'சூரியக்கிரக தோஷ நிவாரணத் தலம் '
|
|
தஞ்சைப் பெரிய கோயில் சித்திரங்கள் |
|
- காந்திராஜன்|டிசம்பர் 2000| |
|
|
|
சோழ சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சியின் உச்சத்தில் உருவான மாபெரும் கலை பொக்கிஷம் தான் பெரிய கோவில், இராஜராஜ சோழனின் கலைத் தாகத்திற்கும், சிற்பிகளின் உளிகளுக்கும், ஓவியனின் தூரிகைக்கும் இடையே நடந்த கலைப் போரின் விளைவே இந்த அழியாச் சின்னம். ஆயிரம் ஆண்டுகளாகியும் முதுமையின் வாசம் வீசாமல் கட்டுண்ட இளைஞனைப் போல் கம்பீரமாய் நின்று இன்னும் ஆயிரமாயிரம் தலைமுறைகளைக் காண ஆவலாய் எதிர்கொண்டுள்ளது.
இக் கோயிலின் கட்டிட அமைப்பில் கருவறை இரு சுவர்களைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு சுவர்களில் நான்கு புறங்களில் வாசல்களும், இடையே நடைபாதையும், இரண்டு தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இந்த இடைவெளியின் நடைபாதைச் சுவர்களில்தான் ஆயிரமாண்டுச் சித்திரங்கள் சிறிது சிதைந்து காணப்படுகின்றது. இந்த ஓவியங்கள் நாயக்கர் கால ஓவியங்களால் முன்பு சிறை பிடித்து முற்றிலும் மறைத்து வரையப்பட்டு இருந்தது. 1933 - இல் கோவிந்தசாமி எனும் அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஓவியங்களைத் தொடர்ந்து ஆய்வு நோக்குடன் காணும்போது ஓவியத்துக்குள் ஓவியம் இருப்பதைக் கண்டு, விஞ்ஞான ரீதியில் மேல் ஒவியங்களை எடுத்துவிட்டுச் சோழ ஓவியங்களை உலகுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
இக் கோயிலில் நான்கு வேறு வேறு காலகட்டங்களில் உருவான ஓவியங்கள் காணப்படுகின்றன. இவ்வோவியங்கள் அக் கோயிலில் உருவான சுய சிந்தனைகளையும், பேரரசுகளின் ஆர்வத்தையும், ஓவியன் மற்றும் சிற்பிகளின் மாறுபட்ட கருத்தமைப்பையும் காணுவதற்கு ஆதாரமாய் அமைந்துள்ளது.
சோழர் ஓவியங்கள்
தட்சிணாமூர்த்தியான சிவபெருமானின் ஓவியம் நீண்ட இதன் புற உட்சுவரில், இயற்கை எழிலோடு வரையப்பட்டுள்ளது. பெரிய ஆலமரத்தின் கீழ் அமர்ந்து ஆலமர் செல்வனாய், தவ முனிகளுக்கு அறிவுப் பசியைத் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார். இவர்களது பின்னணியில், ஆலமரக் கிளைகளில் துள்ளி விளையாடும் குரங்குகள், பாடும் பறவைகள், வெள்ளைக் கரடிகள், புலி முதலியவை காட்சிகளில் உள்ளது. இங்குள்ள தவளைகள் உடலை வருத்தி ஞானம் பெறக் காத்திருப்பதால், அவர்களுடைய தேகம் மெலிந்து காணப்படுகின்றது. சின்னரப் பறவைகள் வான்வெளியில் யாழ் இசைத்து வருவது சிறப்பான ஒன்றாகும்.
இந்தத் தட்சிணாமூர்த்தி ஒவியத்திற்குச் சற்று மேலே கரிய கஞ்சுகன் எனும் பைரவரின் உருவம் வெண்மை நிறத்தில் ஆடைகலாலின்றி நாயுடன் காணப்படுகின்றது. பைரவரின் கைகள் படைக் கலன்களால் நிரப்பப்பட்டு உள்ளது. நீண்ட தடிமனான முடிகள் தழல் போல் மேலே பறக்கின்றன.
