|
Appusami.com |
|
- |ஆகஸ்டு 2002| |
|
|
|
பிரபல எழுத்தாளர் சுஜாதா 'நகைச்சுவையுடன் விடாப்பிடியாக இப்போது எழுதி வருபவர் பாக்கியம் ராமசாமிதான்` என்று 'இந்தியா டுடே'யில் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதைப் படித்ததும் நகைச்சுவையை விட்டுத் தொலைக்காமல் அனாவசியமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது.
விட்டொழிக்கலாம் என்று பார்த்தால் 'விட் டொழிக்க' என்னும் வார்த்தையிலேயே 'விட்' ஒட்டிக் கொண்டிருக்கிறது.
ஆகவே இந்த நகைச்சுவை சமாசாரத்தை விட்டொழிக்க சாத்தியமில்ல என்று தெரிந்தது. குண்டு வெடிப்பும், திருட்டும், கொலையும், கலவரமும், சாமியார்களில் லீலைகளும், அரசியல் வாதிகளின் அசிங்கங்களும், விலைவாசி உயர்வு களும், ஊழல்களும் செய்திப் பத்திரிகைகளை தொண்ணூறு சதவீதம் ஆக்ரமித்துக் கொண்டுள்ளன.
ஆகவே - மன்ஷன்! மன்ஷன்! மன்ஷன்!
ஒரே டென்ஷன்! டென்ஷன்! டென்ஷன்!
டென்ஷனைப் போக்க வேண்டுமானால் நகைச் சுவை நிறைய பரவ வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாகியுள்ளதே www.appusami.com
'நகை ஈகை இன்சொல் இகழாமை - நான்கும் வகையென்ப வாழும் குடிக்கு' என்று திருவள்ளுவரும் நகைக்கு முன்னிடம் தந்துள்ளார்.
இந்தச் சிரிப்பு வலையில் வந்து சிக்கிக் கொண்டு உங்கள் கவலையை வி(ர)ட்டோ.. வி(ர)ட்டென்று விரட்டி அடியுங்கள்.
அன்புடன் பாக்கியம் ராமசாமி
என்று தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் அப்புசாமி.காமில், இருபது ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகைகளில் லூட்டி அடித்த அப்புசாமியும் சீதே கெய்வியும் மறுபடியும் தொடர்ந்து தங்கள் லூட்டியை வலையேற்றுகிறார்கள்.
அப்புசாமி படம் எடுத்ததையும், மெரினா பீச்சில் மிளகாய் பச்சி போட்டு சீதே கெய்வியின் ப்ரிஷ்டிஜிற்கு உலைவைப்பதையும் அவ்வளவு சீக்கிரத்தில் சென்ற தலைமுறை வாராந்திர வாசிகள் மறந்திருக்க மாட்டார்கள்.
அப்புசாமி கதைகள் தவிர, ஆன்மீகம், சினிமா, கட்டுரை, மருத்துவம், ஜோக்ஸ், செய்திகள் அப்புசாமி பதில்கள் போன்ற பகுதிகளும் அப்புசாமி.காமில் இடம் பெறுகின்றன. இதுவரை 65 இதழ்கள் வலையேறியுள்ளன.
அப்புசாமி.காமில் இருந்து ஒரு பகுதி
சுண்டக்காய் சித்தர் அப்புசாமி
சுண்டைக்காய் மலையின் கருகும் இருட்டில் ஒவ்வொரு பாறையும் கல்லும் மர்மதேசமாகவும் தந்திரபூமியாகவும் மிரட்டியது.
கல் விளக்கில் எரிந்து கொண்டிருந்த காடாத்திரியின் உஷ்ணம் தகித்தது. பாவத்துக்கு அஞ்சாத சில பக்தர்கள் எண்ணெய்த் தூக்கில் பஜ்ஜி சுட்ட எண்ணெயை ஊற்றி விட்டதால் அந்தக் கலப்படம் வேறு கமறியது.
எல்லாவற்றையும் மிஞ்சிக்கொண்டு எண்ணெய்த் தூக்கு சாமியின் பயங்கரக் குறட்டை.
அப்புசாமியும் குறட்டையில் சளைத்தவரல்ல. 'ஒண்டிக்கு ஒண்டி பார்த்து விடலாம்' என்று எசப்பாட்டு எழுப்பக் கூடியவர்தான். ஆனால் தூக்கம் வந்தால்தானே குறட்டை விட்டு எதிரியை முறியடிக்கலாம்?
கொசுவுக்குப் போட்டியாக அப்புசாமியைச் சிந்தனைகள் மொய்த்தன.
'சே! எந்த சாமிக்கு மகிமை இருந்தாலென்ன, இல்லாவிட்டால் என்ன? |
|
அந்தந்த சாமி அது அதன் சக்தியை நிரூபிச்சிக்க முடியாதா என்ன? நாம போய் அதுகளை எல்.கே.ஜி., யு.கே.ஜிக்குச் சேர்க்கக் கஷ்டப்படணுமா? எல்லாரையும் கெஞ்சணுமா? வந்து கும்புடுங்கோ கும்புடுங்கோன்னு வெளிச்சம் போட்டுக் காட்டணுமா? இருந்தா இருங்க. ஒழிஞ்சா ஒழிங்க. மனுசங்க எத்தனையோ பேரு இருக்கறான். சாவறான். ஆரம்பத்தில் சமாதிங்களுக்கு சுண்ணாம்பு கிண்ணாம்பு அடிச்சு பளிச்சுனு வைக்கறாங்க.
