்நிலைதான். நாங்களும், இவற்றிலெல்லாம், உற்சாகமாக பங்கெடுத்துக்கொண்டிருக்கிறோம். இத்தனைக்கும் என்னுடைய தந்தை 'நிதி திட்ட அமைப்பு/நிர்வாக மேலரா'கவும் (Financial Planning Manager), என்னுடை தாய், நூலக அலுவலராகவும் (Librarian), வேலை செய்துகொண்டு, ஓய்வு நேரங்களில், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.
வி: உங்களுக்கு, யாரேனும் உடன் பிறந்தவர்கள்..?
சுஜாதா: ஒரு தங்கையும், தம்பியும் உள்ளனர். நான்தான், மூத்தவள்.
வி: அவர்களுக்கும், இதுபோல ஆர்வம் உண்டு இல்லையா..?
சுஜாதா: இல்லை. என்னுடைய தங்கை சமூக சேவகியாகவும், தம்பி, 'பேடன்ட்' (Patent) வழக்கறிஞராகவும் இருக்கிறார்கள்.
அ:சுஜாதா.. இங்கு பிறந்து வளரும் குழந்தைகளுக்கு, இந்தியப் பெற்றோர் கள், நம்முடைய இசை மற்றும் நாட்டியம் இவைகளில், இரசனை, ஆர்வம், தேர்ச்சி பெற மிகுந்த முயற்சிசெய்கிறார்கள். சில நேரங்களில் அவர்களை, மீண்டும் மீண்டும் இவ்வகையான நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்செல்வது மூலமாக, சில சமயங்களில் வலுக்கட்டாயமாகக் கூட..! இதுபோல, விருப்பத்திற்கு மாறாக திணிக்கப் பட்டதாய் நினைத்ததுண்டா..? நீங்கள், இங்கு இயற்கையான அமெரிக்க சூழ்நிலைக்கு வளர்வதற்கு, இதுபோன்ற திணிப்புகள் தடையாக இருந்ததாக நினத்ததுண்டா..? எந்த அளவுக்கு மனப்பூர்வமாக இவற்றை ஒத்துக் கொள்ள முடிந்தது..?
சுஜாதா: என்னுடைய பெற்றோர்கள், எப்போதுமே, எதையுமே எங்கள் மேல் திணித்தது இல்லை. எப்போதும், இசைக் கலைஞர்களும், நாட்டியக்கலைஞர்களும் சரி, எங்கள் வீட்டில் வந்து தங்கி இருந்ததினால், நாங்களெல்லாம், அவர்களை, மிக நெருக்கமா அறிந்து கொள்ளவும், அவர்களோடு பழகவும் முடிந்தது. அதனால், நிகழ்ச்சிகளுக்குச் செல்வது என்பது, எங்கள் நெருங்கிய உறவு, மற்றும் நண்பர்களை ஊக்குவிக்க செல்வதுபோல் ஆகிவிட்டது. உதாரணமாக, கமலா லக்ஷ்மண் அவர்கள் நிகழ்ச்சிக்கு வரும் போது, அவருடனேயே இருந்து, ஒத்திகை, திட்ட மிடுதல், நிகழ்ச்சி பங்கீடு, தலை அலங்காரம், ஒப்பனை, பிறகு நிகழ்ச்சி என்று, தொடக்கம் முதல், இறுதி வரை எல்லாவற்றிலும், கூடவே இருந்து பழகிவிட்டதால், நிகழ்ச்சி என்பதை ஒரு தனி வெளிக்காரியமாகக் கொள்ளவில்லை.. எப்போதும், திணிக்கப்பட்டதில்லை... நிச்சய மாக இல்லை...!
வி: ஆக, நீங்கள் இந்த அனுபவங்களை நிச்சயமாக இரசித்தீர்கள் இல்லையா..?
சுஜாதா: மிகவும்..! என்னுடைய தாயிடம் பேசும் போது, அவர்கள் ஏற்பாடு செய்து, நடத்திய நிகழ்ச்சிகளின் பட்டியலைப் பார்த்தால் தெரியும். ஒவ்வொன்றும், ஒரு தனித்தன்மையான நிகழ்ச்சிதான்.
