|
|
அய்யம்பேட்டையிலிருந்து அமெரிக்கா வரப்போகும் அலமுப் பாட்டி பற்றி அவளுடைய பிள்ளை ராகவனும், ராஜியும் பட்ட கவலை சொல்லில் அடங்காது.
''என்னங்க உங்க அம்மா மடி ஆசாரம்னு ஆட்டிப் படைக்கறவளாச்சே. இங்கே சரிப்பட்டு வருமா? முன்னே பின்னே யோசிக்காம என்ன இப்படி திடீர்னு அவளை வரவழைக்க ஏற்பாடு செஞ்சிட்டீங்க? இதெல்லாம் வீண் வம்பை விலைக்கு வாங்கற மாதிரிதான்'' என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள் ராஜி.
ராகவனுக்கும் உள்ளூர உதறல்தான். இருந்தாலும் அம்மாவை விட்டுக்கொடுக்க முடியாமல் ''என்ன ராஜி ரொம்ப கவலைப்படறே. ஷி கேன் அட்ஜஸ்ட் டு எவ்வரி திங். அனாவசியமா அலட்டிக்காதே'' என்று அழுத்தமாய் பதில் சொன்னான். ராஜியால் இதை நம்பமுடியவில்லை.
குறிப்பிட்ட நாளில் அலமுப்பாட்டி நெவார்க் விமானநிலையத்தில் வந்து இறங்கினாள். பேரன் ஸ்ரீகாந்த், பேத்தி ஸ்வேதாவுடன் ராகவன் தம்பதிகள் பாட்டியை அழைத்து வர ஏர்போர்ட்டிற்கு வந்திருந்தனர். இவர்களைக் கண்டவுடன் பாட்டிக்குப் பீறிட்டது அழுகை. ''அட போடா ஒங்க அமெரிக்காவுமாச்சு ஆட்டுக்குட்டியுமாச்சு. ரொம்ப அநியாயம் பண்றாங்க! எம்பொட்டியைத் தொறந்து ரகளை பண்ணிட்டாங்க.. ஒண்ணும் பிரமாதமா கொண்டு வரலை. குழந்தைகளுக்கு விளையாடப் பல்லாங்குழியும், பம்பரமும் பார்த்து நீ என்ன 'டியரஸ்ட்டான்னு' குடைஞ்சு எடுக்கறான்'' பாட்டி எட்டுக் கட்டை சுருதியில் கத்திப் பேசவும் எல்லாரும் இவர்களையே வெறித்துப் பார்த்தார்கள்.
''ஐயோ பாட்டி டியரஸ்ட் இல்லே டெரரிஸ்ட். அப்படீன்னா தீவிரவாதின்னு அர்த்தம். விளையாடற கேம்னு சொல்லி இருக்கணும்'' என்று பேரன் ஸ்ரீகாந்த் விளக்கினான். "அது போறாதுன்னு பருப்புப் பொடி, ஊறுகாய் எல்லாத்தையும் குப்பைத் தொட்டியில போட்டுட்டான்கள்'' பாட்டி பொருமித்தள்ளினாள்.
ராஜிக்கு கோவமும் அவமானமுமாய்ப் பொங்கியது. ஒருவாறு வீடு வந்து சேர்ந்தனர்.
மறுநாள் காலையில் பாட்டி குளித்து புடவைகளை வெளிப்புறம் உலர்த்தினாள். ராஜி "ஐயோ அம்மா, இங்கேயெல்லாம் இப்படித் துணி உலர்த்தக்கூடாது. நான் டிரையர்ல போட்டுத் தரேன்.''
''அதென்ன டிராயரோ கண்றாவியோ நான் என்னத்தைக் கண்டேன். ஆனா எனக்கு மடியா இருக்கணும்'' கண்டிப்பாகக் கூறினாள் பாட்டி.
'ஆரம்பிச்சாச்சு ராமாயணம்...' பற்களை நறநறவென்று கடித்தாள் ராஜி.
''பாட்டி நாளைக்கு சன்டே. நாங்க க்ளாஸ் போகணும். தனியா இருப்பீங்களா?'' பேரன் ஸ்ரீகாந்த் கேட்கவும், ''இதென்ன அக்கிரமம்! சண்டைக்கும் இந்த ஊர்லே கிளாஸ் நடத்துவாங்களா? போ நாடு உருப்பட்டாப் பலதான்'' என்று பாட்டி அதிசயிக்க குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.
''அடக் கஷ்டமே சன்டேன்னா ஞாயிற்றுக்கிழமை இவாளுக்கு வயலின், சுலோக கிளாஸ் எல்லாம் போகவேண்டியிருக்கும்'' ராஜி பொறுமையில்லாமல் விளக்கினாள்.
''ஆமாண்டியம்மா எனக்கும் தெரியும். நானும் நாலு வார்த்தை கத்துண்டுதான் வந்திருக்கேன்.
சும்மா கேட்டேன்'' பாட்டி மழுப்பினாள்.
