|
எஸ்.ஜே. ஜனனி |
|
- தென்றல்|டிசம்பர் 2024| |
|
|
|
|
எஸ்.ஜே. ஜனனி என்னும் ஜெய ஜனனி… இவரை கர்நாடக இசைப் பாடகி என்பதா, ஹிந்துஸ்தானிக் கலைஞர் என்பதா, மேற்கத்திய இசைப் பாடகி என்பதா, இசையமைப்பாளர் என்பதா? இவை எல்லாமும்தான். ஆம். இவை எல்லாவற்றிலுமே சாதனை படைத்திருப்பவர் எஸ்.ஜே. ஜனனி.
மட்டுமல்ல. கீபோர்ட், பியானோ, வயலின், வீணை எனப் பலவற்றிலும் தேர்ந்தவர். பாடலாசிரியர், இசை இயக்குநர், தயாரிப்பாளர் என இவரைப்பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். இவர் இசையமைத்துள்ள 'ரயில்' திரைப்படம் சிறந்த இசையமைப்புக்கான இந்திய அரசின் விருதைச் சமீபத்தில் பெற்றது. இவரது சாதனையில் மற்றுமோர் மகுடமாக, அமெரிக்காவில் இயங்கும் ISSI என்னும் சர்வதேசப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் சங்கம், ஜனனிக்கு 2024ம் ஆண்டின் சிறந்த பாடகிக்கான சர்வதேச விருதை அளித்துள்ளது. ஜனனியின் சாதனைப் பக்கங்களைச் சற்றே புரட்டிப் பார்ப்போமா?
ஜனனி, டிசம்பர் 10 அன்று, தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் வி. சுப்ரமணியன் - சாந்தி இணையருக்கு மகளாகப் பிறந்தார். கடலூரில் உள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புவரை படித்தார். படிக்கும்போதே பல்வேறு போட்டிகளில் பரிசுகள் பெற்றார். பின் குடும்பம் சென்னைக்கு வந்தது. சர்ச் பார்க் பள்ளியில் மேல்நிலைக் கல்வி கற்றார். அப்போதும் பல போட்டிகள், பரிசுகள். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம். சென்னை க்வீன் மேரி கல்லூரியில் இசையில் முதுகலை பட்டம். பாலமுரளி கிருஷ்ணாவின் 72 மேளகர்த்தா ராகப் பாடல்களைக் குறித்து ஆய்வு செய்து எம்.பில். பட்டம் பெற்றார். தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்ட முயற்சி. பிரயாக்ராஜில் உள்ள பிரயாக் சங்கீத் சமிதியில் பயின்று இசையில் டிப்ளமோ பெற்றார்.
இசைப் பயிற்சி ஜனனியின் இசைப்பயிற்சி என்று பார்த்தால் மூன்று வயதிலேயே தொடங்கிவிட்டது. தொடக்க காலத்தில் கடலூரில் சிதம்பரம் சண்முகம், லக்ஷ்மி, கீதா சீனிவாசன் ஆகியோரிடம் இசை கற்றார். பின்னர் பிரபல நாதஸ்வரக் கலைஞர் இஞ்சிக்குடி கணேசன் அவர்களிடம் 9 வருடங்கள் பயின்றார். சங்கீத மும்மூர்த்திகளின் சாகித்யங்களை அவரிடம் கற்றுத் தேர்ந்தார். சென்னைக்கு வந்ததும் பாபநாசம் சிவனின் மகள் ருக்மிணி ரமணியிடம் இசைப் பயிற்சி. தொடர்ந்து, நெய்வேலி சந்தான கோபாலனிடம் கற்றார். பாலமுரளி கிருஷ்ணாவின் அன்பிற்குகந்த சிஷ்யை ஆனார். அவரிடம் இசை நுணுக்கங்கள் பலவற்றைக் கற்றார்.
இது மட்டும்தானா? ஹிந்துஸ்தானி இசை கற்க ஆர்வம் கொண்ட ஜனனி, ஸ்ரீமதி சௌமியா மதனகோபாலனிடம் அதன் அடிப்படைகளைக் கற்றார். உலகப் புகழ்பெற்ற பண்டிட் குல்தீப் சாகரிடம் பயின்று இந்துஸ்தானி செவ்வியல் இசையில் தேர்ச்சி பெற்றார்.
ஜனனி, மேற்கத்திய இசையையும் விட்டுவைக்கவில்லை. அகஸ்டின் பால் மற்றும் வி. கிரிதரன் ஆகியோரின் கீழ் லண்டன் டிரினிட்டி கல்லூரியில், மேற்கத்திய கிளாசிக்கல் பிரிவில் குரலிசையிலும், தியரி ஆஃப் மியூசிக் மற்றும் கீபோர்டில் எட்டு நிலைகளை நிறைவு செய்து 'வேர்ல்டு டாப்பர்' பட்டம் பெற்றார்.