வி: இந்தியாவிலேயே வளரும் குழந்தை கள், சிறுவர்கள், இளைஞர்கள் கூட, இப்போதெல்லாம் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆர்வம் காட்டுவதில்லை. ஒருவேளை இந்தியாவிலேயே வளருவதால்கூட இருக்கலாம்..! பெற்றோர்கள்,தங்கள் குழந்தை களை இதுபோல நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்ல முற்படும் போது, 'மறுபடியுமா..?' என்பது போல முகச் சுளிப்பு..!
சுஜாதா: என்னைப் பொறுத்தவரை, நான் வளரும் போது, இத்தகைய நிகழ்ச்ச்¢கள் அரிது. அதனால், 'மறுபடியுமா' என்ற அலுப்பைவிட, 'மீண்டும்' என்னும் மகிழ்ச்சிதான்..!
வி: இந்தமாதிரி, இந்தியகலைச் சூழலில் இருந்து, மேற்கத்திய இசை சூழலுக்கு செல்லும் மாற்றம், சுலபமாக இருந்ததா..?
சுஜாதா: மாற்றம், கடினமாக இல்லை..? கலை நிகழ்ச்சி நிர்வாகம், எங்களுக்கு மிகவும் இயல்பான இரண்டாவது இயற்கையாக (second nature) இருந்தது. அதாவது, விளம்பரம், டிக்கட்டுகளை விற்றல், நிகழ்ச்சி தினத்துக்கான திட்ட அமைப்பு, செயல் படுத்துதல் எல்லாமே..! சங்கீதம் வேறு என்பதைத் தவிர வேறு வித்தியாசம் இருப்பதாக எனக்குப்படவில்லை. கலைஞர்கள், மற்றும் நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள், பத்திரிக் கை விளம்பரம் இப்படி எல்லாமே, மிக இயற்கையாக எனக்கு வந்துவிட்டன.
அ: ஆனால், பரிமாண வித்தியாசம் இருக்குமே. மேற்கத்திய நிகழ்ச்சி களைப் பார்க்கும் போது உள்ள பிரம்மாண்டமும், பிரமிப்பும், நம் நிகழ்ச்சி களுக்கு இல்லையே.. அதனால் வேலையும் அந்த அளவுக்கு வித்தியாசமாக இருக்கவேண்டுமே..!
சுஜாதா: இதற்கு ஆமாம்/இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கலைஞர்கள் எல்லாரும் ஒரே மாதிரிதான், இந்தியர்களாக இருந்தாலும், மேற்கத்தியர்களாக இருந்தாலும்.. அவர்களுக் கான குணாதிசயங்களும், ஈகோ (சிலரிடத்தில்) ஏறக்குறைய ஒரேமாதிரிதான். அதேபோல் நிகழ்ச்சியின் அளவும்.. பெரியதோ, சிரியதோ.. அடிப்படை நிர்வாக விஷயங்கள் ஒரே போலத்தான்.!
அ: சுஜாதா.. மேற்கொண்டு செல்லு முன்.. நீங்கள் செய்யும் வேலையினைப் பற்றி சற்று விவரமாக சொல்லுங்களேன்.
