Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | நூல் அறிமுகம் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
தமிழ் இணைய மாநாடு
- |நவம்பர் 2002|
Share:
ஒரு சமுதாயத்தின் முதிர்ச்சியைச் சில நிகழ்வுகளால் அளவிட முடியும் என்றால் வட அமெரிக்கத் தமிழர்களின் முதிர்ச்சிக்குச் செப்டம்பர் மாத நிகழ்வுகளை அளவுகோல்களாகக் கொள்ளலாமா? பல தடங்கல்களுக்கு இடையிலும், பொருளாதார மந்த நிலையிலும், அரசு உதவியோ அல்லது செல்வந்தர்கள், பெரு நிறுவனங்கள் உதவியோ இன்றி, சாதாரணத் தமிழர்கள் நடத்திய ஐந்தாவது உலகத் தமிழ் இணைய மாநாடு (http://www.infitt.org/ti2002/) நல்லதோர் அளவுகோல் என்றுதான் சொல்ல வேண்டும். “அரசியல்வாதிகள் தலையிடாமல், அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் மட்டுமே முனைப்பெடுத்துச் செய்யும் ஒரு செயல் எத்துணை வெற்றியும் அடையும் என்பதற்கு ஐந்தாம் தமிழ் இணைய மாநாடே நல்ல சான்று!” என்று தினமணி ஆசியர்க்குக் கடிதங்கள் பகுதியில் வந்த ஒரு கடிதம் பாராட்டியது.

தமிழ் இணையம் 2002 மாநாட்டை உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தமம்), பெர்க்கலியில் உள்ள கலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வியல் மையமும், தமிழ்ப் பீடமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. கடந்த செப்டம்பர் 27 முதல் 29 வரை, கலி·போர்னியாவின் ·பாஸ்டர் சிடியில் நடந்த இந்த மாநாட்டில் கனடா, இந்தியா, இலங்கை, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து ஏறக்குறைய 200 பேராளர்கள் கலந்துகொண்டனர்.

“தொன்மையான மொழியை அண்மையான தொழில் நுட்பத்துடன் பிணைக்கும் தமிழ் இணையம் 2002 மாநாட்டுக்கு உங்களை வரவேற்கிறோம்” என்று உலகத் தமிழர்களை வரவேற்றார் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மணி மு. மணிவண்ணன். “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்ற கணியன் பூங்குன்றனாரின் இந்தப் பாடல் வரிகளோடு தமிழ் இணைய மாநாட்டைத் தொடங்கி வைத்துத் தமிழில் உரையாற்றினார் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட். அதே வரிகளைத் தமிழில் மேற்கோள் காட்டிப் பேசினார் சிங்கப்பூர் பேராசிரியரும், தமிழ் இணைய முன்னோடிகளில் ஒருவருமான பேரா. டான் டின் வீ அவர்கள். ‘டிஜிட்டல் டிவைட்’ என்ற எண்ணியப் பிளவைக் கடக்கத் தமிழில் இணையப் பக்கங்களை அமைப்பதன் தேவையை இரு பெரும் பேராசிரியர் களும் வலியுறுத்தினார்கள்.

“எண்ணியப் பிளவின் மேல் பாலம் அமைப்போம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்த மாநாட்டில் தமிழில் கணினி மற்றும் இணையம் வளர்ச்சி பற்றிய பல கட்டுரைகள் படைக்கப் பட்டன. மைக்ரோசா·ப்ட், ஐ.பி.எம்., சன் மைக்ரோசிஸ்டம்ஸ், ஓரக்கிள், போன்ற பெரும் நிறுவனங்களின் பங்கேற்புகளுக்கு இடையே, பேராளர்களின் கவனத்தை ஈர்த்தவை கனடாவின் வெங்கடரமணன் குழுவினரின் தமிழ் லினக்ஸ் பற்றிய கட்டுரைகள்தாம். தமிழகப் பள்ளிகளில் தமிழ் லினக்ஸ் மூலம் கணினி மற்றும் இணைய வசதி ஏற்படுத்திக் கொடுப்பதைப் பற்றிய இவரது பேச்சு மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர் வரிசையில் இடம் பெற்றிருந்தது. சிலிக்கன் வேல்லியின் தொழிலதிபர்கள் திருமதி லதா கிருஷ்ணன், மற்றும் டை (TiE) அமைப்பின் முன்னாள் தலைவர் கைலாஷ் ஜோஷி ஆகியோர் இந்தச் சிறப்புப் பேச்சு வரிசையில் இந்தியா-அமெரிக்கா அறக்கட்டளை (India America Foundation) மூலமாக இந்தியப் பள்ளிகளில் கணினி மற்றும் இணைய வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டங்கள் பற்றிப் பேசினார்கள்.

