மார்கழி இசை விழா
|
|
|
தமிழர்களின் மிக முக்கியமான உன்னத விழா பொங்கல் விழா; மாட்டுப் பொங்கல்.
'மாட்டுப் பொங்கல்' நாளில் தங்கள் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணமிட்டு தங்களது 'இறைவனாகவே' எண்ணி வழிபாடு செய்துவருவது இன்றும் தொடரும் தமிழர் பண்பாடு.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களது வாழ்க்கையில் மாடும்,கால்நடைகளும் முக்கியப் பங்களித்தன. அன்றைய தமிழர்களது காதலுக்கும், வீரத்துக்கும் ஓர் 'அடையாளக் குறியீடாக' 'மாடு' பிடித்தல் எனும் 'ஏறுதழுவலை' நடத்தினர்.இன்றளவும் தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வில் 'ஜல்லிக்கட்டு' என்றும் 'மஞ்சுவிரட்டு' என்றும் 'மாடு பிடித்தல்' என்றும் தொடர்கிறது.
அன்றைய தமிழர்கள் நடத்திய 'ஏறுதழுவல்' விளையாட்டில் மாட்டை அடக்குகிற வீரனுக்கு தனது பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். பெண்கள் - ஏறுதழுவலுக்காகவே மாடுகளை - எருதுகளை வளர்த்ததை சிலப்பதிகாரம் (ஆய்ச்சியர் குரவை) அழகுபடத் தெரிவிக்கிறது. இன்றைய 'மாடு பிடித்தலில்' அத்தகைய நிகழ்வுகள் இல்லை. ஆயினும் 'மாடுகளை' அடக்குதல் எனும் பழந்தமிழர் விளையாட்டின் 'எச்சம்' இன்னமும் நிற்கிறது.
இன்று மாடுகளின் கொம்புகளில் - கழுத்தில் பரிசுப் பொருள்களை மட்டும் கட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
மதுரை 'அலங்கா நல்லூர்' ஜல்லிக்கட்டு விளையாட்டு மிகவும் புகழ்வாய்ந்தது. அதே போல் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் விமரிசையாக ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றதாயினும் பொதுவாக அனைத்து கிராமங்களிலும் ''மாடு பிடித்தல்” எனும் விழா நடைபெற்று வருகிறது.
'ஜல்லிக் கட்டு' பெயர்க் காரணம்
ஜல்லி என்று கூறப்படும் வளையம், பெரும்பாலும் புளிய வாரினால் செய்யப்பட்டது. புளிய நாரை முறுக்கி வளைத்து, அதைப் பல நிறச் சாயங்களிலே நனைத்து காய வைப்பார்கள். பிறகு அதில் தேங்காய் மூடி, பழம், பவுன் அல்லது வெள்ளி நாணயம், மோதிரம் முதலியவற்றைக் கோத்து காளையின் கழுத்திலே கட்டிவிடுவர். - (தமிழ் வளர்ச்சிக் கழகக் கலைக் களஞ்சியம்)
மேலை நாடுகளில் ஜல்லிக்கட்டு
ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல், நவம்பர் மாதங்களில 'காளைப் போர்' நடைபெறும். பண்டைய கிரேக்கம், போர்ச்சுகல், மெக்சிக்கோ ஆகிய நாடுகளிலும் 'காளைப் போர்' நடைபெறும்.
நமது 'ஜல்லிக்கட்டு' விளையாட்டுக்கும், மேலை நாட்டு காளைப் போருக்குமான முக்கிய வேறுபாடு என்னவெனில், அந் நாடுகளில் காளைப் போர் முடிந்தவுடன் காளைகளை கொன்றுவிடுவர். அந் நாடுகளில் 'காளைப் போர்' வீர விளையாட்டாக மட்டுமே கருதப்படுகிறது.
மா.ச. மதிவாணன்
*****
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
வெளிநாட்டுப் பயணிகளை பிரமிக்க வைக்கும் விஷயங்களில் அலங்காநல்லூர் 'ஜல்லிக்கட்டும்' ஒன்று.
