|
|
|
கொரோனா உயிர்க்கொல்லியால் உலகமே நிலைகுலைந்திருந்த நேரம். விமானங்கள் ரத்து, விசா கிடைக்காதது என்று பல தடங்கல்கள். மூன்றரை ஆண்டுகளாக இந்தியாவுக்குச் செல்ல முடியவில்லை. ஒன்றரை வயதுக் குழந்தையாகப் பார்த்த எனது தங்கையின் குழந்தையை எப்போது பார்ப்போம் என்று ஏங்கியிருந்த சமயம். வார இறுதியில் மட்டுமே தவறாமல் வீடியோ அழைப்பில் பார்க்கும் பரவசம். என் அத்துக் குட்டியுடன் (அத்வித் சேஷாத்திரி) பேசுவதையும் தாண்டி என்ன செய்யலாம் என்று யோசித்தேன்,. ஒருநாள் வாட்ஸாப்பில் (WhatsApp) கதை ஒன்று சொல்லி அனுப்பினேன்.
அப்போது அவனுக்கு இரண்டரை வயது. அவனுக்குக் கதை பிடித்துப் போனது. தினமும் தூங்கும் முன்பு அதே கதையைக் கேட்டுக் கேட்டு ரசிக்கிறான் என்று என் தங்கை சொன்னாள். உற்சாகம் பீறிட, புதுப்புதுக் கதைகளை அடுத்தடுத்த நாட்களில் அனுப்பினேன். அவற்றையும் மிகவும் ரசித்துக் கேட்டான் என்று என் தங்கை சொன்னதைக் கேட்டதும் கிடைத்த ஆனந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
எனக்கும் என் தங்கைக்கும் சிறு வயதில் அப்பா நாள் தவறாமல், சலிக்காமல் கதை சொல்வார். அதைக் கேட்டுக்கொண்டே தூங்கி விடுவோம். அந்தத் தருணம் மீண்டும் வந்ததுபோல இருந்தது. அந்தக் கதைகளை என் உறவினர்களின் குழந்தைகளுக்கு அனுப்பியபோது அவர்களும் ரசித்துக் கேட்டார்கள் என்று தெரிய வந்தது. ஏன் இந்தக் கதைகளை அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கச் செய்யக்கூடாது என்ற எண்ணம் உதித்தது!
அப்படித்தான் ஆரம்பித்தது 'கதை நேரம்' என்ற இந்த ஆடியோ பாட்காஸ்ட்.
பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் மிகத் தாமதமாகவே தூங்கப் போகின்றன. காரணம் தொலைக்காட்சி மற்றும் கைபேசியில் காணொளிகளை தூங்கச் செல்லும்வரை பார்ப்பதுதான். இந்தக் கருவிகளில் இருந்து வெளிவரும் நீல வெளிச்சம் தூக்கத்தை உண்டாக்கும் மெலடோனின் (Melatonin) என்ற ஹார்மோன் சுரப்பதைத் தாமதித்துவிடும். உறக்கம் தடைப்படும்.
சமீப காலத்தில் Spotify போன்ற பெரிய நிறுவனங்கள் முக்கியப் பிரமுகர்களைக் கொண்டு பிரத்தியேகமாக ஒலிநாடாக்களைத் தயாரித்து வெளியிடுவது, குறிப்பாக தமிழில் பல புதிய படைப்புகள் நாளுக்கு நாள் பெருகிவருவது, மக்கள் மத்தியில் பாட்காஸ்ட் கலாச்சாரம் பெற்றிருக்கும் வரவேற்பைக் காட்டுகிறது.
வானொலியில் தென்கச்சி சுவாமிநாதன் சொன்ன கதைகளைக் கேட்டு ரசிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் படித்த காலத்தில் சென்னை வானொலி, தூர்தர்ஷன் இவற்றில் நான்கு தனித்தனி பத்து நிமிட நிகழ்ச்சிகளைச் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதுபோல இப்போது வீட்டிலிருந்தே வானொலியில் பேசுவதுபோன்ற பதிவுகளைத் தனிநபர் செய்யமுடியும் என்பது தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தியிருக்கும் மாயம்.
இன்றைக்கு, அப்பாவிடம், அத்தையிடம் கேட்ட கதைகள், நினைவில் நிற்கும் துணைப்பாடப் புத்தகத்தில் படித்த கதைகள், பன்னாட்டு நன்னெறிக் கதைகள் என்று மொத்தம் இருபத்தெட்டு மணிநேரம் கொண்ட 280க்கும் மேற்பட்ட கதைகளைக் கதைநேரம் பாட்காஸ்ட்டில் சொல்லியிருக்கிறேன். நூறாவது கதையைச் சொன்னபோது அத்துக் குட்டிக்கு இந்த மாமா சொல்லும் கதைகள் தவிர, தாத்தா சொல்லும் கதையும் இருக்க வேண்டும் என்று எண்ணி என் அப்பாவையும் கதை சொல்ல வைத்து 'ஓசூர் தாத்தா கதைகள்' என்று வெளியிட்டு வருகிறேன்.
இப்படியாக 2020 அக்டோபரில் ஆரம்பித்தது கதை நேரம். Spotify, Google Podcasts, Apple Podcasts, Amazon Music என்று பல தளங்கள் மூலம், முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து நான்கு லட்சம் முறைக்கும் மேலே இந்தக் கதைகள் கேட்கப்பட்டுள்ளன.
குழந்தைகளின் பெற்றோர்கள் வழியே குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஒரு சர்வே வழியே அண்மையில் கேட்டிருந்தேன். பெற்றோர் குழந்தைகளுக்கு இந்தக் கதைகளைச் சொல்லித் தூங்க வைப்பதுடன், அவர்களும் கேட்கிறார்கள் என்பது மிகப்பெரிய நிறைவைக் கொடுத்தது. பலர் அவர்களின் குழந்தைகள் மிக விரைவிலேயே தூங்க ஆரம்பித்து விடுகிறார்கள் என்று சொல்வதைக் கேட்கும்போது அதைவிடப் பெரிய ஆனந்தம் வேறு இல்லை.
நாள் தவறாமல் கதைகளைப் பதிவுசெய்ய என் மனைவி என்னை ஊக்கப்படுத்துகிறார். 'இன்று கதை சொல்லலைன்னா நாளைக்கு ரெண்டு கதை சொல்லணும்' என்று செல்லமாய்க் கோபித்துக் கொள்ளும் எனது தங்கை குழந்தைகள் உட்பட, இன்று கதை நேரம் 4500க்கும் மேற்பட்ட நபர்களால் பின்தொடரப்படுகிறது.
இந்த கதை நேரம் பாட்காஸ்ட்டை நீங்களும் இலவசமாக அனைத்துச் செயலிகளிலும் கேட்டு ரசிக்கலாம். கதைகளைக் கேட்பது கற்பனை ஆற்றலை வளர்க்கிறது. குழந்தைகளை ஒரு மாய உலகுக்குக் கொண்டு செல்கிறது. வாருங்கள் சேர்ந்து பயணிப்போம்.
இங்கே QR Code வரவேண்டும்
மேலே காணும் QR code-ஐ உபயோகித்து அல்லது கதைநேரம் என்ற சுட்டியில் உங்களுக்கு விருப்பமான செயலி வழியே நீங்கள் கதைநேரம் கேட்கலாம். |
|
பார்கவ் கேசவன், எடிசன், நியூ ஜெர்சி |
|
|
|
|
|
|
|