மேற்குச் சுவரில்தான் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓவியமான தம்பிரான் தோழர் என்னும் சுந்தரமூர்த்தியின் கதை வரையப்பட்டுள்ளது. சேக்கிழாரின், திருத்தொண்ட புராணத்தில் ஒரு கதாபாத்திரமாய்ச் சுந்தரர் அவதரிக்கிறார். ‘தடுத்தாட கொண்ட புராணம்’ எனும் பகுதியை மிகத் தெளிவுடன் அக்கால சமூகப் பின்னணியுடன் ஒரு தமிழ்க் காப்பியம் ஓவியமாய் உருவெடுத்துள்ளது.
சுந்தரரின் திருமண நாளன்று ஊர் கூடியிருந்தது. ஆங்காங்கே அலங்காரங்கள், வாத்திய இசைகள் முழங்க மணமேடையில் வீற்றிருந்த அழகிய சுந்தரர், புரோகிதரின் மந்திரத்தைத் தொடர்ந்து மணமுடிக்க இருக்கும் தருவாயில் திருமணப் பந்தலுக்குள் ‘நிறுத்துங்கள்’ எனும் ஒலி அனைவரையும் ஆச்சர்யத்தில் திகழ்த்தியது. வயதான அந்தணக் கிழவன், நெற்றியில் திருநீறு பூசி, பூ நூல் அணிந்து இடது கையில் குடையுடன், மூங்கில் தண்டுடன் நிதானமாய் நடந்து வருகிறார். ஊர் மக்கள் ‘’ஐய நின் வரவு நல்வரவு ஆகுக’’ எனக் குரல் எழுப்பினர். வந்த கிழவனார் ஊர் மக்களிடம் முறையிட்டார். ‘’இந்த நாவல் ஊரன் எனக்கு அடிமை’’ என்று கூறி, அதற்குச் சுந்தரருடைய முன்னோர்கள் எழுதிக் கொடுத்த ஆவணத்தைச் சபையில் வைத்தார். ஆவண ஓலையைக் கண்ட சுந்தரர் பிடுங்கிக் கிழித்துப் போட, மீண்டும் மற்றொரு ஓலையைக் காட்டி சுந்தரர் தமக்கு அடிமை எனக் கூறித் திருமணத்தைத் தடுத்து சுந்தரரை அழைத்துக் கொண்டு திருவருட்துறைக் கோயிலை அடைந்து மறைந்தார்.
இந்த ஓவியம மூன்று நிலைகளில் வரையப்பட்டுள்ளது. முதலாவதாக ஆண்களும், பெண்களும் திருமணத்திற்காக அமுது படைத்துக்கொண்டு இருக்கின்றனர். அடுத்து ஆன்றோர்கள் அமர்ந்துள்ளனர். அதில் அரசன் கோலத்தில் வீற்றிருக்கிறார் சுந்தரர். அவருக்கு எதிரே வெண்தாடியுடன் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படியாக சிவபெருமான் நையாண்டிப் பார்வையில் காணப்படுகிறார், கையில் ஓலையுடன். பின்னர் ஓலையை அவையோர் காண்பது, தடுத்தாட் கொள்வது இறுதியாக திருவருட்துறைக் கோவிலுக்குச் சென்று மறைவது போன்ற காட்சிகள் அக்கால சமூகப் பின்னணியுடன் இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த பகுதியில் சுந்தரர் தில்லைத் திருத் தலத்தில் ஆடவல்லான் நடராஜரைக் கண்டு வணங்கும் காட்சி, பெரிய புராணத்துள் உள்ளது போல் வரையப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆடற் மகளிர் பலர் பல கரணங்களில் பரத சாஸ்திர முறையில் ஆடுவது அங்குள்ள தேவதாசிகளின் முகங்களை நம் கண் முன் கொண்டு வருவதாய் அமைந்துள்ளது.
சுந்தரரும், சேரமான் பெருமாளும் கையிலைக்குச் செல்லும் காட்சியும் மிகவும் முக்கியமான ஓவியமாகும். சேரமானோடு அவர்களது படைவீரர்களும் பின் தொடர்ந்து வருவது சிறப்பாக உள்ளது. சுந்தரர், ஐராவதம் எனும் வெள்ளை யானை மீது பயணிக்கின்றார். சேரமான் பெருமாள் தன் குதிரையில் ஏறி விரைகின்றார் சுந்தரரோடு கையிலைக்கு.
