|
எளிய நண்பன் ஆதிமூலம் |
|
- அரவக்கோன்|பிப்ரவரி 2008| |
|
|
|
|
ஓவியர் ஆதிமூலத்தை 1960 முதல் நான் அறிவேன்-என்று சொல்வது எவ்வளவு சரி என்பது தெரியவில்லை. அந்த வருடம் நான் ஓவியப் படிப்பை முடித்தேன். அவர் ஓவியப் பள்ளியில் சேர்ந்தார். பின்வந்த ஆண்டுகளில்தான் அவருடன் படித்த குழாத்துடன் நட்பு தொடங்கியது. படிப்பை முடித்துவிட்டாலும் தொடர்ந்து அங்கு செல்வதும் நாள்முழுவதும் அங்கேயே சுற்றுவதும் இயல்பான ஒன்றாகத்தான் என் போன்ற பலருக்கும் அன்று இருந்தது. தனது கோட்டோவியங்களால் அனைவரின் கவனத்துக்கும் உள்ளானவர் ஆதிமூலம். அது அவரது பள்ளிநாட்களிலேயே துவங்கி விட்டது. பள்ளிவளாகத்தின் கட்டிடம் அவரால் ஓவியமாகப் படைக்கப்பட்டு முதல்வர் பணிக்கரின் கவனத்தைப் பெற்றது. ஆதிமூலம் எப்போதுமே எளிமையான வராகவே பழகினார்.
1980களில்தான் அவர் தனது படைப்புத் தளத்தை பண்பியல் (abstract) வண்ணங்களுக்கு மாற்றினார். அது அவரது கடைசி வரை தொடர்ந்தது. ஆனாலும், அவரது அறிமுகமும் பரிச்சயமும் தமிழ் உலகுக்கு பரவலாகத் தெரியவந்தது கி. ராஜநாரயணனின் 'கோபல்ல கிராமத்து மக்கள்' தொடருக்கு அவர் வரைந்த கோட்டோ வியங்கள் மூலம்தான். அவரது மஹாத்மா காந்தியின் கோட்டோவியங்கள் அவை படைக்கப்பட்ட அறுபதுகளிலும், இன்றும், இனிவரும் காலத்திலும் கோடுகளைக் கையாண்ட அவர் வித்தகம் சொல்லும். கோடுகளை ஒரு குதிரையை அடக்குவது போல முழுவதுமாக தன்வயப்படுத்தி, தான் விரும்பியவழி செலுத்தும் ஓவியன்தான் பண்பியல் என்னும் காளையையும் அடக்க முடியும் என்பதற்கு ஆதிமூலம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 90களில் சென்னையில் காட்சிப்படுத்தப்பட்ட அவரது கோட்டோவிய நிகழ்வுதான் பின்னர் என்னையும் அவ்விதக் காட்சியை அமைக்கத் தூண்டு கோலாயிருந்தது.
1969/70களில்தான் ஓவியருக்கும் எழுத்தாளருக்குமான உறவு தமிழிலக்கிய உலகில் தோன்றியது என்பது இன்று வரலாறாகியுள்ளது. சிறு கலை இலக்கிய இதழ்கள் நவீன ஓவியர்களின் படைப்புகளை வெளியிட்டதும் ஓவியக் காட்சிகளை விமர்சித்ததும் நிகழத் தொடங்கியது. ஆதிமூலம் பல எழுத்தாளர்களுடன் நெருக்கமான உறவு கொண்டவராய் வாழ்நாள் முழுவதும் இருந்தார். புத்தக அட்டையில் அவரது படைப்புகள் இடம்பெற்றதும் பின்நாட்களில் நூலின் எழுத்துருவில் புதுமை தோன்றியதும் இன்று அது மிகவும் பரவலாக எங்கும் பின்பற்றப்படுவதும் நவீன ஓவியம் வெகு ஜன இதழ்களில் இன்று தவிர்க்க இயலாததாக இடம் பிடித்ததும் என்று அனைத்திலும் அவரது பங்களிப்புதான் அதை சாத்தியமாக்கியிருக்கிறது.
ஒரு பொதுக் கூட்டத்தில் 'விருட்சம்' சிற்றிதழுக்கு எழுத்துரு கேட்ட அழகிய சிங்கருக்கு அங்கேயே எழுதிக் கொடுத்த எளிமையை அவர் ஒருசமயம் என்னிடம் கூறியதுண்டு. யார் கேட்டாலும் மறுக்காமல் தனது படைப்புகளைப் பயன்படுத்த ஒப்புதலை கொடுத்தது, கேளாமலேயே பயன்படுத்தியோரிடம் அதுகுறித்து ஏதும் பேசாமலிருந்தது, இரண்டுமே அவரது அகந்தையற்ற, புகழாலும் செல்வத்தாலும் கிறங்காத சிறப்பைச் சொல்லும். அதிர்ந்து பேசாமலும், சக படைப்பாளிகளை எப்போதும் உற்சாகப்படுத்தியபடியும், அவர்களுக்கு நெருக்கடிகளில் பொருளாதார உதவிசெய்தும், பிறரிடம் குறை காணாமலும், கண்டபோதும் அதை மிகுந்த அக்கறையு டனும், பண்புடனும் எடுத்துரைத்தும் வாழ்ந்தது அவரது குணப் பெருமையை என்றும் சொல்லும்.
