|
அமைதியான வாழ்க்கைக்கு வழிகாட்டி |
|
- துறையூரான்|ஜூலை 2006| |
|
|
|
கனடா இந்து கலாசார மன்றம் ஒழங்கு செய்த, திரு.பேரம்பலம் அவர்கள் எழுதிய திருக்குறளின் ஆழ்ந்தகன்ற விளக்கமான ஆங்கில நூல் வெளியீடு மிகவும் சிறப்பாக சென்ற சனிக்கிழமை கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் பேராசிரியர் செல்வா கனகநாயகம் தலைமையில் நடைபெற்றது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்ச்சியில் அடுத்து கனடா தேசிய கீதம் இசைக்கப்பட்டது. செல்வி பூர்ணிமா ராவ் தமிழ் வாழ்த்தாக சில குறள்களை இராகத்தோடு சிறப்பாகப் பாடினார்.
பொன்னையா விவேகானந்தன் வரவேற்புரையின் போது குறளின் மொழி. நாடு மதம் போன்ற எல்லைக் கோடுகளைக் கடந்த சிறப்பினை எடுத்துக் கூறினார். வள்ளுவரின் கற்பனை வளத்தைப் பற்றிக் கூறிய அவர் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் ஊடலை விளக்க வள்ளுவர் கூறும் காட்சியொன்றைக் கூறினார். கணவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தும்மிய மனைவியைக் கணவன் யாரை நினைத்துத் தும்மினாய் எனக் கேட்டான். பின்னரும் தும்மல் ஏற்படவே மனைவி அதனை அடக்கிக் கொண்டாள் அதற்கும் கணவன் ஏன் அடக்கினாய் எனக் கடிந்தான் என ஊடலை நகைச்சுவையாக வள்ளுவர் கூறியிருப்பதை எடுத்துரைத்தார்.
இவரைத் தொடர்ந்து தலைவர் செல்வா கனகநாயகம் ஆங்கிலத்தில் பேசினார். இந்து கலாசார மன்றத் தலைவர் சின்னையா சிவநேசன் இந் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தமைக்காக அவரைப் பாராட்டிய பின், சிறந்த அறிஞர்கள் உள்ள இந் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குவது தமக்குக் கிடைத்த பெரும் பேறென்றார். சங்க காலத்தின் இறுதியில் எழதப்பட்ட திருக்குறளின் சிறப்பினைக் கூறியவர், அது ஏராளமான மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அது ஒரு உலகப் பொதுமறையென்றார். ஏற்கனவே பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள ஒரு நூலை மொழி பெயர்ப்பதென்பது மெல்லிய பனியின் மீது நடப்பதை ஒத்தது எனக் கூறினார். இம்முயற்சியில் திரு.பேரம்பலம் வெற்றி பெற்றிருப்பதாகக் கூறி அவரைப் பாராட்டினார்.
பேராசிரியர் பசுபதி அடுத்துப் பேசும்போது குறிப்பிட்டதாவது இந் நூலை முதலில் படித்த போது என்ன எழுதியுள்ளார் என அறிய ஆவலாக இருந்தது. பின்னர் வாசித்தபோது மகிழ்ச்சியாய் இருந்தது. மிகவும் நன்றாகவே எழுதியிருக்கிறார் பேரம்பலம். அதற்காக எனது பாராட்டுக்கள். பல மொழிகளில் எழுதப்பட்ட இந்நூல் பலரது கவனத்தையும் ஈர்க்குமென்பதில் ஐயமில்லை. நாடோடிகளின் மொழியிலும் குறள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. இந் நூலின் முகவுரையில் குறளை நியாயமான அளவுக்கு விரித்துக் கூறியிருப்பதாக எழுதியுள்ளார் ஆசிரியர். இதனை மொழிபெயர்ப்பு என்பதிலும் பார்க்க இது மீளாக்கம் என்பதே பொருத்தம். இவர் இதில் தற்காலச் சூழலுக்கேற்ப கலாசார விடயங்களையும் ஆங்காங்கே நகைச்சுவை யையும் கலந்திருப்பது சிறப்பாய் அமைந்தி ருக்கிறது என்றார். மேலும் நவீன நிர்வாக விடயங்களும் சேர்க்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார். டொலிப் பாட்டன் என்ற அமெரிக்க நடிகை பற்றியும் அவர் கூறியிருக்கிறார் அதனை நீங்களே தேடிப் பிடியுங்கள் என்றார் பேராசிரியர் பசுபதி. ஈற்றில் ஆசிரியரைப் பாராட்டி வெண்பாப் பாடலொன்றை இயற்றி மடலில் அடித்துப் பரிசாகக் கொடுத்தார்.
