|
டாக்டர். பாரதி சங்கர ராஜுலுவுக்கு வால்ட் டிஸ்னி விருது |
|
- தென்றல்|நவம்பர் 2016| |
|
|
|
|
பெர்க்கலியிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிக் கல்வித் துறையில் தமிழ் கற்பிக்கிறார் டாக்டர் பாரதி சங்கர ராஜுலு. அவருக்கு இவ்வாண்டுக்கான 'Walt Disney Motif' விருது வழங்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலஸில் கையளிக்கப்பட்ட இந்த விருதின் வாசகம், "கல்வி, ஆற்றல் தருதல் மற்றும் தொழில் என்னுமிவற்றுக்கு ஒரு தளம் அமைத்துக் கொடுத்துள்ளீர்கள். பெர்க்கலி பல்கலைக் கழகத்தில் மட்டுமல்லாமல், மதுரையிலிருக்கும் இந்தியக் கல்விக்கான அமெரிக்கக் கல்விக் கழகத்தின் (AIIS) தமிழ்த்துறையிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினீர்கள்" என்று இவரைப் பாராட்டிப் பேசுகிறது.
"இளைஞர் வாழ்வில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பணிபுரிவோருக்குத் தரப்படும் இந்த விருது எதிர்பாராமல் எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி" என்கிறார் பாரதி. "செய்யும் தொழிலே தெய்வம் என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை. எந்தப் பணியானாலும் முழு ஈடுபாட்டுடன் செய்யவேண்டும். நம்மைச் சுற்றியிருப்போருக்கு அயராத உழைப்பைத் தந்து, அவர்களின் அன்பைப் பெறும் அழகான சூழலை ஏற்படுத்தினால் அதுவே வெற்றிகளைக் கொண்டுதரும். தவிர, இறையருள், என் ஆசான்கள், மாணவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என்று ஒட்டுமொத்தமாக எல்லாம் சேர்ந்துதான் எனக்கு இந்து விருதைக் கொடுத்திருப்பதாக நம்புகிறேன்" என்று அழகாகச் சொல்கிறார் பாரதி. |
|
|
இவரை விருதுக்குத் தேர்ந்தெடுப்பதாகத் தெரிவித்த மின்னஞ்சல், "உங்கள் தொழில்மரபும், சமுதாயத்துக்கு நீங்கள் தந்துள்ள ஆதரவும் எமது விருதின் குறிக்கோளுடன் ஒத்துப்போகின்றன. இந்தியா குறித்த அறிவை முன்னெடுத்துச் செல்வதில் உங்கள் அர்ப்பணிப்பு எமக்கு வியப்புத் தருவதாக உள்ளது" என்று சிறப்பித்துச் சொல்கிறது.
டாக்டர். பாரதி பெர்க்கலிக்கு வந்தபோது "உலகின் சிறந்த தமிழாசிரியர்களில் ஒருவர்" என இவரை Institute of South Asia Studies அறிமுகப்படுத்தியது இவர் மதுரையில் பணிசெய்த காலத்தில் தமிழ் கற்பிப்பதில் எடுத்துக்கொண்ட முயற்சிகளின் சிறப்பை இது காட்டுகிறது. "மதுரையில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களோடு அமெரிக்க மாணவர்கள் தொடர்புகொண்டு, இந்திய/தமிழ் கல்விமுறை மற்றும் வாழ்க்கைச் சூழலை அறிந்துகொள்ளும் வாய்ப்பை என்னால் ஏற்படுத்திக் கொடுக்க முடிந்தது. பல்வேறு சமூகத் தன்னார்வ நிறுவனங்களில் பொறுப்பு வகித்த அனுபவம் எனக்கு அமெரிக்க மாணவர் சமுதாயத்தைப் புரிந்துகொண்டு செயல்பட உதவிற்று" என்று தனது செயல்பாட்டின் ஆழ அகலங்களை விளக்குகிறார்.
மகாகவி பாரதி நினைவுநாளான செப்டம்பர் 11 அன்று டாக்டர். பாரதி வால்ட் டிஸ்னி மோடிஃப் விருதை லாஸ் ஏஞ்சலஸில் வாங்கியது தமிழுக்குப் பெருமையளிப்பதாகும். இன்னும் பல சிறப்புகளை அவர் பெற வாழ்த்துகிறது 'தென்றல்' குடும்பம்! |
|
|
|
|
|
|
|