Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சமயம் | தகவல்.காம் | குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | சிறுகதை
சினிமா சினிமா | தமிழக அரசியல் | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
சின்னச் சின்ன சாட்டைகள்...
திறப்பின்...
மீட்சிகள்
ஜென்மங்கள்
பிரியா விடை
- அப்துல் ரகுமான்|ஜனவரி 2001||(1 Comment)
Share:
Click Here Enlargeஇருபதாம் நூற்றாண்டே!
நீ விடைபெறுகிறாய்

உன்னை
வழியனுப்ப வேண்டிய
கட்டாயத்தில் நாம்

உன்னை
நிறுத்தி வைக்க
முடியாது

பழகிவிட்டால்
பேயைப் பிரிவது கூடத்
துயரம் தான்

நீ பேயல்ல,
ஆனாலும் உன்னை
தேவதை என்றும்
சொல்ல முடியாது

கால நதியில்
புது வெள்ளமாய்
வந்த நீ
எங்கள் விவசாயத்திற்குப்
பாசனமாகவும் இருந்தாய்
ஆனால் எங்கள்
குடிசைகளையும்
அடித்துக் கொண்டு போனாய்

நாள் சருகுகளை
உதிர்க்கும்
கால மரத்தில்
நீயும் ஒரு கிளை

உன் பூக்கள் மட்டும்
வித்தியாசமாகவா -ருக்கும்?

நாம் அறிவோம்

கறுப்பும் வெளுப்புமான
இரு சிறகுகளை
அசைத்தபடி பறக்கும்
காலப் பறவை
எந்தக் கிளையிலும்
கூடு கட்டுவதில்லை
அதை
எந்தக் கூண்டிலும்
அடைக்கவும் முடியாது

பணத்தைச்
செலவு செய்பவனல்ல,
காலத்தை வீணாய்ச்
செலவு செய்பவன் தான்
ஊதாரி
ஆனாலும்
காலத்தைச்
சேமித்து வைக்கவும் முடியாது

ஒரு கண்டிப்பான
தந்தையைப் போல்
அது விரும்பியதைத்தான்
கொடுக்கும்
நாம் கேட்பதைக்
கொடுக்காது

அது
சாமர்த்தியமான திருடன்
சப்தமில்லாமல் வந்து
திருடிச் சென்றுவிடும்

அது உயிர்களுக்குக்
கருவறையாகவும்
இருக்கிறது
கல்லறையாகவும்
இருக்கிறது

அது வித்தைக்காரன்
கரும்பையில்
சூரியனைப் போட்டு
நட்சத்திரங்களை
எடுத்துக் காட்டுகிறது

கோபுரங்களைக்
குப்பை மேடாக்குகிறது
குப்பை மேடுகளைக்
கோபுரமாக்குகிறது

மகுடங்களைப்
பிச்சைப் பாத்திரம்
ஆக்குகிறது
பிச்சைப் பாத்திரங்களை
மகுடமாக்குகிறது

அது
தீபங்களை
ஏற்றவும் செய்கிறது
எரியும் தீபங்களை
அணைக்கவும் செய்கிறது

அதன்
கோரப் பற்களுக்கு
எதுவும் தப்புவதில்லை
அது எதையும் செரித்து
ஏப்பம் விட்டுவிடுகிறது

அது உச்ச நீதிமன்றம்
அதன் தீர்ப்புக்கு
மேல் முறையீடு -ல்லை
கருணை மனுக்களை அது
கண்டு கொள்வதில்லை

அதை நாம்
அளக்க முயல்கிறோம்
அதுவோ
நம்மை அளந்து விடுகிறது

அது அந்தரங்கங்களை
அம்பலப்படுத்திவிடுகிறது
புரையோடிய புண்களைப்
புனுகு பூசி
மறைத்துவிடுகிறது

நாம் மாற்ற முடியாததை
அது மாற்றி விடுகிறது
நாம் ஆற்ற முடியாததை
அது ஆற்றி விடுகிறது

நாம் கூத்துப் பாவைகள்
காலம் ஆட்டுவிக்கிறது
நாம் ஆடுகிறோம்

நாம் அனைவருமே
காலச் சரட்டில்
தொடுக்கப்படும்
பூக்கள்
மரண தேவனுக்கு
மாலையாக

இருபதாம் நூற்றாண்டே!
நீ மட்டும் எப்படி
வித்தியாசப்படுவாய்?

