|
எம்.என்.நம்பியார் |
|
- |டிசம்பர் 2008| |
|
|
|
பழம்பெரும் நடிகரும், ஆன்மீகவாதியுமான எம்.என். நம்பியார் (89) சென்னையில் காலமானார். கேரளாவின் மலபார் மாவட்டத்தில் உள்ள பெருவாமூர் என்ற ஊரில், 1919ஆம் ஆண்டு பிறந்தவர் மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்னும் எம்.என். நம்பியார். சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் சகோதரர் வசித்த ஊட்டிக்குக் குடிபெயர்ந்தார். அங்குள்ள நகராட்சிப் பள்ளியில் மூன்றாவது பாரம் (எட்டாவது வகுப்பு) வரை படித்த அவர், நடிப்பில் கொண்டிருந்த ஆர்வத்தால் நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 13. அவர் நடித்த 'பக்த ராமதாஸ்' நாடகம் தமிழிலும், ஹிந்தியிலும் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது திரையுலகில் நுழைந்தார். தொடர்ந்து 'கல்யாணி', 'கவிதா' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
ராஜகுருவாக அவர் நடித்த 'மந்திரிகுமாரி', 11 வேடங்களில் அவர் நடித்த 'திகம்பர சாமியார்' ஆகிய படங்கள் அவர் வாழ்வில் மைல்கற்களாய் அமைந்தன. தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரது படங்களில் வில்லனாக நடிக்கத் துவங்கினார். திரைப்படங்களில் வில்லனாக நடித்தாலும் தனிவாழ்வில் நேர்மை, ஒழுக்கம், பக்தி ஆகியவை கொண்டவராக விளங்கினார். யோகப் பயிற்சிகளினால் தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்ததுடன், இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். எந்தவிதத் தீய பழக்கங்களுக்கும் அடிமையாகாத திரைப்பட நடிகர்கள் மிகச் சிலரில் நம்பியாருக்கு முதலிடம் உண்டு.
குணச்சித்திர, நகைச்சுவைப் பாத்திரங்களிலும் நடித்துப் புகழ்பெற்ற நம்பியார், ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற பெருமைக்குரியவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்வர். தமிழ் தவிர, 1952ல் வில்லியம் பர்க்கின் இயக்கத்தில் வெளியான ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், 'கணவனே கண்கண்ட தெய்வம்' படத்தின் இந்திப் பதிப்பிலும் இவர் நடித்துள்ளார். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் 'கவியின் கனவு', 'கல்யாண சூப்பர் மார்க்கெட்' ஆகிய இரு நாடகங்களைப் பலமுறை மேடையேற்றியுள்ளார். |
|
ஆண்டுக்கு இரண்டு மூன்று முறை என்று 65 ஆண்டுகளாகத் தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று வந்த நம்பியார், பலருக்கு குருசாமியாகத் திகழ்ந்தவர். நல்ல மனிதரும், பக்தரும், நடிகருமான அவரது மறைவுக்குத் தென்றல் அஞ்சலி செலுத்துகிறது. |
|
|
|
|
|
|
|