சுஜாதா: சுருக்கமாக சொல்லப்போனால், கலைஞர்களுடைய நிகழ்ச்சிகளை, பெரிய அளவில் விளம்பரப்படுத்தி, வெற்றிகரமாக நடத்திகொடுப்பதுதான்..! அதாவது 'பப்ளிஸிஸ்ட்' வேலை.. 'கேப்பிடோல் ரெக்கார்டஸ்' நிறுவனத் தில் 10 வருடம் வேலை செய்தேன். தற்போது, 'யூனிவர்ஸல் ம்யூஸிக் என்டர்ப்ரைஸஸ்' நிறுவனத்தில் வேலை செய்கிறேன். 'விளம்பர நிர்வாகியாக', கலைஞர்களையும், அவர்களது படைப்புகளையும், அவர்களது நிகழ்ச்சிகளையும், வார, மாத, நாளிதழ்களில், ரேடியோக்களில், டீ.வீக்களில், விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். உதாரணமாக, மிகவும் பிரபலமான, 'டு நைட் ஷோ'வில் நான் நிர்வகிக்கும் கலைஞர் தோன்றுவது அவருக்கு விளம்பரம் தானே! அதை ஏற்பாது செய்வதும் எங்கள் வேலைதான். இது சுலபமானதல்ல. பல போட்டி கலைஞர்களுக்கிடையே, அவர்களின் பப்ளிஸிட்டுகளோடு போட்டிப் போடவேண்டிய வேலை..! வருடத்தில் ஒரு சில டீ.வி. நிகழ்ச்சிகள்தான் இசைக்காக ஒதுக்கப்படு கின்றன. அவற்றில் எவை ரசிகர்களால் மிகவும் பார்க்கப்படுகிறதோ, அவற்றில் இடம் பிடித்தாக வேண்டும்.. அதுவும் கடுமையான போட்டிக்கு இடையே...!
வி: துறைக்குப் புதிதாயும், இந்தியப் பெண் என்னும் முறையிலும், இந்த போட்டி கடுமையாக இருந்துள்ளதா..?
சுஜாதா: இல்லை. என்னுடைய பெற் றோர்கள், 'எங்களால் நினைத்ததை சாதிக்க முடியும்' என்கிற தன்னம்பிக்கையோடு வளர்த் திருந்ததால், அப்படி எண்ணவே வழியில்லை.. அவர்களுக்கு எங்கள் மேல் உள்ள நம்பிக் கையும், அவர்கள் அளித்த ஊக்கமும், எங்களை வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் முன்னேறச் செய்திருக்கின்றன.
வி: பெரும்பாலான இந்தியப் பெற் றோர்கள், தங்கள் குழந்தைகள், தேர்ந்து எடுக்கப்பட்ட தொழில் படிப்பிலிருந்து, மாறிச் செல்வதை விரும்ப மாட்டார்கள். பெரும்பாலானோர், என்ஜினீய ராகவோ, டாக்டராகவோ அல்லது, வழக்கறிஞ ராகவோ ஆவதைத்தான் விரும்புவார்கள். நீங்கள் மருத்துவ படிப்பைத் தேர்ந்தெடுத்து விட்டு, அதிலிருந்து விலகி, விளம்பரத்துறைக்குச் சென்றபோது, அவர்கள் அதை முழுமனதுடன் வரவேற்றார்களா..? உங்கள் முடிவில் அவர் களுக்கு சந்தோஷம்தானா...?
சுஜாதா: இதை அடிப்படையிலிருந்து பார்த்தால், ஏன் பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளை என்ஜினீயராகவோ, டாக்டராகவோ அல்லது, வழக்கறிஞராகவோ பார்க்க ஆசைப்படுகிறார்கள்..? தங்கள் வாரிசுகள் வீடு, வசதியோடு 'செட்டில்ட்' ஆக வாழவேண்டும் என்னும் எண்ணத்தினால்தான் அல்லவா...? ஆனால் என் பெற்றோர்களோ, "இதைத்தான் செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டால், முழுமனதோடு, உன்னுடைய முழுகவனத் தோடும், திறமையோடும் செய்" என்று சொல்லிவிட்டார்கள். உள்ளுக்குள் பயந்திருப் பார்களோ என்னவோ..? ஆனால், அப்படி ஏதேனும் பயம் இருந்தாலும், அடுத்த சில வருடங்களில், நான் நல்ல வசதியாக 'செட்டில்' ஆன உடன் மறைந்திருக்கும்.!
அ: இத்துறைக்காக யூனிவர்சிட்டியில் ஏதேனும், சிறப்பு படிப்பு படித்தீர்களா..?