தமிழ்நாட்டில் தோன்றிய ஓவியன் ஒருவன் உலக ஓவிய அரங்கில் சிறப்பாகப் பேசப்படுவது நமக்கெல்லாம் பெருமைக்குரிய ஒன்றுதான். ஓவிய பயணத்தில் ஆதிமூலம் என்றும் அழிக்கமுடியாத ஒரு மைல் கல்லாக இருப்பார் என்பதில் எனக்கு பெருமிதம் தான்.
('அரவக்கோன்' என்ற புனைபெயரில் இதை எழுதியுள்ள அ. நாகராஜன் அவர்கள் சென்னையில் வசிக்கும் பிரபல ஓவியர். கவிஞர் கிருஷாங்கினியின் கணவர்)
அரவக்கோன்
***** |
|
ஓவியர் கே.எம்.ஆதிமூலம்
தமிழகத்தின் மிகச்சிறந்த ஓவியர்களுள் ஒருவரும், கோட்டோவிய மேதையுமான கே.எம் ஆதிமூலம் (70) ஜனவரி 15 அன்று சென்னையில் காலமானார். திருச்சியை அடுத்த துறையூர் அருகே உள்ள கீராம்பூர் என்னும் குக்கிராமத்தில் 1938-ல் பிறந்த ஆதிமூலம் சிறுவயதிலேயே படம் வரைவதில் ஈடுபாடு காண்பித்தார். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சென்னையில் உள்ள கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் சேர்ந்த இவர், பணிக்கர், சிற்பி தனபால் போன்றோரிட மிருந்து ஓவிய நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
கோட்டோவியங்களில் தனக்கென தனிப்பாணியை உருவாக்கி அதன்மூலம் புகழ்பெற்றார். காந்திஜியின் நூற்றாண்டு விழாவினையொட்டி ஆதிமூலம் வரைந்த ஓவியங்கள் மிகவும் புகழ் பெற்றவை. நவீன இலக்கியவாதி களுடன் இவருக்கு ஏற்பட்ட தொடர்பு பல்வேறு சிற்றிதழ் களிலும், ஜனரஞ்சக இதழ்கள் மற்றும் புத்தகங்களிலும் ஓவியங்கள் வரையும் வாய்ப்பினைப் பெற்றுத் தந்தது. கி.ராஜநாராயணனின் 'கோபல்ல கிராமம்' தொடருக்கு இவர் வரைந்த ஓவியங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனையும் தனது தூரிகையால் அழகாகப் படம் பிடித்துள்ள ஆதிமூலம், லண்டன் உட்படப் பல வெளி நாடுகளிலும் ஓவியக் கண்காட்சியை அரங்கேற்றியவராவார்.
தமிழக நவீன ஓவியர்களின் முன்னோடியாகக் கருதப்படும் இவரது தனிச்சிறப்புப் பெற்ற ஓவியங்கள், 'Between the Lines' என்ற பெயரில் தனி நூலாக வெளிவந்துள்ளது. பழங்காலக் கல்வெட்டுக்களிலிருந்து தாம் கண்டறிந்த சித்திர எழுத்து வகைகளை பல்வேறு புத்தகங்களின் முகப்பு அட்டையில் இடம் பெறச் செய்திருப்பது இவரது குறிப்பிடத்தக்க சாதனை முயற்சியாகும். லலித்கலா அகாடமி தேசிய விருது உட்படப் பல்வேறு மாநில அரசு விருதுகளையும், கலைக்குழுக்களின் விருதுகளையும் பெற்றிருக்கும் ஆதிமூலம், வண்ண ஓவியங்களிலும் வரைகலையிலும் மிகவும் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். இவரது 'நான் துரத்தும் நிலம்' என்னும் தலைப்பில் வெளியான தைல வண்ண ஓவியங்கள் வெளிநாட்டினராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகும். மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் சோழமண்டலம் ஓவிய கிராமத்தில் அமைதியான வாழ்க்கை நடத்தி வந்த ஆதிமூலத்தின் இழப்பு, நவீன ஓவிய மற்றும் பத்திரிகை உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|