வார நாட்களில் ராஜி, ராகவன், குழந்தைகள் எல்லாருமே ஆபிசிற்கோ ஸ்கூலுக்கோ போய்விடவே பொழுது போகாமல் கஷ்டப்பட்டாள் அலமுப்பாட்டி.
அன்றுமாலை ஸ்ரீகாந்தும், ஸ்வேதாவும் ''பாட்டி மார்கரெட் ஆன்ட்டி உங்களைப் பார்க்க வரப்போறாங்க. அம்மாகிட்ட சொல்லிட்டிருந்தாங்க'' என்றார்கள்.
''ஆமா நான் பார்க்காத மார்க்கெட்டா ஓங்க தாத்தாவோட கொத்தவால் சாவடி மார்க்கெட். இப்போ கோயம்பேடு மார்க்கெட் எல்லாம் பார்த்தாச்சு. ஒண்ணும் புதுசு இல்லே..''
'தலையெழுத்து!' ஓசைப்படாமல் முணுமுணுத்த ராஜி ''அம்மா, எங்களோட பிரண்ட் மார்கரெட்டுன்னு ஒரு அமெரிக்கன் லேடி உங்களைப் பார்க்கணும்னு போன் பண்ணியிருக்கா.''
''ஓ.. தாரளமா வரட்டுமே, தமிழ் பேசுவாளோன்னோ?''
''அவாளுக்குத் தமிழ் தெரியாது. நீங்க அவா வந்தா 'ஹை' சொன்னாப் போதும். எங்களோட இங்கிலீஷ்ல பேசுவா. அப்பப்போ புரிஞ்சதுக்குத் தலையை ஆட்டுங்கோ'' ராஜி கூறிவிட்டு உள்ளே சென்றாள்.
''ஆஹா, நான் என்ன தலையாட்டி பொம்மையா? நானும் கோண்டு வாத்யார்கிட்ட இங்கிலீஷ் ஏ, பி, சி, டி கத்துண்டுதான வந்திருக்கேன்'' கோபம் மேலிடக் கூறினாள் பாட்டி. 'எது பேசினாலும் ஏடாகூடமா ஆயிடறது' ராஜி உள்ளே இருந்தபடியே முணுமுணுத்தாள்.
சொன்ன டயத்துக்கு மார்கரெட் வந்து சேர்ந்தாள். வயது ஐம்பது இருக்கும். அழகாக டிரஸ் செய்து கொண்டு, பளிச்சென்று இருந்தாள். ''ஹாய் கிளாட்டு மீட் யூ. ஐயாம் மார்கரெட்'' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அலமுப் பாட்டியைக் கட்டி அணைத்து முத்த மிட்டாள்.
''அட, எத்தனை ஆசையாய் இருக்கா! எம் மருமககூட இத்தனை அன்பா இல்லையே'' பாட்டி முணுமுணுத்தாள். பாட்டியின் புடவை, வளையல், தோடு எல்லாம் பார்த்து மார்கரெட் மிகவும் பாராட்டினாள். ராஜிதான் எல்லாவற்றிற்கும் பதில் கூறினாள்.
''நாளைக்கு என் வீட்டுக்குக் கண்டிப்பா வந்துடுங்கோ'' என்று மார்கரெட் அழைத்துவிட்டுச் சென்றாள்.
''ஆமா, அது ஒண்ணுதான் குறைச்சல்'' ராஜி குத்தலாகக் கூறினாள்.
கண்களாலேயே எரிக்கிற மாதிரி ராஜியைப் பார்த்தாள் பாட்டி. |
|
மறுநாள் ராகவனும், ராஜியும் ஆபீசிற்குச் சென்றனர். குழந்தைகளும் ஸ்கூலுக்குப் போய்விடவும் பாட்டி வீட்டைப் பூட்டிக்கொண்டு இரண்டு தெரு தள்ளி உள்ள மார்கரெட் வீட்டிற்குப் போய்விட்டாள். முன்னதாக வீட்டு நம்பர் தெரிந்து வைத்துக் கொண்டிருந்ததால் போனில் சொல்லிவிட்டுப் போனதும் மார்கரெட் ரெடியாக வாசலில் காத்திருந்து வரவேற்று உள்ளே அழைத்துப் போனாள்.
பத்துநாளில் மார்கரெட்டுக்கு இட்லி, தோசை பலகாரங்கள் செய்யப் பாட்டி கற்றுக் கொடுத்துவிட்டாள். பாட்டியும் மார்கரெட்டிடம் இங்கலீஷ் பேசக் கற்றுக் கொண்டுவிட்டாள். ஆக, தன்னைக் கேலி செய்த மருமகளின் கர்வத்தை ஒடுக்கிவிடவேண்டும் என்று பாட்டி மனதில் வைராக்கியம் பூண்டு மளமளவென்று ஜெட் வேகத்தில் முன்னேறி வந்தாள்.
ஒருநாள் ஆபிசிலிருந்து வந்த ராகவனும் ராஜியும் பாட்டியைக் காணாமல் பயந்துவிட்டனர்.
