Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
பொது
நந்தலாலா இயக்கம்
'இந்தியாவின் தோழர்கள்'
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்......!
- கோம்ஸ் கணபதி|செப்டம்பர் 2005|
Share:
Click Here Enlargeஜூலைத் திங்களில் டல்லஸ் நகரில் நடந்து முடிந்த தமிழர் திருவிழாவின் போது அருட்தந்தை காஸ்பர் ராஜ் அவர்கள் மாணிக்க வாசகரின் திருவாசகத்தைக் குறித்த தமது சிறப்புரையில் எடுத்த எடுப்பிலேயே ஓர் அழகான கருத்தை நம்முன் வைத்தார்: "இறைவன் எனப்படுபவன் எங்கோ வானத்துக்கு மேலே இருந்து கொண்டு நம்மையெல்லாம் ஆண்டு கொண்டிருப்பவன் அல்லன். மாறாக, இந்த 'நிலம் தன்னில் வந்து... நீள் கரம் நீட்டி,' மானுடத்தோடு 'கலந்து, அன்பாகிக் கசிந்து உள்ளுருகி, பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, தயாவான தத்துவர்கள் எல்லாம் இறைவனின் சாயலே! தம்மை 'நீராய் உருக்கி' நேசர்க்கு 'ஆருயிராய் ஆரமுதூட்டிடு'வோர் எல்லாம் இறைவனின் சாயலே! இத்தகு இறையோன் என்றைக்குமே.." நானே இறைவன், என்னடி பணிந்து ஏத்திடுவீர்" என்று பறை அறைந்து கொண்டு வருவதில்லை. நம் கண்ணுக் கெதிரிலேயே இந்த மண்ணுலகில் மானிடனாய் அவர் அவதரிக்கலாம், பிட்டுக்கு மண் சுமக்கலாம், பிரம்படி படலாம், மானுடத்தோடு ஐக்கியமாகி, மனித நேயத்தைக் காட்டும் வண்ணம் தொழு நோயினரைத் தொட்டுத் தடவித் துயர் துடைக்கலாம், எண்ணற்ற பலரின் இன்னல் களைய வேண்டி சிலுவையைச் சுமக்கலாம். ஆகப் பிறர் துயர்களைத் தன்மேல் வலிந்து ஏற்றுக
கொண்டு மெழுகு போல உருகும் தியாகிகள் எல்லோருமே இறைவனின் சாயல்களே..."

அவர் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் சொல்லிக்கொண்டே போகையில், எனக்குள் எனக்குத் தெரியாமலே மகாகவியின் வரிகள் ஓடிக்கொண்டிருந்தன "காவித் துணி வேண்டா, கற்றைச் சடை வேண்டா, பாவித்தல் போதும் பரம நிலை எய்துதற்கே. சாத்திரங்கள் ஏதுமில்லை, சதுமறைகள் ஏதுமில்லை தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றால் போதுமடா" என்ற வரிகள்தாம் அவை.

1905-ல் நிவேதிதா தேவியைச் சந்தித்து மீண்ட மகாகவி பாரதியின் அந்த ஞான வாக்குக்கும், 2005-ல் மறைத்திரு பாதிரியின் சுவிசேஷம் தாண்டிய சொற்களுக்கும் இடையில் ஒரு நூற்றாண்டு இடைவெளியைத் தவிர கருப்பொருளில் கடுகளவும் மாற்றமில்லை.

அதே தினத்தில் அதே அரங்கில் பேமலா வால்ஷ் என்னும் பெருமாட்டியைத் தமிழ்நாடு அறக்கட்டளை கௌரவித்த போது மேற்கூறியது உறுதியாயிற்று. எங்கோ இருக்கும் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து, ஜெனிவாவில் ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருந்த வால்ஷ் அம்மையாருக்குத் தமிழகத்தில் வறுமையும் வாட்டமும் மட்டுமே ஆட்சி செய்யும் சில கிராமக் குடிசைகளின் கூரையைப் பிளந்து கொண்டு ஒலித்திட்ட கோரிக்கைகள் எப்படித்தான் எட்டினவோ தெரியாது. ஆனால்... திருமதி வால்ஷின் தோளில் முகம் புதைத்துக் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட ஓராயிரம் சிறுவர் சிறுமியரைக் கேட்டுப் பாருங்கள், தெரியும். சுனாமியின் போது கடலுக்குக் கணவனைக் காவு தந்திட்ட லலிதாவையும் தந்தையைத் தேடி தினமும் கடலைப் பார்த்து வெறித்தே நின்றிடும் அவர்தம் கண்மணிகளையும் கேட்டுப் பாருங்கள், வால்ஷ் பெருமாட்டி அவர்களின் வள்ளன்மை புரியும்.