பின்னர் முன்னாள் அதிபர் கனகசபாபதி சங்க காலப்புலவர் கபிலரின் பாடலோன்றை மேற்கோள்காட்டிப் பேசினார். புல்லின் நுனியில் இருந்த பனித்துளியில் பெரிய பனையின் உருவம் தெரிவதைப் போன்று குறுகிய குறளானது பனையளவு விடயங்களை அடக்கியுள்ளது என்றார். ஆங்கில மொழி யாக்கத்தில் இவரது முயற்சி முதன்மையானது என்றார். மேலும் தற்கால சமூக விடயங்களும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது மேலும் சிறப்பைத் தருகிறது என்றார். இதற்காக தமிழ்ச் சமூகத்தின் சார்பாக ஆசிரியருக்கு நன்றி கூறினார்.
அடுத்து திரு.நக்கீரன் கூறும்போது தமிழ் தெரியாத மக்கள் பலருக்கு குறள் பற்றி அதிகம் தெரியாது. அதனைப் பிரபலப் படுத்துவதற்கு இது போன்ற நூல்கள் உதவும் என்றார். அறம், பொருள், இன்பம் என வள்ளவர் குறளை வகுத்துள்ளார் ஆனால் இன்பத்திற்கு முதலிடம் கொடுத்து பொருளையும் அறத்தையும் பின்னால் கூறியிருக்கவேண்டும் என்றார். ஏனெனில் உயிர்களுக்கெல்லாம் இன்பந்தான் முக்கியம். பின் சுகமான வாழ்வுக்குப் பொருள் தேவை. இவையெல்லாம் கிடைத்தபின் அறத்தில் கவனம் செலுத்தலாமென்றார். தெய்வம், கடவுள் எனச் சில இடங்களில் தான் வள்ளவர் குறிப்பிடுகிறார் எனவே அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் எனக் கொள்ள முடியாதென்றார். மனிதன் இவ்வுலகில் சிறப்பாக வாழவேண்டுமென்பதே வள்ளுவரின் குறிக்கோள். புத்தர் கூறியது போன்று மனிதன் கஷ்டத்தோடு பிறக்கவில்லை. அல்லது கிறிஸ்தவர்கள் கூறுவது போன்று மனிதர் பாவிகளாகப் பிறக்கவில்லை. முஸ்லிம் மக்களைப் பாருங்கள் அரபு பொழியிலுள்ள குரானைப் படிப்பதற்காக அரபு மொழியைப் படிக்கிறார்கள் ஆனால் எமது தமிழர்களோ தமிழிலுள்ள குறளைப் படிக்க முனைவ தில்லை என வருத்தத்துடன் கூறினார். குறளுக்கு உரை எழுதிய ஆரம்ப கால உரையாசிரியர்கள் வள்ளுவரின் உள்ளக் கிடக்கையை உணராமல் உரையெழதினர். குறிப்பாக தெய்வம் தொழாள் கொழுநற்றொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்பதை அவள் பெய் எனக் கூறியதும் மழை பெய்தது என பகுத்தறிவுக்கு ஒவ்வாத முறையில் எழுதினர். இங்கே ஆசிரியர் நன்கு ஆராய்ந்து யதார்த்தமாக மொழி பெயர்த் திருப்பது பாராட்டத்தக்கது என்றார்.
அடுத்துப் பேசிய வண.சந்திரகாந்தன் இந்நூலை அசிரியர் எழுதுவதற்கு முன் திருக்குறளை நன்கு ஆழமாக ஆராய்திருக் கிறார் என்பது புலனாகின்றது. இது அற்புதமான முயற்சி. பல்துறை நெறிகளும் சங்கமிக்கும் குறளை மொழியாக்கம் செய்ததில் திரு.பேரம்பலம் வெற்றிபெற்றிருக்கிறார். தமிழ் இலக்கியங்களுள் குறளுக்கு வேறெந்த நூலுக்குமில்லாத பல சிறப்புகள் உண்டு. வள்ளுவரைப் பல்வேறு மதத்தினரும் தத்தமது மதத்தைச்சார்ந்தவர் என உரிமை கொண்டாடுகின்றனர். ஆனால் அவர் யாருக்கும் பிடி கொடாமல் தப்பித்து விட்டார். மிகவும் நுண்ணிய முறையில் கருத்துக்களைத் தெரிவிப்பதில் வல்லவர் வள்ளுவர். அவரின் உள்ளக்கிடக்கையை நன்குணர்ந்து இந் நூலாசிரியர் ஆங்கிலக் கவி நடையில் மொழியாக்கஞ் செய்திருப்பது வரவேற்கத் தக்கது. இவ்வாறான புலம்பெயர் அறிஞர் களின் ஆக்கங்களைப் பார்க்கும்போது தமிழப் பண்பாடும் தமிழ் மொழியும் கனடாவில் நிலைக்குமென்பதில் ஐயமில்லை. ஆனால் எவ்வாறான வடிவத்தில் நிலைக்கு மெனக் கூறமுடியாது. இதன் வளர்ச்சியில் இங்கிருப்பவர்கள் யாவரும் முழுமனதோடு ஈடுபடவேண்டும். இம் முயற்சியில் இந்நூல் ஒரு மைல்கல் எனக் கூறின் மிகையாகாது. |
|
குறளில் தமிழ் உளவியல், சமூகவியல், மானிடவியல் யாவும் நிலை நாட்டப் பட்டுள்ளன. இதில் பேரம்பலம் பாராட்டத் தக்க வெற்றியை அடைந்திருக்கிறார் என்றார். இறுதியாக இந்நூலில் குறள்களும் ஒரு பொருளடக்கமும் அட்டவணையும் சேர்ப்பது இன்றியமையாதது என்றார்.
