|
தகவல் தொழில்நுட்பச் செய்திகள் |
|
- |ஜனவரி 2001| |
|
|
|
முதல் இணைய வழி வர்த்தகக் கண்காட்சி
சென்னையைச் சேர்ந்த ஐ.பி.எப். ஆன்லைன் என்ற மின்-வர்த்தக நிறுவனம், இந்தியாவிலேயே முதன்முறையாக இணைய வழி வர்த்தகக் கண்காட்சியை (Virtual Trade Fair - VTF) டிசம்பர் 19-ம் தேதியன்று தொடங்கியுள்ளது.
இந் நிறுவனத்தின் 'இண்டஸ்ட்ரியல் புராடக்ட் ·பைண்டர்ஸ்.காம்' என்ற இணைய தளத்தில் 24 மணி நேரமும் இக் கண்காட்சியைப் பார்வையிடலாம். தமிழகத் தொழில் துறைச் செயலர் சக்திகாந்த தாஸ், இதைத் தொடங்கிவைத்தார்.
இந்த இணையத்தில் எந்தவொரு நிறுவனமும் தனக்கென விற்பனை அரங்கை நிர்மாணித்துக் கொள்ளலாம், பொருட்களைக் காட்சிப்படுத்தலாம். பார்வையாளரும் அலைந்து திரிய வேண்டிய அவசியமின்றி, உட்கார்ந்த இடத்திலிருந்தே தனது கணனியில் ஒவ்வொரு நிறுவனத்தின் அரங்குகளையும், பொருட்களையும் காணலாம்.
இந்தியத் தொழில் வர்த்தக சபைகள் ஒருங்கிணைந்த அமைப்பின் (அசோசேம்) உதவியுடன் இந்த இணைய தளத்தை ஐ.பி.எப். ஆன்லைன் தொடங்கியுள்ளது.
மின்னணு நுகர்வுச் சாதனங்களுக்கான மின்வர்த்தக இணைய தளம்
இந்தியாவில் முதன்முறையாக மின்னணு நுகர்வுச் சாதனங்களுக்கான மின்வர்த்தக இணைய தளத்தை (E-commerce Portal), சுந்தர்சன்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், டிசம்பர் 13-ம் தேதியன்று தொடங்கியுள்ளது.
'குளோபல்வொண்டர்ஸ்.காம்' எனும் இந்த இணைய தளத்தில், தொடங்கிய கட்டத்திலேயே சுமார் 600-க்கும் மேற்பட்ட சாதனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 8 தலைப்புகளில் இப் பொருள்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய மற்றும் உலக அளவில் பிரபலமான சுமார் 26 பிராண்டுப் பொருள்கள் இதில் அடங்கும்.
உலக அளவில் பல்வேறு மின்னணு நுகர்வுச் சாதனங்களின் விலை நிலவரம் எப்படி உள்ளது, தொழில்நுட்ப வேறுபாடுகள் என்னென்ன, குறிப்பிட்ட நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள் எங்கெங்கு அமைந்துள்ளன என்பதை இருந்த இடத்திலிருந்தே கணனி மூலம் ஒப்பிட்டு ஆய்ந்தறிவதற்கு இந்த இணைய தளம் வழிவகுத்துள்ளது.
இணைய தளத்தைத் தொடங்கியுள்ள சுந்தர்சன்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், மின்னணு நுகர்வுச் சாதன வர்த்தகத்தில் 20 ஆண்டுகள் அனுபவமுள்ளது. 'சேத்மா' அமைப்பின் முன்னாள் தலைவர் கே.எஸ். ராமன் மற்றும் எஸ். கிருஷ்ணன் ஆகியோரால் தொடங்கப்பட்ட நிறுவனம் இது.
'யாஹூ இந்தியா'வுடன் வெப் துனியா கூட்டு
பல்வேறு இந்திய மொழிகளில் இணைய தளம் நடத்திவரும் வெப்துனியா.காம் இந்தியா லிமிடெட் நிறுவனம், மற்றொரு இணைய தள நிறுவனமான யாஹ¥ இந்தியா உடன் கூட்டு ஏற்படுத்திக் கொண்டுள்ளது. டிசம்பர் 14-ம் தேதியன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இக்கூட்டின் மூலம் யாஹூ இந்தியா தளத்தை நாடும் வலையர்கள் (netizens), இனி இந்தியாவின் 10 பிராந்திய மொழிகளில் தமது வாழ்த்து அட்டைகளை அனுப்ப இயலும். தமிழ், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அஸாமி, வங்காளம் மற்றும் பஞ்சாபி ஆகிய மொழியினர் இதனால் பயன் பெறலாம்.
விழாக்காலங்கள் மற்றும் பொதுவான நிகழ்ச்சிகள் ஆகிய இரு வகைத் தேவைகளுக்குமான வாழ்த்து அட்டைகள் அவை. |
|
ராய்ட்டர்ஸ் உடன் ஸ்டாக்மார்க்கிட்.காம் கூட்டு
அபீஜே சுரேந்திரா குழுமத்தின் ஸ்டாக்மார்க்கிட்.காம் (stockmarkit.com) இணைய தளம், ஆசியாவில் இணைய வழி பங்கு வர்த்தக (online stock trading) சேவையைத் தொடங்கிய முன்னணி தளங்களில் ஒன்று.
இச்சேவையை மேலும் சிறப்பாக அளிப்பதற்காக இக் குழுமம், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மற்றும் ரைட்சாய்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் சமீபத்தில் கூட்டு ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
இணைய வழிப் பங்கு வர்த்தகத்துக்கு உதவும் ராய்ட்டர் எலெக்ட்ரானிக் புரோக்கர் (REB) எனப்படும் முன்வரைச் சேவை (frontend solution) மென்பொருள் நுட்பத்தை ராய்ட்டர்ஸ் நிறுவனம் அளிக்கவுள்ளது. 'ஆர்ஈபி' நுட்பத்தைப் பயன்படுத்தும் பங்குத் தரகர்கள், இணைய வழியில் தமது பங்கு வர்த்தகத்தைப் பூர்த்தி செய்யவும் அதில் உள்ள இடர்களை மிகச் சிக்கனமான முறையில் கட்டுப்படுத்தவும் உதவும் எம்டெக்ஸ் (MTEX) என்ற பின்வரைச் சேவையை (backend solution) ரைட்சாய்ஸ் நிறுவனம் அளிக்கும்.
இவை இரண்டின் இணைந்த சேவை மூலம், ஸ்டாக்மார்க்கிட்.காம் தளத்தின் 'ஆன்லைன் டிரேடிங்' மேம்படும் என்று அபீஜே குழுமம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஆன்லைன் டிரேடிங் சேவை தவிர, பங்குச் சந்தையில் பங்குகளின் விலை நிலவரம், இதர முக்கியத் தகவல்கள் மற்றும் செய்திகளையும் ஸ்டாக்மார்க்கிட்.காம் வாடிக்கையாளர்களுக்கு ராய்ட்டர்ஸ் அளிக்கவுள்ளது.
ஸ்டாக்மார்க்கிட்.காம் தளத்தில் தற்போது பதிவு பெற்ற சுமார் 1,500 வாடிக்கையாளர்கள் இணைய வழி பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற அத் தளத்தின் இயக்குநர் எஸ். ராய் தெரிவித்துள்ளார். தற்போது தினசரி ரூ. 70 கோடி என்ற அளவில் உள்ள இணைய வழி பங்கு வர்த்தக மதிப்பு, வரும் ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். |
|
|
|
|
|
|
|