தமிழ் இணைய மாநாடுகள் தம் தலையாய நோக்கங்களை அடைய கருத்தரங்கு, கண்காட்சி மற்றும் சமூக மையம் என்று மூன்று அங்கங்களைக் கொண்டிருக்கின்றன. கருத்தரங்குகள் வழியாக கருத்துகளையும் கண்ணோட்டங்களையும் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு அமைத்தல்; சமூக மையத்தின் மூலம் உள்நாட்டுத் தமிழர்களிடையில் தமிழ்த் தகவல் தொழில்நுட்பத்தின் நன்மைகளை அறிமுகப்ப டுத்துதல்; கண்காட்சி மையத்தின் மூலம் வணிக வளர்ச்சியையும் வர்த்தகப் பிணைப்புகளையும் தூண்டுதல் என்ற மூன்று நோக்கங்களை அடைவதில் இந்த முதல் அமெரிக்க மாநாடு பல தடைகளையும் தாண்டிக் குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்திருக் கிறது.

மாநாட்டுக் கருத்தரங்கு மையம்

தமிழ் லினக்ஸ், மின் ஆளுமை (e-governance), கணினி/இணையம் வழி தமிழ்க் கல்வி, யூனிகோடு குறியமைப்பில் (Unicode) தமிழை அமைத்தல்/செயல்படுத்துதல், ஒளிவழி எழுத்துணர்தல் (OCR), தமிழில் இணையத் தேடுதளங்கள், கருவி வழி மொழிபெயர்ப்பு, தமிழில் பேச்சு உருவாக்கல், கையெழுத்து உணர்தல் போன்ற தமிழ்மொழி சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றிய கட்டுரைகள் கருத்தரங்கங்களில் இடம் பெற்றன. மேலும், தமிழ் மின்வெளிக் குழுமங்களை நிறுவதல், வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்தல் போன்ற வாய்ப்புகள் இம்மாநாட்டில் பேசப்பட்டன. தமிழிலும் கணினியிலும் ஆர்வம் உள்ள வல்லுநர்களும், அறிஞர்களும், கணினியைப் பயன்படுத்துவோரும் ஒருங்கிணைத்துப் பல சிக்கல்களுக்குத் தீர்வு காண ஒரு கூட்டின் பறவைகளைப் போல் கூடிப் பேசிக் கொள்ள இந்த மாநாடு ஓர் உயிர்ப்புள்ள மன்றமாய் விளங்கியது. இந்த அலசல்கள் பல புதிய திட்டங்களுக்கு வழிவகுத்தன. இம்மாநாட்டின் மூலம் முதன்முறையாய்க் கணினியில் தமிழ் மொழியின் வளர்ச்சி பற்றி அறிந்து கொண்ட சிலிக்கன் வேல்லியின் கணினி வல்லுநர்கள் அசந்து போனார்கள்!

கலி·போர்னியா திட்டங்கள்

மாநாட்டு வல்லுநர் குழுக்களின் கூட்டங்களில் அலசப் பட்ட சிக்கல்களில் அடுத்த ஆண்டு மாநாட்டுக்குள் தீர்வுகள் காண சிலவற்றைத் தேர்ந்தெடுத்தனர். அவற்றில் தமிழ் வலைத்தளச் செய்திகளைத் தமிழிலேயே தேடும் வசதி ஏற்படுத்துதல், தமிழ்ப் பள்ளிகளுக்குத் தேவையான இலவச மென்கலங்கள் உருவாக்குதல், இணைய வழி தமிழ் மின்னஞ்சல் செயலிகளை உருவாக்குதல் என்ற மூன்று முயற்சிகளும் திறந்த ஆணைமூலக் கட்டமைப்பைப் (Open Source Framework) பயன்படுத்தி உருவாக்கப்படும் என்று முடிவெடுத் தனர். (இந்த முயற்சிகளில் ஈடு பட விரும்பும் ஆர்வலர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அஞ்சல் முகவரி ti2002@infitt.org)