சுஜாதா: உயிரியல் (Biology) முக்கிய பாடமாக ஆரம்பித்தப் என் பட்டப்படிப்பு, ஜர்னலிஸம், பொதுஜன உறவு/தொடர்பு என திசைமாறியது. படிப்பையும் விட, என்னுடைய இயல்பிலேயே, பலவிதத்தரப்பட்ட மனிதர் களோடு பழகும் முறை, இருந்திருக்கிறது. தவிர கொஞ்சம் எழுதும் திறமையும் சேர்ந்து கொண்டால், அவைதான் தேவையானவை... இத்துறைக்கு! ஏதோ சில விதிமுறைகள் என்று இருந்தாலும், நன்றாக எழுத, கருத்து களை பறிமாறிக்கொள்ளக்கூடிய, பலவித குணாதி சயங்கள் உள்ள மனிதர்களோடு ஒத்து பணி யாற்றக்கூடிய திறன் இவைகள் இருந்தால், அவைதான் என்னுடைய துறைக்கு மிகவும் தேவையானவை.!
வி: எப்போது இந்த துறைக்கு பொருத்த மானவராகக் கண்டுபிடிக்கப்பட்டீர் கள்..?
சுஜாதா: கண்டுபிடித்தார்கள் என்று சொல்ல மாட்டேன். படிப்புக்குப் பிறகு சில காலம் சில வேலைகளிலிருந்த பிறகு, ரோஜர்ஸ் அண்ட் கோவன் என்னும், பெரிய பொதுஜனத் தொடர்பு நிறுவனத்தில் சேர்ந்தேன்..அங்கே பீட்டர், பால், மேரி,டாக் செவரென்சன், ஜுலியே இக்ளே ஸியஸ், பீச் பாய்ஸ் போன்ற கலைஞர்களோடு சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.. ரோஜர்ஸ் அண்ட் கோவன் நிறுவனத்தில் வேலை செய்த பிறகு, இசைக் கலைஞர்களோடுதான் பணியாற்றவேண்டும் என்று தோன்றிவிட்டது. அதற்குள்ளாக, கேப்பிடல் ரெகார்ட்ஸ் கம்பெனி யிலிருந்த என் நண்பர் ஒருவர் மூலமாக, அங்கே ஒரு வேலை காலியிருப்பதாக தெரியவந்தது. அடுத்த பத்து வருடங்கள் அங்குதான்.. பிறகு, இரண்டரை வருடத்துக்கு முன்பாக, யூனிவர்ஸ லுக்கு மாறினேன்.
அ: நீங்கள் பெரிய கலைஞர்களோடு, உதாரணமாக, ·ப்ராங் ஸினாட்ரா, 'தெ பீட்டில்ஸ்' புகழ் பால் மெக்கார்ட்னி, அவர்களுக்காக, வேலை செய்வது, அவர்களே வந்து உங்களை கேட்பதனாலா அல்லது, உங்கள் கம்பெனி உங்களுக்கென்று, ஒரு சில கலைஞர்களை ஒதுக்குமா..?
சுஜாதா: கம்பெனிக்காக வேலை செய்வதால், கம்பெனிதான் குறிப்பிட்ட கலைஞர்களோடு சேர்ந்து வேலை செய்யுமாறு என்னைப் பணிக்கும். சில சமயங்களில், பழக்கமான கலைஞர்கள், என்னை தங்கள் 'பப்ளிஸிஸ்ட்' ஆக அமர்த்தும் படி கேட்பதும் உண்டு..! இதில் சில கலைஞர்கள் பழகுவதற்கு இனிமையானவர்கள்.. ஆனால் அவர்களது இசை என்னுடைய இரசிப்புக்கு ஏற்காததாக இருக்கும். சில கலைஞர்களுடைய இசை மிகவும் இரசிக்கத் தக்கதாய் இருக்கும்.. ஆனால், அவர்களோடு சேர்ந்து வேலை செய்வது வெறுப்பாயிருக்கும். பலதரப்பட்ட மனிதர்கள்.. குணாதிசயங்கள்...!
