|
தெ. ஞானசுந்தரம் |
|
- தென்றல்|செப்டம்பர் 2024| |
|
|
|
|
முனைவர் தெ.ஞானசுந்தரம், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர். கம்பராமாயணம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பக்தி இலக்கியங்களில் தோய்ந்தவர். வைணவ இலக்கியங்களில் ஆழங்காற்பட்டவர். இவரது முனைவர் பட்ட ஆய்வே 'வைணவ உரைவளம்' என்பதுதான். தமிழ் இலக்கியங்களில் மட்டுமல்லாமல் சம்ஸ்கிருத இலக்கியங்களிலும் தேர்ந்தவர். முறையாக சம்ஸ்கிருதம் கற்ற அறிஞர். மா. அரங்கநாதன் இலக்கிய விருது உட்படப் பல்வேறு விருதுகள் பெற்றவர். அவரது வாழ்க்கைத் துளிகள் இங்கே...
★★★★★
பிறப்பு தெ. ஞானசுந்தரம், மயிலாடுதுறை மாவட்டத்தின் தேரழுந்தூரை அடுத்த குழையூர் என்னும் சிற்றூரில், தெண்டபாணிப் பிள்ளை - தையல்நாயகி அம்மை இணையருக்கு, செப்டம்பர் 20, 1941-ம் நாளன்று பிறந்தார். உள்ளூரில் பள்ளிக்கல்வி கற்றார். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். இங்கு அவருக்கு டாக்டர் மு.வரதராசனார் ஆசிரியராக இருந்து வழிகாட்டினார். சென்னை பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதத்தில் பட்டயம் பெற்றார். டாக்டர் ரா. சீனிவாசனின் வழிகாட்டலில், 'வைணவ உரைவளம்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு உரை எழுதிய பல்வேறு உரையாசிரியர்கள் பற்றியும், அவர்களின் உரைச் சிறப்பு, பொருள்வளம், நடைச் சிறப்பு, இலக்கிய நயங்கள் பற்றி மிக விரிவாக அந்நூலில் ஆய்வு செய்திருந்தார்.
கல்விப் பணிகள் தெ. ஞானசுந்தரம், 1963-ல், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பயிற்றுநராகத் தன் பணியைத் தொடங்கினார். தொடர்ந்து பரமத்தி வேலூர்க் கந்தசாமிக் கண்டர் கல்லூரி, சென்னை கந்தசாமி நாயுடு கல்லூரி ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். அயற்பணியாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித் துறையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவரானார். இரண்டு ஆண்டுகள் மாலை கல்லூரிப் பொறுப்புப் பேராசிரியராகவும், மூன்று மாதங்கள் அதே கல்லூரியில் பொறுப்பு முதல்வராகவும் பதவி வகித்தார். 2000-ல் பணி ஓய்வு பெற்றார்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட கம்பன் இருக்கையின் முதல் பேராசிரியராக 2009முதல் 2011வரை பணியாற்றினார். அக்காலகட்டத்தில் கம்பராமாயணத்தையும் வால்மீகி ராமாயணத்தையும் ஒப்பிட்டு 'முதலும் வழியும்-பாலகாண்டம்', முதலும் வழியும்-அயோத்யா காண்டம் என்னும் இரு ஆய்வு நூல்களைப் படைத்தார். ஜூலை 2018முதல் ஜூலை 2021வரை மூன்றாண்டுகள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
தெ. ஞானசுந்தரத்தின் நூல்கள் வைணவ உரை வளம், கம்பநாடர் - புதிய வெளிச்சம், கம்பராமாயணத்தில் சகோதரத்துவம், கம்பர் போற்றிய கவிஞர் , இராவணனின் மைந்தர்கள், இராவணனைச் சந்திப்போம், இராம காதை-முதலும் வழியும் பால காண்டம் , இராம காதை-முதலும் வழியும் அயோத்தியா காண்டம் , இராம காதை-முதலும் வழியும் ஆரணிய காண்டம், இராம காதை-முதலும் வழியும் கிட்கிந்தா காண்டம், இராம காதை-முதலும் வழியும் சுந்தர காண்டம், இராம காதை-முதலும் வழியும் யுத்த காண்டம், திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி - மூலமும் உரையும் - முதல் இருநூறு பாசுரங்கள்), திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி - மூலமும் உரையும் - 201 முதல் 400 பாசுரங்கள், வைணவக் கலைச்சொல் அகராதி, காப்பிய விருந்து , குறுந்தொகைத் தெளிவு, கற்பக மலர்கள் , மாணிக்கவாசகர், மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி விளக்கம்., சொல் தேடல் , என் இலக்கியத் தேடல், மற்றும் பல.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயிலும் அயல்நாட்டு மாணவர்களுக்குத் தமிழ் எம்.ஏ. பயிற்றுவித்தார். அஞ்சல்வழிக் கல்வி பயிலும் சிங்கப்பூர்வாழ் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்பிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரைச் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தது. தெ. ஞானசுந்தரத்தின் வழிகாட்டுதலில் பல மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
திருமணம் தெ. ஞானசுந்தரம், புலவர் தி. மணிமேகலையை மணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள்.
