|
தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப் படுகிறது? - (பாகம் - 11) |
|
- கதிரவன் எழில்மன்னன்|நவம்பர் 2010| |
|
|
|
|
|
பொருளாதாரச் சூழ்நிலை சற்றே முன்னேறியுள்ளது. இப்போது எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்ப நிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires), சுத்த நுட்பம் (clean tech) என்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமிருப்பதைக் கண்டோம். வலைமேகக் கணினியின் முக்கிய உபதுறையான சேவை மென்பொருள் துறையைப் பற்றியும், அதைவிட அடிப்படையான, கணினிகளை வேண்டும்போது மட்டும் உபயோகிக்கும் PaaS, மற்றும் IaaS பற்றியும் விவரித்தோம். நிறுவனத் தகவல் மையங்களை வலைமேகங்களுடன் இணைக்கும் பாலம் என்ற நுட்பத்தை அறிமுகம் செய்து அதன் சில உபதுறைகளான தகவல் பாலம் மற்றும் பாதுகாப்புப் பாலம் பற்றி விவரிப்போம். இப்போது, அந்த வலைமேகக் கணினியின் மற்ற உபதுறைகளில் மூலதன வாய்ப்புப் பற்றிய மேல் விவரங்களைக் கண்டோம். இப்போது வேறொரு துறையைப் பற்றிக் காணலாம் ...
***** வலைமேகக் கணினி மட்டுமல்லாமல், வலைமேக ஊடகங்களையும் ஒரே வீச்சில் வீழ்த்தியாயிற்று. அடுத்த CL துறை என்ன, கேட்க ஆர்வமாக உள்ளது?
அடுத்த இரு CL துறைகள் கம்பி நீக்கம் (CLearing out wires / Cord-Less), மற்றும் சுத்தசக்தி நுட்பம் (CLean tech). இவை இரண்டில் எனக்கு நெருக்கமானது கம்பி நீக்கத் துறைதான். எனவே அதைப்பற்றி முதலில் விவரித்து விட்டுப் பின்பு சுத்தசக்தியை நாடலாம்!
தற்போது எவற்றையெல்லாம் கம்பிகளால் இணைத்து தகவல் தொடர்பை, ஏன் சக்தியைக் கூட அனுப்பப் பயன்படுத்துகிறோமோ அவற்றையெல்லாம் கம்பியின்றிச் செய்யக்கூடிய நுட்பங்கள் உருவாகி வருகின்றன. இவற்றைப் பெருமளவில் நடைமுறைக்குக் கொண்டுவர முடிந்தால், கம்பிகளையே கண்ணால் பார்க்காத ஒரு காலமும் வரக் கூடுமோ?!
இது வெறும் விவாதத்துக்கான கேள்வி அல்ல. அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களில் ஏற்கனவே கம்பியின்மை வந்து விட்டதல்லவா? இன்னும் பல அம்சங்களில் அது முன்னேற நுட்பங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. அவற்றில் சில ஆரம்பநிலை நிறுவன மூலதனத்துக்கும் தயாரான நிலைக்கு வந்துள்ளன.
மின்சக்தி விநியோகம், மின்வலை போன்ற பல பொதுப் பணிகளுக்கு இன்னும் வெகுகாலத்துக்குக் கம்பி தேவைதான். ஆனால், அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பல கம்பிகள் காணாமல் போய்விடும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றுதான் தோன்றுகிறது! (மின் சக்திக்கான பொதுப்பணிக் கம்பிகள் கூட கண்ணுக்குத் தெரியாமல் நிலத்துக்கடியில் பதுங்கும் நுட்பங்களும் வளர்ந்து வருகின்றன - அதைப் பற்றியும் காண்போம்!)
இதுவரை கண்ட எல்லாத் துறைகளையும் போல இந்த கம்பியில்லாத் துறையிலும் பற்பல உபதுறைகள் உள்ளன. உயரளவில் நான்கு உபதுறைகளாகப் பிரிக்கலாம்: (1) WiFi LAN எனப்படும் கணினிகளுக்கும் அறிவுபேசிகளுக்குமான (smart phones), அண்மைப் பரப்புத் தொடர்பு (2) செல்பேசிகளுக்கான தொலைதூரப் பேச்சு மற்றும் தகவல் தொடர்புத் துறை (3) சாதனங்களைப் பிணைக்கப் பயன்படுத்தும் குறுகியதூரக் கம்பிகளைத் தவிர்க்கும் ப்ளூடூத் போன்ற நுட்பங்கள் (4) மின்சக்தியைக் கம்பியின்றிச் செலுத்துவது - சாதனங்களுக்கு மீண்டும் சக்தியூட்டுதலும் (recharging) சேர்த்து.
இப்போது ஒவ்வொரு உபதுறைகளின் மூலதன வாய்ப்புக்களைப் பற்றி சிறிது மேல்விவரம் காண்போம்.
முதலாவதாக நமக்கு நன்கு அறிமுகமான ஒரு உபதுறையைப் பற்றிய விவரங்களை விரைந்து பார்க்கலாம். பின்னர் மற்றத் துறைகளுக்குப் போகலாம். அதுதான் கம்பியற்ற அண்மைத் தொடர்புத் துறை (WiFi-Wireless LANs). 802.11... என்றாலே, என்னடா மிகப்பழைய துறை என்று கொட்டாவி வருகிறதா! உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. இத்துறை இப்போது எல்லாக் கணினிகள் மட்டுமல்லாமல் தொலைபேசிகளிலும், சின்னத்திரைக்கான மின்வட்டுச் சாதனங்களிலும் கூட (DVD players) பரந்து வியாபித்துவிட்டதே! மக்டானல்ட் போனால் கூட WiFi கிடைக்கிறது! ஏன்! சமீப காலமாக, விமானங்களில் கூட! நான் பறந்து கொண்டிருக்கிறேன், அதனால் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்ப முடியவில்லை என்னும் கடைசிபட்ச சாக்குக் கூட மறைந்து வருகிறது. இப்படிப் பரந்து விரிந்துவிட்ட துறையில் எவ்வாறு புதுமை படைக்க முடியும், அதிலெப்படி மூலதனம் என்று கேட்கிறீர்களா? வியக்கத்தக்க வகையில், அதிலும் சில புதுநுட்பங்களுக்கு இன்னும் வாய்ப்புள்ளது. |
|
அத்தகைய ஒருதுறை வலைப் பாதுகாப்பு. கம்பியின்றி அனுப்பப்படும் தகவலைக் கண்காணிப்பிலிருந்து மறைக்கும் இரகசியக் குறியீட்டுத் துறையில் தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும், அனுமதியின்றி யாராவது WiFi தொடர்பு அணுகல் பிணையம் (access point) ஒன்றை நிறுவனத்தின் மின்வலைக்குள் கொணர்ந்துள்ளனரா என்று கண்காணிக்க வேண்டிய நுட்பத்தில் வேலை நடக்கிறது. கம்பியின்றி நிறுவனத்தின் மின்வலைக்குத் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் கணினி மற்றும் அதன் பயனர்களுக்கு அவ்வாறு நுழையும் அனுமதியோ, வலையில் உள்ள சாதனங்களையும் மென்பொருட்களயும் பயன் படுத்தும் உரிமையோ உள்ளனவா என்று பரிசோதிக்கும் நுட்பங்களை முன்னேற்றவும் இன்னும் வாய்ப்புள்ளது.
WiFi மூலம் தொலைப் பேச்சு மற்றும் தொலைக்காட்சி செலுத்துவதிலும் பல முன்னேற்றங்கள் செய்ய வாய்ப்புள்ளது. ரேடியோ அலை மூலம் வலைத் தொடர்பு செய்யும்போது கம்பிபோல் அல்லாமல், அவ்வப்போது சுற்றுச் சூழலாலோ, மற்ற ரேடியோ சாதனங்கள் வந்து போவதாலோ தடங்கல்கள் ஏற்பட்டுத் தொடர்புக்கு இடையூறு (disturbance) ஏற்படுவது சகஜம். இந்நிலையில் அத்தொடர்பின் மூலம் கணினித் தகவல் அனுப்பினால் பரவாயில்லை - மென்பொருட்கள் அதைச் சமாளித்து, மீண்டுவிடும். ஆனால், பேச்சும், காட்சியும் மனிதர்கள் பெறுபவை ஆதலால் அவர்களின் சகிப்பு எல்லைக்குள் இருத்தல் வேண்டும். அதனால், ரேடியோத் தடங்கல்களைச் சமாளித்து அதிக இடையூறின்றி ஊடகம் செலுத்தும் (media transmission) நுட்பங்களை முன்னேற்ற வாய்ப்பு உள்ளது.
அக்சஸ் பாயிண்ட்களையே கம்பியின்றி மையக் கட்டுப்பாட்டுச் சாதனத்துடன் (central controller) இணைக்கவும், இன்னும் மேலாக, மையக் கட்டுப்பாட்டுச் சாதனம் என்றுத் தனியாக இல்லாமல், அணுகல் பிணையங்களையே தங்களுக்குள் தகவல் பரிமாறி, பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு விதிகளை அமுலாக்கும் நுட்பங்களும் முன்னேறி வருகின்றன.
WiFiக்கு மற்றொரு இடையூறும் உள்ளது. WiFi அக்சஸ் பாயிண்ட் உள்ள வீடுகளில், குறிப்பாக, விரிந்து பரந்த பெரிய வீடுகளில் எவ்வாறு வீட்டின் பல மூலைகளுக்கும், ஏன் வெளியில் தோட்டத்துக்கும் கூட அந்த WiFi ரேடியோ அலையை போதுமான வலுவில் அளிப்பது என்பதுதான் அது. இந்தப் பிரச்சனையை நிவர்த்திக்கும் நுட்பங்கள் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாரும் எளிதில் பயன்படுத்தும் அளவில் நடைமுறையில் இல்லை. WiFi சாதனத்தை மின்வலையுடன் இணைத்து, பலமான ரேடியோ அலையை வீடெங்கிலும் கிடைக்கச் செய்வதற்கான நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதாவது சரியில்லை என்றால் சுயமாகவே சோதித்து என்ன செய்ய வேண்டும் என்று காட்டும் நுட்பங்களும் ஆராயப்பட்டு வருகின்றன.
மற்றப்படி, மின்வலையில் சாதாரணமான, அடுத்த அதிக வேகம் என்ன என்ற 802.11[a-z] பொது விதிமுறைகள் (public protocol standards) வழக்கம்போல் தொடர்ந்து உருவாக்கப் படுவதால் அவற்றை நடைமுறைக்கு மிகக் குறைவான செலவில் கொண்டு வரும் மின் நேனோசில்லுகள் (electronic nano-chips) நுட்பங்களிலும் வாய்ப்புக்கள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கின்றன. இத்துறையில், அடுத்து பல கிகாபிட் (gigabit) அளவில் கம்பியின்றித் தொடர்பளிக்கும் நுட்பங்களுக்கு வாய்ப்புள்ளது.
மேற்கண்ட நுட்பங்களில் ப்ராட்காம், ஸிஸ்கோ போன்ற பல பெரும் நிறுவனங்களில் மேம்படுத்தப் படுகின்றன. அதனால், WiFi உபதுறையில் ஒரு முழு ஆரம்பநிலை நிறுவனம் தொடங்க வாய்ப்புக் குறைவே. என்றாலும், நீங்கள் அத்துறையில் நிபுணர் என்றால், இன்னும் இருக்கும் ஒரு சில வாய்ப்புக்களுக்கு மூலதனம் பெற்றுப் பலன்பெற கொள்ள முடியும்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|