தமிழ் யூனிக்கோடு

உலக மொழிகளின் குறியீடுகளை ஒருங்கிணைத் திருக்கும் யூனிக்கோடு பேரமைப்பு, தமிழ் யூனிக்கோடு தரங்கள் பற்றிய சிக்கல்களை அலசவும், கருத்து பரிமாறிக் கொள்ளவும் உத்தமம் அமைப் போடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த மாநாடு உதவியது. யூனிக்கோடு பேரமைப்பின் உயர் மட்ட அலுவலர்கள் மூவரும் மாநாட்டில் கலந்து கொண்டு உத்தமம் அலுவலர்களோடு கலந்துரை யாடினார்கள். இரண்டு அமைப்புக்களும் தெரிந் தெடுத்த சார்பாளர்கள் மூலம் நெருங்கிய தொடர்பினை மேலும் வளர்த்திக் கொள்ள ஒத்துக்கொண்டிருக்கின்றன. மேலும், இந்த மாநாட்டின் பல கட்டுரைகள் வழியாகப் பல அமெரிக்க நிறுவனங்களின் முன்னணி வல்லுநர்கள் இணையத் திலும், தகவல் தளங்களிலும் தமிழ் யூனிக்கோடு நிலைத்து நிற்க முடியும் என்பதை எடுத்துக் காட்டி நிறுவியுள்ளனர்.

கலந்துரையாடல் குழுக்கள்

தமிழ்த் தகவல் செயற்பாங்கில் ஒத்திணைப்பின் (Collation) முக்கியத்தினைக் கருத்தில் கொண்டு இதனை மேலும் ஆராய்வதற்காக உத்தமம் ஒரு கலந்துரையாடல் குழுவினைத் தொடங்கியிருக் கிறது. உலகெங்கிலும் இருக்கும் தமிழ் மின்-தொகுப்புகளைக் கொண்டிருக்கும் நூலகங்களை இணைத்திடும் வழிமுறைகளை ஆய மேலுமொரு கலந்துரையாடல் குழு தொடங்கப்படும். தமிழ் நூல்களுக்கான மின்வணிக வாய்ப்புகளும் ஆயப் படும். பொது உரிமையிலிருக்கும் தமிழ் நூல்களை வலையில் ஏற்றி வரும் மதுரைத் திட்டம் இம்மாநாட்டின்போது தமிழிலிருக்கும் புலம்பெயர் இலக்கியத்தினை வெளியிடுவதை வலியுறுத்துவது என்ற முடிவை எடுத்தது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இன்று உலகின் பல்வேறு மூலைகளிலும் இடம்பெயர்ந்து குடியமர்ந்து தங்கள் தனிப்பட்ட அடையாளங்களையும் இலட்சியங்களையும் உருவாக் கிக் கொண்டிருப்பதால், அவர்தம் எழுத்துகள் தமிழிலக்கியத்தின் தன்மைகளை அளவிலும் ஆழத்தி லும் விரிவுபடுத்தியிருக்கின்றன. இவற்றில் ஒரு பகுதியையேனும் தன்னகத்தே கொண்டுவர புதிய செயலாக்கத் திட்டங்கள் மூலம் மதுரைத் திட்டம் முயலும். இந்த முயற்சியின் முதல் கட்டமாக, சிங்கை, மலேசிய, ஐரோப்பியத் தமிழர்களின் இலக்கியங்கள் மதுரைத் திட்டத்தில் சேர்ககப்படும்.

