ரம்ஜான் நோன்பு
|
|
|
'எங்கிருந்து இவன் வந்தான்' என்று நான் இன்று வரை நதிமூலம் பார்த்ததில்லை. ஆனால் எனையொத்த ஆறேழு பேருக்குத் தனி ஆசான் இவனேயென என் பெற்றோர் என்றுரைத்தனரோ அன்று முதற் கொண்டாய், எம்மை அவன் ஆட்கொண்டு விட்டான். மன்றுள் நின்றாடும் மகேசன் போல மனம் முழுக்க நிறைந்து விட்டான்.
நித்தமும் விழித்தெழுகையில் இராமர் பட்டாபிஷேகப் படத்தின் முன்னின்று முணுமுணுத்தது போய், என் கண்ணை மறந்து, அவனிரு கண்களையே என்னகத்தில் இசைத்துக் கொண்டு, இரவும் பகலும் ஆசானே அனைத்துமென ஏற்றுக் கொண்டு...
அத்தனையும் நேற்றுத்தான் நிகழ்ந்ததோவென என்னையே நான் கிள்ளிக் கேட்டுக் கொண்டதுண்டு!
மூங்கிலுக்கு வெண் மேகத்தில் வேட்டி, சட்டை பூட்டி யாரேனும் பார்த்ததுண்டோ?
கண்களுக்குள் கனலையும், நெஞ்சுக்குள் பனியையும் சுமந்து கொண்டொரு பிடரி சிலிர்த்தலையும் சிங்கத்தை எங்கேனும் கண்டதுண்டோ?
என் ஆசானில் இத்தனையும் நான் கண்டதுண்டு! முன் செய்த தவத்தினால் இங்கிவன் எனக்கு ஆசான் ஆயினன் என எண்ணிக் கருவம் கொண்டதுண்டு!
புள்ளினமும் விழித்தெழ மறுக்கும் புலராப் பொழுதினிலே ஆட்டிடையன் போலும் ஆசான் எங்களை ஓட்டிச் செல்வான். நீர் நிறைந்த நாட்களில் ஊருணியிலும், வற்றிய நாட்களில் கமலை நீரிலும் குளித்த நாட்களை இன்றும் எண்ணிடக் கண்கள் ஒரு குடம் நீர் சொரியும்.
எண்ணை தேய்த்த அவன் முதுகில் அரப்பை அள்ளி நான் தேய்க்க பின்னர் அடித்துத் துவைத்த வேட்டியினை அவன் என் அரையினிலே இறுக்கிக் கட்ட, குண்டஞ்சித் துண்டினை வெண்சாமரமாய்த் தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு நான் ஓட வேட்டியோடு சேர்ந்து கீழ் வானும் வெளுத்திருக்கும்!
அருச்சுனனைப் போல் வில்லினில் நாணேற்றி, ஆயிரம் இலைகளில் துளையிடும் சித்து வித்தை நான் கற்றேனில்லை; ஆயினும்... அன்றொரு நாள் ஆசான் என் நெஞ்சினில் சந்தனமிட்டு, நெற்றி நிறைய நீரிட்டு இமைகளுக்கிடையில் குங்குமமிட்டு "ஜோராப் படிச்சு மேல வரணும்.. வேய்" என்று ஓதியபோது ஆசானும் நானும் துரோணனும் அருச்சுனனும் போலானோம்!
கதை சொல்லும் வண்ணத்தில் அவன் கண்ணனென்றால் நான் கையது கொண்டு வாயது பொத்தி நிற்கும் காண்டீபன்!
கம்பனின் இராமனை அவன் காட்டுகையில், நான் சேவடி தன்னைச் சென்னியில் தாங்கி நிற்கும் சிறிய திருவடி!
அவன் ஆண்டாளாகிப் பாடுகையிலோ, இருவாட்சியும் பிச்சியும் தொடுத்தெடுத்த ஆரத்தில், நாராய்ப் பிறக்கும் விதியுடையேன் நான் ஆனேன் என எண்ணி விண்ணுயர்ந்தேன்! விழி மூடித் திறக்கும் விதி மறந்தேன்!
