|
|
அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வளவு சீக்கிரம சூடு பிடிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஜூலை இறுதியில் நடந்த ஜனநாயகக் கட்சி மாநாட்டுக்கும் ஆகஸ்டு இறுதியில் நடந்த குடியரசுக் கட்சி மாநாட்டுக்கும் இடையில் ஒலிம்பிக் பந்தயங்கள் மட்டுமே மக்கள் கவனத்தில் இருக்கும் என்றே எதிர்பா¡க்கப்பட்டது. ஆனால், செனட்டர் ஜான் கெர்ரி தன்னை வீரப்பதக்கம் பெற்ற வியட்நாம் வீரர் என்று விளம்பரப்படுத்திக் கொண்டபோதே, இவர் வெறிநாய் முன் கறித்துண்டு போடுகிறாரே என்று நினைத்தேன்.
அதிபர் கிளின்டன் வியட்நாம் போருக்குப் போக மறுத்ததைக் குறைகூறிய அதே குடியரசுக் கட்சி, இன்று போர்முனைக்குப் போவதைத் திறமையாகத் தவிர்த்த மேட்டுக்குடி மக்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது. இவர்கள் மற்ற பிள்ளைகளைப் போரில் மடிய அனுப்பத் தயங்காதவர்கள். ஆனால் போரில் விழுப்புண் பெற்ற எதிராளியைப் போற்றும் பண்பற்றவர்கள். இது கடந்த அதிபர் நியமனத் தேர்தலில் தம் கட்சியைச் சார்ந்த அரிசோனா செனட்டர் மக்கேய்ன் மேல் சேற்றை வாரியிறைத்த போதே தெளிவாகத் தெரிந்தது.
ஆனால் ஆதாரம் ஏதுமில்லாமல் அண்டப் புளுகு புளுகுபவர்களுக்கு அமெரிக்க உடகங்கள் ஏன் இலவசமாக விளம்பரம் தரவேண்டும்? நடுநிலை வகிக்க வேண்டியது தான். ஆனால் அதற்காக அப்பட்டமான பொய்களைப் பரப்புவானேன்? இந்தக் கலாச்சாரப் போர்கள் இத்தோடு நிற்கப் போவதில்லை. இராக் போரைப் பற்றியே தெளிவில்லாத மக்களுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட வியட்நாம் போரைப் பற்றியா தெளிவிருக்கும்?
கெர்ரியின் வீரப்பதக்கங்கள் பற்றி அவரது எதிராளிகள் சொன்னவை பொய் என்பது தெளிவாகிவிட்டது. ஆனால், அடுத்த குற்றச்சாட்டு, வியட்நாமில் அமெரிக்கப் போர்க்குற்றங்கள் பற்றிய கெர்ரியின் 1971 செனட் வாக்குமூலம் பற்றியது. "இது போர், தூது பற்றியது மட்டுமல்ல. இது நம் மனிதத்தன்மை பற்றியது - நம் இனவெறி, ஆயுதத் தாக்குதல், ஜெனீவா ஒப்பந்தங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே அவற்றை மீறும் நமது போலித்தனம், சிறைக்கைதிகளைச் சித்திரவதை செய்வது, கண்ட இடத்திலெல்லாம் குண்டு போடுதல் ன்ற நம் நடத்தை பற்றியது" என்றார் கெர்ரி அன்று. முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இராக் போரிலும் அந்த நடத்தையின் பிரதிபலிப்புகள் இல்லாமல் இல்லை.
அன்று கம்யூனிஸ்டுகளுடனான போரை எதிர்த்ததால் அமெரிக்காவின் வலிமையைக் குறைத்து அந்தப் போரின் தோல்விக்கு வித்திட்டார் கெர்ரி என்பது குற்றச்சாட்டு. அவர்கள் சொல்ல வருவது, அந்த மனப்பான்மையுள்ள கெர்ரியை நம்பி இன்று பயங்கரவாதடத்துடனான போர், இராக் போரை ஒப்படைக்கக்கூடாது என்பதுதான்.
ஆனால் வரலாறு கற்றுத்தரும் பாடம் என்னவென்றால், அன்று வெல்ல முடியாத வியட்நாம் போரிலிருந்து அமெரிக்கா விலகியதால் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை என்பதுதான். வியட்நாம், கம்போடியா, லாவோஸ் மக்கள் சொல்லொணாத் துன்பம் அனுபவித்தாலும், கிழக்காசிய நாடுகள் டாமினோ போல் கம்யூனிஸ்டு பக்கம் சாயவில்லை.
வியட்நாம் போரின் காட்சிகள் சில மனித மனத்தைப் பெரிதும் பாதிப்பவை. 1963ல் புத்த பிக்கு திக் குவாங் டுட் அமெரிக்க ஆதரவு பெற்ற தென் வியட்நாம் அரசின் அடக்குமுறையை எதிர்த்துத் தீக்குளித்தார். அந்தத் தீக்குளிப்பிற்குப் பின்னர் தென் வியட்நாம் அரசின் வளைந்த செங்கோல் நிமிரவேயில்லை. இதன் எதிரொலி தமிழகத்திலும் இருந்தது.