தமிழ் மரபு அறக்கட்டளை

தமிழ் பண்பாடு, மரபு சார்ந்த ஆவணங்கள், தடயங்கள் போன்றவற்றை மின்மயமாக்குதல் பற்றிய திட்டம் மலேசியாவில் நடைபெற்ற தஇ-2001 மாநாட்டின்போது முதன் முதலாக பொதுமக்கள் முன்வைக்கப் பட்டது. அப்போது, மலேசியப் பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு அளித்த $10,000 ஊக்கத்தொகையின் மூலம் விதைக்கப்பட்ட தமிழ் மரபு அறக்கட்டளை இன்று பலரும் பாராட்டிக் கொண்டாடும் அளவுக்குப் போதுமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. ஜெர்மனியின் முனைவர் கண்ணனின் தலைமை யிலான இவ்வறக்கட்டளை கலி·போர்னியா மாநாட்டில் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப் பட்டது. கடந்த ஓராண்டுக்குள்ளாகவே இந்த நிறுவனம் அறிஞர்கள் மட்டுமன்றி சாதாரண மக்களைக்கூடக் கவரத்தக்க வகையில் பல அரிய பொருட்களைச் சேர்த்திருக்கிறது.

சமூக மையம்

குழந்தைகளிலிருந்து இளைஞர்கள், முதியோர் வரை பலதரப்பட்ட வயதினர்க்கும் தகுந்த வகையில் இணையத்தை அறிமுகப்படுத்தும் மையமாய் இம்மாநாட்டின் சமூக மையம் திகழ்ந்தது.

பன்னாட்டு வலைத்தளப் போட்டி

மாநாட்டுக்கு முன்னதாக தஇ-2002ன் அமெரிக்க அமைப்பாளர்கள் தமிழில் இணையப் பக்கங்களை அமைப்பதற்கான பன்னாட்டுப் போட்டியை அறிவித்து, தக்க ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். இரண்டு மாதங்களாய் நடந்துவந்த இப்போட்டியில் நான்கு நாடுகளிலிருந்து 40 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியானது தமிழ்ச் சிறார் களிடையே அவர்தம் தாய்மொழி பத்தாம் பசலித் தனமானது அன்று என்றவொரு விழிப்புணர்ச் சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளின் தமிழ்ச் சமூகங்களுக்கிடையே ஓரு தோழமை உணர்வையும் ஏற்படுத்தியது. உள்நாட்டுக் குழந்தைகளுக்கான போட்டிகள் இருநாட்கள் நடந்தன. போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு பர்க்கெலி பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் வழங்கப் பட்டது. வலைத்தளப் போட்டியின் முதல் பரிசாக கடம் & கடம் நகைக்கடை வழங்கிய $600 பெறுமான வைரமோதிரம் வழங்கப் பட்டது.

தமிழ்த் தகவல் தொழில்நுட்ப இளையர் அணி

மேற்குறிப்பிட்ட போட்டியின் அனுபவ வாயிலாக, அதைவிடப் பன்மடங்கு பெரிய இன்னொரு திட்டம் இம்மாநாட்டில் உருப்பெற்றது. மொழியையும், தொழில்நுட்பத்தையும், சமூக மேம்பாட்டையும் ஒருங்கிணைத்து, வளமுற்றோர்க்கும் வளமற்றோர்க் கும் இடையே காணப்படும் எண்ணியப் பிளவின் மீதான பாலம் அமைக்கும் ஓர் உலகளாவிய திட்டமாக இது அமையும்.

“தமிழ்த் தகவல் தொழில்நுட்ப இளையர் அணி” என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டமானது உலகெங்கிலும் இருக்கும் தமிழ் இளையோர்களை ஒன்று சேர்க்கும். தமிழர்களிடையே உள்ள பின்தங்கிய சமூகங்களின் மேம்பாட்டுக்காகத் தமிழ் மொழியி லான தகவல் தொழில்நுட்பத் திட்டநிரல்களை அவர்கள் மூலம் உருவாக்கும். இக்குழுவின் பன்னாட்டு உறுப்பினர்கள் தம்மிடமே உள்ள தொழில்நுட்ப, வர்த்தக, மொழித் திறமைகளை ஒன்று திரட்டி இச்சமூகத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவார்கள். இம்மாநாடு நடந்து முடிந்த சில மாதங்களில் இவ்வமைப்பு தொடங்கி வைக்கப்படும். இத்திட்டத்தின் முதல் திட்டநிரல் அடுத்த தமிழ் இணைய மாநாட்டுக்குமுன் (தஇ-2003) ஈடேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சி மையம்