தமிழகத்தில் புழுதிச் சாலைகளையும் பொட்டல் காடுகளையும் தாண்டி நாடு கடத்தப்பட்ட எத்தனையோ ஏழைக் கிராமங்களில் சவலைக் குழந்தைகளாய் நிற்கும் பள்ளிகள் பலவற்றின் பழைய மாணவர்கள் நம்மில் பலர் இருக்கலாம். காலத்தால், தூரத்தால், வேலைப்பளு காரணத்தால் அவற்றை மறந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், 1999-ல் தமிழகத்துக்கு முதன்முறையாக வந்ததிலிருந்து இந்த ஆறே ஆண்டுகளில் திருமதி வால்ஷ் அவர்களின் கால் பதியாத இடமில்லை. இயன்ற போதெல்லாம் தன் கரம் நீட்டித் துடைக்காத விழி இல்லை என்னுமளவுக்குச் சாதனை புரிந்துள்ளார். இவரது சாதனைகளின் சிறப்பை மெச்சி பிரிட்டிஷ் அரசியிடமிருந்து 'Officer of the Order of the British Empire' (பாரத நாட்டில் பத்மஸ்ரீ பட்டத்துக்கு இணையானது) என்ற தனிப் பெரும் கௌரவத்தைப் பெற்றுள்ள திருமதி வால்ஷ் தானே துவக்கித் தலைவராக இருந்து பணியாற்றிடும் அறக்கட்டளைக்கு 'இந்தியாவின் தோழர்கள்' என்று பெயர் சூட்டிக் கொண்டதைப் பெருமையோடு சொல்லுகிறார். அதுவல்லாது, ஜெனீவா ஹாசின் அறக்கட்டளை, மற்றும் ஜெனீவா ASC பன்னாட்டு மொழிப் பள்ளி என்று எத்தனையோ தனக்குத் தெரிந்த நிறுவனங்களின் மூலம் ஆற்றியுள்ள தொண்டுகளைப் பற்றி எந்த விதமான சுயவிளம்பர நோக்கமுமின்றி நமக்கு எடுத்துச் சொல்லுகையில் அவரது இமைகளின் பட்டாம் பூச்சிப் படபடப்பு, கண்களின் கரை தாண்டி ஆர்ப்பரித்திடும் ஆர்வம், வார்த்தைகளில் நுரைத்திடும் வேகம்... அப்பப்பா... நேரில் பார்க்க வேண்டுமே!

வாழை போலத் தன்னைத் தந்து தியாகியாகலாம்

2001ல் Global Harmony Foundation-ன் முன்னாள் தலைவரான காலம் சென்ற ஸர். பீட்டர் உஸ்தினோவின் ஊக்கத்தில் ஜெனிவாவில் துவங்கப் பெற்ற 'இந்தியாவின் தோழன்' எனும் தன்னார்வ நிறுவனத்துக்குத் தலைவியான திருமதி வால்ஷ் பிரிட்டனில் ஆங்கில ஆசிரியை. 1969-ல் சுவிட்சர் லாந்துக்கு ஐந்தே ஐந்து ஆசிரியைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கச் சென்றவர், ஜெனிவாவிலேயே தங்கி இன்று கிட்டத்தட்ட 125 ஆசிரியைகளுக்கு ஆங்கிலத்தோடு தன்னம்பிக்கையையும் ஊட்டியதைத் தனது பணிகளின் துவக்கமாய் நினைவு கூறுகிறார்.

