|
|
|
|
2014ம் ஆண்டு ஜூலை ஒன்று முதல் ஐந்துவரை மிச்சிகன் கிராண்ட் ராபிட்ஸில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அக்கா சுருதி ராமனும், தம்பி அதுல் ராமனும் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து சாதனை செய்தனர்.
9 வயதான அதுல், தனது பிரிவில் காலிறுதிச் சுற்றில் கன்சாஸ் சிறுவனை எதிர்த்து, 3-2 என்ற செட் கணக்கில் வென்றார். இறுதியில் சாம்பியனாக வந்த நியூஜெர்ஸி சிறுவனிடம் அரையிறுதிப் போட்டியில் தோற்றார். 700 பேர் கலந்துகொண்ட 2014ம் ஆண்டுப் போட்டி, அதுல் பங்கெடுத்த முதலாவது முக்கியப் போட்டியாகும். அந்தப் போட்டியில் ரேங்கிங்கில் உயர்வுபெற்ற ஐவரில் அவரும் ஒருவர்.
சுருதி, 2013ம் ஆண்டு நடைபெற்ற யு.எஸ். ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் தனது வயதுப் பிரிவில் மூன்று ஆட்டங்கள் விளையாடி இரண்டில் முதலிடம் பெற்றார். இந்த ஆண்டின் இரட்டையர் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதைத் தவிர காலிறுதிச் சுற்றில் ஃப்ரீமான்ட் மேசைப்பந்தாட்டக் கழகத்தில் பயிற்சிபெறும் இரண்டு கூட்டாளிகளிடம் தோற்கும்வரை, ஒற்றையர் ஆட்டத்தில் 10-0 ரிகார்ட் ஏற்படுத்தினார். 2013, 2014ம் ஆண்டு அமெரிக்க வீரர் தரவரிசைப் பட்டியலில் மிகவுயர்ந்த இடத்தை சுருதி எட்டிப்பிடித்தார். அமெரிக்கா மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்த விளையாட்டுவீரர்கள் இந்தப்போட்டியில் பங்கேற்றனர்.
இருவரும் உள்ளூர் பள்ளி விளையாட்டுக்களிலும் சிறப்பிடம் பெற்றுள்ளனர். 2013ம் ஆண்டு விரிகுடாப்பகுதி பள்ளிகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் சுருதி பிரிவு ஒன்றில் முதலாவதாக வந்தார். அதுல், பிரிவு மூன்றில் இரண்டாவது இடத்தைப் பெற்று முக்கிய விளையாட்டு வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் நடத்தப்பட்ட வளைகுடாத் தமிழ்மன்ற விளையாட்டுப் போட்டிகளில் இருவரும் தத்தம் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
2014ம் ஆண்டில் வளைகுடா பள்ளிக் குழுக்களுக்கு இடையிலான போட்டியில் அதுல் பிரிவு மூன்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஃப்ரீமான்ட், சாக்ரமென்டோ, கன்கார்ட் ஆகிய இடங்களில் நடைபெற்ற போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றிவாகை சூடிய இவ்விருவருக்கும் விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் சியோம் (Xiom) நிறுவனத்தினர் ஆதரவளித்து வருகின்றனர். |
|
|
சுருதியும் அதுலும் திரு. சசின் சோதன் நடத்திவரும் ஃப்ரீமான்ட் மேசைப்பந்தாட்டக் கழகத்தில் 5 ஆண்டுகளாகப் பயிற்சி பெறுவதோடு, பல போட்டிகளிலும் பங்கெடுத்து வருகின்றனர். கோடை விடுமுறையில் வாரத்திற்கு 20 மணி நேரமும், பள்ளிநாட்களில் 10 மணி நேரமும் பயிற்சி செய்கின்றனர். இலையுதிர்காலத்தில் சுருதி, மிஷன் ஸான்ஹோஸே உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பிற்கும் அதுல் ஸ்ட்ராட்ஃபோர்ட் ஃப்ரீமான்ட் பள்ளியில் நான்காம் வகுப்பிற்கும் செல்ல இருக்கின்றனர்.
இந்தியாவில் பிறந்த திரு. சசின் சோதன் அமெரிக்காவின் முன்னிலை விளையாட்டு வீரரும், சிறந்த பயிற்சியாளரும் ஆவார். வட அமெரிக்க ஒலிம்பிக் தேர்வுப் போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளார். ஃப்ரீமாண்ட் மேசைப் பந்தாட்டக் கழகத்தின் மற்றொரு பயிற்சியாளர் திரு. சுசீல் பௌட்யால், நேபாளத்தின் தேசியப் பயிற்சியாளராக இருந்தவர். இரண்டாவது நிலை பயிற்சியாளர் என்ற தகுதிச் சான்றிதழை சர்வதேச மேசைப்பந்தாட்டக் கூட்டமைப்பிடமிருந்து இருவரும் பெற்றுள்ளனர்.
சுருதி, கர்நாடக சங்கீதத்திலும் வயலின் இசைப்பதிலும் தேர்ச்சிபெற்றுள்ளார். அதுல் மிருதங்கம் வாசிப்பதிலும் சதுரங்கம் விளையாடுவதிலும் தேர்ந்தவர். 2014ம் ஆண்டிறுதியில் லாஸ் வேகாஸில் நடக்கவிருக்கும் யூ.எஸ். தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இதர போட்டிகளிலும் வெற்றிபெற்று தமது தரநிலையை மேம்படுத்திக்கொள்ள இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
நித்யவதி சுந்தரேஷ், ப்ரீமான்ட், கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|