வழக்கமாக மார்கரெட் வீட்டிற்குப் போய்விட்டு ஆறுமணிக்கெல்லாம் திரும்பி வந்துவிடுவாள். ஏழு மணியாகிறதே என்று கவலைப்பட்டு மார்கரெட்டிற்குப் போன் செய்தான் ராகவன். அங்கேயும் இல்லை.
வாசலில் கார் வந்து நின்றது.
அட, யார் அது அலமுப்பாட்டியா? கையில் டென்னிஸ் மட்டையுடன் பிரமாதமாய் பாண்ட், டீ ஷர்ட் சகிதம்! ராகவனும் ராஜியும் திறந்த வாய் மூடாமல் திகைத்து நிற்க, மார்கரெட் பேசினாள்.
'ஹாய் ராகவன், உங்க அம்மா ரொம்பவே மாறிட்டாங்க. வெரி இன்டலிஜென்ட். டென்னிஸ் அட்டகாசமா ஆடறாங்க. எல்லாம் ஈசியா கத்துக்கறாங்க.'' என்று கூறினாள்.
ராகவனுக்கு பெருமைப் பிடிபடவில்லை. ராஜிக்கு முகத்தில் ஈயாடவில்லை.
''ஹ¥ம் கலி முத்திப் போச்சு. ஆன வயசுக்கு இதெல்லாம் தேவையா என்ன?'' பாட்டி காதில் விழாமல் ராகவனிடம் சீறினாள். ''பேசாம இரு'' என்று ராகவன் அவளை அடக்கினான்.
அன்று சனிக்கிழமை எல்லோரும் சாப்பிட டைனிங் டேபிளில் உட்காரவும் பேஸ்மெண்ட்டில் சர்சர் என்று சப்தம். என்ன இது என்று எல்லாரும் சென்று எட்டிப் பார்த்தனர். அட! பாட்டி ஸ்வேதாவின் ஸ்கூட்டியில் படுவேகமாய்ப் போய்க் கொண்டிருந்தாள். ''ஹாய் பாட்டி, ஸ்கூட்டி பாட்டி'' என்று குழந்தைகள் கத்தியவுடன் திரும்பிப் பார்த்த வேகத்தில் இசகு பிசகாய் சுவற்றில் மோதிப் பாட்டி கீழே விழுந்து விட்டாள். அவ்வளவுதான், காலில் அடிபட்டு பிராக்சர் ஆகிவிட்டது. ஆஸ்பிடலில் சேர்க்கும்படி சரியான அடி. ''என்ன அம்மா, சும்மா இருக்கமாட்டியா?'' ராகவன் அழமாட்டாக்குறையாய்க் கூறினான்.
''கர்மம் கர்மம்... போறாத வேளை இந்த வயசில் ஸ்கூட்டியில் விளையாடணுமா? காலை ஒடிச்சிண்டாச்சு'' ராஜி திட்டித் தீர்த்தாள்.
மார்கரெட்தான் பாட்டிக்கு உதவியாய் இருந்தாள். டாக்டர்களிடம் பாட்டி ஆங்கிலத்தில் பேசி அசத்திவிட்டாள். ஸ்கூட்டியில் இன்னும் சில புதிய உத்திகளும், முன்னேற்றமும் செய்யலாம் என்று பாட்டி கூறிய ஆலோசனைகளை மார்கரெட் ஸ்கூட்டி செய்யும் கம்பெனிக்குத் தெரிவித்து அவர்களுடன் பாட்டியின் நேர்முகப் பேட்டிக்கும் ஏற்பாடுகள் செய்தாள்.
பிறகென்ன? தினமும் டிவியிலும் பத்திரிகையிலும் பாட்டியின் புகழ் பிரமாதமாகப் பரவிவிட்டது.
லோக்கல் சீனியர் சிட்டிஸன் ஹோம்களில் பாட்டிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. காலும் ஓரளவு குணமாகிப் பாட்டி பாண்ட், ஷர்ட் அணிந்து அட்டகாசமாய் வளைய வந்தாள்.
''ஹாய் பாட்டி, ஸ்கூட்டி பாட்டி, எங்க பாட்டி'' என்று குழந்தைகள் சந்தோஷமாய்ச் சுற்றிச் சுற்றிப் பாடி வந்து டான்ஸ் ஆடினர்.
ஊரெல்லாம் பாட்டியின் புகழ் ஓங்கினாலும் மருமகள் ராஜிக்கு மட்டும் மாமியாரின் அட்டகாசம் வெறுப்பையே தந்தது.
'என்ன வேண்டிக்கிடக்கு. வயசான காலத்தில் 'கிருஷ்ணா, ராமா'ன்னு விழுந்து கிடக்காம அலட்டிக் கொண்டு' தோளில் முகவாயைப் பட்டென்று இடித்துக் கொள்கிறாள்.
''பார்த்து பார்த்து... எங்கேயாவது தோள் ·பிராக்சர் ஆயிடப்போறது'' ராகவன் ராஜியைக் கேலி செய்கிறான்.
தங்கம் ராமஸ்வாமி |
|
|
|
|
|
|
|