|
தீவிரவாதத்திற்குப் பின்னால் |
|
- |டிசம்பர் 2008| |
|
|
|
|
சில முட்டாள்தனமான வழிகாட்டுதல்களால் தீவிரவாதத்தின் பெயரில் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கிறார்கள். வீதியில் குண்டெறிந்து அப்பாவிப் பொதுமக்களை, குழந்தைகளைக் கொல்கிற உரிமை யாருக்குமே கிடையாது. அவர்களை அரசு கடுமையாக ஒடுக்க வேண்டும். தீவிரவாதத்திற்குப் பின்னால் எந்த மதம் இருந்தாலும், எந்த அரசியல் இருந்தாலும், பயப்படாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - சத்குரு ஜக்கி வாசுதேவ்
***
நிலவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பது விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள நாடுகளின் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதி. வாய்ப்பிலிருந்தால் நிலவிலுள்ள ஆதாரங்களைப் பயன்படுத்திக் கொள்வது, ரோபோ அல்லது மனிதர்களைக் கொண்ட காலனிகளை அமைப்பது போன்றவற்றில் இந்தியா பின்தங்கிவிடக் கூடாது. எனவே பயணத்தைத் தொடரவேண்டும். சந்திரயான் திட்டத்திற்கான செலவு 10 கோடி டாலர்கள். இது பிற நாட்டு அமைப்புகள் செய்யும் செலவில் 20 சதவீதம் மட்டுமே! - டி.மாதவன் நாயர், தலைவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ)
***
கஜகிஸ்தானில் நடைபெற்ற ஒரு போட்டிக்கு நடுவராகச் சென்றிருந்தேன். ருமேனியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலிருந்து கலைஞர்கள் வந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருந்தது. இந்த அனுபவம் என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இவர்களில் சிலரை என்னுடைய இசையில் பயன்படுத்திக் கொண்டேன். ‘திருடா திருடா' படத்தில் வரும் என்னுடைய ஒரு பாடலை அவர்களிடம் கொடுத்தபோது, இரண்டு பெண்கள் அதனை மனப்பாடம் செய்துகொண்டு, வேறு ஒரு மொழியில் முழு அனுபவத்தோடு பாடிக் காண்பித்து வியக்க வைத்தனர். - ஏ.ஆர்.ரஹ்மான்
***
குழந்தைகள் நாம் இன்னொரு முறை பிறந்து மீண்டும் ஒருமுறை வளர்வதற்காக இயற்கை நமக்கு அளிக்கும் மகத்தான வாய்ப்பு. மனிதனுக்கு குறைந்தது இருமுறை இயற்கை அந்த வாய்ப்பை அளிக்கிறது. நீண்ட ஆயுள் கிடைத்தால் மூன்றுமுறைகூட. ஆண்களில் பெரும்பாலானவர்கள் இரண்டாவது வாய்ப்பில்தான் அதை உணர்கிறார்கள். பெண்களுக்குக் குழந்தைகளுடனான உறவு மிகமிக இயற்கையானது. உயிரியல் சார்ந்தது அது. ஆண்களுக்கு அப்படியல்ல. அவர்கள் அதை திட்டமிட்டுப் பயின்றுகொள்ள வேண்டும். ஒவ்வொரு துளியையும் அதைப்பற்றிய பிரக்ஞையுடன் அனுபவித்தறிய வேண்டும். குடும்பம் என்பது பெண்களுக்கான அமைப்பு அல்ல. குடும்பம் என்ற அமைப்பு இல்லாவிட்டால் பெண்கள் இன்னும் கொஞ்சம் வசதியாக வாழ்ந்துகொள்ள முடியும். ஆண் அனாதையாகிவிடுவான். - ஜெயமோகன்
*** |
|
நுண்கலை படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இதன்மூலம் பாரம்பரிய நுண்கலைகளைப் படிக்க இளைஞர்களும், இளம் பெண்களும் முன்வருவார்கள். இந்தியாவின் பாரம்பரிய கலாசாரத்தைக் காக்க அவர்களுக்கு இது உந்துதலாக இருக்கும். நுண்கலைகள் படித்தால் வேலை கிடைக்கும் உத்தரவாதம் இல்லை என்பதால் கலைப்பாடப் பிரிவுகளுக்கு மாணவ, மாணவியர் வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். விளையாட்டு வீரர்களுக்குத் தரப்படுவதைப் போல வேலை வாய்ப்பில் நுண்கலை மாணவ, மாணவியருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். - சுதாராணி ரகுபதி
***
ஆட்சியைப் பிடிக்கத்தான் கட்சி ஆரம்பிக்கிறோமே தவிர, காசி, ராமேஸ்வரம் போவதற்காக இல்லை. கொள்ளையடிப்பதற்குத் தோதான இலாகாக்களையே கேட்டு வாங்குகிறார்கள். ஈழத்தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண வெளியுறவுத் துறையைத்தானே தி.மு.க. கேட்டு வாங்கியிருக்க வேண்டும்? - விஜயகாந்த்
***
திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் ராஜினாமா கடிதத்தை டெல்லிக்கு அனுப்பி இருந்தால் அதைப் பின்பற்றி தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் செய்திருப்பர். முதல்வர் கருணாநிதி நடத்தும் நாடகத்திற்கு மற்ற கட்சிகள் உதவி செய்யவில்லை என்பதால் அவர் எது வேண்டுமானாலும் பேசக்கூடாது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கருணாநிதியின் தவறுகளை வரலாறு மன்னிக்காது. - நெடுமாறன்
***
சத்யராஜ் மகன் திருமணத்தில் ஸ்டாலினைச் சந்தித்தேன். கல்யாண வீட்டில் கலகலப்பாக இரண்டொரு வார்த்தைகள் பேசுவது தவறா? கல்யாணத்துக்கு வந்த இடத்தில் எங்களுக்குள் என்ன பெரிய காண்ட்ராக்டா கையெழுத்தாகி எனக்குக் கமிஷன் கிடைத்து விடும்? - எஸ்.வி.சேகர் |
|
|
|
|
|
|
|