என்றாலும், 99-ல் தமிழகத்திற்கு வந்ததை ஓர் ஓவியனின் அக்கறையோடு திருமதி வால்ஷ் வருணிக்கையில்... கிட்டத்தட்ட 27 மணி நேரம் அவரோடு நாமும் பயணிக்கிறோம். நள்ளிரவில் சென்னை விமான நிலயத்திலிருந்து வெளி வருகிறோம். காலை எட்டு மணிக்கு PC (சந்திரசேகரன்), அருமைநாயகம் இவர்களோடு, களைப்பு, வேர்வை, புழுக்கத்தைச் சுமந்து கொண்டு, புழுதியைப் பூசிக்கொண்டு, வாடகை அம்பாசடர் காரில் மூன்றரை மணி நேரம் பயணித்து, காட்பாடி துவக்கப் பள்ளி ஒன்றை அடைந்ததை திருமதி வால்ஷ் சொல்கிறார். நாம் களைத்திருக்கிறோம். ஆனால் அவரோ பள்ளி மாணவ மாணவிகளின் புன்சிரிப்பில் மகிழ்ந்து போயிருக்கிறார். தொடர்ந்து அவரது கண்கள் வகுப்பு அறைகளைப் பார்வையிட, உடைந்து போன மேசை, நாற்காலி, ஒழுகும் கூரை, மாணவர்களின் செம்மண் சிம்மாசனம் இவற்றைக் கண்டு உள்ளூர விசும்பிட, ஆசிரியப் பெருமக்களின் கரம் கூப்பிய மல்லிகைச் சிரிப்பில், வரவேற்பில் விசும்பல் மறைந்து, விரைந்து ஆற்ற வேண்டிய பணிகளுக்குத் தன்னைத் தயார் செய்து கொள்ளுகிறார். பேசிக் கொண்டே குறித்துக் கொள்ளுகிறார், குறித்துக் கொண்டே PC-யிடம் பள்ளிச் சுவர் கட்டுவதைப் பற்றிக் கேட்டுக் கொள்ளுகிறார், ஓரமாய் வரிசையில் கூப்பிய கரங்களோடு நின்று கொண்டு கழுத்தைப் பக்கவாட்டில் நீட்டி இதையெல்லாம் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் நாலாம் வகுப்புத் தமிழரசியின் விரிந்த கண்களில் மயங்கி, "பேர் என்ன?" என்று கேட்கிறார். வாசலுக்கு வெளியே நின்று கொண்டு இவர் வரவுக்காகக் காத்திருக்கும் ஊர்ப் பெரிசு ஒன்றிரண்டிடம் கை குலுக்கி, வருகின்ற வழியெல்லாம் PC யிடம் கற்றுக் கொண்ட 'வணக்க'த்தை வஞ்சகமில்லாமல் பன்னீராய்த் தெளிக்கிறார். திருமதி வால்ஷ் இதைச் சொல்லி முடிக்கும் போது கலைநயம் மிக்க டாக்குமெண்டரிப் படம் ஒன்றைப் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. முந்தைய இரவு இளையராஜாவின் இசையில் கேட்ட மணிவாசகரின் வரிகள் வரிசங்கம் நின்றூதக் கேட்டது போல் ஒரு நிறைவு வராமலில்லை. "நிற்பார் நிற்க, நில்லா உலகில், நில்லாது இனி மேல் செல்வோமே!"

ஓட்டம், ஓட்டம்... எடுத்துக் கொண்ட பணியில் அவரது தீர்க்க தரிசனம் நம்மை அசர வைக்கிறது. அறக்கட்டளையின் விருதினைப் பெற்றுக் கொண்ட கையோடு 'இல்லை என்ற சொல்லை இல்லையாகச் செய்வோம்' என்று அழைப்பு விடுக்கும்போது மாணிக்க வாசகரின் வரிகளுக்கு திருமதி. வால்ஷ் தன் பங்குக்கான வலுவினை ஊட்டியது போலும் ஒரு நிறைவு.
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்

"ஏந்தும் கைகள் எத்தனையோ கோடியிருக்க, எப்படி இந்தியாவை, குறிப்பாகத் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்தீரகள்? தமிழ்நாடு அறக்கட்டளையைப் பற்றி முன்னமே தெரியுமா?"