வி: தற்போது எந்த கலைஞர்களோடு வேலை செய்கிறீர்கள்..?
சுஜாதா: 'ஹூ', கேட் ஸ்டீவன்ஸ், ஒலிவியா நியூட்டன் ஜான், 'தெ ·போர் டாப்ஸ்', மிஸர்ஸ் ரீட்டா மார்லி, கிஸ், மற்றும், லொரேட்டா லின். |
|
வி: கன்ட்ரி இசைப் (country music) புகழ் லொரெட்டாவா..?
சுஜாதா: ஆமாம்! லொரேட்டா லின் மிகப்புகழ் பெற்ற கன்ட்ரி இசைப்பாடகி. அவர்களைப் பற்றி ஒரு திரைப்படம் கூட எடுக்கப்பட்டது..!
வி: சுஜாதா.. உங்கள் வேலை காரண மாக, நிறைய ஊர் சுற்ற வேண்டி வருமோ..?
சுஜாதா: ஆமாம்,, நான் பணிபுரியும் கலைஞர்களோடு..!
வி: இப்படி பல்கலைஞர்களோடு ஒரே சமயத்தில் வேலை செய்வதால், ஏதா வது நேர ஒதுக்கீட்டில் குளறுபடிகள்..?
சுஜாதா: இல்லை. நான் பணிபுரியும் கலைஞர் கள் எல்லாமே.. நான் அவர்களுக்காக மட்டும் தான் வேலை செய்து கொண்டிருப்பதாக நம்புகிறார்கள். நேர ஒதுக்கீட்டில் பிரச்சினை இருப்பதில்லை, கலைஞர்கள், சில சமயம், என்னுடைய நேரத்துக்காகக் காத்திருப்பதும் உண்டு..
வி: சுஜாதா.. வேலை நேரம் தவிர உங்கள் பொழுது போக்குகள் பற்றி, உங்கள் உடன் பிறப்புகளைப்பற்றி..!
சுஜாதா: என்னுடைய தங்கையும், தம்பியும், என்னுடன் லாஸ் ஏன்ஜலீஸ் நகரில்தான் வசித்துவந்தார்கள்.. என்னுடைய பெற்றோர்கள் என்னை வந்து அடிக்கடி பார்த்துவிட்டு போவார்கள். ஒருநாளைக்கு ஒரு தடவையாவது, என்னுடைய குடும்பத் தவருடன் பேசிவிடுவேன். நான் நிறைய பிரயாணம் செய்வதால், வருடத்துக்கு ஒருமுறையாவது, இலவச டிக்கட்டுகளில், குடும்பதோடு விடுமுறைக்கு எங்காவது சென்றுவிடுவோம்.
வி: உங்களுடைய தாயார், உங்கள் உத்தியோக வாழ்க்கையை எட்டிப் பார்ப்பதுண்டா..?
சுஜாதா: கட்டாயமாக.. நான் வேலை செய்யும் பல 'ஷோ'க்களுக்கு வந்துள்ளார்கள். தவிர 'மாமா மியா' வின் 'பிரிமியர்' ஷோவுக்காக லாஸ் ஏன்ஜலீஸ் கூட வந்திருந்தார்களே..! ·ப்ராங்க் ஸினாட்ராவின் 80வது பிறந்தநாள் ஷோவுக்குக் கூட வந்திருந்தார்கள்.
வி: இந்திய சினிமா இசை உலகைப் பற்றிய உங்கள் கருத்து..?
சுஜாதா: இந்திய மொழிகளில், வெகுவாக பரிச்சயம் இல்லாததால், நான் இந்திய சினிமா இசையைக் கேட்பதே இல்லை.
அ: உங்கள் கம்பெனி, உங்களை, இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகளை 'ப்ரமோட்' (promote) செய்யும்படி கேட்பதில்லையா..?
சுஜாதா: கேட்கலாம்.. வருங்காலத்தில். இதுவரை இல்லை.
