|
|
|
|
ஜாடியில் வந்த ஊறுகாய்கள் கோடையின் வருகையை அறிவித்தன. காரசாரமாய் ஊறிய மாவடு; வறுத்து இடித்த பொடியில் கலக்கிய எலுமிச்சைத் துண்டுகள்; மஞ்சள்பொடி, குறுமிளகு சேர்த்த தயிரில் ஊறின மாகாளிக்கிழங்கு. என் தந்தைவழிப் பாட்டியின் கண்டிப்பான மேற்பார்வையில் ஜாடி ஜாடியாக ஊறுகாய்கள் குடும்பத்தினருக்குப் பிரித்து அனுப்பப்படும். அதில் எலுமிச்சை உடனே ஒதுக்கப்படும், அப்பாவைத் தவிர வேறு யாரும் மாகாளியின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கமாட்டோம். ஆனால் சிறிய மாவடுவில் சுவை அதிகம் என்பதால் அதற்கே பெரும் அடிதடி.
மாவடுவுக்கே இந்த கதி என்றால் பழங்களின் அரசனான மாம்பழத்தை வாங்கவும் சாப்பிடவும் ஏற்படும் போராட்டம், உலகப்போர் தோற்றது போங்கள்! மாம்பழத்தின் ஈடில்லாத சுவை அக்னி நட்சத்திரத்தின் தகிப்பையும் வெப்பத்தையும் மறக்கடிப்பன. கிரிகெட்டின் தீவிர ரசிகர்களுக்கு இணையாக மாம்பழ ரசிகர்களும் இந்தியாவில் நிறைய உள்ளனர். இனிக்கும் லங்க்ரா, மணக்கும் மல்கோவா, தித்திக்கும் பதாமி, கனிந்த தசாரி, அடடா! சொல்லும்போதே எச்சிலூறுகிறதே. அமைதிவாதிகளையும் ஆக்ரோஷம் அடைய வைக்கும் விவாதம் - "எந்த வகை மாம்பழத்தில் சுவை அதிகம்?" என்பதுதான். மாம்பழத்தின் சக்கரவர்த்தி அல்போன்சா என்றாலும், பங்கனபள்ளிதான் எங்கள் குடும்பத்தின் ராஜா.
சினிமாவில், அதிலும் தென்னிந்திய சினிமாவில் மாங்காய்க்கு என்றே ஒரு தனி இடம் உள்ளது. வெட்கத்துடன் வாஞ்சயாய் மாங்காயைக் கடிக்கும் பெண் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் குறிக்கும். திருடித் தின்னும் மாங்காயில் ஒரு தனி சுவை இருப்பது உலகறிந்த உண்மை. அதனால்தான் ஒழுக்கத்தை முதன்மையாகக் கருதும் என் தாய்கூட வைத்தீஸ்வரன் கோயில் சென்றபோது மாங்காய் திருட அனுமதித்தார். |
|
அமெரிக்காவில் இருக்கும் இந்தியன் கடைகளில் ஸ்டைரோஃபோமுக்குள் திணறும் மாம்பழத்தை ஏக்கத்துடன் பார்ப்பேன். ஒவ்வொரு கோடையிலும் மாம்பழங்களை வாங்கி, ஒரே ஒரு கடிக்குப் பின் நாக்கை ஏமாற்றத்துடன் தொங்க விடுவேன். கலாசாரம், உடைகள், உறவுகள் என்று அமெரிக்காவில் ஏங்கும் இந்தியர்களுக்கு இடையில் மாம்பழங்களும் நம் இடம்பெயர்தலுக்குக் கொடுக்கும் மிகப் பெரிய விலை என்று நினைக்கிறேன். இது புரியாத, தெரியாத அல்லது மறுக்கும் பேதைகளுக்கு ஒரே ஒரு மாம்பழத்தை இலவசமாகக் கொடுக்க விரும்புகிறேன். ஒரே கடியில் வாயில் வெடிக்கும் பல்வேறு சுவைகளும், விழி பிதுங்கவைக்கும் ருசியும், மாம்பழமே பழங்களின் அரசன் என்பதை ஊர்ஜிதப்படுத்தும். வாயில் வடியும் பழச்சாறு அதை மேலும் உறுதிப்படுத்தும்.
தயிர் சாதத்துடன் மாவடுவை உண்ணும் போதும், கடற்சாலையில் கீற்று மாங்காயை ருசிக்கும் போதும், தனியே மாம்பழத்தைச் சுவைக்கும் போதும் தாயின் மடியை விட்டுப் பிரிய மறுக்கும் குழந்தைபோல், இந்தியாவை விட்டு வர மனம் கலங்கும், தடுமாறித் தத்தளிக்கும்.
மீரா ராமநாதன், டேன்பரி, கனெக்டிகட் |
|
|
|
|
|
|
|