கச்சேரிகள் 5 வயதில் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள இரட்டைப் பிள்ளையார் கோயிலில் ஜனனியின் முதல் கச்சேரி நடந்தது. தொடர்ந்து பல மேடைகள், பல கச்சேரிகள். ஜனனியின் இசை முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருந்து அவரை ஊக்குவித்தவர், ஆடியோ கம்பெனி வைத்திருந்த அவரது மாமா சங்கர் கணேஷ்.
தொடர்ந்து இந்தியா முழுவதும் சென்று பல கச்சேரிகள் செய்தார் ஜனனி. இதுவரை கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, ஃப்யூஷன், பஜன், ஜுகல்பந்தி பக்தி இசை, திரையிசை என 1000-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 2011ல், பிரான்சின் பாரிஸில் உள்ள அல்ஹம்ப்ரா அரங்கில் Au Fil des Voix என்ற இசை விழாவிற்கான ஜுகல்பந்தி கச்சேரியில் பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியாவுடன் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம் என்கிறார் ஜனனி ஒரு நேர்காணலில். அதில் ஹரிபிரசாத் சௌராசியா புல்லாங்குழல் வாசிக்க, ஜனனி 'கிருஷ்ணா நீ பேகனே பாரோ' பாடலைப் பாடினார். தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும், உலகப் பயணங்கள் மேற்கொண்டும் கச்சேரிகள் நிகழ்த்தி வருகிறார்.
ஆல்பங்கள் ஜனனியின் முதல் ஆல்பம் 'நாத ஒலி' 1999ல் வெளிவந்தது. இரண்டாவது ஆல்பம் 'பூங்காற்று'. இதில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடியிருந்தார். எல். வைத்தியநாதன் இசையமைத்திருந்தார். 2007ல் ஜனனியின் மூன்றாவது ஆல்பமான ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் மற்றும் கந்த சஷ்டி கவசம் வெளியானது. கர்நாடக இசையுடன் கூடிய பக்திப் பாடல்களின் தொகுப்பான இதனை எம். பாலமுரளிகிருஷ்ணா மற்றும் நெய்வேலி சந்தானகோபாலன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
மகாகவி பாரதியாரின் வந்தே மாதரம் ஆல்பத்திற்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஹரிஹரன் மற்றும் பி. உன்னிகிருஷ்ணனுடன் இணைந்து பணியாற்றினார். இந்த ஆல்பத்தின் இசையமைப்பாளர், ஏற்பாட்டாளர் மற்றும் இசை நடத்துனராக ஜனனி பணிபுரிந்தார். கிளாசிக் வேவ்ஸ் ஃப்யூஷன் ஆல்பம், கிளாசிக் வேவ்ஸ்-2, பஞ்சரத்ன கிருதிகள் எனத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள். பல ஆல்பங்கள்.
இசையின் பல்வேறு வகைமைகளில் ஜனனி 2024 வரை 90 ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் என்பது உண்மையிலேயே ஓர் அரிய சாதனை.
விருதுகள்
- ஜனனி, இந்திய அரசு வழங்கிய பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது (2001)
- திருவையாறு தமிழ் இசை மன்றம் அளித்த பண்ணிசைசெல்வி பட்டம் (2002)
- 2002-ல், புதுதில்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த குழந்தைகள் தின விழாவில், அப்போதைய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் முன் பஞ்சரத்னக் கீர்த்தனைகளில் ஒன்றான 'எந்தரோ மகானுபாவுலு' பாடலைப் பாடிப் பாராட்டுப் பெற்றார்.
- தமிழக அரசின் கலை இளமணி விருது (2003).