நூற்றுக்கணக்கான காளைகளும் ஆயிரக்கணக்கான மக்களும் கூடியிருக்க, ஓடி வரும் காளைகளை, காளை பிடிப்பவர்கள் அடக்குவதும், காளையிடம் குத்துப்படுவதும், மிதிபடுவதும் சிலர் சாவதுமான விளையாட்டை நேரில் பரண் மேல் அமர்ந்து கொண்டு பார்ப்பது மயிற்கூச்செரியும் விஷயம் .
இந்த விளையாட்டை வெளிநாட்டுப் பயணிகள் கண்டு களிப்பதற்காக சுற்றுலாத் துறையினர் சிறப்பான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இலவசமாக வாகனங்கள் ஏற்பாடு செய்து வெளிநாட்டுப் பயணிகளை மதுரையை சுற்றியிருக்கிற கிராமங்களுக்குக் அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு கிராம மக்களால் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அதன் பின் சிலம்பம், கரகம், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வெளிநாட்டுப் பயணிகளையும் கிராம விளையாட்டுகளில் பங்கெடுக்க வைக்கிறார்கள்.
பின் அங்கிருந்து ஜல்லிக்கட்டு காண அலங்காநல்லூருக்குக் கூட்டிச் செல்கிறார்கள். காலை பதினொரு மணிக்கு ஆரம்பித்து மாலை ஆறு மணிவரை ஆண்டுதோறும் பரபரப்பாய் நடக்கிறது அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு.
பிரபாகர்
***** |
|
ஜல்லிக்கட்டும் எருதுகட்டும்
மாடுகளை வைத்து விளையாடும் விளையாட்டுகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஜல்லிக் கட்டு, மற்றொன்று எருதுக் கட்டு.
ஜல்லிக் கட்டு நிறைய பேர் அறிந்ததே. பெருந் தலைவர்கள் வரும்போது மக்கள் வழியில் வந்து விடக் கூடாது என்பதற்காக சாலையின் இரு புறங்களிலும் சவுக்கு மரத்தால் வேலி கட்டியிருப்பார்கள். அது போல தெருவில் இருபுறத்திலும் கட்டியிருப்பார்கள். மாடு ஜனங்கள் மீது பாய்ந்து விடக் கூடாது என்பதற்காக. வேலிக்கு இந்தப் புறமும், அந்தப் புறமும் மைல் கணக்கில் ஜனக் கூட்டம் நிற்கும். மையத்தில் தான் மாடு வரும்.
இதற்கென்று வளர்க்கப் படும் மாடுகளின் கொம்பில் நன்கு எண்ணெய் தடவியிருப்பார்கள். (யாரும் கொம்பைப் பிடித்தால் வழுக்கி விடுவதற்காக) மாட்டின் கழுத்தில் பணமுடிப்பு இருக்கும். சிலர் தங்கம் கூட வைத்திருப்பார்கள். வாடி வாசல் அருகே வந்ததும் மூக்கணாங் கயிற்றை அவிழ்த்துவிட்டு மாட்டின் அடி வயிற்றில் தார்க் குச்சியால் பளிச் பளிச் சென்று இரண்டு குத்துக் குத்தி (மாட்டை கோபப்படுத்துவதற்காக) அனுப்பி விடுவார்கள்.
கோபத்துடன் பாய்ந்து வரும் மாட்டை அடக்க படாத பாடு பட வேண்டியிருக்கும். ஒருவழியாக மாட்டை அடக்கியதும் விதிகளுக்குட்பட்ட ஜல்லிக்கட்டு முடிந்துவிடும். உடனே, மாடு வேறு யார்மீதும் பாய்ந்துவிடாமல் இருக்க, பத்துப் பன்னிரென்டு பேர் ஒன்று சேர்ந்து மாட்டின் மேல் விழுந்து இரண்டு பேர் கொம்பைப் பிடித்துக் கொள்ள, ஒருவர் வாலைப் பிடித்து பின்னால் இழுக்க மற்றவர்கள் மாட்டின் திமிலைப் பிடித்து நெரிக்க - ஆனாலும் மாடு அடங்கி விடாது, சுழன்று கொண்டே -ருக்கும். அந் நேரத்தில் ஒருவன் மாட்டின் வாலைத் தூக்கி ஆசனவாய்க்குள் பளிச்சென்று கையைத் திணித்துவிடுவான். முழங்கை செல்லும்வரை மாட்டிற்குத் தனக்குள் என்ன நிகழ்கிறது என்று புரியாது. ஏதோ எக்குத் தப்பாய் நடக்கிறது என்று நினைத்து வெருண்டு படுத்து விடும்.
