|
பாவ மன்னிப்பு |
|
- விஜய்|டிசம்பர் 2017| |
|
|
|
|
தாமதமாய் வீடுவந்த ஒவ்வொரு நாளும், கண்ணீருடன் நீ பார்த்ததன் அர்த்தம், இன்று என் பிள்ளைக்காக காத்திருக்கும்போது அறிகிறேன் அம்மா.
அன்று உன் கண்ணீரை அலட்சியப்படுத்தியதற்கு இன்று என்னை மன்னிப்பாயா!
பள்ளியில் எல்லோரும் அணைக்கட்டுக்குச் சுற்றுலா போக, என்னை அனுப்ப நீ மறுத்ததன் அர்த்தம் இன்று என் பிள்ளையைத் தனியே அனுப்பியபின் அறிகிறேன் அம்மா.
அன்று உன்னிடம் கோபத்தில் பேசாமல் இருந்த நாட்களுக்கு இன்று என்னை மன்னிப்பாயா!
ஊரே சரவெடியும் ராக்கெட்டும் விட, ஒரு பிஜிலி வெடிக்கு ஆயிரம் அறிவுரை நீ சொன்னதன் அர்த்தம் இன்று என் பிள்ளை பட்டாசு கேட்கையில் அறிகிறேன் அப்பா.
அன்று உன் சொல் கேட்காமல் வெடித்த வெடிகளுக்கு இன்று என்னை மன்னிப்பாயா! |
|
விளையாட்டாய் என்னைக் கடிந்து பேசியதற்காக, பலகால சிநேகத்தை நீ அறுத்து எறிந்ததன் அர்த்தம் இன்று என் பிள்ளையை மற்றவர் பேசும்போது அறிகிறேன் அப்பா.
அன்று தாயுடன் இருந்த நெருக்கம், உன்னுடன் இல்லாததற்கு இன்று என்னை மன்னிப்பாயா!
இருபது வருடம் பொத்திப் பொத்தி வளர்த்தபின், இனி தனிப்பறவை என, நான் வீட்டைவிட்டு வெளியேறியதுபோல், என் பிள்ளை பட்டாம்பூச்சியாய் மலர்ந்து நாளை பறந்து செல்லலாம்.
அப்போது என் பிள்ளையாய் பரிகாரமாய் உங்களைச் சுகமாகக் காப்பதே எனக்குப் பாவமன்னிப்பு.
விஜய், உட்பிரிட்ஜ் டவுன்ஷிப், நியூ ஜெர்சி |
|
|
|
|
|
|
|