|
2007- இல் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புகள் என்ன? - பாகம் 6 |
|
- கதிரவன் எழில்மன்னன்|ஜூலை 2007| |
|
|
|
Best opportunities for Startups in 2007
எந்தத் துறைகளில் புது நிறுவனங் களுக்குத் தற்போது வாய்ப்புள்ளது என்றும், ஆரம்ப முதலீட்டார் எம்மாதிரி நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றியும் என்னிடம் பலர் விசாரித்துள்ளார்கள். அவர்கள் எழுப்பிய கேள்விகளும் என் கருத்துக்களும் தொடர்ந்து இங்கு இடம் பெறுகின்றன.
இப்போது இக்கட்டுரையின் இறுதிப் பகுதியாக, 2007-ஆம் ஆண்டின் இன்னொரு பரபரப்பான துறையான சுத்த சக்தி தொழில்நுட்ப (clean energy tech) வாய்ப்புக் களைப் பற்றிக் காண்போம். இது சென்ற இதழின் தொடர்ச்சி...
பலப்பல பெட்ரோலிய மாற்று எரிபொருட்கள் உருவாகி வருகின்றன. ஒரு காலத்தில் க்ளோரோ ·ப்ளூரோ கார்பன் (ChloroFluro Carbon-CFC) பயன்படுத்தப் பட்டது. அதனால் தென்துருவத்தில் ஓஸோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டது. எனவே CFC-ஐத் தடைசெய்து மாற்றுக் குளிர்பதனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால், ஓஸோன் ஓட்டை ஓரளவுக்கு மூட ஆரம்பித்துள்ளது எனும் நற்செய்தி கிடைத்துள்ளது. இம்மாதிரி மாற்று எரிபொருள் தொழில் நுட்பங்களும் மாசைக் குறைத்து, பூமி வெப்ப அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் என்னும் நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்துள்ளது!
குறைந்த சக்தி பயன்படுத்தி அதில் அதிக உற்பத்தி ஏற்படுத்துவது (efficiency of utilization)
இது விளக்காமலேயே புரிந்துவிடும் என நம்புகிறேன். சில உதாரணங்கள்: கார்கள், விமானங்கள் போன்றவற்றின் ஆற்றலைக் குறைக்காமல், அவற்றின் எடையைக் குறைப்பதன் மூலம் கேஸலின் தேவையைக் குறைப்பது; கணினித் துறையில் தகவல் மையங்களில் (data center), பணிப் பொறிகளின் (servers) மின் தேவையைக் குறைப்பது; Intel, AMD, Sun போன்ற நிறுவனங்கள் இதில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன. வீடுகளில் பழைய வெப்ப ஒளி (incandescent)\ மின்விளக்குகளுக்குப் பதிலாக, குறைந்த மின்சக்தியில் முன்னளவுக்கே அதிக ஒளிதரும் தன்னொளிர் (flourescent) மின் விளக்குகளைப் பயன்படுத்துவது. இது போன்று பல துறைகளிலும் உதாரணங்கள் சொல்லலாம்.
மாசைச் சுத்தமாக்குவது அல்லது அடைத்து வைப்பது (pollution cleanup or sequestration)
இதுவரை சுத்தமான சக்தி அல்லது மாசு குறைந்த எரிபொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் எரிபொருள் தேவையைக் குறைக்கும் நுட்பங்களைப் பற்றிக் கண்டோம். இப்போது அதன் மறுபக்கத்தைப் பற்றிக் காண்போம். அதாவது, அவ்வளவு குறைத்தாலும், வெளியாகிக் கொண்டே இருக்கும் மாசை எப்படி பசுமையக வாயு மற்றும் பழுப்பு மேகமாக்காமல் தடுப்பது.
இதற்கு முதல் உதாரணம், வண்டிகளில் இப்போது பயன்படுத்தப்படும் காடலிடிக் கன்வெர்ட்டர்கள். முன் காலத்தில் வண்டிகள் தங்கள் அழுக்குப் புகையை நேரடியாக வெளியேற்றிக் கொண்டிருந்தன. வண்டிகள் குறைவாக இருந்ததால் அதன் தீமை அவ்வளவாகப் புலன்படவில்லை. பல மில்லியன் கணக்கில் வண்டிகள் ஓடியதும் காற்றே பழுப்பானதும்தான் அதன் வண்டவாளம் தண்டவாளத்தின் மேல் ஏறியது. அதனால், புகையை வெளிவிடும் முன் அதில் உள்ள மாசைப் பெரிதும் குறைக்கும் காடலிடிக் கன்வர்ட்டர்களை புகைக் குழாயில் பொருத்துமாறு அரசாங்கம் உத்தரவிட்டது. மேலும் வண்டிகளை அவ்வப்போது சோதனை செய்து smog எனப்படும் புகைப்படலத்தை ஓரளவுக்கு மேல் வெளியிடாதவாறு பார்த்துக் கொள்ளும் படியும் உத்தரவிட்டது.