நீ வருகை புரிந்தபோது
ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட
அஞ்சல்காரனைப் போல்
எவ்வளவு உற்சாகமாக
உன்னை வரவேற்றோம்

ஆனால் உன் பையில்
புன்னகைகள் மட்டுமல்ல
காயங்களும் -ருந்தன

நீ பரமபதமாக
இருந்தாய்
உன் ஏணியில் ஏறிப்
புதுப் புது உயரங்களை
அடைந்தோம்

ஆனால் உன் பாம்புகளில் இறங்கிப்
பள்ளங்களிலும் வீழ்ந்தோம்

நீ சதுரங்கம்
ஆடினாய்
அரசர்களை வெட்டினாய்
காய்களை அரசராக்கினாய்

ஒரு சிறுமியைப் போல்
எங்களை
பொம்மைகளாக்கி
விளையாடினாய்

உடையணிவித்தும்
சோறூட்டியும்
கல்யாணம் செய்வித்தும்
மகிழ்ந்தாய்

உடைத்தும் வீசினாய்
ஒரு சொட்டுக்
கண்ணீர் கூடச்
சிந்தாமல்

நீ புதுப்புது -யந்திரங்களை
எங்கள்
சேவகர்களாக்கினாய்
ஆனால் நம்மையும்
இயந்திரங்களாக்கிவிட்டாய்

உன்னால்
உலகம் சுருங்கியது
நல்லது, ஆனால்
உள்ளங்களும் அல்லவா
சுருங்கிவிட்டன
Click Here Enlargeமனிதன் எட்ட முடியாத
நிலவைத்
தொட வைத்தாய்
ஆனால் அவன்
அருகிலிருக்கும் சக மனிதனைத்
தொட அருவருக்கிறானே!

நீ பழஞ் சிறைகளை
உடைத்தாய்
ஆனால்
புதிய விலங்குகளையும்
பூட்டி விட்டாய்

நீ புதுப்புதுச்
சவுக்காரங்களால்
மனிதனைக் கழுவினாய்
அவனோ
சுட்டிப் பிள்ளையாய்ப்
பழைய அழுக்குகளில்
மீண்டும் மீண்டும்
புரண்டு விளையாடுகிறான்

நீ பழைய தெய்வங்களை
உடைத்தெறிந்தாய்
மனிதனோ
அகந்தையையும்
இச்சையையும்
தெய்வங்களாக்கிக்
கொண்டான்

நீ விஞ்ஞானப் புதையல்களைத்
தந்தாய்
மனிதனோடு அதனால்
இமைகளைக் கத்திரித்துவிட்டுத்
தூக்க மாத்திரைகளைத்
தயாரித்துக் கொண்டிருக்கிறான்

நீ எதிரியாகவும்
இருந்தாய்
நண்பனாகவும்
இருந்தாய்

நீ தந்த
காயங்களுக்காக
நாம் உன்னை
ஏசப் போவதில்லை
ஏனென்றால், அவை
பாடப் புத்தகங்களாக
இருக்கின்றன

சிதறு தேங்காயைப் போல்
எங்களை உடைத்தாய்
ஆனாலும் எங்களுக்குப்
புதிய முகவரியையும்
கொடுத்தாய்

ஆயுதங்கள் பாட
வெடியோசையோடு
உன் ஊர்வலம்
உன் பாதையெல்லாம்
ரத்தச்சகதி

ஆனாலும்
எந்த -ரவுக்கும்
விடியல் உண்டு
என்ற நம்பிக்கையால்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

இருபதாம் நூற்றாண்டே !
மரபுப்படி
'போய் வருக' என்று
உன்னிடம்
சொல்ல முடியாது
ஏனென்றால்
சென்ற காலம்
திரும்பி வருவதில்லை

மணவிலக்குப் பெற்ற
மனைவியைப் போல்
பிரிகிறாய்

உன்னை எப்படி
மறக்க முடியும் ?

உனக்கும் எனக்கும்
பிறந்த குழந்தைகள்
என்னோடிருக்கும்

அவை உன்னை
நினைவூட்டிக் கொண்டே
இருக்கும்

அப்துல் ரகுமான்
More

சின்னச் சின்ன சாட்டைகள்...
திறப்பின்...
மீட்சிகள்
ஜென்மங்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline