|
கலி பாடத்திட்ட சர்ச்சை - தோற்பது நாமல்லவோ |
|
- கலவை வெங்கட்|ஏப்ரல் 2006| |
|
|
|
தென்றல் இதழ்களில் மணிவண்ணன் அவர்கள் இந்தச் சர்ச்சையைப் பற்றி எழுதிவரும் கட்டுரைகளைப் படித்தேன். இதில் முழுவதுமாய் ஈடுபட்டிருப்பவன் என்ற முறையிலும், இரண்டு குழந்தைகளை இந்த மாநிலப் பள்ளியொன்றில் சேர்த்திருக்கும் கவலை கொண்ட தந்தை என்ற முறையிலும், 'புழக்கடைப்பக்க'த் தகவல்களுக்கு அப்பாலும் பல உண்மைகள் இருப்பதைத் 'தென்றல்' வாசகர் கவனத்துக்குத் தர விரும்புகிறேன்.
இந்துசமயத்தைக் குறித்துத் தரக்குறைவாகவும், பல பொய்த்தகவல்களைச் சேர்த்துத் திரித்தும் காணப்படும் பாடப்புத்தகங்கள், இங்கு பயிலும் நம் இளம் பிள்ளைகள் தங்களது சமயத்தைக் குறித்தே வெட்கப்படும்படி அமைந்திருக்கும் அவலத்தை, சகவகுப்பு மாணவர்களின் ஏளனத்துக்கு ஆளாகி நாளும் அழுது வீடு திரும்பும் கொடுமையைக் கண்டு, இனி பொறுப்பதில்லை என்று பெற்றோர் பலரும் கலி·போர்னிய மாநிலக் கல்வித்துறையை (இனி க.மா.க.) பாடப்புத்தகங்களில் திருத்தம் செய்ய வேண்டிப் போராடி வருவதுதான் இந்தத் தொடர் கட்டுரைகளின் பின்புலம்.
மாணவர் மன உளைச்சலுக்கு ஆளாகாத வண்ணம் கிறித்துவ, இஸ்லாமிய மதங் களைக் குறித்துக் கவனமாய்ப் பாடத் திட்டத்தை அமைத்திருக்கும் க.மா.க., அதே கவனத்தை இந்துக்களுக்கு வழங்காத அநியாயத்தைத் தட்டிக் கேட்பது நம் கடமை அல்லவா? ·ப்ரென்ட்பேஜ் பத்திரிகையில் இதைக் குறித்து நான் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
இஸ்லாம், கிறித்துவ மதங்களைப் பற்றிய சர்க்கரை தடவிய தகவல்களை மட்டும் சரித்திரமாய்ச் சொல்லும் பாடப்புத்தகங்கள் நம் சமயத்தைப் பற்றிச் சொல்வதென்ன? ஆய்ந்து பார்த்தால் இந்துசமயத்தைப் பற்றிப் பாடப்புத்தகங்கள் சொல்லும் யாதொரு தகவலுமே இளஞ்சிறார் பெருமை கொள்ளும்படி இல்லை.
இதில் அவ்வையார், காரைக்கால் அம்மையார் போன்ற புகழ்வாய்ந்த பல இந்துசமயப் பெண்துறவிகளைப் பற்றியோ, இடைக்காலத்தில் பக்திஎழுச்சிக்கு மூலகாரணரான திலகவதியாரைப் பற்றியோ, புனிதநூலான திருக்குறளைப் பற்றியோ எந்தக் குறிப்புமில்லை. ஞானஊற்றான உபநிடதங்களைப் பற்றியும், தாந்திரீக ஆதிநூலான திருமந்திரத்தைப் பற்றியும் கூட யாதொரு குறிப்புமில்லை. இந்துக்களின் பங்களிப்பான பூச்சியத்தை, எண் கணிதத்தை, வானநூல் மற்றும் ஜியோமிதி இவற்றின் அடிப்படைப் பங்களிப்பை, மருத்துவத்துறையில் பழம்பெரும் நூல் களைப் பற்றி இவை முழுவதுமாய் இருட்டடிப்பு செய்துள்ளன.
'ஏகம் சத் விப்ரா பஹ¤தா வதந்தி' (ஒரே சத்தியத்தைச் சான்றோர் பலதாகவும் சொல்வர்) என்ற வேதவாக்கிலும், 'ஏகன் அநேகன்' என்று திருவாசகம் சொல்வது போலும் பன்முகப் பார்வை கொண்ட சகிப்புத்தன்மைக்கு இலக்கணமான இந்து சமயம், அவரவர் வழி அவரவர்க்கு என்று எல்லாப்பாதைகளுக்கும் தொன்றுதொட்டே இடம் கொடுத்து வந்திருக்கிறது--நாத்திகம், இறைமறுப்பு வாதம் உட்பட.
இந்தப் பன்முக தரிசனமே இந்துசமயத்தின் அடிநாதம். இந்த அடிப்படையையே க.மா.க. பாடப்புத்தகங்கள் சற்றும் கண்டு கொள்ளவில்லை.
உண்மையைப் போற்றிச் சொல்ல வேண்டாம், ஓட்டைகள் எங்காவது இருக்கிறதா என்று தேடி அதை ஊதிப் பெரிதாக்கிப் பிஞ்சு உள்ளங்களைக் காயப்படுத்தாமலாவது இருக்கலாமே! மாறாக இவை முக்கியமாய்க் குறிப்பிட்டுச் சொல்வது என்ன?
இந்து மதத்தில் பெண்கள் தாழ்ந்த நிலையில் வைக்கப் பட்டுள்ளனர்; அவர்கள் படிப்பதற்குப் பல தடைகள்; அவர்களுக்குச் சம உரிமை இல்லை.
இதுவா உண்மை? அதுவும் தாக்கம் நிறைந்த சிறுபிராயத்தினருக்கு என்ன மாதிரி மூளைச்சலவை இது?
சொல்லப் போனால் பண்டைய சமூகங்கள் எதிலும் ஆண்களுக்கு நிகராகப் பெண் களுக்குச் சில உரிமைகள் இருந்ததில்லை என்பதே உண்மை. இது உலகம் முழுமைக் கும் பொதுவானது. ஆனால், நம் சமூகத்தில் அத்தகைய பெருந்தடைக்கல் இல்லை என்பதற்கு கார்க்கியும், காரைக்கால் அம்மையாரும், அவ்வையாரும் இன்னும் பலரும் சாட்சியாய் நிற்கிறார்கள். சொல்லப் போனால் இடைக்காலத்தில் ஒரு பதுமவதியும் (கோச்செங்கட்சோழரின் தாய்), புனிதவதியும் (கீதம் முன்பாடும் அம்மை என்று சேக்கிழார் போற்றும் பக்தி இலக்கிய முன்னோடியான காரைக்கால் அம்மையார்), திலகவதியும் (திருநாவுக்கரசரை மீட்டெடுத்த அவர் தமக்கையார்) இல்லாவிட்டால் திராவிட தேசத்தில் இந்து சமயமே இல்லாமல் போயிருக்கும்.
மாற்றுமதங்களில் இப்படி ஒரு உதாரணம் அந்தக் காலகட்டத்திலிருந்து காட்ட முடியுமா?
சக்தி வழிபாட்டுக்கு ஆதியான இந்து சமயமா பெண்மைக்கு எதிரி?
அடுத்து இந்தப் பாடப்புத்தகங்களின் அதீத கவனம் இன்றைய இந்து சமயத்தை, சமுதாயத்தைக் குறித்ததல்ல. பொதுசகாப்தம் 550 (BCE) முன்பிலிருந்துதான் இதில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் க.மா.க.வால் பூதாகாரமாக்கிக் காட்டப்படும் 'தீண்டாமை' அந்தக்கால இலக்கியங்களில், அதிலும் இன்று தீண்டத்தகாதோராய்க் கருதப்படும் குடியினரால் எழுதப்பட்ட நூல்களிலும் எதிலும் சுட்டப்படாத வினோதத்தை க.மா.க. கருத்தில் கொள்ளவில்லை. |
|
தீண்டாமை என்பது இடைக்காலத்தில் எழுந்த வியாதி. அதை மூடி மறைப்பதில் எனக்கு உடன்பாடில்லை; இருந்தாலும் அதை இந்துசமயத்தின் தனிப்பெரும் அடையாளமாக்குவதை வன்மையாகக் கண்டிக்க விரும்புகிறேன். இது இந்து சமயத்தில் மட்டுமில்லை, பௌத்தம் பரவிய நாடுகள் பலவற்றில், ஜப்பான், கொரியா, பாகிஸ்தான் என்று பல ஆசிய நாடுகளில் பரவிய ஒரு சமூகக்கொடுமை.
வேதசாகைகள் பலவும், திருக்குறளும், இதிகாசங்களான இராமாயணமும், மகாபாரதமும், திருமந்திரம் முதலான பல தமிழ் பக்திநூல்களும் சமுதாயத்தில் இன்று தாழ்த்தப் பட்டதாய்ச் சொல்லப்படும் குடியினரால் ஆக்கப்பட்டோ, தொகுக்கப் பட்டோ இருக்கும் பண்டைச் சரித்திரத்தை க.மா.க. முற்றாய் மூடி மறைத்துள்ளது.
நந்தர், மௌரியர் போன்ற வலிமையான அரசுகளைத் தோற்றுவித்தவர் இந்தக் குடியினரே என்ற உண்மையை க.மா.க. கண்டு கொள்ளவில்லை.