அப்புறம் நாளாக நாளாக நாதி கெடையாது - ஒரு சாதாரண விளக்குக்குக் கூட. பெரிய பெரிய பேரறிஞர்களெல்லாம் இருட்டிலே புஸ்தகத்தை வெச்சிகிட்டுப் படிக்கறாங்க.
கடவுளுங்களும் கோவிலும்கூட மனுசன் மாதிரிதான். பழசாப் போனால் ஓரம் கட்டிடுவானுங்க... இந்த சுண்டைக்கா மலை சாமி ஒரு காலத்து ஓகோவா இருந்திருக்கலாம்.
இப்ப போய் இதுக்கு மறுவாழ்வு கொடுக்கணும்னு ஏன் என் புத்திக்குத் தோணித்து? கெழவி தெனாவட்டா, 'சுண்டைக்காய் சாமியோ, வெண்டைக்காய் சாமியோ, என்கிட்டே பைசா கிடையாது'ன்னு சொல்லவும் நான் ஏன் ரோஷப்பட்டுக் கொண்டு, 'அடியே கியவி! அதே சுண்டைக்காய் மலை சாமிகிட்டே நீ வந்து கெஞ்சறாப்பலே பண்ணறேண்டி!'ன்னு ஏன் சவால் விடணும்.
ரசகுண்டுப் பயல் வேறு அப்பப் பார்த்து சுண்டைக்காய் எடுத்திட்டு வந்து என்னை உசுப்பேத்திட்டான்.
அவனுக்கென்ன, லாட்ஜுலே ரூம் போட்டுகிட்டு ஜாலியா நாஷ்டா பண்ணிகிட்டு ஜம்னு இருக்க ஈரோடு போயிட்டான் - என்னை இந்த எண்ணெய்த் தூக்கு முரட்டு சாமியார்கிட்டே ஒப்படைச்சிட்டு.
பளிச் பளிச்சென்று கீழே மலைப் பாதையில் இரண்டு வெளிச்சம் தெரிந்தது.
ஏதாவது சிறுத்தை கிறுத்தை பக்தி சிறுத்தையா கும்பிடக் கிம்பிட வருதா?
எண்ணெய்த் தூக்குச் சாமியாரை எழுப்பலாமா? எழுப்ப முடியுமா?
வந்தது ரசகுண்டு!
"என்னடா ரெண்டு டார்ச் லைட் அடிச்சிகிட்டு வர்ரே! முண்டம்! முண்டம்! சிறுத்தையோ புலியோன்னு பயந்துட்டேண்டா!"
"தாத்தா! எனக்கொரு லைட்! உங்களுக்கு ஒரு லைட்! சும்மா எடுத்துகிட்டு வருவானே, வெளிச்சம்தான் கொஞ்சம் நிறையத் தெரியட்டுமேன்னு ரெண்டையும் அடிச்சிகிட்டு வந்தேன்!" சொல்லியவாறே, ஜோல்னாப் பையிலிருந்து பொட்டலம் பொட்டலமாக வெளியே எடுத்து வைத்தான்.
"தாத்தா! நம்ம சுண்டைக்காய் சாமியும் நீங்களும் அதிர்ஷ்டம் பண்ணினவங்க! இந்தாங்க, பாசந்தி, லட்டு, ஜாங்கிரி! அதெல்லாம் சோலி படூரா, மசாலா தோசை... குஷ்பூ இட்லி!
அப்புசாமி அனைத்தையும் ஒரு பிடி பிடித்தார். "இந்தாங்க ரெண்டு சோடா பாட்டில். வயிறு கியிறு சங்கடப்பட்டா உடைச்சி ஊத்திக்குங்க... ஓப்பனரை இந்த ஆணியிலே மாட்டியிருக்கேன்."
"உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலேடா ரசம். ஆமாம், இந்த சாமிக்கு ஏதோ விடிவு காலம் வந்துட்டுதுன்னியே. அதைச் சொல்லு மின்னே! உனக்கு மட்டும் எப்படிடா ஐடியா தோணுது?"
"தாத்தா! நான் முதல் போட்டிருக்கிறவன். செலவாகிறாப் போல நாலு மடங்கு நான் எடுத்தாகணும். ருக்குமிணிக்கு தெரியாமல் அவளோட நகைங்களையெல்லாம் அமுக்கிவிட்டு மொதலாய் போட்டிருக்கேன். வந்து உங்ககிட்ட முக்கிய விஷயம் சொல்ல வந்தேன். இங்கே ஈரோட்டிலே நாளையிலிருந்து பதினாலு நாளைக்குப் பெரீய திருவிழா நடக்கப் போவுது. மாரியம்மன் திருவிழா. |
|
|
|
|
|
|
|