1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் நாடெங்கும் பரவியதற்கு ஒரு முக்கிய காரணம் தீரன் சின்னசாமியின் தீக்குளிப்பு. மொழிப் போராட்டத்துக்காகத் தன்னைத் தானே எரித்துக் கொள்வது என்பதை அன்றைய அரசால் ஏற்க முடியவில்லை. தமிழ்நாட்டில் கண்மூடித்தனமாக அடக்குமுறையை அவிழ்த்து விட்ட காங்கிரஸ் அரசு அன்று சரிந்தது, இன்று வரை நிமிரவேயில்லை. |
|
அதே அடக்குமுறை, தீக்குளிப்புப் போர், இன்றைய இந்தியாவில் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் மணிப்பூரில். தொன்மையான வரலாறு கொண்ட மணிப்பூர் மாநிலம் 1942ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கொண்டுவந்த அடக்குமுறைச் சட்டத்தின் வெவ்வேறு வடிவத்தில் இன்றும் வாடிக் கொண்டிருக்கிறதது. இந்த அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்த போராளிப் பெண் ராணுவச் சிறையில் கற்பழிக்கட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாள். இதனால் தொடங்கிய போராட்டம் ஆகஸ்டு 15 அன்று ஒரு மாணவரின் தீக்குளிப்பால் மேலும் வெடித்திருக்கிறது. 50 ஆண்டு அடக்குமுறைச் சட்டத்தை ரத்து செய்யுங்கள் என்பதுதான் போராட்டத்தின் ஒரே கோரிக்கை. ஆனால், அடக்குமுறைச் சட்டத்தை எடுக்க இந்திய அரசுக்கு மனமில்லை.
ரெளலட் சட்டத்தில் வாடிய காங்கிரஸ¤ம், நெருக்கடி நிலையில் அடிபட்ட பாரதீய ஜனதா, திமுக கட்சிகளும், பொடாவில் நசுங்கிய மதிமுகவினரும் இன்னுமொரு அடக்குமுறைச் சட்டத்தை எப்படி ஆதரிக்க முடியும் என்று புரியவில்லை. அடக்குமுறை தமிழ்நாடு, ஆந்திரா, அஸ்ஸாம், மணிப்பூர், பஞ்சாப், காஷ்மீர், குஜராத் என்று இந்தியாவில் எங்கு நடந்தாலும் சரி இந்திய மக்கள் அனைவரும் அதை எதிர்க்க வேண்டும்.
அமெரிக்க அறிஞர் ஹென்றி டேவிட் தரோ தன் "சட்ட மறுப்பு" நூலில் நேர்மையற்ற சட்டங்களை உடனே மீறவேண்டும் என்றார். "தங்கள் அரசு செய்வது முற்றிலும் தவறு என்று உணர்ந்த குடிமக்கள், அத்தகைய அரசுக்குத் தங்கள் உடல், பொருள் தரும் ஆதரவை முற்றிலும் விலக்க வேண்டும்" என்ற அவர் கொள்கைதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மக்கள் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரகக் கொள்கைக்கு வித்திட்டது. காந்தியின் வழிவந்த சுதந்திர இந்தியாவின் அடக்குமுறை வருந்ததத்தக்கது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்ற போர்வையில் இந்தியா மட்டுமல்ல, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பல நாட்டு அரசுகள் மக்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கின்றன. தற்காலிகப் பாதுகாத்துப்புக்காகத் தம் அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுப்பவர்கள் இரண்டையுமே இழப்பார்கள் என்றார் பெஞ்சமின் ·பிராங்க்ளின். ஆனால் இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களால் தற்காலிகப் பாதுகாப்புக்குக்கூட உத்தரவாதம் கொடுக்க முடியாது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் குடியாட்சியை மெல்ல மெல்லச் சர்வாதிகாரமாக மாற்றி விடும். தனக்கு இருக்கும் அதிகாரத்தைத் தானே எந்த அரசும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. அதனால், அரசுகளுக்குக் கூடுதல் அதிகாரம் கொடுப்பதில் மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒரு பில்லியன் மக்களுக்கு ஒரு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்த ஒலிம்பிக் விளையாட்டு வீரர் மேஜர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு நம் வாழ்த்துகள். இந்தியா ஒரு மெடல் வாங்கினால் நூறு வாங்கியதற்குச் சமம் என்று சவடால் விடலாம். அல்லது பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் ஒரு பத்து பதக்கமாவது வாங்க வேண்டும் என்று உறுதி கொள்ளலாம். மனம் இருந்தால் வழியுண்டு.
மணி மு. மணிவண்ணன் |
|
|
|
|
|
|
|