குதிரை மீது முன்னே பயணிக்கும் சேரமான் பெருமாள், பின்னால் வரும் சுந்தரரைக் காண்பது நேர்த்தியான முறையில் வரையப்பட்டுள்ளது, மேலும் உருவங்களை வரைவதில் சோழ ஓவியனுக்கு இருந்த திறமை வெளிப்படும் நிலையில் அமைந்துள்ளது. இவர்களுடன் கந்தர்வ உருவங்கள் மேகக் கூட்டங்களுக்கிடையே இசையமைத்துக் கொண்டு பறப்பது பார்வையாளனை வேறு ஒரு உலகத்துக்கு இழுத்துச் செல்லும்படி இருக்கின்றது.
இதற்கு அடுத்தபடியாகப் பொன்னம்பலக் காட்சி உள்ளது. அதில் சிவகாமியும், நடராஜரும் ஆடும் காட்சி அழகுடன் வரையப்பட்டுள்ளது. இக் காட்சியில் இளவரசன் போன்ற ஒருவனும், அருகிலே மூன்று பெண்களும் நிற்பதாக உள்ளது. அவன் இராஜராஜனும் அவனது துணைவியார்களுமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இன்னும் சிலர் சேரமான் பெருமான் தேவியருடன் இருப்பதாகக் கருதுகின்றனர். அதற்கு அருகே காளியின் உருவம் பேய் போன்ற உருவத்துடன் ஆடுவதாக வரையப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து ஆண்களும், பெண்களும் நடனமாடும் காட்சிகள் தொடர்ந்து வரையப்பட்டுள்ளது. மேலும் பொன்னம்பலக் கூரையானது தென் தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் உள்ள அம்பலங்களைப் போல் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சுவருக்கு எதிர்ப்புறத்தில் இரண்டு உருவங்கள் உரையாடும் நிலையில் வரையப்பட்டுள்ளது. ஒருவர் சடைமுடி தரித்து வெண் தடியோடு, தீர்க்கமான பார்வையுடன் முனிவர், மற்றவர் முனிவரின் கருத்துக்களைப் பணிவுடன் கேட்கும் இராஜ கம்பீரமான இளைஞன்.
அறிஞர்கள் மத்தியில் இவ்வோவியம் பல கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பெரும்பாலோர், இவ்வோவியத்தில் இருப்பவர்கள் இராஜராஜனும், அவனது குல குரு கருவூர்த் தேவரும்தான் என்கின்றனர். வண்ண வேறுபாட்டில் இருவரையும் சோழ ஓவியன் பிரித்துக் காட்டியுள்ளான். கருவூரார் பச்சை வண்ணத்திலும், இராஜராஜன் இளஞ்சிவப்பு வண்ணத்திலும் காட்சியளிக்கின்றனர்.
மற்றொரு பெரிய ஓவியம் திரிபுராந்தகர் காட்சியாகும். இது வடபுறத்தில் உள்ள சுவர் நிறைய வரையப்பட்டுள்ளது. தனித்தனியே பொன், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களைக் கொண்டு உருவாக்கிய வலிமையான கோட்டைகளுடன் இருந்த தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் அசுரர்கள் மூவர் அமரர்களைத் துன்புறுத்தி வந்தனர். அவர்களைக் காக்கும் பொருட்டு சிவபெருமான் திரிபுராந்தராக வந்து அசுரர்களை அழிக்கின்றார். பூமியைத் தேர்த்தட்டாகவும், சூரிய, சந்திரர்களைச் சக்கரங்களாகவும், நான்கு மறைகளைத் தேரினை இழுக்கும் குதிரைகளாகவும், நான்முகனைத் தேரோட்டியாக அமைத்துக்கொண்டு தயாராகிறார். மேலும் வாசுகியை நாணாக்கித் திருமாலையே கணையாக்கி, எரிகடவுளை கணையின் நுனியாக்கிக் கொண்டு, திரிபுர அசுரர்களை அழிக்க ஆயுத்தமானார். அதற்கு முன் அசுரர்களைப் பார்த்து இகழ்ச்சிக் குறிப்புடன் சிரிக்கிறார், முப்புறமும் வெந்து பொடி பொடியாய்ச் சிதறுகிறது.
