|
அரசி நகரில் கோடைவிழா |
|
- பழமைபேசி|அக்டோபர் 2010| |
|
|
|
|
|
அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் ஒன்றான வடகரோலைனா, அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி, அமெரிக்கத் தலைநகருக்குத் தெற்கில் உள்ள ஒரு கரையோர மாகாணம். இம்மாகாணத்தின் பெரிய நகரம், சார்லட் அரசியாரின் பெயரைக் கொண்டுள்ளதால் அரசி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. பத்து ஆண்டுகளாகச் சார்லட்டின் மக்கள்தொகை வெகுவாகப் பெருகிக் கொண்டே வருகிறது. இது கிட்டத்தட்ட பதினேழு இலட்சம் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. 2000ஆம் ஆண்டின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 32 விழுக்காடு பெருகியுள்ளது.
உள்ளூர்ப் பொருளாதாரமே இந்த வளர்ச்சிக்குக் காரணம். நியூயார்க் மற்றும் மிச்சிகன் மாகாண மக்கள் வெகுவாக இந்நகருக்கு வந்து குடியேறுகிறார்கள். இடம்பெயர்ந்து வரும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. அரசி நகரின் பொருளாதார ஏற்றம், தமிழர்களையும் தன்பால் ஈர்க்கிறது. பெரும்பாலான தமிழர்கள், தெற்கு சார்லட்டிலும் பல்கலைக் கழகத்தை ஒட்டியுள்ள வடசார்லட்டிலுமே வசிக்கிறார்கள். ஆங்காங்கே, குழுக்களாக இருந்து தமிழ் வகுப்புகளை நடத்தி வந்த தமிழர்கள், சங்கம் அமைத்து ஒருங்கிணைந்து நடத்திய எழுச்சி விழாதான், இவ்வருடத்திய சார்லட் நகரத் தமிழர் கோடைவிழா. சார்லட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ரீடி கிரீக் பூங்காவில் நடைபெற்றது. இதயச்சந்திரன், சுகுமார் ஆகியோர் சங்கத்தின் வந்தோரை வரவேற்றனர்.
துவக்க நிகழ்ச்சியாகச் சிறார்களுக்கான விளையாட்டுகள் நடைபெற்றன. சற்று நேரத்தில் சிறப்பு விருந்தினர்களாகத் தென்கரோலைனா மாகாணம் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தினர் வந்தனர். அவர்களை சங்கத் தலைவர் செந்தாமரை பிரபாகரன், பதிவர் பழமைபேசி ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். அருகிலிருந்த புல்வெளிக்குப் பறையொலியுடன் மக்கள் நடந்து சென்றது கவனத்தை ஈர்த்தது. அதனையொட்டி, சிலம்பாட்டம் மற்றும் பறையாட்டம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்த பனைநிலம் தமிழ்ச் சங்கத்தினரை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் உள்ளூர் ஆர்வலர் என்கிற முறையில் பழமைபேசி சிறப்பித்தார். பின்னர், திருக்குறள் ஓதுதல், நாம் தமிழர் என்னும் பெருமுழக்கம் ஆகியன நடைபெற்றன. |
|
|
தொடர்ந்து, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் துணைத் தலைவரும், பேரவையின் 2011ஆம் ஆண்டுத் தமிழ்ர் விழாவின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் தண்டபாணி குப்புசாமி சிறப்புரை ஆற்றினார். மற்றொரு கரையோர நகரமான சார்ல்ஸ்டனில் நடைபெறவிருக்கும் இந்த விழாவுக்கு அழைப்பு விடுத்து, வரவேற்றுப் பேசினார். அடுத்துப் பேசிய பழமைபேசி, பேரவையின் காலாண்டு இதழான ‘அருவி’க்குப் பங்களிப்புச் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
மதியம் ஒரு மணிக்குப் பிறகு, சார்லட் நகரில் பல ஆண்டுகளாக வாழும் லலிதா ஜெயராம் சார்லட் நகர தமிழ்ச் சங்கம் மற்றும் நிர்வாகிகளைச் சிலாகித்துப் பேசினார். தொடர்ந்து, தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தாமரை பிரபாகர் தலைமை உரையில், அமெரிக்கா தழுவிய தமிழ்நீரோட்டத்தில் பங்குகொண்டு பணி செய்யும் களமாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சங்கத்தின் துணைத்தலைவர் எழிலரசன், சார்லட்டில் அமையவுள்ள தமிழ்ப் பள்ளிக்கான தேவையை வலியுறுத்தினார். பின்னர் பேசிய பொருளாளர் இதயச்சந்திரன் சங்கத்திற்கான பங்களிப்பின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.
செயலாளர் இலக்குவன் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சி மற்றும் நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். அடுத்த நிகழ்வான தமிழர் திருவிழாவின் கலைநிகழ்ச்சிகள் தமிழ்ப் பண்பாடு சார்ந்தவையாக நடத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கினார் சங்கக் கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் மீனா. சைகைப் போட்டி, பிட்டுக்குப் பாட்டு, இதர விளையாட்டுகள் பின்னர் நடைபெற்றன. கோடைக் கொண்டாட்டம் மாலையில் நிறைவெய்தியது.
பழமைபேசி, சார்லட், வடகரோலைனா |
|
|
|
|
|
|
|