கண்காட்சி மையத்தில் தமிழ் மென்கலங்களும் அவற்றோடு தொடர்புள்ள பல பொருட்களும் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. கண்காட்சி மூன்று நாட்களில் ஏறக்குறைய 2000 பார்வையாளர்களை ஈர்த்திழுத்தது. அமெரிக்காவிலும் பிறநாடுகளிலும் இருக்கும் பொருளாதாரச் சரிவு நிலையும், குறிப்பாய்த் தகவல் தொழில்நுட்பத் துறையில் காணப்படும் மந்தநிலையும் கண்காட்சியில் வணிக நிறுவனங்கள் பங்கேற்பதைக் கணிசமாகப் பாதித்தன. இருப்பினும், அமெரிக்கத் தமிழர்கள் இதுபோன்று தமிழ்வழியிலான பலதரப்பட்ட மென்கலங்களை இந்த அளவிற்குப் பார்வையிடுவது இதுவே முதல் முறை. தமிழ்மொழி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை அமெரிக்கத் தமிழர்கள் உணர்ந்து கொள்வதற்கு இது ஓர் அரிய வாய்ப்பை அளித்த இந்தக் கண்காட்சி பெரும் வெற்றி அடைந்தது என மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் கருதுகிறார்கள். தமிழ் இணையப் பல்கலைக் கழகம், ஐ-டியூட்டர், தமிழ் மரபு அறக்கட்டளை, தென்றல் திங்கள் இதழ், கலி·போர்னியா தமிழ்க் கழகம், விரிகுடாப் பகுதித் தமிழ் மன்றம், டீடோர் ஆகியவை கண்காட்சியில் பங்கேற்ற முக்கிய அமைப்புகளில் குறிப்பிடத் தக்கவை. தமிழ் மின்னகராதிகள், கணினி விளையாட்டுக்கள், தமிழினால் ஆன இடைமுகங்கள், கல்விக்கான பல்லூடக மென்கலங்கள் போன்ற பல புத்தம்புது தயாரிப்புகளும் இக்கண்காட்சியில் அறிமுகப்படுத்தப் பட்டன.

பல நாடுகளிலிருந்து வந்திருந்த பேராளர்களும் உள்ளூர்த் தமிழர்களும் இந்த அமைப்புகள் வழங்கிய பொருட்களை வாங்கி ஆதரித்தனர். அமெரிக்கத் தமிழர்கள் சிக்கனத்துக்குப் பெயர் பெற்றவர்கள் என்றாலும், நல்ல பொருட்களை வாங்கத் தயங்காதவர்கள் என்று இந்த மாநாட்டுக்கு வந்திருந்த தமிழ் ஆர்வலர்கள் காட்டினார்கள். தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் ஜெர்மனியின் முனைவர் கண்ணன் விரிகுடாத் தமிழ் மக்கள் தமிழ் மரபு குறுந்தட்டுகளை வாங்கக் காட்டிய ஆர்வத்தைப் பார்த்துத் திகைத்து விட்டார். அவரது முதல் குறுந்தட்டுகள் விற்றுப் போனதால், அவசரமாக அவற்றைப் பிரதியெடுக்க நேரிட்டது. அந்தப் பணியில் அவருக்கு உதவி செய்தவர் பர்க்கெலி பேராசிரியரும், தலைமை விருந்தினருமான பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள்! மாநாட்டுக் கருத்தரங்குகளில் மும்முரமாகப் பங்கேற்றிருந்த முனைவர் கண்ணனின் தமிழ் மரபு அறக்கட்டளைக் கடையைப் பார்த்துக் கொண்டு நன்கு விற்பனை செய்தவர்கள் விரிகுடா வாழ்த் தமிழ் மக்கள். அவர்களை “மரபு அணில்கள்” என்று சிறப்பித்துப் பாராட்டினார் முனைவர் கண்ணன்.

