Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சிறுகதை | ஜோக்ஸ் | பொது | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | தமிழக அரசியல் | சமயம் | சினிமா சினிமா | முன்னோடி
Tamil Unicode / English Search
அமெரிக்க அனுபவம்
அன்னிய மண்ணில் கொடி நா(க)ட்டினேன்
பஞ்சபூதங்களுக்குப் பஞ்சம்
- வாஞ்சிநாதன்|ஆகஸ்டு 2001|
Share:
Click Here Enlargeஒரு சென்னைவாசியின் அமெரிக்கப் பயணக்குறிப்பு

முன்குறிப்பு : அமெரிக்க கணிதக் கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடத்திய மாநாட்டுக்காக 1991-ஆம் ஆண்டு அங்கும், தொடர்ந்து பாஸ்டன் நகரிலுமாக சுமார் மூன்று மாதங்கள் அந்த அதிசய தேசத்தில் எனது பி.எச்.டி.க்கான கணித ஆய்வுகள் செய்யத் தங்கியிருந்தேன். என்னுடைய அல்ஜீப்ராயிக் ஜாமெட்ரி எல்லாம் தப்புக் கணக்காகப் போனாலும், தேவையில்லாத இந்திய-அமெரிக்கப் பொருளாதாத ஒப்பீட்டு ஆராய்ச்சியில் இறங்கியது சில திடுக்கிடும் உண்மைகளைத் தந்தது. அந்த கண்டுபிடிப்புகளின் கசப்பான உண்மைகளை சி.ஐ.ஏ.யின் சதியால் இதுநாள் வரை வெளியிட முடியாமல் போய்விட்டது. ஒரு வழியாக பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது 'தென்றல்' மூலம் இதை உலகோர்க்குச் சமர்ப்பிக்கிறேன்.

அப்படி என்ன திடுக்கிடும் முடிவுகளை எனது ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன?

கார்கள், விமானங்கள், கணனிகள் என்று எங்கும் நிறைந்திருப்பதால் அமெரிக்காவை வளம் மிகுந்த பணக்கார நாடெனப் பலர் கூறுகின்றனர். ஆனால், என்னுடைய ஆழ்ந்த பார்வையையும் அயராது வேலை செய்யும் புத்திக்கூர்மையையும் இந்த வெளித்தோற்ற மாயைகள் ஏமாற்ற முடியுமா என்ன? அங்கே நிலவிய (இந்தியாவை விடவும் மோசமான) அமெரிக்காவின் தரித்திர நிலையை உள்ளங்கை மருதாணி போல் மனக்கண்ணில் கண்டு கொண்டேன். இதை நான் உங்களுக்குக் கூறக் கடமைப்பபட்டிருக்கிறேன். இது உடனே உங்களுக்குப் புரியவில்லை என்றால், எனக்கு இதைப் புரிந்து கொள்ள மூன்று மாதமாகியது என்பதைக் கருத்தில் கொண்டு மீண்டும் கவனமாக இந்த கனமாக ஆராய்ச்சிக் கட்டுரையைப் படிக்கவும். அப்படியும் புரியவில்லையென்றால், வீட்டிலே அமைதியான இடத்தில், 'ஆல்பா சென்டாரி' தொலைக்காட்சியின் குடும்பக்கதைத் தொடரின் 468 - ஆம் பகுதியின் பாடல் காதில் விழாத தூரத்திலிருந்து மறுபடியும் படியுங்கள்.

பராம்பரியம் மிக்க நமது பாரத பூமியில் தோன்றிய முன்னோர்கள் கூற்றின்படி இவ்வுலகின் அடிப்படைக் கூறுகள் ஐந்து. அவையில்லாமல் உலகில் எதுவுமிருக்காது. இயங்காது. பஞ்சபூதங்கள் என்று பயமுறுத்தும் பெயரிட்டிருப்பது நாம் அவற்றை உதாசீனம் செய்யலாகாதென்பதற்காகத் தான். இவற்றைக் காணக் கிடைப்பது அரிதென்றால் அமெரிக்க தேசம் எவ்வளவு ஏழ்மையில் வாடுமென்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஒன்னொன்றாக உங்களுக்கு நான் என் வாதங்களை முன் வைக்கிறேன்.