- மாயவரம் இ.கே.பி. கலைப் பள்ளி அளித்த பால அருள் இசை வாணி விருது (2003)
- கடலூர் ஆலால சுந்தர சபை வழங்கிய சுந்தர வர்ஷிணி (2003)
- கும்பகோணம் வாணி விலாச சபை அளித்த தேனிசை வாணி (2004)
- போகோ டிவி அளித்த போகோ அமேசிங் கிட் (2005)
- ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த்வெஸ்ட் வழங்கிய இளம் சாதனையாளர் விருது (2007)
- 'சென்னை ஜர்னல் ஆஃப் ஸ்கூல் சோஷியல் ஒர்க்' அளித்த பால ஸ்வர்ண ஜ்வாலா விருது (2007)
- ரைசிங் ஸ்டார் – இந்தியன் மியூசிக் அகாடமியின் ஐடியா ஜல்சா தேசிய விருது (2009)
- லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பெரிஃபெரல் சிட்டியின் விடிவெள்ளி சாதனையாளர் விருது (2009)
- கடலூர் இசைக்குயில் சரஸ்வதி கான சபை விருது (2009)
- திருநின்றவூர் ஜெயா கல்வி அறக்கட்டளையினரின் இசைவாணி பட்டம் (2010)
- பாரத் கலாச்சரின் யுவகலா பாரதி விருது (2011)
- சிறந்த கலைஞர் விருது - சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் பாரம்பரிய இசைப்பிரிவு (2012)
- தியாக பிரம்ம கான சபையின் சிறந்த இளைய பாடகர் விருது (2013)
- மகாகவி பாரதி நற்பணி மன்றத்தின் தமிழிசை கலைமணி (2014)
- புதுதில்லியில் உள்ள காயத்திரி ஃபைன் ஆர்ட்ஸ் & லக்ஷ்மி குப்புசுவாமி அறக்கட்டளையின் சங்கீதா கோவிதா விருது (2014)
- மகாராஜபுரம் சந்தானம் அறக்கட்டளைப் பரிசு (2015)
- விடியல் அறக்கட்டளை அளித்த பாரதி விருது (2015)
- டிரினிட்டி ஆர்ட்ஸ் அளித்த இந்தியாவின் இசை அரசி (2015)
- சென்னை பாரதியார் சங்கத்தின் பாரதி பணிச் செல்வர் விருது (2016)
- தமிழக அரசின் 'கலைமாமணி' விருது (2018)
- பாப் பாடல் மற்றும் பிலீவ் இன் யூ மியூசிக் வீடியோவுக்காக 'அகாடெமியா' விருது (2019)
- அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்த 'இன்டர் கான்டினென்டல் மியூசிக் அவார்ட்ஸ்' நிகழ்வில் மகாகவி பாரதியாரின் 'நளிர்மணி நீரும்' பாடலைப் பாடி, ஆசியாவின் சிறந்த பாடலுக்கான விருது (2022).
- அமெரிக்காவில் இயங்கும் ISSI என்னும் சர்வதேசப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பு வழங்கிய சிறந்த பாடகிக்கான சர்வதேச விருது (2024)
- சாதனை நாயகி
- இசைக்குயில்
- கர்நாடக இளம்கவி
- சங்கீத வித்தகி
- இளம்குயில்
- கவிக்குயில்
- பாடலரசி
- சாதனைப்புயல்
|
|
எஸ்.ஜே. ஜனனி - சில குறிப்புகள் ஜனனி, அகில இந்திய வானொலியின் 'A கிரேடு' கலைஞர். குளோபல் மியூசிக் விருதுகளில் 9 விருதுகளை வென்றவர். 2014 மற்றும் 2017ல் கர்நாடக சிம்ஃபனி - கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனா விழாவிற்கான இசை ஏற்பாடுகளைச் செய்தார். பல தனியார் ஆல்பங்கள், குறும்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துப் பாடுகிறார். 14 டிசம்பர் 2018 அன்று வெளியான 'பிரபா' என்ற தமிழ் திரைப்படத்திற்கும், 2024ல் வெளியான 'ரயில்' திரைப்படத்திற்கும் இசையமைத்தார். இதற்காக 2024-ன் சிறந்த திரையிசை அமைப்பாளருக்கான இந்திய அரசின் தேசிய விருது பெற்றார். 'Project-Peace on Earth' என்னும் 'பூமியில் அமைதி' திட்டத்தின் இசைத் தூதர். Evolving Planet 7-ன் இசைத் தூதர். சுமார் 100 கர்நாடக கிளாசிக்கல் கீபோர்டு கச்சேரிகளை வழங்கியுள்ளார். கஜல், பஜன் கச்சேரிகளையும் நடத்துகிறார். ரெக்கார்டிங் அகாடமி / கிராமிகளில் வாக்களிக்கும் உறுப்பினர். 3 டாட் ரெக்கார்டிங் ஸ்டுடியோவின் தலைமை நிர்வாக அதிகாரி. JSJ ஆடியோ நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி இவரது சமீபத்திய வெளியீடான 'I'm Flying High' வீடியோ (பார்க்க: https://www.youtube.com/watch?v=ZyuvHtavDGE) சர்வதேச அளவில் பார்வையாளரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
யூ ட்யூப் | ஃபேஸ்புக் பக்கம் | இன்ஸ்டாகிராம்
(படங்கள், தகவல்கள் நன்றி: sjjananiy.com)
தென்றல் |
|
|
|
|
|
|
|