இலக்கியப் பணிகள் தெ. ஞானசுந்தரம், இதழ்களில் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். குறிப்பாக தினமணியின் தமிழ்மணி பகுதியில் 50 வாரம் தொடர்ந்து கட்டுரைகளை எழுதினார். இவை பின்னர் தொகுக்கப்பட்டு 'சொல் தேடல்' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன. தமிழின் பல நாள், வார, மாத இதழ்களிலும், 'ஞானசம்பந்தம்' போன்ற சமய இதழ்களிலும், இணைய தளங்களிலும் பல்வேறு இலக்கிய, ஆன்மிக, சமயக் கட்டுரைகளை எழுதினார். கம்பராமாயணத்தை ஆய்வு செய்து பல நூல்களை எழுதினார். இவரது ஆய்வேடான 'வைணவ உரைவளம்' நூலாக வெளிவந்து மிகுந்த கவனம் பெற்றது.
தெ. ஞானசுந்தரம் சிறந்த பேச்சாளர், சொற்பொழிவாளர். பல்வேறு இலக்கியக் கருத்தரங்குகளிலும், கல்லூரி, பல்கலைக்கழக நிகழ்வுகளிலும் இலக்கிய, ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, கொல்லம் ஆகிய இடங்களிலுள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் நடத்திய கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுரைகளை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று கம்பராமாயணம், திருக்குறள் குறித்துப் பல தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். கம்பன் கழகங்களில் இவர் ஆற்றியுள்ள சொற்பொழிவுகள் இவரது நுண்மாண் நுழைபுலத்தையும் மேதைமையும் ஆய்வுத் திறனையும் பறைசாற்றுவன.
சென்னை, கோவை கம்பன் கழகங்களும் கங்கை பதிப்பகமும் வெளியிட்ட கம்பராமாயணப் பதிப்புகளின் பதிப்பாசிரியர் குழுவில் தெ. ஞானசுந்தரம் இடம்பெற்றார்.
விருதுகள் தமிழ்ப் பேரறிஞரான தெ. ஞானசுந்தரம், பல்வேறு விருதுகள் அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டுள்ளார். அவற்றில் சில: சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் அளித்த சிறந்த தமிழ்ப் பேராசிரியர் விருது, திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் வழங்கிய கபிலவாணர் விருது, சென்னை கம்பன் கழகம் அளித்த சிறந்த தமிழறிஞர் விருது, ராஜா சர் முத்தையா செட்டியார் அறக்கட்டளை வழங்கிய ராஜா சர் முத்தையா செட்டியார் விருது, கொல்கொத்தா பாரதி தமிழ்ச் சங்கம் அளித்த சாதனையாளர் விருது, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சுப்புரெட்டியார் இலக்கியத் திறனாய்வாளர் விருது, திருச்சி தமிழ்ச் சங்கம் அளித்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை விருது, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் அளித்த உ.வே.சா. தமிழறிஞர் விருது, மா அரங்கநாதன் தமிழறிஞர் விருது.
வாழ்க்கை வரலாறு பேராசிரியர், முனைவர் தெ. ஞானசுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் மு. செல்வம் எழுதியுள்ளார். 2015ல் கலைஞன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
வயதாகி விட்டதே என்று சோம்பியிராமல், 80 வயது கடந்த பின்னரும் சுறுசுறுப்பாகத் தமிழ்நாட்டின் இலக்கிய, சமய, ஆன்மீக மேடைகளில் சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றிவரும் பேராசிரியர், முனைவர் ஞானசுந்தரத்தின் வாழ்க்கை, சதா வாழ்க்கையைப் பற்றி அலுத்துக் கொள்ளும் சிலருக்கு நல்ல பாடமாக அமையும். |
|
தெ. ஞானசுந்தரம் இலக்கிய, ஆன்மீக உரைகள்
ஹியூமர் கிளப் உரை
அருட்பிரகாச வள்ளலார்
சென்னை கம்பன் கழகப் பேருரை
திவ்யப் பாசுர வெளியீட்டு உரை
டாக்டர் தெ. ஞானசுந்தரம் உரைகள்
தென்றல் |
|
|
|
|
|
|
|
|