ஆகாயம் : சாலையில் நடக்கும்போது அண்ணாந்து பார்த்தால் விண்ணை முட்டும் உயரமான கட்டிடங்கள் இருப்பதைப் பார்க்கிறோம். இடுக்கில் மட்டுமே ஏதோ சிறிதளவு வானம் தெரிகின்றனது. சந்தடியில்லா ஊரின் ஒதுக்குப்புறம் வந்தால் வஞ்சனையில்லாமல் ஓங்கி வளர்ந்த ஓக் மரங்கள் தான் தெரிகின்றன. ஆகாயத்தையே காணோம்.

சென்னையில் எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் ஆகாயம் நம்மை பூதாகாரமாக விரிந்து பயமுறுத்துமே, அதெல்லாம் அங்கில்லை.

பூமி : நம் ஊரில் எந்தத் தெருவாகட்டும். பெரும் சாலையாகட்டும் இரண்டு ஓரத்திலும் நாம் கண்டு களிக்க ஆண்டவன் நான்கைந்து அடிக்கு பூமாதேவியைக் கால் நீட்டிப் படுக்க வைத்துள்ளார். இதைத் தவிர காவிரி, வைகை, பாலாறு என்று சில திருநாமங்களில் ஆண்டு எட்டு மாதம் பூமியை நாம் தரிசிக்கிறோம். நாம் கேட்காமலே கடவுள் நமக்கு இந்தியாவிலே கூரையைப் பிய்த்தும், சன்னலை ஊடுருவியும் புழுதி என்ற பெயரில் வீடு தேடி வந்து கொடுக்கிறார். நானும் தேடித் தேடிப் பார்த்தேன். மசாசூசெட்ஸ், நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்து சிற்றூர்களின் சின்னத்தெரு, நெடுஞ்சாலையோரம், பாஸ்டன் ஹே மார்க்கெட் என்று பல இடங்களில், ஒரு பல் தேய்க்குமளவுக்குக் கூட மண் கிடையாது.

பெரிய பங்களாக்களில் தோட்டத்தில் நிலமென்னும் நல்லாளை ஸ்பரிசிக்கப் போனேன். அங்கெல்லாம் ஒரே புல்தரைதான். நானும் பெருமையாக ஊருக்குத் திரும்பி வந்து அமெரிக்க மண்ணிலே கால் வைத்து வந்தவனாக்குமென்று சொல்லிக் காண்பிக்க ஒரு பிடி மண் கூட கிடைக்காமல் வருத்தப்பட்டது கொஞ்சநஞ்சமல்ல.

நீர் : சென்னையில் எத்தனை வருடங்களாக எங்கள் வீட்டில் குடம்குடமாக எவ்வளவு தண்ணீரை நாங்கள் பிடித்து கண்ணில்படும்படியாக வீடெங்கிலும் நிறைத்து வைத்திருக்கிறோம்? அமெரிக்காவில் ஒரு வீட்டில் கூட ஒரு பானைத் தண்ணீரைப் பார்க்க முடியவில்லை. வேண்டுமென்றால குழாயைத் திறந்தால் வருமாம்! யார் நம்புவது? ஏதோ நான் குளிக்கும் நேரத்திலெல்லாம் வந்திருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? இந்தத் தண்ணீர் தட்டுப்பாட்டால் தான் இங்கே மக்கள் சாப்பாட்டோடு கோகோ கோலாவைச் சாப்பிடுகிறார்கள் என்பதை என் கூர்மதியால் நான் புரிந்து கொண்டேன். (ஒரு பாட்டில் குடிதண்ணீரின் விலை அதை விட அதிகமாம்.)