அடுத்து சின்னையா சிவநேசன் பேசினார். யாருக்காக இந்நூல் எழுதப்படதோ அவர்கள் திரு.நக்கீரன் கூறியது போன்று இன்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நகரின் இன்னொரு பகுதியில் சினிமாப் பட்டளத்தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் யாவரும் அறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இங்கே வந்திருக்கிறீர்கள். அதற்காக உங்கள் எல்லோருக்கு நன்றி என்றார். திரு.பேரம் பலத்துடன் தாயகத்தில் கல்வி வெளியீட்டுத் துணைக்களத்தில் வேலை பார்த்தவன் என்பதால் அவர் இந்நூலை எழதியது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. ஆனால் அவர் ஆங்கிலச் செய்யுள் நடையில் இதனை எழுதியுள்ளது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவரது தமிழ்ப் புலமை பற்றியும் நன்கறிவேன்.
அந்நாட்களில் இவர் விஞ்ஞான நூல் களையும் மொழி பெயர்த்திருக்கிறார். இன்று, அவாயிலிருந்து வெளியிடப்பட்ட குறளின் மொழிபெயர்ப்பாகிய வீவர்ஸ் விஸ்டம் நூலிலிருந்து சில குறள்களை எடுத்து இந்நூலிலுள்ள குறள்களோடு ஒப்பிட்டுப் பார்க்க எண்ணியுள்ளேன். பெரும்பாலான மொழிபெயர்ப்புக்கள் குறளைப் போன்று ஈரடியில் முடிவடைகின்றன ஆனால் இங்கே போதிய விளக்கத்துடன் சிலவேளைகளில் அரைப்பக்கத்துக்கு எழுதப்பட்டுள்ளது. தெய்வம் தொழாள் கொழுநற்றொழுதெழுவாள் எனத் தொடங்கும் குறளை அக்கால உரையாசிரியர்களும் வீவர்ஸ் விஸ்டமும் அப்பெண் மழை பெய்யச்சொன்னால் பெய்யும் என எழுதியுள்ளனர். ஆனால் இங்கே அவ்வாறான பெண்ணை ஆசிரியர் மழை போன்று தண்டிணளி உடைய வளாகவும் பிரார்த்தனை செய்தவுடன் பெய்யும் மழையைப் போன்றவள் என்றும் கூறுகிறார். அவ்வாறே எழுபிறப்பும் தீயவை தீண்டா என்ற குறளில் நன் மக்களைப் பெற்றவர்களுக்கு ஏழுபிறப்புக்கும் தீயவை தீண்டா என்பதை நீண்ட காலத்துக்கு என மொழியாக்கஞ் செய்துள்ளார். வள்ளுவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்ற கூற்றை மறுத்துரைத்து அவர் நம்பிக்கை உள்ளவர் என்பதற்கு ஆதாரங்கள் காட்டிப் பேசினர். கனடாவில் பிள்ளைகள் பெற்று வளர்ப்ப திலுள்ள சிரமங்கள் பற்றியும் ஈற்றில் எடுத்துரைத்தார்.
பின்னர் திருமதி உமா புலேந்திரன் வெளியீட்டுரையை நகைச்சுவை கலந்த தமிழிலும் ஆங்கிலத்திலும் நிகழ்த்தினார். சபையோர் பலர் ஆசிரியர் கையெழுத்திட்ட பிரதிகளை வாங்கினர். ஈற்றில் கலைவாணி இராவ் நன்றியுரை கூறினார். விழா மிகவுஞ் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந் நூல் ஏற்கனவே இலண்டன் மாநகரில் வெளியிடப்பட்டுப் பலரின் பாராட்டுக் களையும் பெற்றுள்ளது. திரு.பேரம்பலத்துக்கு “திருக்குறள் செம்மல்” என்ற பட்டமும் அங்கு வழங்கப்பட்டது என்பதையும் இங்கு நினைவு கூர்தல் சாலப் பொருத்தம். திரு.பேரம்பலம் தற்போது தமது குடும்பத்துடன் அமெரிக்க நகரமாகிய மிச்சிகனில் வாழ்ந்து வருகின்றார். அவர் இது போன்ற தமிழ்ச் சமூகத்திற்குப் பயன்தரக்கூடிய பணிகளில் ஈடுபட நாம் வாழ்த்துவோமாக.
இந் நூல் பற்றி மேலும் தகவல் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: pathtopurposefulliving@yahoo.com
துறையூரான் |
|
|
|
|
|
|
|