"கர்மா" என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுத் தொடர்கிறார். அவரது மொழிப் பள்ளியின் இருபத்தைந்தாவது ஆண்டு விழாவும் அறக்கட்டளையின் இருபத்தைந்தாவது ஆண்டு விழாவும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் (1999) நிகழ்ந்திருப்பதை நமக்கு ஞாபகப்படுத்துகிறார். "அந்த விழாவில் கணிசமான தொகை ஒன்றை உதவி நிதியாகத் திரட்டிவிட்டு, யாருக்குக் கொடுப்பது என்று பல நிறுவனங்களைப் பற்றி விவாதிக்கையில், தமிழ்நாடு அறக்கட்டளையின் பணிகளும், அதற்கு உந்து காரணமான அமெரிக்கத் தமிழர்களின் கூர்த்த நன்னோக்கும் என் கவனத்துக்கு வந்தன. சரி, வழங்கும் நன்கொடை ஊழல் ஏதுமின்றிச் சீராக வழங்கப் பெறுகிறதா என்று அறிய PCயிடம் பேசினேன். விளைவு... சொன்னேனே. காட்பாடியில் தொடங்கிய அன்றிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட பத்துத் தடவையாவது தமிழகம் வந்திருக்கிறேன். அனேகமாக 40 திட்டங்களின் மூலம் எத்தனையோ மாணவ மாணவியர், விதவைகள், நோயுற்றோர் என்று பலருக்கும் பலன் கிட்டியுள்ளது."

"எண்ணிக்கையில் அவை என்ன ஒரு 40 இருக்குமா? (தனக்குள்ளே ஒரு கேள்வி). புள்ளி விவரமா முக்கியம்? பள்ளிக்கு வழங்கும் உதவியில் நாலு பிள்ளைகள் படிக்க முடிந்ததே (தனக்குள்ளே ஓர் தீர்க்கமான பதில்) இன்னது அத்தியாவசியத் தேவை என்று PC கேட்டுச் சில நாட்களுக்குள் ஒன்று உதவிப் பொருளோ அல்லது திருமதி வால்ஷோ அல்லது இருவருமோ வந்து நிற்பார்கள் என்று PC சொல்வதை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன்.

உருகியோடும் மெழுகு போல ஒளியை வீசலாம்

லலிதா என்னும் பெண்மணி சுனாமியினால் விதவையானதையும் இரண்டு குழந்தைகளை வளர்த்தெடுக்க ஓர் விதவைத் தாய் படும்பாட்டினையும் திருமதி வால்ஷ் சொல்லும் போது உடைந்து போகிறார். இயற்கைச் சீற்றத்தின் மேல் ஒரு சீற்றம். இந்தியச் சட்டப்படி ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் காணாமல் போன ஒருவர் காலமாகி விட்டார் என்று அறிவிக்க முடியும். ஆகவே அந்த விதவைத் தாய்க்கு உதவிப் பணம் பெற வாய்ப்பில்லை. "என் தோளிலேயே எத்தனை நாள்தான் நாலு, ஐந்து வயதுக் குழந்தைகள் இரண்டைத் தாங்கிக் கொண்டிருப்பேன்" என்று தன்னை அந்த விதவைத் தாயாக்கிக் கொண்டு நம்மிடமே கேட்கிறார். விழி ஓரமாய்ப் வழியத் தவிக்கும் கண்ணீரைத் தெரியாதவாறு துடைத்துக் கொண்டு. இரண்டே நிமிடங்களில் மீண்டும் ஒரு மெல்லிய சிரிப்பை விரித்துவிட்டு 'புதியதோர் உலகம் செய்யப்' புன்னகையோடு பேமலா அவர்கள் தன் திட்டங்களை விவரிக்கத் தொடங்குகையில் என்றோ என்னுள் பதியமிட்டிருந்த கண்ணதாசனின் கவிதை வரிகள் மீண்டும் பூத்தது போலே ஒரு உணர்வு.

"வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்

மனம், மனம் - அது கோயிலாகலாம்...."

உடையில் இந்திய மண் வாசனை; "வணக்கம், உங்கள் வரவேற்புக்கு நன்றி.." என்று பேமலா ஒரு மழலை மொழியில் தன் உரையைத் தொடங்கும் போது என்னுயிர்த் தமிழுக்கே உரிய இனிமை; இவையாவினும் மேலாய் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற வரியைச் சிந்தையில், செய்கையில், சொல்லில் சத்தமேதுமின்றிக் காட்டிவரும் பேமலா வால்ஷ் பெருமாட்டிக்கு 2005-ம் ஆண்டிற்கான சிறப்பு விருதை வழங்கியதன் மூலம் தமிழ்நாடு அறக்கட்டளை மீண்டும் ஒரு முறை தன்னைச் சிறப்பித்துக் கொண்டிருக்கிறது.

கோம்ஸ் கணபதி
More

நந்தலாலா இயக்கம்
'இந்தியாவின் தோழர்கள்'
Share: 




© Copyright 2020 Tamilonline