இச் சம்பவம் நடந்த இடம் பண்ருட்டிக்கு அருகிலுள்ள ‘’திருவதிகை வீரட்டானம்’’ என கருதப்படுகின்றது. இவ்வோவியத்தில் சிவபெருமான் தன் வலக்காலை ஊன்றி வலிய இடக்கையால் வில்லையெடுத்து அம்பு எய்யும் நிலையிலே தோன்றுகிறார். சிவனுடன், மூத்த பிள்ளையான விநாயகர் பெருச்சாளி மீதும், இளையன் முருகன் மயில் மீதும் ஏறிக் கொண்டு போருக்குத் தயார் நிலையில் இருக்கின்றனர். மேலும் இதைக் கண்ட காளியும் சூலமேந்திப் புறப்படுகிறாள். கோபத்துடனும், அச்சத்துடனும் அசுரர்கள் எதிர்கொள்வதும், அவர்களது துணைவியார்கள் கண்ணீருடன் அழும் காட்சியும் ஓவியனின் இயல்புத் தன்மையையும் அவனது முயற்சியையும் பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் இப் புராணத்தின் மேல் பல்வேறு பார்வைகள் அறிஞர்கள் மத்தியில் உள்ளது. |
|
ஓவியங்களின் தனிச் சிறப்பு
இந்திய ஓவியக் கலை மரபில் அஜந்தாவிற்குத் தனிச் சிறப்பு உண்டு. அதற்குப் பின்னால் வந்த மரபுகளில் அஜந்தாவின் தாக்கம் அதிகம் உண்டு என்பர். அது போல் தஞ்சைப் பெரிய கோவில் ஓவியத்திலும் சில தாக்கம் அஜந்தாவைத் தழுவி உள்ளது. இருப்பினும் தொழில் நுணுக்க முறையில் இரண்டுக்கும் அதிக வேறுபாடு உண்டு. அஜந்தா ஓவியங்கள் tempara என்ற முறையில் வரையப்பட்டது. ஆனால் தஞ்சை ஓவியமோ fresco என்ற முறையில் வரையப்பட்டது.
Tempara முறையில் சுவரின் ஈரம் உலர்ந்த பின் வரையப்படுவது அஜந்தா வகை, ஆகையினால் வண்ணங்கள் காலப் போக்கில் எளிதில் உதிர்ந்துவிடும் தன்மைக்குட்பட்டது. அது போல் வண்ணங்கள் நன்கு அரைக்கப்படாமல் இருப்பதாலும், வண்ணங்களை நன்கு ஒட்டுவதற்காகச் சில திரவங்களைப் பயன்படுத்தியதாலும் அதன் ஆயுள் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகின்றது. ஆனால் சோழ ஓவியன் நன்கு அரைக்கப்பட்ட வண்ணக் கலவைகளை, இலேசாகச் சதைமெழுகிட்டு அதன் மீது ஈரம் உலர்வதற்கு முன்னரே வரைந்து விடுவான். இம்முறைக்கு Fresco painting என்று பெயர். இம் முறையில் சுவரின் பாகங்கள் சுதைகளின் தேவைகளுக்கேற்ப கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு நாளைக்கு ஒரு கட்டம் வீதம் லேசாகச் சுண்ணாம்புச் சாந்திட்டு, ஈரத்திலேயே வெளிக்கோடுகள் (outline) வரைந்து, பின்னர் எளிமையான வண்ணக் கலவை தண்ணீருடன் கலந்து பூசப்பட்டது. புதுமையான மற்றும் எளிமையான முயற்சியாகும். இம் முறைகளினால் தஞ்சை ஓவியங்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலுள்ள ஓவியங்களிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றது.