இன்றைய அரிசனங்கள் தங்கள் பண்டைப் பெருமைக் கதைகளை அறிந்து கொள்வதும், அவற்றை மீட்டெடுப்பதும் பாவமா? அவர்களைச் சிறுவயதிலேயே தலித் (உடைந்த மனிதர்) என்ற புதுச் சொல்லாட்சியைப் புகுத்தி இளம் பிராயத்திலேயே அவர் மனதில் வேற்றுமை வெறுப்பை மூட்டுவது எவ்வளவு தீங்கில் முடியும்? இதன் அடிப்படை நோக்கமே சந்தேகத்திற்கு இடமாக அல்லவா இருக்கிறது. இதன் முக்கிய இலக்கு, இன்றைய அரிசனங்களின் சந்ததியினரை இந்து சமயத்திலிருந்து முற்றாய் அடையாளத்தை நீக்க வைத்து 'ஆன்ம அறுவடை'க்குத் தயார் செய்வதோ என்றும் ஐயுற வேண்டியுள்ளது.
ஆரியர் படையெடுப்பு என்பது அடுத்த திரிப்பு. தாரங்கள் எதுவும் நிறுவப்படாமல் இன்னும் விவாதத்திற்கு இடமான இந்த விஷயத்தை ஏதோ முடிந்த முடிபாக இன்றைய இந்துசமயத்தின் பெருங்கூறே எங்கோ ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது, இது ஒரு கலவை மதம் என்று இளம்பிள்ளைகளுக்குக் கற்பிக்கப் படுகிறது. அபே துபாய்ஸ், மாக்ஸ்முல்லர் போன்ற கிறுத்துவ மிஷநரிமார்கள் இந்தக் கற்பனையை வேரூன்றச் செய்தவர்கள். அவர்களின் நோக்கம், இந்து சமயம் ஏதோ பிராமணர்களின் தனிச்சொத்து, இது இந்திய மண்ணுக்குச் சொந்தமானதல்ல என்ற விஷவிதையைப் புதைத்து வைத்தால், உண்மையிலேயே இறக்குமதி செய்யப்பட்ட தங்கள் மதத்திற்குப் பின்னாளில் வலைவீச ஏதுவாயிருக்கும் என்ற குயுக்திச் சிந்தனையே. நவீன அறிவியல் இந்தக் கோட்பாட்டின் அடிப்படையையே சந்தேகம் கொள்கிறது.
ஆனால் மேலே சொன்னதைப் போன்ற 'அரிய' கண்டுபிடிப்புகளை எல்லாம் இந்துசமயத்தின் முக்கியக் கூறுகளாகப் போதிப்பதற்கு என்ன காரணம் இருக்கக் கூடும் என்ற ஊகத்தை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறேன்.
அமெரிக்காவாழ் இந்துக்கள் இந்தத் திரிபுகளைத்தான் குறைந்தபட்சம் மாற்றச் சொன்னார்கள். அதை ஏற்றுக் கொள்ளாத க.மா.க. சில சொற்பிழைகளை, வாக்கியப் பிழைகளை மட்டும் மாற்ற யோசனைகளை வரவேற்றது. சரி என்று சொல்லி, எச்.இ.எ·ப் (Hindu Education Foundation) மற்றும் வி.எ·ப். (Vedic Foundation) குழுவினர் கூடி ஆலோசித்துத் தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள்.
இந்த மாற்றங்களைப் பரிசீலனை செய்யும் படி பேரா. சிவா பாஜ்பாய் அவர்களை க.மா.க. கேட்டுக் கொள்ள அவரும் பல பிழைகளைச் சுட்டிக்காட்டினார். ஆனால் திடுதிப்பென்று இதை எதிர்த்து ஒரு புதிய அணி கிளம்பியது. இதன் முன்னணியில் பலவித சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்ற பேரா. விட்ஸல் குழுவினர், பந்தை ஆடுவதை விட்டுப் பந்தடிப்பவரைச் சாட ஆரம்பித்தனர்.
வழக்கமான யுகங்களான 'இந்துத்வா திணிப்பு', ‘இந்துவெறியர் அட்டகாசம்' என்று பலவித தலைப்புகளில் எங்கிருந் தெல்லாமோ கட்டுரைகள் இவர்களின் ஊடகங்களில் முளைக்கத் தொடங்கின. நம் ஆட்கள்தான் இந்துத்வா என்றாலே கண்ணையும் காதையும் மூடிக் கொள்வார்களே. இங்கே மாற்றம் கோருவது யாதொரு அரசியல் தொடர்பும், சார்பும் இல்லாத என் பக்கத்து வீட்டு இந்தியப் பெண்மணி என்ற உண்மையைக் கண்ணைத் திறந்து பார்க்கச் சிலர் தவறி விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். நண்பர் மணிவண்ணன் கட்டுரைகளைப் படிக்கும்போதும் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. இங்கே தோற்பது நாம்.
இத்தனை திரிபுவாதங்களுக்கு இடையிலும் சில மாற்றங்கள் நிகழ்ந்து முடிந்துள்ளன. ஆனாலும் இந்த மாற்றங்கள் முழுமையானவை அல்ல. விட்சல் அணியினர் தொடர விழைந்த 80 விழுக்காடு திரிபுகள் ஏற்றுக் கொள்ளப்படா விட்டாலும், இது ஒரு தொடக்கமே என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.
கலவை வெங்கட் |
|
|
|
|
|
|
|