அ: வளரும் மேற்கத்திய இசை கலைஞர்கள், அல்லது கலைஞர்களாக விரும்பிகளுக்கு, உங்கள் 'டிப்ஸ்' என்ன.? அவர்கள் கவனிக்கப்பட என்ன செய்ய வேண்டும்..?
சுஜாதா: மிகச்சிறந்த வழியென்பது, உள்ளூர் இசைக்குழுக்களில் பாட ஆரம்பித்து, நாலு பேர், கவனத்தினை ஈர்ப்பதுதான்! எந்த மாதிரிப் பாடல்கள், எந்தவிதமான ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது என்று உணரவேண்டும்..பிறகு, சில உள்ளூர் பத்திரிக்கைகள் உங்களை விமரிசனம் செய்து எழுதவேண்டும். இப்போ தெல்லாம்.. சி.டி வெளியிடுவது குடிசைத் தொழில் மாதிரியாகிவிட்டதால், குறைந்த செலவில், சி.டி. வெளியிட்டு, உள்ளூர் ரேடியோ ஸ்டேஷன்களில், கொடுத்து, பரவலாக நிறைய பேரைக் கேட்கச்செய்யலாம்..! இப்படி படிப்படியாக வளர்ந்து கொண்டே போனால், விரைவில் நாடு முழுவதுமே உங்கள் இசையைக் கேட்க ஆரம்பிக்கும்.. பிறகு, ரெக்கார்டிங் கம்பெனிகளைத் தேடி நீங்கள் அலைவதற்கு பதிலாக, அவர்கள் உங்கள் பின்னால் சுற்று வார்கள்! கண்டுபிடிக்கப் படவேண்டும் என்று உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடாது.
வி: எந்த அளவுக்கு, இந்திய கலாச் சாரத்தில் உங்களுக்குப் அறிமுகமும், ஆர்வமும் உள்ளது.
சுஜாதா: இந்திய கலாச்சாரத்தில் அறிமுகம் இருந்தாலும், ஊன்றி படிக்கவில்லை. ஆனால், சென்ற நவம்பர் மாதம், வடநாட்டிலிருந்து, தென்னாடு வரை ஒரு மிகப்பெரிய சுற்றுப்பயணம் சென்றுவந்தேன், என் தாயுடன். கேரளா, மும்பை,கோவா, அஜந்தா, எல்லோரா குகைகள், ஆக்ரா, சென்னை, ஜெய்பூர், உதய்பூர், கன்யாகுமரியென்று, பல இடங்கள்..!
வி: உங்களுக்குத் தமிழ் பேசவருமா..?
சுஜாதா: சுமாராக.. ஆனால் உச்சரிப்பு அமெரிக்க பாதிப்போடு இருக்கும்.
அ: சுஜாதா.. உங்களின் வருங்காலக் கனவுகள், திட்டங்கள் என்ன..? உங்கள் துறையில் நீங்கள் மேற்கொண்டு செய்ய விரும்புவதென்ன..?
சுஜாதா: அமெரிக்க வாழ்க்கை, பெரும் பாலும், நம்முடைய வேலையை சுற்றி சுழல்வது. எதிர்காலம் என்று எதுவும் குறிப்பாக திட்டமில்லை. நான் செய்யும் வேலை எனக்கு சுவாரசியமாக இருக்கும் வரை, இதையே செய்து கொண்டிருப்பேன்.
அ: உங்களுடைய வெற்றியை எப்படி அளவிடுவீர்கள்..?
சுஜாதா: நீங்கள் செய்யும் வேலை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறதா..? உங்களின் வருமானம் தேவையான அளவுக்கு இருக் கிறதா..? உங்கள் வேலயை நீங்கள் விரும்பிச் செய்கிறீர்களா..? இதெல்லாம் இருந்தாலே, வெற்றிகரமான வேலையும் வாழ்க்கையும்தானே?
அ: நீங்கள் ஜர்னலிஸம் படித்திருக் கிறீர்கள்..! பத்திரிக்கைகளில் எழுத வேண்டும் என்னும் எண்ணம் உண்டா..?