மஞ்சள், இளஞ் சிவப்பு, பச்சை, வெள்ளை முதலிய வண்ணங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ் வண்ணங்களோடு கருப்பு வண்ணத்தினால் புறக் கோடுகள் வரைந்து உருவங்களைத் தெளிவு படுத்தியுள்ளனர். ஆண் பெண் உருவங்கள் அதிக வளைவுகளுடன், சில இடங்களில் இயற்கைக்கு மாறாகவும் வரைந்துள்ளனர். இவை அவர்களுடைய கற்பனையை வெளிப்படுத்தும் முறையாகும்.
ஆடல் அனங்குகள் ஒவ்வொருவரும் தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் முறையில் அங்க அசைவுகள் அமைந்துள்ளது. ஆபரணங்கள் குறைவான எண்ணிக்கையில் மஞ்சள் மற்றும் வெள்ளை வண்ணத்தில் வரையப்பட்டு, சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்களால் நுணுக்கமான வேலைப்பாட்டுடன் வெளிக்கோடுகள் வரையப்பட்டுள்ளன. உருவ வேறுபாடுகள் பாத்திரத்தின் தன்மைக்கேற்பப் பெரியதாகவும், சிறியதாகவும் தீட்டப்பட்டுள்ளது.
பெண்களும், ஆண்களும் பெரும்பாலும் மேலாடைகள் இன்றிக் காணப்படுகின்றனர். இருப்பினும் சில ஓவியங்களில் ஆண்கள் சிலர் இன்றைக்குள்ளது போன்ற காலர் வைத்த சட்டைகளுடன் காணப்படுவது ஆச்சரியத்திற்குரியதாகும். அக் கால கட்டத்தில் இம்மாதிரியான சட்டைகள் காணப்படவில்லை. அது போல் கருவூர்த் தேவர் மற்றும் இராஜராஜ ஒவியங்களில் கூட சட்டை காணப்படவில்லை. ஆகையால் இச் சட்டையணிந்தவர்கள் பிற பகுதிகளைச் சேர்ந்த மதவாதிகளாக இருக்கக் கருத இடமுண்டு. ஆண்கள் கோவணம் போன்ற சிறிய துணியை அணிந்துள்ளனர். பெண்கள் மெல்லிய, கண்ணாடி போன்ற ஆடைகள் உடுத்தியுள்ளனர். உடம்பின் பெரும்பாலான பகுதிகள் ஆபரணங்களால் மறைக்கப்பட்டுள்ளது.
மனித உருவங்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு, பச்சை வண்ணங்களால் வரையப்பட்டுள்ளது. ஐராவத யானை வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றது.
இவ்வோவியங்கள் வெறும் அலங்காரச் சின்னங்களாய் இருப்பதல்லாமல் சமூக, கலாச்சார மற்றும் பல்வேறு மனநிலைகளை வெளிப்படுத்தும் வகையில் இருப்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் தமிழ் முன்னோர்களையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் புத்தகங்களை விடத் தெளிவாக நம் கண் முன் நிறுத்துகின்றது. ஒரு காலத்தில் சுவர்களின் எல்லாப் பகுதிகளிலும் வரையப்பட்ட ஓவியங்கள் தஞ்சை நாயக்கர் மன்னர்கள் காலத்தில் புதிய ஓவியங்கள் சோழ ஓவியங்கள் மீது வரையப்பட்டு மறைக்கப்பட்டன. சமீப கால விஞ்ஞான யுக்திகளின் மூலம் மேற்பரப்பில் உள்ள நாயக்கர் கால ஓவியங்கள் பிரித்து எடுக்கப்படுகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் முழுவதுமான சோழ ஓவியங்களைக் காணும் வாய்ப்புகள் இருப்பது சந்தோசமான செய்தியாகும்.
பொதுமக்கள் காண வாய்ப்பு இல்லாதது ஒரு குறையாகும். ஆகையால் இவ்வோவியங்களைப் புகைப்படங்களாக எடுத்து விற்பனைக்குக் கொண்டு வந்தால் சோழ ஓவியங்களையும், வாழ்க்கை முறைகளையும் யாவரும் காணும் வாய்ப்புகள் அதிகம்.
எழுத்து, படங்கள் : காந்திராஜன் |
|
|
More
'சூரியக்கிரக தோஷ நிவாரணத் தலம் '
|
|
|
|
|
|
|
|