|
அமெரிக்க மக்களின் மறுமுகம் காட்டும் கேஸினோ |
|
- தேவி ஜெகா|ஜூலை 2001| |
|
|
|
இந்தியாவிலிருந்து வந்த எங்களை அட்லாண்டிக் சிட்டியைக் காண அழைத்துச் செல்ல என் சகோதரன் டாக்டர் சிவா ஒரு திட்டம் வைத்திருந்ததாகத் தெரிந்தது. என் மகன் ராமாநாதனுடனும் மருமகள் சங்கீதா வுடனும் நானும் என் கணவரும் 1500 கிலோமீட்டர், ராமநாதன் காரை ஓட்டி வர, டேரேன்டோ, வாஷிங்டன், நயாகரா முதலிய இடங்களுக்குச் சென்று விட்டு நியூயார்க் வந்தோம். இது சென்னையிலிருந்து காரில் டெல்லி செல்லும் தூரம். எங்கள் மகனும், மருமகளும் கலிபோர்னியா சென்ற பின், நாங்கள் அட்லாண்டிக் சிட்டியைக் காணப் புறப்பட் டோம். 2 1/2 மணி நேரம் மென்ஹாட்டன், நியூஜெர்சி வழியாகச் சென்று இயற்கை வளம் வாய்ந்த பச்சைப் பசேல் மரங்களைக் கண்ட வண்ணம் பயணம் தொடர்ந்தது.
ஷோபோட் என்னும் கேஸினோவில் அறை வாடகை 200 டாலருக்கு மேல் பல வருடங் களுக்கு முன்பே இருந்ததாம். ஆனால் தற்போது பொருளாதார சரிவு காரணமாக இரட்டை அறையே 37 டாலருக்குக் கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது.
கேஸினோவிலும் சில ஆண்டுகளுக்கு முன் பல பெண்கள் அரை குறை ஆடைகளுடன் பவனி வந்து, டாலருக்கு சில்லரைக் காசு பெற்றுத் தருவர். அவ்விதம் யாரும் தற்போது அங்கு இல்லை. அங்கு பணிபுரியும் ஆண்களும் பெண்களும் வெள்ளை ஜாக்கெட் அணிந்து பெயர் பொறித்த அடையாள முத்திரையுடன் செயலாற்றினர்.
கேஸினோவை மிகுந்த கவனத்துடன் அலங்கார, சரித்திர புகழ் கட்டடங்களின் தோற்றம் போல முன் தோற்றமும், வழி எங்கும் மின்னும் பாதைகளும், வழுவழு தரையும், அலங்கார செயற்கைப் பூந்தொட்டிகளும், மேற்கத்திய இசைவாசிப்புக் குழுவினரின் வாத்தியம் முழங்க, மின் விளக்குகள் சுழன்றடித்தன அங்கே. அலங்கார விளக்குகள் பல அவ்விடத்தில் இருந்து அழகை அதிகப் படுத்தின. ஆனால் ஒரு அதிசயம் இவ்வளவு இருந்தும் நாம் சூதாட்ட இயந்திரத்தில் காசு போடும் போது இவையாவற்றையும் நம் கண்களும், காதுகளும், மனமும் கண்டு கொள்ளவில்லை! நம் கவனமெல்லாம் நமக்குக் காசு வருகிறதா? அல்லது போகிறதா? - என்பது பற்றித்தான்!
மக்கள் இவ்விதம் அங்கே இயங்கி வந்தது பலருக்கு வியப்பைத் தந்தது. இந்தச் சூதாட்டம் நம்மை ஆளுவது அட்லாண்டிக் சிட்டி, கேஸினோவில் நாங்கள் கண்ட மூன்றாவது அதிசயம். கருப்பர் என்றால் தாழ்த்தப்பட்டவர் இந் நாட்டில்; இன்று நிலை மாறியதை அறிந்தோம். ஒரு வயோதிக கருப்பு அமெரிக்க (ஆப்பிரிக்க நாட்டு மக்களைச் சார்ந்தவர்) பெரியவரை, ஒரு வெள்ளை அமெரிக்க மாது சக்கர வண்டியில் வைத்து தள்ளி வந்த நிலை வியப்பைத் தந்தது. இது ஒரு மாற்றம்!
எல்லாவற்றிற்கும் மேலாக, கடினமாக உழைக்க இளைஞர் வர்க்கம் அமெரிக்காவில் நிறைந்து இருக்க, அவர்களுக்குச் சமமான எண்ணிக்கையில் உள்ள எழுபது வயதிற்கும் மேற்பட்ட முதியவர் - தலை பஞ்சாக வெளுத்து நரைத்த நிலையில் தள்ளாது, தடி ஊன்றி - முதிய ஜோடியுடன் ஒருவர் கையை ஒருவர் பற்றி தளர் நடை போட்டு கேஸினோ வந்த நிலை விந்தையினும் விந்தை! |
|
இவ்வாறு பல முதிய ஜோடிகளைக் காண முடிந்தது அவ்விடத்தே! முதியவர் சூதாடுவது பொருளீட்ட சுலபமான வழி என எண்ணியா? அல்லது உல்லாசமாக நாட்களைக் கழிக்க சூதாட்டம் ஒரு பொழுது போக்கா? இல்லை தம் மக்களெல்லாம் எங்கோ வாழ, நமக்கு எதற்குச் சேமிப்புப் பணம் எனக் கருதி, பணத்தைப் போட்டு விளையாட்டில் விரயம் செய்யவா?
கேஸினோவில் மிகவும் வயதான மூதாட்டிகளும் தள்ளாடி, தாஜ்மஹால் கேஸினோ, ஷோபோட் கேஸினோ இரண்டிற்கும் செல்வதைப் பார்த்தேன். அங்கு சென்று சூதாட்ட இயந்திரங்களில், டாலர் காசுகளாக காகித டம்ளர்களில் நிரப்பி, ஒவ்வொன்றாகப் போடுகின்றனர். சில சமயம் சில காசுகள் கிடைக்கின்றன. பல சமயங்களில் காசுகள் கையை விட்டு செல்வதைக் காண முடிகிறது. கொண்டு வந்த காசை இழந்த பின், (Reward) கேஸினோவில் கடன் வாங்கி, ரிவார்டு வாங்கி, சூதாட்ட இயந்திரத்தில் காசைப் போட்டு இழந்து விட்டுச் செல்கின்றனர். ஆனால் மறுபடி வந்து இழந்த காசை பெற அவர்கள் மனதில் விருப்பம் உண்டு!
கடினமாகப் பல மணி நேரம் உழைத்து, மக்கள் ஹை -டெக் கம்பெனிகளில் உழைத் தாலும், இவ்விதம் சூதாட்டத்தில் ஈடுபடுவதைக் காண விந்தையாக உள்ளது!
இது அமெரிக்காவின் மறுமுகம்!
தேவி ஜெகா |
|
|
|
|
|
|
|