அமெரிக்க-இந்திய-உத்தம பள்ளிக் கல்வி கூட்டு முயற்சி

அமெரிக்க வணிக சமூகத்தின் ஆதரவில் ஒரு குறிப்பிடத்தக்க தொடக்க முயற்சியாக இத்திட்டம் இந்த மாநாட்டில் தலையெடுத்திருக்கிறது. உத்தமத்தின் வாயிலாக, அமெரிக்க இந்திய அறக்கட்டளையும் தமிழ் நாடு அறக்கட்டளையும் மேற்கொள்ளும் இந்தக் கூட்டு முயற்சித் திட்டம், பள்ளிக் கல்வி தொடக்கமுயற்சிகளை விரிவு படுத்துவதன் மூலம் தமிழகத்தின் பிற்படுத்தப் பட்ட பிரிவுகளின் தேவைகளை நிறைவேற்றும். தஇ-2002ல் விவாதிக்கப் பட்ட தொழில்நுட்பம், பள்ளிக் கல்வி மீதான கருத்துக்கள் இத்தொடக்க முயற்சியில் ஒருங்கிணைக்கப்படும்.

கலைநிகழ்ச்சிகள்

மாநாட்டை ஒட்டி நடந்த கலைநிகழ்ச்சிகள் வெளிநாட்டுப் பேராளர்களை வெகுவும் கவர்ந்தன. சனி இரவன்று ஒரு தமிழ்ப் புத்தக வெளியீட்டு விழாவோடு நிகழ்ச்சி துவங்கியது. சிங்கை கிருஷ்ணன் அவர்களின் “அருளாட்சி அழைக்கிறது” என்ற நூலை பர்க்கெலியின் கௌசல்யா ஹார்ட் அவர்கள் வெளியிட்டார்கள். பின்னர், ஜனனி நாராயணன், ஸ்ரீலதா சுரேஷ் ஆகியோரின் நாட்டிய நிகழ்ச்சி விரிகுடாப் பகுதிக் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்தியது. நேரம் கடந்து கொண்டிருந்தாலும், பலரும் அமர்ந்து ரசித்த நிகழ்ச்சி ராகவன் மணியன் குழுவினரின் தமிழிசை விருந்து. பாரதியார், பாரதிதாசன் பாடல்களை உணர்வோடு இசைத்துக் கேட்போரைப் பரவசப் படுத்தினார்கள். விரிகுடாப் பகுதியில் இவ்வளவு கலைத் திறமையா என எல்லோரையும் வியக்க வைத்தனர் இந்தக் கலைஞர்கள்.

மாநாடு எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக வெற்றியடைந்தது என்றாலும், 100,000 தமிழர்கள் உள்ள அமெரிக்காவிலும், 25,000 தமிழர்கள் வாழும் சான் ·பிரான்சிஸ்கோ பகுதியிலும் மேலும் பலர் பங்கேற்றுப் பல அரிய சாதனைகள் படைத்திருக் கலாம். முதல் பன்னாட்டு வலைத்தளப் போட்டியில் வட அமெரிக்கச் சிறுவர்களின் பங்கேற்பு மிகக் குறைவு என்பதும், சிலிக்கன் பள்ளத்தாக்கின் வல்லுநர்கள் பங்கேற்பு உலகம் எதிர்பார்த்ததை விடக் குறைவே என்பதும் குறைகள் தாம். இருந்தாலும், அமெரிக்கத் தமிழர்களின் முதிர்ச்சிக்கு ஓர் அளவுகோலாக அக்டோபர் 18 தினமணி ஆசிரியர்க்குக் கடிதங்கள் பகுதியில் அரூர் ஸ்ரீ. மதிவாணன் எழுதியதைக் கொள்ளுவோமா?

“தமிழ் பிறந்து, சங்கங்கள் வளர்த்த இத்தமிழ் மண், இன்று ஆங்கில மயமாக்கலில் விரும்பியோ விரும்பாமலோ வேலை தேடலின் பயன்பாட்டுக் காகவோ தமிழை உயர்த்துவதில் ஆளவந்தார் களுக்கு அக்கறை இல்லாததனாலோ - மூழ்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆங்கில நாடாம் அமெரிக்காவின் அடிமடியில் அமர்ந்து - ஆர்வம், அறிவு, தொழில்நுட்பம், நல்லுழைப்பு ஆகிய உரங்களையிட்டுத் தமிழ்ப் பயிர் வளர்க்கும் அமெரிக்கத் தமிழ் இதயங்களே, உங்களுக்கு வணக்கம் தெரிவிக்காவிடில் நான் தமிழனல்லன்!”
Share: 




© Copyright 2020 Tamilonline