பெரும்பாலான மாடுகள் இந்த சூத்திரத்திற்குள் அடங்கிவிடும். இது தவறும் போது தான் சிலர் குத்துப் படுவது.
எருதுக் கட்டு கொஞ்சம் வேறு மாதிரியானது. ரோமில் காளைப் போர் நடக்கிறதே அங்கு இருப்பது போல் இங்கும் மைதானம் வட்டமாக இருக்கும். சுற்றீலும் மாட்டு வண்டிகளை வட்டமாக நிறுத்தி வைத்திருப்பார்கள். வண்டியின் மீது ஆளுக (ஆட்கள்) ஏறி இருந்து (அமர்ந்து) பார்ப்பார்கள். அப்போது வண்டி குடை சாய்ந்து விடாமல் இருக்க பாரம் வைத்து சமன் செய்து இருப்பார்கள்.
இந்த வட்ட மைதானத்தில் எருதுகள் மைதானத்துக்கு வர ஒரு பாதை மட்டும் வைத்திருப்பார்கள். மற்றபடி இது ரொம்ப பாதுகாப்பானது. ரோமில் நடத்துற காளைப் போர் கொடூரமானது. அங்கு மாட்டை ஈட்டியால் குத்தி சித்ரவதை பண்ணுகிறான். நம்ம பக்கத்தில் அப்படி இல்லை.
எருதுக்கு மூக்கணாங் கயிறை அவிழ்த்து விடுவார்கள். ஆனால் கழுத்தில் கனமான வடக் கயிற்றைக் கட்டி பதினைந்தடி தூரத்தில் நான்கைந்து பேர் பிடித்துக் கொள்வார்கள். மாடு வெருண்டு வேடிக்கைப் பார்க்கும் ஆட்கள் மீது பாய்ந்துவிடக் கூடாது என்பதற்காக, எருதைக் கூட்டிக் கொண்டு மைதான மையத்திற்குக் கொண்டு வருவார்கள்.
மைதானத்தில் அந்த வடம் போன்ற கயிறை பிடித்தபடியேதான் இருப்பார்கள். எருது எந்தப் பக்கம் பாய்கிறதோ அதற்கு எதிர் திசையில் இவர்கள் செல்வார்கள்.இதனால் மாட்டை எப்பவும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கமுடியும். எல்லை மீறும்போது வடத்தை இழுத்து எருதைக் கட்டுப் படுத்திவிடுவார்கள்.
இந்த விளையாட்டில் எத்தனை பேர் வேண்டுமானாலும் எருதை அடக்கலாம். ஆனால் யாரையும் எருது நெருங்க விடாது. அப்படி இப்படிப் போக்குக் காட்டி மாட்டின் பின்புறமாய் கூடி பிடித்துக் கொள்வார்கள். மாடு சுழன்று கொண்டே இருக்கும். இதற்கும் ஆசன வாய்க்குள் கைவிடும் வைத்தியம் தான். ஏதோ எக்குத் தப்பாய் நிகழ்ந்து விட்டது என்று மாடு திகைத்துப் போய் உட்கார கொம்பில் கட்டப்பட்டிருக்கும் தங்கத்தை அவிழ்த்து விடுவார்கள்.
(பேசிக் கொண்டிருக்கும் போது கி.ரா. சென்னதின் மனப்பதிவு) |
|
|
More
மார்கழி இசை விழா
|
|
|
|
|
|
|