காற்றை மட்டும் அல்லாமல், பலவித மாசுகளுக்குக் காரணமான ரசாயன கழிவுப் பொருட்களையும் சுத்தமாக்கும் நுட்பங்களும் வெளிவந்துள்ளன. தொழிற்சாலைகளின் புகை போக்கிகளிலிருந்தும், திரவக் கழிவுக் கால்வாய்களிலிருந்தும் தீய பொருட்கள் வெளியிடப்படாமல் சுத்தம் செய்யும் தொழில்நுட்பங்கள் பல உருவாக்கப் பட்டுள்ளன, இன்னும் தீவிரமாக ஆராய்ச்சி யும் நடைபெற்று வருகிறது. இப்போது புதிதாகக் கரியகற்றல் (carbon sequestration) துறையில் பலப் பல நுட்பங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
தென்றல் ஏப்ரல், 2007 இதழில் பேராசிரியர் ராமநாதனின் உரையாடலில் இந்தப் பிரச்சனையைப் பற்றியும் தொழில் நுட்பங்களைப் பற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது.
சரி, சுத்த நுட்பம் என்றால் என்ன என்று புரிந்தது! இத்துறையில் எனக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன?
ஆரம்ப நிலை நிறுவன வாய்ப்பு என்பது பலதரப்பட்டத் தொழில் துறைகளுக்கும் உண்டு. பொதுவாக, கணினி, மென்பொருள், மின்வலை, மற்றும் பயோடெக் போன்ற துறைகள் மட்டுமே பரபரப்புடன் பேசப்பட்டு வந்தன. ஆனால், தற்போது சுத்த சக்தி நுட்பம் அந்தப் பரபரப்பை விரிவாக்கியுள்ளது. இராசயனப் பொறியியல், சக்திப் பொறியியல், இயந்திரவியல் போன்ற பல துறைகளில் இப்போது ஆரம்ப மூலதனத்தார் குதித் துள்ளனர். (இதில் மிகப் பிரபலமாக உள்ளவர் வினோத் கோஸ்லா). அதனால், ஆரம்ப நிலை வாய்ப்பு இப்போது சுத்த சக்தி இயக்கத்தால் முன்பை விட இன்னும் பல துறைகளுக்கு விரிந்து மிகப் பலரை ஈர்க்கும் பண்பை அடைந்துள்ளது. உதாரணமாக, கூகிள் நிறுவனர்களின் மூலதனத்துடன் ஆரம்பிக்கப் பட்டுள்ள டெஸ்லா மின்வண்டி நிறுவனத்தைக் கூறலாம்.
அது மட்டுமல்ல. சிலிகான் பள்ளத்தாக்கில் அதன் பெயரையே கொடுத்த சிலிகான் சிப் துறையும் கூட சுத்த சக்தியால் ஆரம்ப நிலை வாய்ப்புக்களுக்கு புதுப் பரபரப்பை அடைந்துள்ளது. சூரிய சக்தியிலிருந்து இன்னும் அதிகமாக மின்சாரம் தயாரிக்கும் நுட்பங்கள், பல விதமான வடிவங்களில் சூரியமின்சக்தி உற்பத்தி செய்யக் கூடிய பொருட்கள் (உதாரணமாக, வளைக்கப் பட்டு அமைக்கப் படக் கூடிய ப்ளாஸ்டிக் படிவத்தில் தயாரிக்கும் நுட்பம் வந்து கொண்டிருக்கிறது) என்பது போலப் பல வாய்ப்புக்கள் இத்துறையில் உருவாகி வருகின்றன. மேலும் இத்துறையில், மின்சக்தியைக் குறைவாகப் பயன்படுத்தும் சிப்களை உருவாக்கும் நுட்பங்களுக்கும் வாய்ப்பு உண்டு. |
|
மென்பொருள் துறையிலும் மின்வலைத் துறையிலும் கூட வாய்ப்புக்கள் உள்ளன. பயோடெக் மற்றும் பயோ இன்·பார்மேடிக்ஸ் என்ற வாய்ப்புகள் மென்பொருளுக்கு எழுந்தது. அதே போல், சுத்த சக்தியிலும் புதிய மென்பொருட்களுக்குத் தேவை எழும். சக்தி உற்பத்தி, சேமிப்பு, மற்றும் பயன்பாட்டின் செயல் திறனை (efficiency) இன்னும் அதிகமாக்கவும், அவற்றைக் கண்காணிக்க (monitor) மற்றும் அவற்றைப் பற்றிய தகவல் வெளியீட்டுக்காகவும் (reporting) மென்பொருள் நுட்பங்கள் தேவைப்படும். உற்பத்தி இயந்திரங்கள், தொழிற்சாலைகள், ஆழ்பூமி, கடல் மற்றும் விண்வெளியில் அமைக்கப்படும் சக்தி உற்பத்தி நிலையங்களைப் பிணைக்கப் புதுவகை மின்வலை நுட்பங்களும் தேவைப்படலாம்.
அதனால், சுத்த சக்தித் துறையில் ஆரம்ப நிலை வாய்ப்புக்களுக்கென்னவோ குறை வில்லை--உங்கள் யோசனை மற்றும் கற்பனா சக்திக்கேற்ப உள்ளது. பெருமளவு மூலதனமும் காத்துக் கொண்டிருக்கிறது.
சரியான திட்டத்தைக் காட்டி மூலதனம் பெற்று, வெற்றியும் காணுங்கள். அதே சமயம் புவிவெப்பத்தையும் குறைக்கும் வழி கண்டு உலகத்துக்கு உதவலாம். இது ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக, பிரமாதமான வாய்ப்பல்லவா. ஜமாயுங்கள்!
முற்றும்
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|