வாயு : கோடைக்காலத்திலாவது எங்காவது காற்று வீசுகிறதா? கண்ணாடி போட்டு எப்போதும் அடைத்து வைத்த சன்னல்கள் எந்த வீட்டிலாவது ஒர மின்விசிறியாவது வைத்து நமக்குக் காற்றையற்றி வீசுவார்களா? அதெல்லாம் கிடையாது. நம் வீட்டில் காற்றிலே மேசை மேலே வைத்த ரூபாய் நோட்டு பறந்து விழுந்து எங்கோ இடுக்கில் சிக்கி, பின்னொரு நாள் நம் கண்ணில்பட்டு, ... ஊம்! அந்தச் சில்லறை (நோட்டு) சந்தோஷங்களொல்லாம் அங்குண்டா? இல்லை. மேலக்காற்று அள்ளிக் கொண்டு தாழ்வாரத்தில் இறைக்கும் புழுதியை வீட்டில் எத்தனை முறை பெருக்கிப் பெருக்கிச் சலித்திருப்பார்கள்? மரங்களுக்கெல்லாம் அப்படியென்ன சோகம்? பாஞ்சாலி சபதமிட்ட பின் உள்ள கோலத்தில் விரித்த சடை போன்ற பூவிலைகளுடன் தொங்கும் அழுமூஞ்சி வில்லோ (weeping willow) நம்மூரில் இருந்தால் ஆடிக்காற்றில் என்ன ஆட்டம் போட்டிருக்கும்? யார் மரணத்துக்காக இந்த அமெரிக்க மரங்கள் அசையாது நின்று மெளன விரதத்திலாழ்ந்திருக்கின்றன? இந்தியர்கள் நடத்தும் யோகாசன வகுப்பெல்லாம் இங்கே சக்கைப் போடுதெதனாலே? எப்படியாவது நீண்ட மூச்சு விட்டுக் காற்றைச் சிக்கனமாக செலவழிக்கக் கற்றுக் கொள்ளத்தான்!

நெருப்பு : எவ்வளவு நெருப்பு நம் நாட்டில் இருக்கிறது? ஒவ்வோர் வீட்டிலும் அடுப்பில் தினம் எவ்வளவு நெருப்பு வளத்தை நாம் காண்கிறோம்! அங்கே நான் பார்த்ததெல்¡ம் மின்சார அடுப்புகள் தான்! அதில் ஒரு சிகரெட் பற்ற வைக்க முடியாது! போதாதென்று நம் ஊரில் கல்யாணம் வந்து விட்டால் பெண்ணும் மாப்பிள்ளையும் இருமும் வரை அய்யர் நெருப்பை வளர்த்து சுற்றி வரச் சொல்லி தாராளமாக நாம் நெருப்பைச் செலவு செய்ய முடிகிறது. தெருவில் குப்பைகளை ஒழிப்பதற்கும், மாலையில் வீட்டில் விளக்கேற்றி வைத்தும் எவ்வளவு நெருப்பை நாம் செலவு செய்கிறோம்? இந்த வெள்ளைக்காரர்கள் பிறந்தநாளன்று இத்துனூண்டு மெழுகுவர்த்தியை ஒரே நிமிடம் ஏற்றி வைத்துச் சிக்கனமாக உடனே ஊதி அணைத்து விடுகிறார்கள்.

ஸ்ப்ரிங்·பீல்டிலே ஒரு இந்திய நண்பர் வருத்தத்துடன் கூறினார் : தீபாவளி வந்தால் கூட பட்டாசும், மத்தாப்பும் போட்டு நெருப்பைச் செலவழிக்கக் கூடாதென்று கட்டுப்பாடிருக்கிறதாம். இன்னொரு மாபெரும் ரகசியத்தைக் கூட அவர் கூறினார். புற்றுநோய்க்கும், மருத்துவச் செலவுக்கும் பயந்து சிகரெட் பழக்கம் குறைந்துவிட்டதென்பது தவறான காரணமாம். நெருப்புப் பற்றாக்குறைதான் உண்மை.