சுஜாதா: பள்ளிக்கூட நாட்களிலும், கல்லூரி களிலும், நிறைய எழுதியிருக்கிறேன். ஆனால் வருங்காலத்தில், புத்தகம் எழுதி வெளியிடும் எண்ணம் இருக்கிறது..!
உரையாடல், மற்ற விஷயங்களுக்குத் தாவி விட்டு, கடிகாரத்தைப் பார்த்ததில், ஒரு மணிநேரத்துக்கும் ஆகியிருந்தது.நன்றி சொல்லி விடைபெற்றுக் கொண்டு, டெலி-முகத்தை நிறைவு செய்தோம்.
நன்றி சுஜாதா..!
சுஜாதா: மிகவும் நன்றி. லாஸ் ஏன்ஜலீஸ¤க்கு வரும்போது, கட்டாயம் என்னை வந்து சந்தியுங்கள்.. தென்றல் வாசகர்களுக்கு ஹலோ மற்றும் நன்றி..!
******
சுஜாதாவின் தந்தை மூர்த்தி அவர்கள் சொன்னவற்றிலிருந்து..
நானும், என் மனைவியும், எங்கள் குழந்தைகள் தொழில் தொடர்பாக, எந்த துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதற்கு ஆதரவாக இருப்பதென்று தீர்மானித்தோம்..
சுஜாதா என்டெர்டெய்ன்மென்ட் துறையில் சாதித்திருப்பதற்கு முழுகாரணமும், அவளுடைய உறுதியான நிலைப்பாடும், ஓர் இலக்கினை நோக்கிய மனமும், அளவிடமுடியாத உத்வேகத்துடன் செயல்படும் குணங்களும் தான்...! நாங்கள் செய்திருப்பதெல்லாம், அவர்கள் எந்தத் துறையைத் தேர்ந் தெடுத்தாலும், அதிலே முன்னணியில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்ததுதான்..
இந்தத் துறையில் அவள் கலைஞர்களோடு மிகவும் அணுக்கமாகப் பணியாற்றவேண்டும். அதற்கு அவர்களைப்பற்றிய முழுமையான புரிதலும் வேண்டும். அவர்களுடைய கலாச்சாரம், சொந்த விருப்பு வெறுப்புகள், மத நம்பிக்கை, உள்பட எல்லாம் தெரிந்தால்தான், அவர்களை நல்லவிதத்தில் புரிந்துகொண்டு விளம்பரப் படுத்தமுடியும். 'கேட் ஸ்டீவன்ஸ்' முஸ்லீம் மதத்திற்கு மாறியவர். அவருடன் பணிபுரியும் போது, இஸ்லாமைப் பற்றி முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டாள். இது, அவளுடைய வெற்றிக்கு ஒரு காரணம்.
என்னுடைய மூன்று குழந்தைகளுமே, மற்ற பெரும்பாலான இந்தியக்குழந்தைகள் போலில்லாமல், விளம்பரத்துறை, சமூகச் சேவை மற்றும், காப்புரிமை வழக்கறிஞர் என்று சற்றே வித்தியாசமான துறைகளில் வெற்றிகரமாகப் பணிபுரிகிறார்கள். இது எல்லாவித குடிபெயர்ந்து வந்துள்ளவர்களின், இரண்டாம் தலைமுறைக் குழந்தைகளுக்கும் சாத்தியமே..
அமெரிக்காவில் குழந்தைகளை வளர்க்கும் இந்திய பெற்றோர்களுக்கு: நல்ல கல்விக் கான அடித்தளத்தை வழங்குங்கள், அவர்களை உற்சாகப்படுத்தும், 'சியர் லீடராக' (cheer leader) இருங்கள். அவர்களின் ஒவ்வொரு வெற்றியிலும் பெருமிதம் கொண்டு அவர்களைப் பாராட்டி ஊக்குவியுங்கள். அவர்களை மற்ற கலாச்சாரங்களுக்கு அறிமுகப்படுத்தி, அறிந்துகொள்ள உதவுங் கள்.. ஏனென்றால், அவர்கள் பலவித இன, மத, மொழி மக்களோடு சேர்ந்து இயங்க வேண்டும்.. தானகவே, அவர்கள் தன்னிறை வான நல்ல பொறுப்புள்ள பிள்ளைகளாக வளருவதை கட்டாயம் பார்ப்பீர்கள்.
