நிதிதனை இழக்கலாம் நிம்மதி துறக்கலாம் நியதிதனை மறக்கலாமோ நெஞ்சமதில் கருமைதனை கொள்ளவுந் துணிவதோ நீசனென் றாகத் தகுமோ?
விதியிடம் தோற்கலாம் வெற்றியை இழக்கலாம் வெம்பிமனம் தளரலாமோ? வீணாகும் வாழ்வெலாம்; வேண்டாத குணமதாம் விரக்தியைக் கொள்ளலாமோ?
சதிதன்னை வென்றிடும் உறுதியைக் கொண்டிட்டு சாதனை புரியவேண்டும்; சாதனை செய்தபின் காணுவோர் போற்றிட சரித்திரம் படைக்க வேண்டும்
மதிதன்னைக் கொண்டபலன் விதிதன்னை வெல்வதே மகிமையிதை உணரவேண்டும்; மாண்புற்ற வாழ்வினைக் கொள்பவன் தானென்றும் மானிடன் என்றாகுவான்! |