ஆனாலும், பொய் சொல்லக் கூடாது. 3 மாதத்தில் ஒரே ஒரு நாள் நான் நெருப்பைப் பார்த்தேன். பென்சில்வேனியாவிலிருந்து பாஸ்டனுக்குப் பறந்து செல்லும் முன், மூட்டை கட்டும்போது என்னுடைய தேங்காயெண்ணெய் டப்பா ஒழுகி உடைகளை நாசமாக்காதிருப்பதற்காக மெழுகுவர்த்தியை உருக்கி ஓட்டையை அடைக்கும்போது ஒரு நிமிடம் நெருப்பைப் பார்த்தேன்!

அமெரிக்காவில் பஞ்சபூதங்களுக்கு எவ்வளவு தட்டுப்பா¦ன்று இப்போதாவது நம்புவீர்களா? பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு தான்!
Click Here Enlargeஅமெரிக்க செல்பர்வகள் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமான பொருள்களுக்கு ஒரு சிறு பட்டியல் :

அமெரிக்கப் பயணத்திற்குத் தேவையானவை :

அடுத்ததாக உங்களுக்கு உதவி உதவிகரமாக இருக்க வேண்டும் என்னும் நல்லெண்ணத்தில், முன்னெச்சரிக்கையாக எதையெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறுகிறேன். சிலர் இதெல்¡ம் வேண்டாம் ஊறுகாய் போதுமென்றார்கள். அப்படிப்பட்ட சாப்பாட்டு ராமர்களின் சொல்லை நம்பாமல் என்னுடைய கூற்றை மதித்து நடந்தால் உங்கள் அமெரிக்க வாசம் பிரச்சினையாக இராது என்பதைக் கூறி விடுகிறேன்.

நாள்காட்டி : தினந்தோறும் விசித்திரமான பொன்மொழிகளை - 'சீறும் பாம்பை நம்பு. சிரிக்குமூ பெண்ணை நம்பாதே' , - உதிர்க்கும் நாள்காட்டியில் தேதியைக் கிழித்துப் பழகிய எனக்கு அதைப் பிரிந்தவுடன்தான் அதன் மகிமை புரிந்தது. நான் பல்கலைக்கழகத்தின் கோடை விடுமுறைக்காலமான ஆடி, ஆவணி மாதங்களில் இருந்ததால் அட்டவணைப்படியான வகுப்புகள், ஆராய்ச்சி சொற்பொழிவுகள் ஏதுமில்லாது நாள்களை நினைவிற்கொள்ளுதல் கடினமாகிவிட்டது. ஒரு நாள் கணனி மூலம் தேதியை அறிந்து கொள்ளும் நிலைக்குப் போய்விட்டது என்றால் நீங்கள் இதைப் புரிந்து கொள்ளலாம். தொடர்ந்து பல நாள்கள் கணனி கெட்டுப் போன போது தேதியை அறிந்து கொள்ள சிண்டைப் பிய்த்துகொள்ள வேண்டியதாயிருந்தது. சிண்டைப் பிய்த்து தலை வலிக்கவே கன்னத்திலுள்ள முடியைப் பிய்க்க முயன்றபோது மற்றுமோர் மாபெரும் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. அதாவது கன்த்தில் சொரசொரவென்றிருந்தால் அது இரட்டைப்படை தினம், வழவழவென்றிருந்தால் அது ஒற்றைப்படை தினம்.

நீதி : அமெரிக்கா சென்றால் ஒரு நாள் விட்டொரு நாள் முகச்சவரம் செய்யுங்கள். ஆனால் இதற்காக நாளொன்றிற்கு நீங்கள் எனக்கு அரை டாலர் காப்புரிமைத் தொகை வழங்க வேண்டும். இதற்கு நான் பேடன்ட் வாங்கி விட்டேனாக்கும்!

செம்பு : இது சொல்வதற்கு உசிதமானதாக இல்லாவிட்டாலும் செம்பு இல்லாமல் உண்டாகும் கஷ்டங்களை எண்ணும் போது சொல்லிவிடுவதே நல்லது என்று தோன்றுகிறது. காலைக்கடனுக்குப் பின்னே காகிதத்தைப் பயன்படுத்தும் கொடுமை தாங்காமல் ஒவ்வொருமுறையும் (சாயங்காலக் கடனாக இருந்தாலும்) குளித்துவிட்டு வர வேண்டியிருந்தது. நடுவில் வயிற்றுக் கோளாறினால் ஒருநாள் அவதியுற்ற போது எட்டுமுறை குளித்தேன். இதை எப்படியோ புரிந்துகொண்ட வெள்ளை அமெரிக்க நண்பனொருவன் நான் அவசரமாக ஓடினால் ''என்ன குளிப்பதற்கான முனூனேற்பாடா?'' என்று நமுட்டுச் சிரிப்புடன் என்னை விசாரிப்பான்.

இந்து மதனம் பற்றிய புத்தகம் : நாமென்னமோ ஏதோ மடத்திலிருந்து வந்தது போல் நம்மைப் பார்த்து சிலர் எழுப்பும் சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்வதற்குள் போதுமடா சாமியென்றாகி விட்டது. ஏன் நெற்றியில் பொட்டு, விபூதியென்று வைத்துக் கொள்கிறீர்கள். எல்லோரும் ஏழு ஜென்மம் எடுப்பார்களா, எதற்காக இறந்தவர்களை எரிக்கிறீர்களென்று கேட்டுத் துளைத்து விடுகிறார்கள். உங்களை மாதிரி புதைத்து கல்லறை கட்டினால் எங்கள் மக்கள் தொகைக்கு ஊரில் பாதை புதைகாடாகி விடுமென்று கூறிச் சிரித்து நழுவி விட்டேன்.

மனைவி/கணவன் : கல்லூரிப் படிக்கட்டுகளில் மைதானத்தில், காருக்குள்ளோ, வெளியே பேருந்து வண்டிகளில், பூங்காக்களில் இங்கெல்லாம் இளைஞர்கள், பெரியவர்கள், நல்ல காதலர்கள், கள்ளக் காதலர்கள், பாவம் செய்யப் போகிறவர்கள், நம்பிக்கை மோசம் செய்கிறவர்கள் என்று எல்லோரும் நிதானமாக ஐந்தாறு நிமிடத்திற்கு முத்தமிட்டுக் கொள்வததைப் பார்த்ததும், கறுப்பு, பழுப்பு, சிவப்பு, ஆரஞ்சு என்ற பலவித நிறத் தலைமுடிகளை ஒருவருக்கொருவர் கோதிக்கொண்டே பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் இரவில் தூக்கம் வராமல் தவிப்பதைத் தவிர்க்க வேண்டுமானால் தம்பதியாகச் செல்வது மிக்க அவசியம்.

உங்களுக்குக் கல்யாணமாகாத பட்சத்தில் திடீரென கிளம்பும்படி இருந்தால், அவசர ரப்பர் ஸ்டாம்பு போல், ஆங்கிலப் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தாவது நல்ல சத்திரம் கிடைக்காவிட்டாலும் விசா வாங்குவதற்காக அண்ணா மேம்பாலத்தடியில் வாசம் செய்யும் போது அங்கேயே ஒரு நல்ல வரனாகப் பார்த்துத் தாலியைக் கட்டி விடுவது நல்லது. முதல் நாளிரவிலிருந்து விசா வாங்கக் காத்திருப்பவர்களுக்கும் பொழுதும் நன்றாகப் போய்விடும் அவர்களும் நன்றியுடன் நீங்கள் தம்பதிகள் தான் என்று விசா வாங்கும் அதிகாரியிடம் சாட்சியம் கூறுவார்கள்.

வாஞ்சிநாதன்
More

அன்னிய மண்ணில் கொடி நா(க)ட்டினேன்
Share: 




© Copyright 2020 Tamilonline