பவித்ரா நாகராஜன்
|
|
|
|
படித்துக்கொண்டிருக்கும் 7ம் வகுப்பே நிறைவடையாத நிலையில் 13 வயது பிரணவ் கல்யாண் மூர்பார்க் கல்லூரியில் 3 வருடம் படித்து இணைப்பட்டம் (Associate Degree) வாங்கிவிட்டார்! காலை 7:30 மணிக்கு லினெர்டோ கேன்யன் நடுநிலைப்பள்ளி தொடங்கிவிடும். அதை முடித்துவிட்டு, 20 மைல் தொலைவிலுள்ள மூர்பார்க் கல்லூரிக்குப் போய் அங்கே பிற்பகல் 3:30 மணிமுதல் இரவு 7:00 மணிவரை படிப்பார். சிலசமயம் 10 மணிகூட ஆவதுண்டாம். 20 பாடங்கள் எடுத்துக்கொண்டு அவற்றில் சராசரி GPA 3.94 (98.5%) பெற்றார் பிரணவ். இதன்மூலம் அறிவியல் மற்றும் கணிதத்தில் இணைப்பட்டங்கள் பெற்றிருக்கிறார்.
பிரணவ் ஒன்பதே வயதில் Microsoft Certified Professional (MCP) ஆகத் தேர்வுபெற்றார். இந்தச் சான்றிதழ் பெற்றவர்களிலேயே மிகச்சிறியவர் என்ற சிறப்பையும் பெற்றார். பிரணவின் புத்திக்கூர்மையைப் பார்த்த இவரது பள்ளியாசிரியர் ஜோசஃப் கீய்ஸ் இவரைக் கல்லூரியில் படிக்கலாம் என அறிவுறுத்தினாராம். அதன்படி கல்லூரியில் சேரச் சென்றபோது "என்னை வினோதமாகவும் சந்தேகத்துடனும் பார்த்தார்கள். ஆனால் அறிவியல், கணிதம் இரண்டிலும் நான் இணைப்பட்டம் படித்து முடித்ததும் அவர்கள் பெருமையோடு என்னைப் பாராட்டினார்கள்" என்கிறார் பிரணவ். மே 19 அன்று மூர்பார்க்கில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. |
|
|
"மூர்பார்க் கல்லூரியில் எனது பேராசிரியர் டயானா நியூஜென் தனது வகுப்பில் என்னைச் சேர்த்துக்கொண்டதோடு, இன்னும் பிற பாடங்களையும் படிக்க ஊக்கமளித்தார்" என்று பிரணவ் சொல்லும்போது அவரது குரலில் நன்றி ததும்புகிறது. இந்தக் கல்லூரி மாணவி டேனா வுட்பரி, பிரணவைப் பல பேராசிரியர்களிடமும் பிற மாணவர்களிடமும் அறிமுகம் செய்துவைத்தது இவருக்கு மிகவும் உதவியாக இருந்ததாம். முழுக்கத் தனது முயற்சிக்குப் பின்பலமாக இருந்த பெற்றோருக்கும், ஜோசஃப் கீய்ஸ், டயானா நியூஜென், டேனா வுட்பரி ஆகியோருக்கும் தான் மிகவும் கடன்பட்டிருப்பதாகச் சொல்கிறார் பிரணவ்.
சாதாரணமாக ஒருவர் கல்லூரியில் B.S. பட்டம் பெறுவதற்கு 4 ஆண்டுகள் படிக்கவேண்டும். இப்போது பிரணவ் இரண்டாண்டுகள் படித்து இணைப்பட்டம் பெற்றுள்ளார். "இதனால் இன்னும் இரண்டாண்டுகள் பிற பாடங்களைப் படித்துத் தேறி நான் பட்டம் பெற்றுவிடலாம்" என்கிறார் பிரணவ்.
இந்த இளம்மேதையை வாசகர்கள் சார்பாகத் தென்றல் வாழ்த்தி மகிழ்கிறது!
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
பவித்ரா நாகராஜன்
|
|
|
|
|
|
|