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமாமே! அவ்வாறெனில்... பிழையற எழுதவும், எழுதிய வண்ணமே ஒழுகவும் பேணிக் காத்திட்ட வள்ளல் என் ஆசானை வான்மழை என்பேனோ! இல்லை, வார்த்தைக்கு வறுமையாகி, வாய் திறக்க வன்மையின்றிப் போவேனோ!
அன்றொருநாள், அவன் கற்றுத் தந்த கண்ணப்பனை நினைவில் கொண்டு, இறைச்சியினைச் சுவைத்து, அறியாமையினாலே, ஈசனுக்குப் படைப்பதாய் என்னுள் எண்ணிக் கொண்டு அவன் உண்ணும் இலையினிலிட்டபோது, அருகிருந்த என் தந்தை இரணியன் ஆனார். அம்மாவோ ஆடிப் போனார். |
|
இறைச்சியே உண்டறியா என் ஆசானோ, அதை உண்டு, சுவைத்து "இது மிக நன்று" என்றுரைத்துப் "பண்பிலே தெய்வ"மானான்!
அன்றவன் ஆங்கிலத்தில் கற்றுத் தந்த அட்சரம்தான் இன்றெனை அடுக்கு மாளிகையில் இருத்தி வைத்திருக்கிறது.
இங்கிவ்விதமாய்... ஆசானே அனைத்துமென எண்ணி, ஐந்து வயது தொடங்கிப் பத்துக்குள் அவனளித்த ஞானப் பிரபஞ்சத்தை நெஞ்சினில் வாங்கி, சிந்தையில் இருத்தி நானும் சீர்மிகுந்து ஓங்குகையில்...
ஓர் நாள் ஆசானுக்கு நோயென்பார்; அது தொட்டால் ஒட்டிக் கொள்ளும் என உரைப்பார். தனியனாய் இருந்த ஆசானைத் தாள் போட்டு வீட்டோடு பூட்டி வைப்பார்;
என்னவென்று கேட்ட என்னிடம் 'சின்னவன் நீ, சீக்கு வந்த அவன் திசை கூடச் செல்லாதே' எனக் கூறி வைப்பார். 'ஆசானைப் பார்க்க வேணும்' என்று என்றேனும் கேட்டாலோ, பாம்பெனச் சீறி வைப்பார்.
நானும் 'நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி', நன்றியின்றி, முதுகினில் எலும்பின்றி, ஆசானைப் பார்க்கும் அறிவின்றிப் பள்ளியோடும் வீட்டோடும் என்னைப் பதுக்கிக் கொண்டேன்.
மாதங்கள் பல கடந்து பின்னொரு நாள்... ஆசானை அடைத்து வைத்திருந்த வீட்டருகே விளையாட நான் சென்றிருந்தேன் அங்கே...என் ஆசான் ஈசன் - என் ஆசான்.
சன்னலில் கம்பியாய், இடுப்பில் உடுப்பேதுமின்றி ஈசன் - என் ஆசான்...
என் பெயர் சொல்லி 'ஐயா...' என ஆசையாய் அழைத்தும் தண்ணீருக்காய்க் கையேந்தி கூவியும் திரும்பிப் பாராமலே, ஒரு கோழையைப் போலே ஓடி வந்தேன். கோழையைப் போலென்ன, ஒரு கோழையாகவே ஓடி வந்தேனே...
இன்றும் நன்றி கொன்ற என்னை அந்த அவலக்குரல் அச்சுறுத்தும்!
இரவுக் கனவுகளில் இரும்புச் சிலுவைகளை என் முதுகில் ஏற்றிவைக்கும்!
பகல் நினைவுகள் சுண்ணாம்புக் காளவாயில் என்னை இறக்கி வைக்கும்!
இ.பி.கோ.வோ இவனுக்குச் சிரச்சேதம் என்று இறுதித் தீர்ப்பினைச் சொல்லிவைக்கும்!
இறவா அந்த நினைவுகளை இறைவா! இங்கு... இன்று... இறக்கி வைத்தேன்!
'இன்னுமொரு தனித் தீர்ப்பு இவனுக்குத் தேவையில்லை' என்றெனக்குள் நானே சொல்லி வைத்தேன்!
கோம்ஸ் கணபதி |
|
|
More
ரம்ஜான் நோன்பு
|
|
|
|
|
|
|