******
சுஜாதாவின் தாய் லீலா மூர்த்தி அவர்கள் சொன்னவற்றிலிருந்து..
எனக்கு அவளை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அவள் தானகவே தன்னை உருவாக்கிக்கொண்டவள்.நாங்கள் அளித்த இசை சூழ்நிலையும் ஒருகாரணமாயிருக்கலாம்.
தந்தையின் தூண்டுதலில், அக்கவுன்டிங் படிப்பு படித்தாலும், அவளுக்கு அதில் நாட்ட மில்லை என்பது வெகு சீக்கிரத்திலேயே தெரிந்தது. அவள், என்னிடம், ஜர்னலிஸம் படிக்கப்போகிறேன் என்ற போது, எந்தவித மறுப்பும் நாங்கள் தெரிவிக்கவில்லை..
அவள் படித்துமுடித்துவிட்டு, 'என்டெர்டெய்ன் மென்ட்' துறைக்குப் போகிறேன் என்று, ஒரு ரெகார்டிங் கம்பெனி வேலைக்குச் சேர்ந்த போது பல நண்பர்களுக்கும் அது புரியவும் இல்லை, ஒத்துக்கொள்ளக் கூடியதாகவும் இல்லை. இப்போது, அவள் வெற்றிகரமான பெண்ணாய் வெளிப்பட்டதும் அவர்களே மூக்கில் விரல் வைத்து, 'வாவ்' என்று சொல்லா மலும் இல்லை.
நம்பிள்ளைகள், அவர்களுக்குப் பிடித்த தொழிலில் ஈடுபடும் போது, அவர்கள் மிகவும் ஆர்வத்தோடு உழைப்பார்கள்.. வெற்றியும் பெறுவார்கள்..
அவள் கல்லூரி நாட்களில், கல்லூரிப் பத்திரிக்கைக்காக, பல இசைக்கலைஞர் களைப் பற்றியும், இசை நிகழ்ச்சிகளைப் பற்றியும் எழுதுவாள். அதுதான் அவளுக்கு, தூண்டு கோலாயிருந்திருக்கிறது.
நாம் நம் பிள்ளைகள், அவர்கள் கனவுகளை அவர்களே கண்டு, நிஜமாக்கிக் கொள்ள உதவியாக இருக்கலாமே தவிர, அவர்களுக் காக நாம் கனவுகளைக் காணக்கூடாது. இப்போது, பல இந்திய பெற்றோர்களின், சிந்தனைகளும், ஒரு வட்டத்துக்குள் இல்லாமல், வெளியே வரத்தொடங்கி விட்டதைக் காணுகிறேன். இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்,
என்னுடைய பெண்ணின் வெற்றியில் பெருமிதம் கொள்கிறேன். அவள், மிகுந்த திடமனது கொண்டவள்; சமநோக்கு கொண்டவள், தன்னுடைய் இலட்சியத்தினை அறிந்தவள்..! எங்களை புண்படுத்தும் விதத்தில் எப்போதுமே பேசியது இல்லை. அன்பும், அனுசரணையும் மிகுந்தவள். நாம், மிருதுவாகவும், கருணையோடும், அவர்களின் இலக்கினை நோக்கிச் செல்ல, பெற்றோர் கள் என்ற கடமையை செய்தால், நம் பிள்ளைகளும் அதே குணங்களைக் கொண்டு தான் வளருவார்கள்.
உரையாடியவர்கள்: விஷால் ரமணி, அசோக் சுப்ரமணியம் |
|
|
|
|
|
|
|
|